Published:Updated:

ஷாருக், அமீர், சல்மான்... பாலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் கான்கள் இப்போது காணாமல் போனது ஏன்?!

ஷாருக் கான், தீபிகா படுகோன்
ஷாருக் கான், தீபிகா படுகோன்

மூன்று கான்களில் ஷாருக் கான் மட்டும்தான் சினிமா சம்பந்தமே இல்லாத ஒரு நடுத்தர பின்னணியில், சாதாரண குடும்பத்திலிருந்து நடிக்க வந்து சூப்பர்ஸ்டார் ஆனவர்.

ஷாருக், அமீர், சல்மான்... இந்தியாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக முன்னணியில் இருந்தவர்கள். 100 கோடி, 200 கோடி, 300 கோடி என்று இவர்களது படங்கள் எட்டாத வசூல் சாதனைகள் இல்லை. மிகப்பெரிய சூப்பர்ஹிட் படங்கள், ஏகப்பட்ட விருதுகள் என ஒரு தலைமுறையையே தன்வசமாக்கிய நடிகர்கள் இவர்கள். இந்தியப் படங்களில் இவர்களே வசூல் இலக்குகளை நிர்ணயித்தார்கள். ஒரே சமயத்தில் இப்படி மூன்று இணையான வசூல் சூப்பர்ஸ்டார்கள் இருந்தது இந்தியாவில் அதிசயம். இவர்கள் மூவர்களின் படங்களையும் மொத்தமாக வைத்துப் பார்த்தால், அவை குவித்திருக்கும் கோடிகள் ஏராளம். கிட்டத்தட்ட பாலிவுட்டே இவர்களை நம்பித்தான் இருந்தது.

இப்படி 30 வருடங்கள் இந்திப் படவுலகின் பிரமாண்ட நாயகர்களாக விளங்கிய இந்தக் கான்கள், இப்போது எங்கே? கடந்த சில வருடங்களாக ஏன் இவர்களின் படங்கள் வசூல் சாதனைகள் படைப்பதில்லை... முன்புபோல இப்போது இவர்களின் படங்கள் ஏன் ஓடுவதில்லை? இவர்களின் தாக்கத்திலிருந்து விடுபட்ட இந்திப் படவுலகம், இப்போது என்னதான் செய்துகொண்டிருக்கிறது?

Salman khan, Madhuri Dixit
Salman khan, Madhuri Dixit

கான்கள் வளர்ந்தது எப்படி?

ஆரம்பகாலம் தொட்டே, இந்தியில் காதலுக்கே முக்கியத்துவம். இடையிடையே சில வித்தியாசமான படங்களும் வெளிவரும். ஆனாலும் இப்போது வரை நமக்குத் தெரிந்த பிரபலமான அத்தனை இந்தி ஹீரோக்களுமே ரொமான்ட்டிக் இமேஜ் கொண்டவர்களே. ராஜ் கபூரில் தொடங்கி தேவ் ஆனந்த், சசி கபூர், ஷம்மி கபூர், கிஷோர் குமார், சுனில் தத், சஞ்சீவ் குமார், ராஜேஷ் கன்னா என முந்தைய தலைமுறையில் ஒரு பெரிய பட்டாளமே ரொமான்ட்டிக் ஹீரோக்கள்தான். இவர்கள் எப்போதாவதுதான் ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம் எடுப்பார்கள். ஆனால் அதுவும் நிலைக்காது. மறுபடியும் ரொமான்ஸுக்கே வந்துவிடுவார்கள். இவர்களுக்கிடையே வந்த தர்மேந்திராதான் இந்திப் படங்களின் முதல் ஆக்‌ஷன் ஹீரோ. அதையே இவர்களுக்குப் பிறகு வந்த அமிதாப் பச்சனும் பின்பற்றினார். இருவரும் ரொமான்ஸ் படங்களில் நடித்திருந்தாலும், பல ஆக்‌ஷன் படங்களில் நடித்தனர். இவர்களின் வருகைக்குப் பிறகுதான் இந்திப் படங்களில் சரமாரியான ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெறத் தொடங்கின. இருவரும் சேர்ந்து நடித்த 'ஷோலே' ஓர் உதாரணம்.

