Published:Updated:

பல்ஸர் பைக்... பால்கனி காதலி... பழிக்குப்பழி வேட்டை - `பொல்லாதவன்' வாழ்ந்த கதை #12YearsOfPolladhavan

பொல்லாதவன்
பொல்லாதவன் ( Screenshot taken from Sun Nxt )

நடிப்பில் அசுரனும், இயக்கத்தில் அரக்கனும் கூட்டு சேர்ந்த முதல் படமே, `பொல்லாதவன்'. இப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

பிரபு - பைக், பைக் - காதல், காதல் - வன்முறை... இவைகளுக்கு இடையில் இருக்கும் அந்தச் சின்ன ஹைஃபன்களுக்குள் சொல்லப்பட்ட ஓர் அழகான கதைதான் `பொல்லாதவன்'. இப்படத்தின் கதைசொல்லி, வெற்றிமாறன். நடிப்பில் அசுரனும், இயக்கத்தில் அரக்கனும் கூட்டு சேர்ந்த முதல் படமே, `பொல்லாதவன்'. இப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 

மிடில் கிளாஸ் ஹீரோ! 

பொல்லாதவனின் கதையை மிடில் கிளாஸ் எனும் தீப்பொறியை வைத்துதான் தீட்டியிருக்கிறார், வெற்றி. சினிமா எனும் மொழியை வைத்து வெகுஜனத்துடன் எளிமையாக உரையாட உதவும் ஓர் ஆயுதமே நடுத்தர வர்க்கத்து வாழ்க்கை முறை. படத்தின் கதாநாயகனும் நம்மைப்போல் ஒருவன்தான். அவன் கூட்டுவீட்டில் வாழ்ந்து டிப்-டாப்பாக வெளியே கிளம்பிச் செல்கிறான், இரண்டரை வருடங்களாக `ஏதோ ஒரு ஃபோர்ஸ்தான் இதை டிசைடு பண்ணுது' எனத் தன்னைத்தானே தேற்றிக்கொண்டு ஒருதலையாக காதலித்துத் திரிகிறான், தன் இரண்டரை வருட காதல் கதையை தன் நண்பர்களிடம் ரிப்பீட் மோடில் சொல்லிச் சாவடிக்கிறான், அப்பாவின் பாக்கெட்டிலிருந்து நூதனமாக பணம் திருடி சரக்கடிக்கிறான், அம்மாவிடம் அடுப்படியில் அமர்ந்து அவர் சுட்டுக்கொடுக்கும் தோசை சாப்பிட்டுக்கொண்டே தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கிறான், வேலையில்லாமல் அப்பாவிடம் தினமும் வசவு வாங்குகிறான்... இவையனைத்தையும்விட பல்ஸர் பைக்கின் மீது தீராக்காதல் இவனுக்கு. ஆனால், அதை வாங்குவதற்குத்தான் இவனிடம் துட்டு இல்லை. இதையெல்லாம் எங்கேயோ கேட்டதுபோல் உள்ளதா. ஆமாம் நண்பா... இது நம்முடைய கதைதான். நம்மைப்போன்ற ஒருவனை வைத்துதான் பிரபுவை செதுக்கியிருக்கிறார், வெற்றி. அதற்கு தன் பங்கு நியாயத்தை பாரபட்சமின்றி வழங்கியிருக்கிறார், தனுஷ் எனும் நடிப்பசுரன்.

``அந்த நீண்ட முத்தம் ஏன் நிகழவேண்டும்... - வெற்றி மாறனும் மாறாத வெற்றியும்!" பகுதி 2 #Screenplay
Polladhavan
Polladhavan
Screenshot taken from Sun Nxt

அப்பா - மகன் உறவு

அப்பா - மகனுக்கு இடையேயான உறவு மிடிள் கிளாஸைப் பொறுத்தவரை முற்றிலும் வேறானது. ஏதோவொரு தீங்கு ஏற்படும் முன் நம்மைக் காப்பது நம் அம்மா. அது வந்தபின் அதிலிருந்து நம்மை மீட்டெடுத்து தேற்றிவிடுவது நம் அப்பா. இவையிரண்டும் நடந்த பின்னே இந்த உறவுகளுக்கான முழு அர்த்தமும் நமக்கு விளங்கும். படத்தை நுட்பமாக கவனித்தால் பிரபுவின் அம்மா, `இவனை நம்பி இவ்வளவு காசைக் கொடுத்தா இப்படி பைக்கை வாங்கிட்டு வந்து நிக்குறான்', `ஏன் தம்பி... எதுவும் ஆகிடாதுல்ல', `பைக் திருடு போயிடுச்சா... என்கிட்ட சர்வீஸ் விட்ருக்கேன்னு பொய் சொன்னான்ங்க' என ஒருவித பதற்றத்தோடும், முன்னெச்சரிக்கையோடு செயல்படுவார். `அதான் ஒன்னும் ஆகலைல... அப்புறம் என்ன', `அதான் பைக் திருடுனவனைப் பிடிச்சு போலீஸ்ல விட்டாச்சுல்ல', `ஒரு நிமிஷம் நம்ம குடும்பத்தை யார் காப்பாத்தப் போறாங்கங்கிற பயம் இருந்தது... அப்புறம் நம்ம பையன் இருக்கான்னு நம்பிக்கை வந்துடுச்சு' என பிரபுவை தேற்றிவிடுவது அவனின் அப்பாதான். இப்படி அம்மா - மகன் - அப்பா உறவை அழகியலோடும், எளிமையோடும் காட்சிப்படுத்தியிருப்பார், வெற்றி. 

