Published:Updated:

"மெக்கானிக்கல் டிப்பார்ட்மென்ட்டில் ஒரு பெண்... மெக் பாய்ஸ் வெல்கம் டூ குயின்" #Queen

கார்த்தி
"மெக்கானிக்கல் டிப்பார்ட்மென்ட்டில் ஒரு பெண்... மெக் பாய்ஸ் வெல்கம் டூ குயின்" #Queen
"மெக்கானிக்கல் டிப்பார்ட்மென்ட்டில் ஒரு பெண்... மெக் பாய்ஸ் வெல்கம் டூ குயின்" #Queen

ஆண்கள் டிப்பார்ட்மென்ட்டான, மெக்கானிக்கலில் ஒரு பெண் நுழைகிறாள். கல்லூரி வாழ்க்கை, சமூகத்தில் நிகழும் பிரச்னை என இரு களங்களில் நகர்கிறது களம்.  அவள் எப்படி 'குயின்' ஆகிறாள் என்பதே 'குயின்'.


2015- ம் ஆண்டு கேரளத்தின் ஓணம் பண்டிகையின்போது, ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரல் ஆனது. தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஓணம் ஸ்பெஷல் வேட்டி சட்டையில் அசத்தலாக ஒரு யானையுடன் நிற்க, ஒரு பெண் படு ஸ்டைலாக அனைவருக்கும் முன் நிற்பார். இந்தப் புகைப்படத்தை வைத்துக்கொண்டு அதிலிருந்து ஒரு கதையை உருவாக்கியிருக்கிறது ஷரிஸ் மொஹம்மது, ஜெபின் ஜோசஃப் குழு.

ஒவ்வொரு பொறியியல் கல்லூரியிலும் மெக்கானிக்கல் என்றொரு டிப்பார்ட்மென்ட் இருக்கும். அதன் உடன் பிறவா சகோதரரான சிவில் டிப்பார்ட்மென்ட்டில்கூட பெயருக்கு என நாலு பெண்கள் இருப்பார்கள். மற்ற துறைகள் எல்லாம் கோ-எஜுகேஷன் மோடில் இருக்க, மெக் மட்டும் ஆண்கள் பள்ளிபோல இருக்கும். என்னதான் 'நாங்க கெத்து' என மீசையை முறுக்கினாலும், பக்கத்து டிப்பார்ட்மென்ட்டில் தேவுடு காத்துக்கொண்டிருப்பார்கள். 

கல்லூரி ஹாஸ்டலில் நடக்கும் சண்டை, மெக்கானிக்கல் பாய்ஸ் ஆசிரியர்களை டீல் செய்வது, டிஸ்மிஸ் போன்ற காட்சிகள் அப்படியே எடுத்திருக்கிறார்கள். படத்தில் வரும் மாணவர்கள் எல்லோருமே புதுமுகங்கள் என்பதால், முதல் பாதி முழுக்க ஏதோவொரு கல்லூரிக்குள் நுழைந்தது போன்றதோர் உணர்வை ஏற்படுத்துகிறது. அதிலும் ரேகிங் காட்சியில் பனியனைக் கிழித்துக்கொண்டு மோகன்லால் ஆன்தம் பாடுவது சினிமாத்தனம் என்றாலும், தியேட்டரில் விசில் பறக்கிறது.