பொதுவாகவே, எந்த காலகட்டத்தில் இருந்த நடிகராக இருந்தாலும் சரி, அவருக்குப் பிறகு வரும் நடிகர்களில் அவரது இமேஜைக் கச்சிதமாகப் பயன்படுத்தக்கூடிய இன்னொரு நடிகர் இருப்பார். அவரது படங்கள் இவருக்கு கச்சிதமாகப் பொருந்தும். தமிழில் எம்.ஜி.ஆருக்குப் பின் ரஜினி, சிவாஜிக்குப் பின் கமல்ஹாசன், ஜெமினி கணேசனுக்குப் பின் கார்த்திக் என்பதுபோல. இந்தியிலும் ராஜேஷ் கன்னாவுக்குப் பின் ஷாருக் கான், தேவ் ஆனந்துக்குப் பின் அமீர் கான், தர்மேந்திராவுக்குப் பின் சல்மான் கான் என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ராஜேஷ் கன்னாவுக்கு அமைந்த மிகப்பெரிய ரொமான்ட்டிக் படங்கள் ஷாருக் கானுக்கும் அமைந்தன. தேவ் ஆனந்தின் பல்துறை இமேஜ் அமீர் கானுக்கு கச்சிதமாகப் பொருந்தும். தர்மேந்திராவின் அதிரடி ஆக்‌ஷன் ஹீரோ இமேஜ் சல்மான் கானுக்கானது.

விலகி ஒளிர்ந்த நட்சத்திரம்!

இவர்களில் சல்மான் கான், மிகப்பெரிய திரைக்கதை எழுத்தாளர் சலீமின் மகன். சலீம் - ஜாவேத் அக்தர் கூட்டணி இந்தி திரையுலகை ஆண்டது. ஏராளமான வெற்றிப் படங்கள் இவர்களின் பெயருக்காகவே ஓடின. சூப்பர்ஸ்டார் திரைக்கதை எழுத்தாளர்கள் இவர்கள். அமீர் கானோ, மிகச்சிறிய வயதிலேயே கமல்ஹாசன் போல திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கியவர். அமீர் கானின் குடும்பத்துக்கு பெரிய பின்னணி உண்டு. சுதந்திரப் போராட்டத் தியாகி அபுல் கலாம் ஆஸாத், அமீர் கானின் அம்மா வழிப் பாட்டியின் மாமா. புகழ்பெற்ற அரசியல்வாதி நஜ்மா ஹெப்துல்லா, அமீர் கானின் உறவினர். சூப்பர்ஹிட் இயக்குநர் நஸீர் ஹுஸேன், அமீரின் மாமா. இந்த மூன்று கான்களில் ஷாருக்கான் மட்டும்தான் சினிமா சம்பந்தமே இல்லாத ஒரு நடுத்தரப் பின்னணியில், சாதாரண குடும்பத்தில் இருந்து நடிக்க வந்து சூப்பர்ஸ்டார் ஆனவர்.

சூப்பர் ஸ்டார் யார்?

இந்த மூவரில் முதலில் சூப்பர்ஹிட் கொடுத்தவர் அமீர்தான். அவரது 'கயாமத் ஸே கயாமத் தக்' படம் 1988-ல் வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது. இந்தப் படம்தான், 90-கள் முடியும் காதலருக்கான ஆன்தம் ஆல்பமாக இருந்தது. அமீரின் வழியைத்தான் சல்மானும் ஷாருக்கும், அவர்களுக்குப் பின் வந்த அக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி, பாபி தியோல் எனப் பலரும் பின்பற்றினர். 'கயாமத் ஸே கயாமத் தக்' படத்தை இயக்கியவர் மன்ஸூர் கான். இவர் இயக்குநர் நஸீர் ஹுஸேனின் மகன். எனவே, இதை ஒருவகையில் அமீரின் குடும்பப் படம் என்றும் சொல்லலாம். அடுத்த ஆண்டு 1989-ல், சூரஜ் ஆர் பர்ஜாத்யா இயக்கிய 'மைனே ப்யார் கியா' படம் சல்மான் கானின் நடிப்பில் வெளியாகி பம்பர் ஹிட் ஆகியது. 'கயாமத் ஸே கயாமத் தக்' ஃபார்முலாவேதான். இந்த சூரஜ் ஆர். பர்ஜாத்யாதான் இதன்பின்னர் வந்த 'ஹம் ஆப் கே ஹைன் கோன்' படத்துக்கும், அதன்பின்னர் வந்த 'ஹம் ஸாத் ஸாத் ஹைன்' படத்துக்குமே இயக்குநர். எல்லாமே சல்மானின் நடிப்பில் சூப்பர்ஹிட்டுகள் ஆகின. இவைகளுக்கெல்லாம் பின்னரே ஷாருக்கின் திரை வாழ்க்கை தொடங்கியது.

