Published:Updated:

''சூர்யாவுக்குப் பிடிக்காதது, பாண்டிராஜோட உப்புக்கறி, சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை..!" 'செம' இயக்குநர் வள்ளிகாந்த்

உ. சுதர்சன் காந்தி.
''சூர்யாவுக்குப் பிடிக்காதது, பாண்டிராஜோட  உப்புக்கறி, சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை..!" 'செம' இயக்குநர் வள்ளிகாந்த்
''சூர்யாவுக்குப் பிடிக்காதது, பாண்டிராஜோட உப்புக்கறி, சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை..!" 'செம' இயக்குநர் வள்ளிகாந்த்

பசங்க புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்,  'செம'. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வெளிவரத் தயாராக இருக்கும் இந்தப்படத்தை பற்றியும் அதன் சுவாரஸ்யம் பற்றியும் பகிர்ந்துகொள்கிறார், படத்தின் இயக்குநர் வள்ளிகாந்த்.  
 

"இந்தப் படம் ஒரு உண்மை சம்பவத்தை வெச்சு எடுக்கப்பட்டதாமே!"

"ஆமா, ஒரு உண்மை சம்பவத்தை வெச்சுதான் கதை எழுதினேன். பாண்டிராஜ் சார்கிட்ட நான் உதவி இயக்குநரா வேலை பார்க்கும்போது, அசோஸியேட் டைரக்டரா இருந்த ராமு செல்லப்பாவோட ('என்கிட்ட மோதாதே' பட இயக்குநர்) வாழ்க்கையில நடந்த ஒரு சம்பவம்தான் அது.  ஒருமுறை, அவர் கல்யாணத்துல நடந்த இந்த சம்பவத்தைச் சொன்னார். அதைப் படமா பண்ணா நல்லா இருக்கும்னு பாண்டிராஜ்சார்கிட்ட சொன்னேன். அவரும் 'முழுசா ரெடி பண்ணுங்க. பார்ப்போம்'னு சொன்னார். நாங்களும் அந்த சம்பவங்களை வெச்சுப் படத்துக்குத் தகுந்தமாதிரி சிலபல விஷயங்களைச் சேர்த்து அவர்கிட்ட சொன்னோம். அதுக்கு முன்னாடி ரெண்டு ஸ்கிரிப்டை ரெடி பண்ணி வெச்சுட்டு வெளியே வாய்ப்பு தேடிக்கிட்டு இருந்தேன். அப்போ, என்னைப் பார்த்துட்டு பாண்டிராஜ் சார்தான் நம்ம பேனர்லேயே பண்ணலாம்னு சொன்னார். அடுத்து, லிங்க் பைரவி கிரியேஷன்ஸ் ரவிசந்திரன் சாரும் பாண்டிராஜ் சாரும் நண்பர்கள். எனக்கும் அவர் ரொம்பப் பழக்கம். அதனால, அவரும் சேர்ந்து தயாரிக்கிறதா சொல்லிப் படத்தை ஆரம்பிச்சோம்".

"நிறைய படங்கள்ல பிஸியா இருந்த ஜி.வி.பிரகாஷை எப்படி படத்துக்குள்ள கொண்டுவந்தீங்க?"

"நான் இதுக்கு முன்னாடி எழுதியிருந்த காமெடி ஸ்கிரிப்ட்ல நடிக்கவைக்க அவரை ஒன்றரை வருடமா ஃபாலோ பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்போ அவர் கைவசம் நிறைய படங்கள் இருந்ததுனால, கொஞ்சம் லேட் ஆச்சு. அப்போ, ஜி.வி.சாரோட கால்ஷீட் பாண்டிராஜ் சார்கிட்ட இருந்துச்சு. அவர்தான், ஜி.வி சார் கால்ஷீட்டை எனக்குக் கொடுத்து, படம் பண்றதுக்குக் காரணமா இருந்தார். நானும் அவர் கொடுத்த கால்ஷீட்டுக்கு அஞ்சு நாள் முன்னாடியே படத்தை முடிச்சுக்கொடுத்திட்டேன். அவர் நடிச்சதுலேயே இந்தப் படம்தான் சீக்கிரமா நடிச்சு முடிச்ச படம்னு ஜி.வி. சாரே சொன்னார்"

"ஹீரோயின், வில்லன் ரெண்டுபேரையும் ஃபிரெஷ்ஷா பிடிச்சிருக்கீங்களே...?" 

