Published:Updated:

நடிக்கிறது ரொம்பக் கஷ்டம் - நடிப்பு அனுபவம் சொல்லும் சுசீந்திரன்!

சனா
நடிக்கிறது ரொம்பக் கஷ்டம் - நடிப்பு அனுபவம் சொல்லும் சுசீந்திரன்!
நடிக்கிறது ரொம்பக் கஷ்டம் - நடிப்பு அனுபவம் சொல்லும் சுசீந்திரன்!

"ஸாரி, ஷூட்டிங்கில் கொஞ்சம் பிஸியாக இருந்துட்டேன். என் போர்ஷனுக்கான ஷூட்டிங் போய்க்கிட்டு இருக்கு. நேரம் கம்மிதான்.  சீக்கிரம் பேசிடலாம்'' - பரபரப்பாகப் பேசுகிறார், 'நடிகர்' சுசீந்திரன். 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகும் இயக்குநரிடம் பேசினோம்.  

''காரணம் சொல்லத் தெரியலை. ரெண்டு, மூணு வருடமாவே நண்பர்கள் பலர் அவங்க படத்துல என்னை நடிக்கக் கேட்டாங்க. எனக்கு நடிப்புல பெரிய விருப்பம் இல்லாததால, ஈடுபாடு காட்டுனதில்லை. திடீரென்று நடிகர் விக்ராந்த், 'உங்களை மீட் பண்ணனும் சார்'னு சொன்னார். சரி, படத்தைப் பற்றி ஏதாவது பேசுவார்னு போனேன். 'ஒரு கதை இருக்கு சார்'னு  'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா சாரைக் கூட்டிக்கிட்டு வந்தான். வந்தவர், 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தோட கதையைச்சொல்லி, 'கதை பிடிச்சிருக்கா, இந்த ரோல் பண்றீங்களா'னு கேட்டார். எனக்குக் கதை பிடிச்சிருந்துச்சு.  ராயப்பாவிடம், 'ரெண்டு, மூணு படம் டைரக்‌ஷன் பண்ணிக்கிட்டு இருக்கேன். எப்படி நடிக்க முடியும்?'னு கேட்டேன். 'இல்ல சார், நீங்க பண்னா இந்தக் கேரக்டர் நல்லா வரும்'னு சொன்னார். 'சரி, நடிச்சுத்தான் பார்ப்போமே'னு ஓகே சொல்லிட்டேன். எனக்கு, நடிக்கணும்னு ஆசை இருந்ததே இல்லை." 

"நடிக்குற அனுபவம் எப்படி இருக்கு?"

"என் படத்தை டைரக்‌ஷன் பண்ணும்போது காரைவிட்டு இறங்கி, நேரா ஸ்பாட்டுக்குப் போய் நடிகர்கள்கிட்ட காட்சியைச் சொல்லி ஷூட்டிங் ஆரம்பிச்சிடுவேன். முழுக்க முழுக்க மைண்ட் சார்ந்து வேலை பார்ப்பேன். நடிக்கிற படம், முழுக்க உடம்புக்கு வேலை கொடுக்குது. டைரக்‌ஷன் பண்ணும்போது படுத்தா தூக்கமே வராது. அடுத்து என்ன சீன் எடுக்கலாம்னுதான் யோசனை இருக்கும். கதை சம்பந்தமா மண்டையில ஏதாவது ஓடிக்கிட்டே இருக்கும். நடிக்க ஆரம்பிச்சதுக்குப் பிறகு, டைரக்டர் சொல்ற காட்சியை நல்லபடியா நடிச்சுக்கொடுத்தா  போதும். அதனால, மைண்ட் ரிலாக்ஸா இருக்கு. நடிக்குறது ரொம்பக் கஷ்டம்ப்பா! இந்தப்படம் முழுக்க என் கேரக்டர் வரும். படத்துல எனக்குனு ரொமான்டிக் சீன்ஸ் எதுவும் இல்லை. கதையே வித்தியாசமான கதை. இந்தப்படத்தில் நிறைய சேஸிங் சீன் இருக்கு. படத்துல நிறைய இடத்தில நான் ஓடிக்கிட்டேதான் இருப்பேன். அதுமட்டுமில்லாம, அடிக்கடி குதிக்கவும் செய்யணும். படம் முழுக்க ஓடிக்கிட்டே இருக்குறதுனால ரொம்ப டயர்ட் ஆயிடறேன். அதனால, வீட்டுக்குப் போனதும் அசந்து தூங்கிடறேன்."  