Sharukh Khan, Manisha Koirala
Sharukh Khan, Manisha Koirala

1989-ல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'Fauji' என்ற நாடகம் அக்காலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மறந்திருக்காது. இதுதான் ஷாருக்கின் முதல் நடிப்பு. அடுத்த வருடம் வெளியான சர்க்கஸ் நாடகத்திலும், பின்னர் வெளியான இடியட்டிலும் தூர்தர்ஷன் வழியாக நடிப்பைத் தொடர்ந்தார். அதன்பின்னர், இன்னும் சில நாடகத் தொடர்களுக்குப் பிறகு, அவரது அம்மா இறந்துவிட டெல்லியிலிருந்து மும்பை வந்து திரைப்படங்களில் நடிக்கத் தொடங்குகிறார். முதல் படமாக 1992-ல் 'தீவானா' வெளியாகிறது. அதன் ஹீரோ ரிஷி கபூர் என்றாலும், ஷாருக் கான் கவனிக்கப்படுகிறார். அதில் ஷாருக்குக்கு அமைந்த பாடல்களும், அவரது நடிப்பும் அப்படி. எப்படி ரஜினிகாந்த் திரை வாழ்க்கையின் தொடக்கத்தில் வில்லன், குணச்சித்திரம், துணை ஹீரோ, ஹீரோ என்று பலவிதமான வேடங்களில் நடித்தாரோ அப்படியே ஷாருக்குக்கும் பல வித்தியாசமான ரோல்களில் நடித்தார். குறிப்பாக வில்லன். 'தர்' சூப்பர்ஹிட் ஆனது. பின்னர் 'பாஸிகர்' படத்திலும் வித்தியாசமான வேடம்.

ரூட்டை மாற்றிய அமீர்!

ஷாருக், அமீர், சல்மான் மூவரில் அமீர் மட்டுமே 10 வருடங்கள் டிபிக்கலான ரொமான்டிக் ஹீரோவாக நடித்துவிட்டு, 'லகான்' படத்துக்குப் பின்னர் ரூட்டை மாற்றி வித்தியாசமான படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால், மற்ற இருவரும் இன்றுவரை ஒரே மாதிரியான படங்களிலேயே நடித்துவருகிறார்கள்.

Aamir Khan, Urmila
Aamir Khan, Urmila

2000-களில் ஆரம்பித்து பிரமாண்ட பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றிப் படங்கள் கொடுத்த மூவரின் திரை ராஜ்ஜியத்தையுமே ஒரே அடியாக ஆட்டம் காணவைத்தது 2018. 'ஹேப்பி நியூ இயர்' படத்துக்குப் பிறகு ஷாருக்கானின் எந்தப் படமுமே ஓடவில்லை. 'தில்வாலே' தொடங்கி தொடர்ந்து தோல்விகள். 2018-ல் வெளியான 'ஜீரோ' ஷாரூக்கானின் சரியும் மார்க்கெட்டை இன்னும் அதளபாதாளத்துக்குக் கொண்டுபோனது. இந்த அடியில் இருந்து ஷாருக், சல்மான் இருவருமே இன்னும் மீளவில்லை. சல்மானாவது அடுத்து சில படங்கள் நடித்தார். ஆனால், ஷாருக் ஸீரோவுக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை. நடிக்க ஒப்பந்தமும் போடவில்லை.

கான்களின் மார்க்கெட் சரிந்த அதேவேளையில் இந்தியில் சிறிய பட்ஜெட்டில் சின்னச்சின்ன நடிகர்கள் நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட்டாக ஆரம்பித்தன. ஆயுஷ்மான் குரானா, விக்கி கெளஷல், ராஜ்குமார் ராவ், நவாஸுதின் சித்திக்கி ஆகியோரின் படங்கள், மூன்று கான்களின் படங்களையும் முந்திக்கொண்டு பரவலாகப் பேசப்பட்டன. அதில் இருந்து இன்றுவரை இந்த ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் அல்லது குறைந்த பட்ஜெட் படங்களே இந்தியில் பெருமளவில் பேசப்படுகின்றன.

ஷாருக் கான் என்ன செய்யப்போகிறார்?

