வித்யா பாலனின் சாய்ஸ் எப்பவும் தனித்துவமானது. வித்யா நடித்த படங்களில் பெரும்பாலானவற்றில், அவருக்கு மையக் கதாபாத்திரம்தான். முன்னர், தான் நடித்த படங்களில் எந்தவித முகாந்திரமும் இல்லாத கதாபாத்திரங்களாக தரப்பட்டது குறித்து, தன்னுடைய கரியரில் இரண்டு படங்கள் பற்றி வித்தியாசமாக உணர்வதாக சமீபத்தில் பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார் வித்யா பாலன். " Heyy Babyy and Kismat Konnection இந்த இரண்டு படங்களில் நான் என்ன செய்தேன் என எனக்குத் தெரியவில்லை. படம் முழுக்கத் தண்ணீருக்கு வெளியே கிடக்கும் மீனாக என்னை உணர்ந்தேன். இந்தப் படங்கள் தான் நான் இது போலான வேடங்களில் நடிக்கக் கூடாது என என்னை உணர வைத்தவை." என்று தெரிவிக்கிறார். 2007-ல் வெளியானது Heyy Babyy படம். அதில் அக்ஷய் குமாருடன் நடித்திருப்பார் வித்யா பாலன். பெண்கள் பின்னால் அலையும் மூன்று நபர்கள் தங்கள் வீட்டுக்கு முன்பிருந்து ஒரு குழந்தையைக் கண்டெடுப்பர். அந்தக் குழந்தை யார்? அவர்கள் என்ன செய்தார்கள் என்பதே கதை.

மேலும். "அந்த படங்கள் என்னைச் சங்கடத்துக்கு உள்ளாக்கியது என்று சொல்ல வரவில்லை, அவற்றில் நான் என்ன செய்தேன் என்பது தான் தெரியவில்லை. ஏதோ தூக்கத்தில் நடப்பது போல வித்தியாசமாக இருந்தது. குற்ற உணர்வு எதுவும் இல்லை. அந்தப் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டது வித்தியாசமான முடிவு." என்கிறார் வித்யா பாலன். அவர் நடித்த Jalsa திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.