"இணைத் தயாரிப்பாளர் ரவிசந்திரன் சாரோட பையன் ஜனா, இந்தப் படத்தோட வில்லன். கூத்துப்பட்டறையில இருந்ததுனால, அவனுக்கு நடிப்பு நல்லாவே வரும். இந்தக் கதைக்கு சரியா இருப்பான்னு தோணுச்சு, பிக்ஸ் பண்ணிட்டோம். ஹீரோயினைத் தேடிக்கிட்டு இருந்தப்போ, 'பசங்க-2' படத்துல என்னோட வேலை பார்த்த அஷ்வின் ஒரு தெலுங்குப் படத்தோட டிரெய்லரைக் காட்டினார். மலையாளத்துல அவங்க நடிச்ச படமும் பார்த்தேன். நடிகை காவேரியோட முகஜாடை இருந்தது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நானும், ஒளிப்பதிவாளர் விவேக்கும் கேரளா போய்ட்டு அவங்களை டெஸ்ட் ஷூட் பண்ணோம். பாண்டிராஜ் சார்கிட்ட காட்டினோம், 'உனக்கு ஓகேன்னா படம் ஸ்டார்ட் பண்ணிடு'னு சொன்னார். அதுக்கு முன்னாடி லட்சுமி மேனன், ஐஷ்வர்யா ராஜேஷ், அனுபமா, நிவேதா தாமஸ்னு நிறைய ஹீரோயின்ஸ்கிட்ட முயற்சி பண்ணோம். ஆனா, செட் ஆகலை."
 

"யோகி பாபு, மன்சூர் அலிகான், கோவை சரளா இப்படி காமெடி ஸ்டார்ஸ் நிறையபேர் படத்துல இருக்காங்க... ஷூட்டிங் ஸ்பாட் ரொம்பக் கலகலப்பா இருந்திருக்குமே?"  

"யோகி பாபு செட்டுக்கு வந்தாலே, கலகலனு இருக்கும். இவரும் மன்சூர் அலிகான் சாரும் சேர்ந்துட்டாங்கன்னா,  வேற லெவல்தான். ஒருத்தருக்கொருத்தர் கலாய்ச்சுட்டே இருப்பாங்க. அவங்க இப்படிக் கலாய்ச்சுப் பேசிட்டு இருந்ததை அவங்களுக்கே தெரியாம ஷூட் பண்ணிட்டேன். அதுல ஒரு சில காட்சிகளை படத்துலேயும் பயன்படுத்தியிருக்கேன். ரெண்டுபேரும் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரிதான். ஒரு கட்டத்துல மன்சூர் சார் டயர்ட் ஆகிடுவார். நல்ல காமெடியன் அப்படீங்கிறதைத்தாண்டி நல்ல மனிதர் அவர். இயக்குநர்கிட்ட கேட்காம, பேசுற வசனத்துல சின்ன மாற்றத்தைக்கூட பண்ணமாட்டார். அவர் இந்தப் படத்துக்கு மிகப்பெரிய சப்போர்ட்டா இருந்தார். 15 நாள்தான் கால்ஷீட் கேட்டேன், 19 நாள் இருந்து நடிச்சுக் கொடுத்தார். மன்சூர் சாரை ஒருநாள் நான் ஷூட்டிங்ல டென்ஷன்ல திட்டுட்டு, அப்புறமா ஸாரி சொன்னேன். அவர் அதையெல்லாம் ஒரு பெரிய விஷயமா எடுத்துக்காம என்கிட்ட சகஜமா பேசுவார், பழகுவார். கோவை சரளா அம்மாதான், அர்த்தனாவுக்கு வசனம் சொல்லிக்கொடுப்பாங்க. சீனியர் ஆர்டிஸ்ட்னு இல்லாம ரெண்டு பேரும் அம்மா - மகள் மாதிரிதான் பழகுனாங்க. இவங்க எல்லாரும் இல்லைனா படம் இவ்ளோ நல்லா வந்திருக்காது." 

" 'சண்டாளி' பாட்டு இந்தளவுக்கு ஹிட் ஆகும்னு நினைச்சீங்களா?"

" ட்யூன் போடும்போதே, இந்தப் பாட்டு ஹிட் ஆகும்னு எனக்குத் தோணுச்சு. நான் 'ஆடுகளம்' படத்துல வர்ற 'யாத்தே யாத்தே' பாட்டு மாதிரி நல்லா ரீச்சாகும்னு சொன்னேன். என்னை அறியாமலே இந்த ட்யூன் வந்திடுச்சு ஜி.வி.சாரும் சொன்னார். யுகபாரதி சாரோட வரிகள், ஜி.வி.மியூசிக், வேல்முருகன், மகாலிங்கத்தோட வாய்ஸ்னு இந்தக் காம்போ மிகச்சரியா அமைஞ்சது."