நண்பர்கள்

முன்பே சொன்னதுபோல் தன்னுடய இரண்டரை வருட ஒருதலைக் காதல் கதையை ஒவ்வொரு சந்திப்பிலும் தேய்ந்த ரெக்கார்டைப்போல் தனது நண்பர்களிடம் சொல்லிச் சாவடிக்கிறான், பிரபு. சில சமயத்தில் சிங்கிள் டீக்கு ஆசைப்பட்டு முதல் முறை கேட்பதுபோலவே கேட்கிறார்கள் அவனது நண்பர்கள். தப்பித்தவறி அவனின் காதலியை கேலி செய்தால் மூக்கோடு ஒரு குத்துதான். மறுநாள் வெட்கமே இல்லாமல் குத்து வாங்கிய இடத்தில் பேன்டேஜ் போட்டுக்கொண்டு பிரபு சொல்லும் கதைக்கும், அதற்கு வாங்கித் தரும் டீக்கும் ஆசைப்பட்டு வருகிறார்கள் பிரபுவின் நண்பர்கள். இதுமட்டுமில்லை. பிரபுவின் ஆபத்தான நிலையின்போதும் உற்ற நண்பனாக உடன் நின்று போராடுவது குமார் என்ற பிரபுவின் நண்பன். அவனுடைய பைக் திருடு போவதில் ஆரம்பித்து அதைத் கண்டுபிடிக்க உதவி செய்வது, ரவியுடன் பஞ்சாயத்து ஏற்படும்போது, செல்வத்திடம் மன்னிப்பு கேட்கப்போகும்போது, பிரபுவின் குடும்பத்தை ரவியின் அடியாட்கள் விரட்டலில் இருந்து காப்பாற்றுவது என அனைத்து சம்பவங்களிலும் உடன் நிற்பது குமார்தான். ஆக, நண்பனின் முக்கியத்துவமும் படத்தில் சொல்லியாகிவிட்டது.

Polladhavan
Polladhavan
Screenshot from Sun Nxt

வன்முறை

சட்டையில் ஆங்காங்கே ரத்தக்கறை, கையில் குருதி படிந்த கத்தி, ஐந்து பேருடன் சண்டையிட்ட களைப்பு... என பிரபுவின் இந்தத் தோற்றத்தோடுதான் படம் ஆரம்பமாகும். காரணத்திற்கேற்ப கத்தியில் ரத்தக்கறை படிவதுதான் இப்படத்தில் வன்முறைகூட அழகியலானததற்குக் காரணம். செல்வத்தின் ரௌடிஸத்தை உணர வைக்க சில வன்முறைக் காட்சிகள் காட்டப்படுகின்றன. அதிலும் செல்வத்துக்கான நியாய தர்மத்தோடு காட்டப்படுகிறது. பின் பிரபு தன்னுடைய வன்முறையை ஆரம்பிப்பது சென்றாயனிடமிருந்து. அப்பாவை எதிர்த்துப் பேசி ஆசை ஆசையாய் வாங்கிய வண்டியைத் திருடினால் யாருக்குத்தான் கோபம் வராது. இதனால்தான் சென்றாயனை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கும் சமயத்திலும் ஆய்வாளர் முன்னே அடிக்க முனைவான், பிரபு.

இதற்குப் பிறகான வன்முறைதான் உச்சம். தன் அப்பாவை தள்ளிவிட்டதையடுத்து ரவியை கையில் கிடைக்கும் தராசை வைத்தும், எடைக் கல்லையும் வைத்தும் ஆத்திரம் தீர அடித்து நொறுக்குவார். இந்த இடத்தில்தான் வன்முறை நியாயப்படுகிறது. இதேபோலத்தான் படம் முழுக்க வன்முறையை நிரப்பியிருப்பார். இதே வன்முறையைப் பயன்படுத்திதான் தன் சொந்த அண்ணனான செல்வத்தையே தீர்த்துக் கட்டுவார், ரவி. நியாயப்படி பார்த்தால் இரு ரௌடிகளுக்கும் இடையே நடக்கும் வன்முறைதான். ஆனால், நியாயம் யார் பக்கம். இதற்குத்தான் நேர்த்தியாக ஒவ்வொரு வன்முறைக் காட்சிகளிலும் காரணிகளிலும் பதிலளித்திருப்பார், வெற்றி. 

Polladhavan
Polladhavan
Screenshot from Sun Nxt
"ப்ச்... சில விஷயங்களைச் சீக்கிரம் செஞ்சிரணும் சார்!'' - 'பொல்லாதவன்' வெற்றிமாறன் #VikatanVintage

இப்படித் தனித்தனியே எடுத்துச் சொல்ல படம் முழுக்க அத்தனை அழகியல் நிரம்பியிருக்கிறது. சாதாரண கமர்ஷியல் கதைகொண்ட படம்தான், `பொல்லாதவன்'. இருப்பினும் அடர்த்தியான திரைக்கதையோடும், எளிமையான காட்சியோட்டத்தோடும் கதை சொன்னதில்தான் வெற்றி வென்றிருக்கிறார். வாழ்த்துகள் வெற்றி - பிரபு!

அடுத்த கட்டுரைக்கு