Published:Updated:

"ஷங்கர் பயன்படுத்தலை.. ஆனா, இவர் படமே எடுத்துட்டார் " - ரீல் டிராஃபிக் ராமசாமி பற்றி ரியல் டிராஃபிக் ராமசாமி

"ஷங்கர் பயன்படுத்தலை.. ஆனா, இவர் படமே எடுத்துட்டார் " - ரீல் டிராஃபிக் ராமசாமி பற்றி ரியல் டிராஃபிக் ராமசாமி
"ஷங்கர் பயன்படுத்தலை.. ஆனா, இவர் படமே எடுத்துட்டார் " - ரீல் டிராஃபிக் ராமசாமி பற்றி ரியல் டிராஃபிக் ராமசாமி

"ஷங்கர் பயன்படுத்தலை.. ஆனா, இவர் படமே எடுத்துட்டார் " - ரீல் டிராஃபிக் ராமசாமி பற்றி ரியல் டிராஃபிக் ராமசாமி

அரசியல்வாதிகளோ ரவுடிகளோ மக்களைக் கொடுமைப்படுத்துவதுபோன்ற காட்சிகள் சினிமாவில் இடம்பெறும்போது, கூட்டத்தில் இருக்கும் ஒருவர், 'உங்களைத் தட்டிக்கேட்க ஒருத்தன் நிச்சயம் வருவான்டா... உங்களை மாதிரியான ஆளுங்ககிட்ட இருந்து எங்களைக் காக்க ஒருத்தன் வராமலா போயிடுவான்...' என்பதுபோன்ற வசனங்களை உணர்ச்சியுடன் பேசுவது வழக்கம்.

ஆனால் ரியல் லைஃபில் அநியாயத்துக்கு எதிராகத் தனி ஒருவராக நீண்டநாளாகக் குரல்கொடுத்துவரும் 83 வயது இளைஞர் டிராஃபிக் ராமசாமி. அந்தத் தனி ஒருவரின் கதை, ‘டிராஃபிக் ராமசாமி’ என்கிற பெயரிலேயே தற்போது படமாக வெளிவர இருக்கிறது. அதில் டிராஃபிக் ராமசாமியாக இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கிறார். இந்தப் படத்தை விக்கி இயக்குகிறார்.

 ரியல் டிராஃபிக் ராமசாமியையும் படத்தில் டிராஃபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரனையும் ஒரே ஃப்ரேமில் உட்காரவைத்து விகடனுக்காகப் பேசினோம். 

"இந்தப் பட இயக்குநர் விக்கி கடந்த ஏழு வருஷமா என்கிட்ட அசிஸ்டென்டா இருந்தான். 'நான் இப்ப படம் டைரக்ட் பண்ணுற எண்ணத்துலயே இல்லை. அதனால நீ வெளியபோய் படம் பண்ணு. காலம் தாழ்த்தி உன் வாழ்க்கையை தொலைச்சுடாதே.' இதுதான் நான் அவன்கிட்ட அடிக்கடி சொல்ற அறிவுரை. 

இந்தச் சமயத்தில் ஒருநாள் விக்கி, விகடன் பிரசுரத்துல வெளிவந்த, 'ஒன் மேன் ஆர்மி'ங்கிற புத்தகத்தைக் கொடுத்து, ‘படிங்க சார்’னு சொல்லிட்டுப் போனான். அந்தப் புத்தகத்தை திறந்தவன் ஒரே நாள்ல படிச்சு முடிச்சிட்டேன். அது என்னை சாப்பிடக்கூடப் போகவிடாத அளவுக்கு ரொம்ப ஈர்த்திடுச்சு. உண்மையைச் சொல்லணும்னா, அந்தப் புத்தகத்தைப் படிக்கிறதுக்கு முன்னாடிவரை டிராஃபிக் ராமசாமினா பேனரைக் கிழிக்கிறவர், கோர்ட்டுக்குப் போறவர்னு மட்டும்தான் தெரியும்.

ஆனா, ‘ஒன்மேன் ஆர்மி’யைப் படிச்சதுக்குப்பிறகு அவர்மேல தனி மரியாதையே உண்டாகிடுச்சு. உடனே, 'டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை நீ படமா பண்ணு. நான் நடிக்கிறேன்'னு சொன்னேன். காரணம், அந்தப் போராளி பற்றின உண்மையும் அவர் செஞ்ச போராட்டங்களையும் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுபோய் சேர்க்கணும்னா இந்தப் படம் பண்ணியே ஆகணும்ங்கிற எண்ணம் வந்தது!” இது, ‘டிராஃபிக் ராமசாமி’  படம் எப்படி உருவானது' என்ற கேள்விக்கு எஸ்.ஏ.சி சொன்ன பதில்.
    
