Published:Updated:

மாஸ்.. க்ளாஸ்... க்ரேஸ்... பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான்! #HBDSRK

மாஸ்.. க்ளாஸ்... க்ரேஸ்... பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான்! #HBDSRK
மாஸ்.. க்ளாஸ்... க்ரேஸ்... பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான்! #HBDSRK

மாஸ்.. க்ளாஸ்... க்ரேஸ்... பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான்! #HBDSRK

படையப்பா படத்துல ''வயசானாலும் உன் ஸ்டைலும், அழகும் இன்னும் உன்ன விட்டு போகல''னு வர டயலாக் ரொம்ப ஃபேமஸ். அதற்கு பொருத்தமான பாலிவுட் உதாரணம் ஷாருக் கான். இன்னிக்கு டாப்ல இருக்குற நடிகரின் இளமையோட போட்டி போட்டு நடிக்கும் கிங் ஆஃப் பாலிவுட் ஷாருக்கானுக்கு 53 வயாசாகிடுச்சு. சீரியல், சினிமா, சூப்பர் ஸ்டார், வர்த்தகம்னு எல்லா ஏரியாலயும் ஆல்ரவுண்டரா கலக்குற ஆள் ஷாருக்கான். 

டெல்லியில் 1965 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி பிறந்த ஷாருக்கான், டெல்லியில் உள்ள செயின்ட் கொலம்பியா பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பள்ளிக்காலங்களில் படிப்பு, விளையாட்டு, மற்றும் நடிப்பு போன்ற அனைத்திலும் சிறந்து விளங்கிய அவர், பள்ளியில் சிறந்து விளங்கும் மாணவருக்கு வழங்கப்படும் வருடாந்திர விருதான ‘ஸ்வார்ட் ஆஃப் ஹானர்’ என்ற பட்டத்தைப் பெற்றார். அவருக்கு 15 வயதிருக்கும் போது, அவரது தந்தை புற்றுநோயால் இறந்ததால், தனது தாயின் அரவணைப்பில் வளர்ந்தார் ஷாருக். 

எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தொலைக்காட்சி மூலமாகத் திரை முன்பு தோன்றிய அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக்கொண்டு, பாலிவுட்டில் கால்பதித்தார். தனது நடிப்புத் திறமையால் உலக மக்களை ஈர்த்து பில்லியன் கணக்கில் ரசிகர்களைக் கொண்ட நடிகரானார். இதனால் இவருக்கு, ‘தி வேர்ல்ட்’ஸ் பிக்கெஸ்ட் மூவி ஸ்டார்’ என்ற பட்டத்தை, லாஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ் 2011 இல் வழங்கி கௌரவித்தது. 

1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவரது முதல் தொலைக்காட்சி சீரியல் தில் தரியா தாமதமானதால் ஃபாஜி இவரது முதல் சீரியலாக வெளிவந்தது. இவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த சர்க்கஸ் சீரியல் மூலம் வெளிச்சத்துக்கு வந்தார் ஷாருக். 

1990 இல் தனது தாயின் மறைவுக்குப் பின் சினிமாவுக்குள் வர நினைத்த ஷாருக்கான் மும்பை சென்றார். 1992 ஆம் ஆண்டு ஷாருக் நடித்து வெளியான ''திவானா'' படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட். எல்லாரும் நடிக்க வந்து பிரபலமாவாங்க... ஷாருக் பிரபலமாகி நடிக்க வந்தவர் என்பது முதல் பட வெற்றியில் நிரூபணமானது. 1995 ஆம் ஆண்டு வெளியான "தில்வாலே துல்ஹனியா லி ஜாயங்கே" திரைப்படம் 1000 வாரங்கள் ஓடி அபார சாதனை படைததது. இந்திய சினிமா வரலாற்றின் அழிக்க முடியாத சாதனை வரிசையில் ஷாருக்கின் க்ளாஸ் ஆக்டிங் இடம் பிடித்தது. 

காதலைச் சொல்ல, காதல் தோல்வியில் கசிந்து உருக, மாஸ் பன்ச் பேச, ஒரே அடியில் பல பேரை வீழ்த்த என 90 களின் ஹீரோயிஸத்துக்கு ஷாருக் பெரிய ஐகானாக இருந்தார். டிவி சீரியலில் நடித்தால் ஹீரோ ஆகலாம் என்ற இன்றைய ட்ரெண்டை 90 களில் உருவாக்கியவர் ஷாருக். 30 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு, 15 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்ற இவர், இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’, சிறந்த குடிமகன் விருதும், பல்வேறு சர்வதேச விருதுகளையும் வென்று, ஒரு நடிகனாகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். 

டிரீம்ஸ் அன்லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், மோஷன் பிக்சர் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் அனிமேஷன் ஸ்டுடியோ ரெட் சில்லிஸ் VFXன் இணைத் தலைவராகவும் இருந்து வரும் ஷாருக், இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸின் இணை உரிமையாளரும் ஆவார்.  2008 ஆம் ஆண்டில் நியூஸ் வீக்கால் உலகின் 50 சக்திவாய்ந்த மனிதர்களில் இவரையும் ஒருவராகப் பட்டம் சூட்டியது. 2011ஆம் ஆண்டில் குழந்தைகளுக்குக் கல்வியுதவியும், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியும் செய்ததால் UNESCOவால் "பிரமிடு கான் மார்னி" விருது வழங்கப்பட்டது. 

அமெரிக்காவில் குடியுரிமை அதிகாரிகளால் சோதனைக்குள்ளாக்கப்பட்டு மனவேதனைக்கு ஆளான ஷாருக் '' எனக்கு நடிகன் என்ற தலைக்கணம் எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் அமெரிக்கா செல்வேன். அவர்கள் அதனைப் பார்த்துக்கொள்வார்கள்'' என மொத்தமாக அமெரிக்காவை எள்ளி நகையாடியது மாஸ் என்றால், தனது அடுத்த படத்தில் ''மை நேம் இஸ் கான் பட் ஐயம் நாட் எ டெரரிஸ்ட்'' என்று பன்ச் வைத்து பஞ்சர் ஆக்கியது க்ளாஸ். சக்தே இந்தியாவில் அவர் பேசிய வசனங்கள்தான் கிரிக்கெட்டில் மூழ்கிக் கிடந்த இந்தியாவை ஹாக்கியை நோக்கி திருப்பியது. 

நடிகராக மட்டுமல்லாமல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டிரினிடாட் அணி என கிரிக்கெட் அணிகளை வாங்குவது, ரெட் சில்லீஸ் நிறுவனம் மூலம்  படம் தயாரிப்பது என தசாவதாரம் எடுக்கவும் செய்கிறார். இன்னொரு பக்கம் மேலாண்மை வகுப்புகள் எடுக்கிறார். மொத்தத்தில் ஷாருக் இந்திய சினிமாவின் நிரந்தர பாட்ஷாவாக இருக்கிறார். மாஸ்.. க்ளாஸ்... க்ரேஸ் என சிக்ஸர் அடிக்கும் பாலிவுட் பாட்ஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்... 

அடுத்த கட்டுரைக்கு