தற்போதைய நிலவரப்படி, அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. பிரபுதேவா இயக்கத்தில் 'ராதே' எனும் படத்தில் நடித்துவருகிறார், சல்மான் கான். இது, 'போக்கிரி' படத்தின் இந்தி ரீமேக்கான 'வாண்டட்' படத்தின் சீக்வெல் என்று முதலில் பேசப்பட்டாலும், பின்னர் தென் கொரியப் படமான 'வெடரன்'னின் (Veteran) ரீமேக் என்று அறியப்படுகிறது. அமீர் கான் 'லால் சிங் சத்தா' படத்தில் நடித்துவருகிறார். இது ஹாலிவுட்டின் 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் ரீமேக். இந்தப் படத்தில்தான் விஜய் சேதுபதியும் நடித்துவருகிறார். இது, அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது.

Sharukh khan, Preity Zinta
Sharukh khan, Preity Zinta

மூன்று கான்களில் எப்படியும் அமீர் தப்பித்துவிடுவார். அவர் நடித்த 'டங்கல்' படம் ஒரு உதாரணம். வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிப்பதே அவரது ஸ்பெஷாலிட்டி. சல்மான், கண்மூடித்தனமான ஆக்‌ஷன் படங்களில் நடிப்பதால் மினிமம் கியாரன்ட்டி உண்டு. அவருக்கு இன்னும் ஒரு சில வருடங்கள் மார்க்கெட் இருப்பதால் சமாளித்துவிடுவார். ஆனால், இதில் பரிதாபத்துக்குரியவர் ஷாருக்தான். காரணம், இப்போது 54 வயதில், ரொமான்ட்டிக்காக நடித்தாலும் படம் ஓடுவதில்லை. கொஞ்சம் வித்தியாசமாக 'ஜீரோ'-வில் உயரம் குறைந்த கதாபாத்திரம், 'Fan' படத்தில் இளம்வயது கதாபாத்திரம் என கிராஃபிக்ஸ் துணையோடு களம் இறங்கியும் பலனில்லை. பல ஆண்டுகளாக ஒரே பாணியில் நடித்ததன் பிரச்னை இது.

இது, புதிய முயற்சிகளின் காலகட்டம். அனுராக் காஷ்யப் நவீன இந்தி சினிமாவை இப்படிப்பட்ட இயல்பான, குறைந்த பட்ஜெட் படங்கள் எடுப்பதில் திருப்பிவிட்டார். அவருக்கு முன்னரும் பலர் இப்படி இருந்திருக்கிறார்கள். ரிஷிகேஷ் முகர்ஜி, பாசு சட்டர்ஜி, பாசு பட்டாச்சார்யா ஆகியோர், அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இந்தி சினிமாக்கள் பிரமாண்ட ஹீரோக்களை வைத்து படமெடுக்கையில்... மிக எளிய, இயல்பான நடிகர்களை அழைத்துவந்து நகைச்சுவை, காதல், மென் சோகம், எதார்த்தம் ஆகியவை கலந்து பல படங்கள் எடுத்து வென்றார்கள். அதேபோல் இப்போது அனுராக் காஷ்யப்பும், அவருக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய படையும் பாலிவுட்டுக்குள் வந்து அதகளம் செய்யத் தொடங்கியாயிற்று. அனுபவ் சின்ஹா டிபிகலான பல ரொமான்ட்டிக் படங்கள் எடுத்தவர். இப்போது டிரெண்டுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு 'ஆர்ட்டிகள் 15', 'தப்பட்' போன்ற நல்ல படங்களை எடுத்துவருகிறார்.

Ayushman Khurrana, Rishi Kapoor
Ayushman Khurrana, Rishi Kapoor
உறைந்த வசீகரப் புன்னகை!

பாலிவுட்டை பொறுத்தவரை இப்போது மிகப்பெரிய ஹீரோ என்ற பிம்பம் ஒன்று இல்லை. மாறாக, எத்தகைய கதையையும் யாரைவைத்து வேண்டுமானாலும் எடுக்கலாம் என்கிற சினிமாவுக்கு ஆரோக்கியமான சூழல்தான் நிலவுகிறது. இத்தகைய காலகட்டத்தில், இந்த பிரமாண்ட ஹீரோக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி. பாலிவுட்டில் நடப்பது இன்னும் சில வருடங்களில் நம் கோலிவுட்டிலும் நடக்கலாம்!

அடுத்த கட்டுரைக்கு