``முதல்ல விக்கிதான், ‘எஸ்.ஏ.சி சார் உங்களைப் பார்க்கணும்னு சொல்றாங்க’னு சொன்னார். இந்த இளைஞனைப் பார்க்க மூணு மாடி ஏறி மூன்று முறை என் ஆபீஸுக்கு வந்தார் சந்திரசேகர். என் வாழ்க்கையைப் படமா எடுக்கப்போறேன்னு அவர் எங்கிட்ட சொல்லும்போது, உண்மையிலே இப்படிலாம் நடக்குமானு ஆச்சர்யமா இருந்துச்சு. இத்தனை வருஷமா ஒருத்தன் இப்படிப் போராடிட்டு இருக்கான்னு நினைச்சு அதைப் படமா எடுக்கணும்னு அவங்க நினைச்சதையே, தமிழகத்தில் மாற்றம் வருவதற்கான அறிகுறியாகத்தான் நான் பார்க்கிறேன்`` உற்சாகத்துடன் பேசுகிறார் டிராஃபிக் ராமசாமி. 

``அவர்கூட மூணு முறை ரெண்டுமணி நேரத்துக்கு மேல பேசிட்டு இருந்திருக்கேன். அப்போ, அவருக்கு வர்ற போன்கால் எல்லாமே யாரோ ஒருத்தர் எங்கேயோ பாதிக்கப்பட்டிருக்கும் விஷயத்துக்கானதா இருக்கும். அவங்க போலீஸுக்கு போன் பண்ணாம இவருக்கு போன் பண்ணி, `சார் இந்த இடத்துல இப்படி ஆகிடுச்சு`னு தங்களோட பிரச்னையைச் சொல்றாங்க. உடனே, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு போன் பண்ணி `என்ன இப்படி நடக்குதாமே..? இதோ, நான் வந்துட்டே இருக்கேன்`னு இவர் பேசுற விதமே தனி ஸ்டைலா இருக்கும். இப்படி அவரோட இருக்கும் நேரத்துல, அவர் எப்படிப் பேசுறார், உடல் மொழி எப்படி இருக்கு, இந்த மாதிரி நிறைய விஷயங்களைக் கவனிச்சுட்டே இருப்பேன்` தான் டிராஃபிக் ராமசாமியாக மாறிய கதையைப் பகிர்கிறார் எஸ்.ஏ.சி.

`சினிமாவில் உங்களுக்கு ஆர்வம் இருக்கா? திரைப்படங்கள் பார்க்கும் பழக்கமிருக்கிறதா?` என்றதும் சிரித்த டிராஃஃபிக் ராமசாமி, “பள்ளிப் பருவத்திலேயே நான் ஒரு நாடக நடிகன். நிறைய நாடகங்களில் நடிச்சிருக்கேன்” என்றவர், “ஒரு நடிகனாகவும் ரசிகனாகவும் சினிமா எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் மனைவியுடன் சேர்ந்து பார்த்த முதல் படம் `கல்யாணப் பரிசு`. அவங்ககூட சேர்ந்து கடைசியா பார்த்த படம், `ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்`. பிறகு சமூகச் செயல்பாடுகள்ல இறங்கிவிட்டதால சினிமாமேல விருப்பமே இல்லாமப் போயிடுச்சு. ஆனா, இந்தப் படம் ஒரு நல்ல சமூக மாற்றத்தைக் கொண்டுவரும்னு நம்பிக்கை இருக்கு` வார்த்தைகளில் நம்பிக்கை விதைக்கிறார். 
    
,``இவரின் பேரை தலைப்பா வைக்கிறதுக்கான அனுமதியைப் பெறத்தான் முதல்ல இவரை நான் சந்திச்சேன். அந்தத் தலைப்பை நிறைய பேர் கேட்டப்போ தர மறுத்திருக்கார். ஆனால், நான் போய் அனுமதிக் கடிதத்தைத் தந்ததும், என்ன நினைச்சாரோ தெரியலை, `நீங்கள் என் பெயரை எப்படி வேணாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்`னு எழுதிக் கொடுத்தார். அது மட்டுமில்லாம, தன் பாக்கெட்ல இருந்து இருநூறு ரூபாயை எடுத்துக்கொடுத்தார். அதுதான் சமீபத்தில் நான்பெற்ற மிகப்பெரிய பரிசு. அதைப் பத்திரப்படுத்தியும் வெச்சிருக்கேன்” என்று அந்த இருநூறு ரூபாயை எடுத்துக்காட்டுகிறார் எஸ்.ஏ.சி.