"உங்களுக்கும் பாண்டிராஜ் சாருக்குமான உறவு...?"

"சினிமா வாழ்க்கையிலும் சரி, பெர்ஷனல் விஷயத்திலேயும் சரி... எனக்கு அவர் ஒரு அண்ணன் மாதிரி. 'மெரினா' படத்துல நான் உதவி இயக்குநரா சேரும்போது, எனக்கு கிளாப் அடிக்கக்கூட தெரியாது. அவர்கிட்ட நான் நிறைய கத்துக்கிட்டேன். உதவி இயக்குநர்கள் எல்லோருக்கும் ஃபிரீயா இருக்கும்போது சிக்கன் வாங்கிட்டு வரச்சொல்லி உப்புக்கறி சமைச்சுப் போடுவார். அவர் வீட்டுல என்ன விசேஷம் நடந்தாலும் அவர்கிட்ட வேலை பார்த்த எல்லா உதவி இயக்குநர்களையும் கூட்பிடுவார். அவர் ஒரு பலாப்பழம் மாதிரி. ஷூட்டிங் ஸ்பாட்ல கொஞ்சம் டென்ஷனாவே இருப்பார். ஆனா, உள்ளே இனிமையான நபர். அவரோட கருத்தைச் சொல்லிட்டு, 'எனக்கு இப்படித் தோணுது. ஆனா, முடிவு நீதான் எடுக்கணும்'னு சொல்லி, உதவி இயக்குநர்களுக்கான மரியாதையைக் கொடுப்பார். எல்லா உதவி இயக்குநர்களுக்கும் அவர் அண்ணன் மாதிரிதான்."

" 'மெரினா', 'கேடிபில்லா கில்லாடிரங்கா' படங்கள்ல அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்திருக்கீங்க. சிவகார்த்திகேயனை வெச்சுப் படம் பண்ற ஐடியா இருக்கா?"

" 'மெரினா'வுக்கு முன்னாடியே எனக்கு சிவகார்த்திகேயன் பழக்கம். நாங்க எல்லாரும் சேர்ந்துதான் 'முகப்புத்தகம்' குறும்படத்தை எடுத்தோம். சிவா ரொம்ப நல்ல மனிதர். ஷூட்டிங் டைம் சொன்னா, பத்து நிமிடம் முன்னாடியே ஸ்பாட்டுக்கு வந்து நிற்பார். நண்பர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார். எப்போ மெசேஜ் பண்ணாலும், போன் பண்ணாலும்...  அதை எப்போ பார்க்கிறாரோ, அப்பவே ரிப்ளை பண்ணிடுவார். பழசை மறக்காத நல்ல மனுஷன். நான் எழுதியிருக்கிற ஒரு கதைக்கு, அவர் பொருத்தமா இருப்பார்னு தோணுது... கண்டிப்பா  அவரோட படம் பண்ணணும்னு ஆசை இருக்கு. பார்ப்போம்". 
 

" 'பசங்க 2' படத்துல சூர்யாவுடன் இருந்த அனுபவம்...?"

"அடுத்தநாள் என்ன எடுக்கப்போறோம்னு முன்னாடியே தெரிஞ்சு வெச்சுக்குவார். அதுக்கு வீட்டுல இருந்தே ரிகர்சர்ல் பண்ணிட்டு ஸ்பாட்டுக்கு வருவார். மேக்அப் போடும்போது வசனத்தைப் பேசிப் பார்ப்பார். உதவி இயக்குநர்கள் யாரா இருந்தாலும், அவங்ககிட்ட வசனத்தைப் பேசிக்காட்டி ஓகேவானு கேட்பார். அவர் முன்னாடி யாராவது நின்னுக்கிட்டே பேசுனா, அவருக்குப் பிடிக்காது. உட்கார்ந்து பேசுங்கனு கண்டிப்பார். 'பசங்க-2' படம் முடியுற சமயம், வொர்க் பண்ண எல்லோருக்கும் வாட்ச் கிஃப்ட் பண்ணார். ஆனா, நான் ஸ்பாட்ல இல்லை. பத்துநாள் கழிச்சு, படத்துக்கு அவர் டப்பிங் பேச வரும்போது,  எனக்கான வாட்சைக் கொடுத்துட்டு, 'அன்னைக்கு நீங்க இல்லை. இது என்னோட ஸ்மால் கிஃப்ட்'னு சொன்னார். அவர் ஞாபகமா அதைப் பத்திரமா வெச்சிருக்கேன்."