டோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை பேசப்படும் நடிகராக மாறியுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். இந்தியா மட்டுமல்லாமல், ஹாலிவுட் இயக்குநர்கள் பலரும் இவரின் நடிப்பையும், நடனத்தையும் பார்த்து சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஹாலிவுட்டில் நடிக்க இவருக்குப் பல வாய்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் தற்போது உச்சத்தில் இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர், பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து 'War' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். அடுத்தடுத்து பல படங்கள் ஜூனியர் என்.டி.ஆரின் லைன் அப்பில் இருக்கின்றன. அவருக்கு நேற்று (மே 20) 40-வது பிறந்த நாள். இதையொட்டி அவரது ரசிகர்கள் அவரின் பிறந்த நாளைக் கொண்டாடி வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இதையடுத்து திரைப் பிரபலங்கள் பலரும், ஜூனியர் என்டிஆருக்கு தங்களின் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் மூலம் கூறினர். அந்த வகையில் ஹ்ரித்திக் ரோஷன், 'களத்தில் சந்திக்கலாம்' என்று பதிவிட்ட வாழ்த்துப் பதிவு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஹ்ரித்திக், "பிறந்தநாள் வாழ்த்துகள் தாரக். இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாகவும், ஆக்ஷன் நிறைந்த ஆண்டாகவும் அமைய வாழ்த்துக்கள். 'யுத்த பூமியில்' நாம் சந்திப்போம். அதுவரை உங்கள் நாள்கள் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
அதற்கு ஜூனியர் என்.டி.ஆர், "உங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி. நான் இன்று முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன். ஆனால், நீங்கள் உங்கள் நாள்களை எண்ணத் தொடங்குங்கள். நடக்கப்போவதை எண்ணி நன்றாகத் தூங்குவீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் நீங்கள் யுத்தபூமிக்கு நன்றாக ஓய்வெடுத்த பின்னர் வரவேண்டும் என்பதே என் விருப்பம். 💪💣✊ விரைவில் சந்திப்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.
`War -2' திரைப்படத்தில் இருவரும் எதிரெதிர் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதனால் தங்களின் கதாபாத்திரங்களாகவே மாறி இருவரும் பேசிக்கொண்டது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.