'யாரெல்லாம் உங்கள் பெயரைப் பயன்படுத்த கேட்டார்கள்?' என்றதும், " 'அந்நியன்'  பட ஹீரோ கேரக்டருக்கு டிராஃபிக் ராமசாமினு பெயர் வைக்கணும்னு டைரக்டர் ஷங்கர் ஆபீஸிலிருந்து கேட்டாங்க. ஆனா, பிறகு அவங்களே அந்த கேரக்டருக்கு 'ராமானுஜம்'னு பேரு வெச்சுக்கிட்டாங்க" என்கிறார் டிராஃபிக் ராமசாமி. 

'நடிகர்கள் பலர் அரசியல் பிரவேசம் எடுப்பதை ஒரு சமூக ஆர்வலராக எப்படிப் பார்க்கிறீர்கள்?' என்றதற்கு, " இப்ப உள்ள காலகட்டத்துக்கு அது சரியா வராது. முதல்ல அவங்க தொழிலையே அவங்களால் முறைப்படுத்த முடியலை. இதுல இவங்க எப்படி மக்களுக்கு நல்லது செய்யப்போறாங்க? " என்று அவரை இடைமறித்த எஸ்.ஏ.சி., 'இந்தக் கருத்தில் நான் முரண்படுகிறேன். எந்தத் தொழில் செய்பவரா இருந்தாலும் அரசியலுக்கு வரலாமே., ஒரு குழந்தை பிறந்தவுடனே அது ஓடும்னு நினைக்கிறது தவறு. படிப்படியாகத்தான் நடக்க ஆரம்பிக்க முடியும்" என்கிறார். 

“இந்த பதில், விஜயின் அரசியல் பிரவேசத்திற்கான அறிகுறி என்று எடுத்துக்கொள்ளலாமா?' என்றவுடன் சற்று யோசித்த எஸ்.ஏ.சி,, “ஒரு தந்தையாக என் மகன் ஓடுவதற்கான எல்லாவற்றையும் தயார் செஞ்சு கொடுத்திருக்கேன். ஆனா, அவர் ஓடுறதும் ஓடாமல் இருப்பதும் அவர் கையில்தான் இருக்கு" என்கிறார். 

‘ஜோக்கர்’ படத்தில்கூட உங்களைப் பிரதிபலிக்கும் வகையிலான காட்சிகளை அமைத்திருந்தார்களே” என்றதும் “ஆமாம். ஜோக்கர் நல்ல படம். ஆனால் என்னைப்பொறுத்தவரை அந்த மன்னர்மன்னன் கேரக்டர் சாகாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இவ்வளவு போராட்டங்கள் நடத்தி இன்னும் வாழ்கிறார் என்று காட்டியிருந்தால் மக்கள் மத்தியில் இன்னும் நேர்மறையான எண்ணங்கள் தோன்றும் என்பதே என் கருத்து” என்கிற டிராஃபிக் ராமசாமியின் கருத்தை ஆமோதித்த எஸ்.ஏ.சி., “ஆயிரத்தில் ஒருத்தனாக, கோடியில் ஒருத்தனாக இல்லாமல், பல கோடி நெஞ்சங்களில் வாழும் ஒருத்தனாக இருக்கணும். உண்மையான போராளிகளுக்கு என்றும் மரணமில்லை” என்றபடி டிராஃபிக் ராமசாமியை கட்டி அணைத்துக்கொள்கிறார். 

“இந்த ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தில் நிறைய சர்ப்ரைஸ்கள் காத்திருக்கு. விகடனின் `ஒன் மேன் ஆர்மி` புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சி படத்துக்குள் இருக்கு. அந்தப் புத்தகத்தை குஷ்பு வெளியிட சீமான் பெற்றுக்கொள்ளும் காட்சி இருக்கு. தவிர பிரகாஷ் ராஜ், விஜய் ஆண்டனி, மனோபாலா, கஸ்தூரினு பல பிரபலங்கள் நடிச்சிருக்காங்க. இவர்களைத் தவிர ஒரு பெரிய நடிகரும் இதில் நடிக்கிறார். அவர் யார் என்பது சஸ்பென்ஸ்!” என்றபடி விடைபெற்றனர் டிராஃபிக் ராமசாமி’கள்.

அடுத்த கட்டுரைக்கு