"படத்துக்காக ஏதாவது ஹோம் வொர்க் பண்ணினீங்களா?"

"நிறைய வாக்கிங் போனேன். ஏன்னா, ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென்னு ஓடச் சொன்னா,  ஓடணும். அவ்ளோதான், வேற எதுவும் செய்யலை." 

"விக்ராந்த்...?"

"விக்ராந்த் நல்ல நடிகர். அவருடன் இந்தப்படத்தில் நடிப்பது எனக்குப் பிடிச்சிருக்கு. எனக்கு, அவர் பிரதர் மாதிரி. அவருடைய கடின உழைப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். நடிகர் விஷ்ணு மாதிரி, நான் உருவாக்கணும்னு நினைக்கிற ஹீரோ அவர். அவருக்காக கண்டிப்பா ஒரு நல்ல ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணுவேன். இந்தப்படத்துல என்கூட மிஷ்கின் சாரும் நடிக்கிறார். பட பூஜையின்போது மிஷ்கின் சார், 'வாழ்த்துகள் சுசீந்திரன்'னு சொன்னார். ஷூட்டிங் ஆரம்பிச்சுப் போய்க்கிட்டு இருக்கு. மிஷ்கின் சாரோட போர்ஷன் இன்னும் வரலை. அவர் ஷூட்டிங் ஸ்பாட்ல நடிக்கிறதைப் பார்க்க ஆர்வமா இருக்கேன்."  

"நீங்க இயக்குற படங்கள் எந்த நிலையில இருக்கு?" 

'' 'ஏஞ்சலினா', 'ஜீனியஸ்'னு ரெண்டு படங்கள் டைரக்‌ஷன் பண்ணியிருக்கேன். இதில் 'ஏஞ்சலினா' படத்தின் ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. ஏப்ரல்ல படம் ரிலீஸ் ஆகும். 'ஜீனியஸ்' படத்தோட முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிச்சிருக்கேன். 'ஏஞ்சலினா' ஒரு த்ரில்லர் படம். படிப்பு, படிப்புனு படிச்சுப் பைத்தியமாகுற ஒருத்தரைப் பத்தி 'ஜீனியஸ்' படத்துல சொல்றேன். 'ஏஞ்சலினா' படம் ஒரு பெண்ணை மையப்படுத்தின கதையா இருக்கும். இந்தப்படத்துல முழுக்க புதுமுகங்களை நடிக்கவெச்சிருக்கேன். ஹீரோவா நடிக்கிறவர், தயாரிப்பாளரோட பையன். நான் எப்போதுமே கதைக்கான நடிகரைத்தான் தேடுவேன். அப்படிதான், இந்தப்படத்தோட ஹீரோ எனக்குக் கிடைச்சார்." 

" 'நெஞ்சில் துணிவிருந்தால்' ஏன் ரீ-ரிலீஸ் ஆகலை?" 

"ரீ-ரிலீஸ் செய்யலாம்னு எடுத்த முடிவுதான், அவசரப்பட்டு நான் எடுத்த தப்பான முடிவு. ஏன்னா, படம் ஏற்கெனவே நஷ்டம். மறுபடியும் ரீ-ரிலீஸ் பண்ணி, அதிலும் நஷ்டம் ஏற்பட்டா தயாரிப்பாளர்கள் தாங்கமாட்டாங்க. அதனால, ரீ-ரிலீஸ் பிளானை அப்படியே நிறுத்திட்டேன். இது முழுக்க முழுக்க என் தவறுதான். நான்தான் அதுக்குப் பொறுப்பு ஏத்துக்கணும். அந்த வருத்தம் இன்னும் எனக்குள்ள இருக்கு." 

"தொடந்து நடிப்பீங்களா?"

"என் டைரக்‌ஷனை பாதிக்காம இருந்தா, நிச்சயம் நடிப்பேன். இந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் நான் கொடுத்த கால்ஷீட்டுக்கு டைரக்டர் ஓகே சொன்னார். அந்தப் பிரச்னை வராதுனா, தொடர்ந்து நடிப்பேன்."