அதிலும், சின்னுவாக நடித்திருக்கும் சனிய ஐய்யப்பன் கதாபாத்திரம் அட்டகாசம். படத்தின் முதல் கதாபாத்திரமாகவும், பிற பகுதியில் வரும் காட்சிகளின் ஆணி வேராகவும் கலக்கல்!. கல்லூரியில் இப்படியொரு தோழி இருந்திருக்கலாமே என என்னும் அளவுக்கு வெகு இயல்பாக நடித்திருந்தார். தன்னுடன் பேசத் தயங்கும் மாணவர்களிடம்  கேஷுவலாகப் பேசுவது; தன்னைப்பற்றி தவறாக வந்த மீமையும் ஜாலியாக எடுத்துக்கொள்வது; தனக்கு இருக்கும் பிரச்னைகளைப் பற்றி இயல்பாகப் பேசுவது எனப் பல 'சனிய ஐய்யப்பன்' ஸ்பெஷல். கல்லூரிக் காட்சிகளை வைத்து மட்டுமே, முழுப் படத்தையும் எடுத்திருக்கலாம் எனத் தோன்ற வைக்கும் அளவு, அதீத செயற்கையாக இருக்கிறது இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள். அது ஏன், ஒரு பெண் இயல்பாக எல்லோரிடமும் அன்பு பாராட்டிப் பேசினாலே, அவள் நோய் வாய்ப்பட்டிருக்கவேண்டும்?. அதையும் தாண்டி அப்ளாஸ் அள்ளுகிறது, வக்கீலாக வரும் சீனியர் நடிகர் சலீம் குமாரின் நடிப்பு.

அரசியல்வாதியின் காட்சிகள், சின்னுவுக்கு நிகழும் கொடூரம் போன்ற காட்சிகளில் ஏனோ அழுத்தம் இல்லாமல் செல்கிறது. ஆனால், இந்தியா முழுக்கப் பெண்களுக்கு நிகழும் அநீதிகளுக்கு எவ்விதத்திலும் நியாயம் கற்பிக்க முடியாது என்பதால், அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில், படத்தில் சொல்வதுபோல, பெண்கள் எந்த நேரமும் வெளியே சுதந்திரமாய் செல்வதற்கு ஏற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்காமல் விட்டதற்கு வெட்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. 

ஜேக்ஸ் பிஜாயின் இசையில் 'லால் ஆன்தம்', 'ஞான் ராயல் மெக்' ஆன்தம் இரண்டிலும் அதிரடி தெறிக்கிறது. 'வெண்ணிலவே நின்னருகில்' சாஸ்வதமான ரொமான்டிக் மெலடி.  

ஒரு புகைப்படத்தை வைத்து மட்டுமே, கதையை யோசிக்க ஆரம்பித்திருப்பதால், எதைத் திரைப்படத்தில் சேர்ப்பது, எதை விடுப்பது எனக் கதைக்குழு குழப்பம் அடைந்துவிட்டனரோ என்று தோன்றுகிறது. அதிலும் செய்தித்தாள்களில் வரும் விஷயங்களை வைத்துக்கொண்டு இரண்டாம் பாதியில் கைத்தட்டலுக்காக சின்னுவின் கதாபாத்திரம் மிகவும் மோசமாக கையாளப்பட்டிருக்கிறது. நண்பர்களுக்குள் சண்டை, காதலியின் திருமணத்துக்குச் செல்வது, ஆண் - பெண் நட்பு புரிதல் என ஆரம்பிக்கும் திரைக்கதை ஏனோ சின்னுவுக்கு இருக்கும் நோய், அவளுக்கு நிகழும் அநீதி, சமூகப் பிரச்னைகள், சாட்சிகள், நீதிமன்றம், அரசியல் துஷ்பிரயோகம், ட்விஸ்ட் என எங்கெங்கோ செல்கிறது. படுஜாலியாக ஆரம்பிக்கும் ஒரு கதை, இறுதியில் எந்த மாதிரியான சினிமா இது? என்ற கேள்வியை எழுப்புகிறது.

உண்மையில் மெக்கானிக்கல் டிப்பார்ட்மென்ட்டில் ஒரு பெண் இருந்தால் எப்படி இருக்கும் என்பதற்காகவும், மீண்டும் கல்லூரி வாழ்க்கையைப் பற்றிய ஒரு நாஸ்டால்ஜியா ஃபீலுக்காகவும் தாராளமாய் 'குயின்' படத்துக்கு விசிட் செய்யலாம்.