Published:Updated:

"மிஷ்கினு, ராமு... நீங்க அப்படின்னா, அப்புறம் நாங்க எப்படி?!'' - 'சவரக்கத்தி' விமர்சனம்.

விகடன் விமர்சனக்குழு
"மிஷ்கினு, ராமு... நீங்க அப்படின்னா, அப்புறம் நாங்க எப்படி?!'' - 'சவரக்கத்தி' விமர்சனம்.
"மிஷ்கினு, ராமு... நீங்க அப்படின்னா, அப்புறம் நாங்க எப்படி?!'' - 'சவரக்கத்தி' விமர்சனம்.

'கத்தி எதுக்குத்தான்... தொப்புள்கொடி வெட்டத்தான்' - படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் வரிகள்தான், படத்தின் கதைக்களம். பரோல் முடியும் நாள், மாலை 6 மணிக்கு மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்கிற வெறுப்பில், அழுத்தத்தில் காரில் நகரத்தைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு கேங் லீடர், சந்தர்ப்பவசத்தால் அவனது வழியில் மாட்டிக்கொள்ளும் ஓர் அப்பாவி குடும்பஸ்தன்... இருவருக்குமிடையிலான  துரத்தல்களும் ஓட்டமுமான திரைக்கதை,  துயரத்திலும் நகைச்சுவையிலுமாக மாற்றி மாற்றி தீட்டப்பட்டதுதான், இந்தக் கூர்மையான 'சவரக்கத்தி'.

தன் ஏழ்மையான அன்றாட வாழ்க்கையைச் சுவாரஸ்யமான பொய்களால் ஓட்டிக்கொண்டிருப்பவர், பார்பர் பிச்சை (ராம்). கடன் வாங்குவது, காரணம் சொல்வது என வாழ்வைக் கழிக்கும் 'சந்திரபாபு' ரசிகர். மாலை ஆறு மணிக்குள் மீண்டும் போலீஸிடம் ஆஜராகி, சிறைக்குச் செல்லவேண்டிய காரணத்தால், இருக்கும் ஒருநாளை 'போகும் போக்கில்' வாழ நினைக்கும் வில்லன் மங்கா (மிஷ்கின்). தன் நிறைமாத கர்ப்பிணி மனைவி சுபத்ரா (பூர்ணா)வின் தம்பிக்கு ‘திருட்டுத்தனமாக’ நடக்கவிருக்கும் காதல் திருமணத்துக்குக் குடும்பத்தோடு பைக்கில் கிளம்புகிறார் பிச்சை. போகும் வழியில் வில்லன் மங்காவுக்கும், பிச்சைக்கும் எதிர்பாராதவிதமாக நடக்கும் சிறு மோதல், இருவருக்குமான அன்றைய நாளை கலைத்துப்போடுகிறது. கையில் ஒரு சவரப்பெட்டியுடன்  பிரச்னைக்குப் பயந்து ஓடத்தொடங்குகிறார், பிச்சை. அவரைப் பழிவாங்க 'பூவா, தலையா' போட்டுப் பார்க்கும் மங்கா, வெட்டுக்கத்தியைக் கையில் எடுக்கிறார். 

இன்னொரு பக்கம், சுபத்ராவின் தம்பி திருமணம் செய்யவிருக்கும் பணக்கார வீட்டுப் பெண்ணைத் தேடிக்கொண்டிருக்கும் அவளின் குடும்பம். மங்கா - பிச்சை மோதலுக்குக் கிடைத்த விடை என்ன, சுபத்ராவின் தம்பியின் காதல் திருமணம் நடந்ததா, இந்த இரு கதைகளுக்குமான முடிச்சுகள் எப்படி அவிழ்ந்தன... என்பதை அழகியலும் நகைச்சுவையுமாகச் சொல்கிறது படம்.

‘சென்சிட்டிவான முடிச்சுகள் கொண்ட ஒரு கதை, விறுவிறுப்பாக, ஆரவாரமாக நகரும்' என்ற பிம்பத்தை உடைத்துப்போட்டு, டார்க் காமெடியில் திரைக்கதையை நகர்த்தியிருப்பது, 'சவரக்கத்தி'யின் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட். அந்த வகையில், திரைக்கதைதான் படத்தின் முதல் கதாநாயகன். 'ஆறு மணிக்குமேல் மூன்று வருட வாழ்க்கையை ஜெயிலில்தான் கழிக்கப்போகிறோம்' என்ற விரக்தி, அதற்கு ஏற்ற உடல்மொழி, வசனங்கள் எனத் தன் மறுபக்கத்தைக் காட்டியிருக்கிறார் வில்லன் மிஷ்கின். வில்லனுக்கு நேரெதிர் கேரக்டரில் இயக்குநர் ராம். வழவழ வசனங்கள், மெச்சூரிட்டி இல்லாத மேனரிஸம், அப்பாவித்தனம் என அந்தக் கதாபாத்திரம் கோரும் நடிப்புக்காக மிஷ்கினுக்குப் போட்டியாக உழைத்திருக்கிறார். 'இந்தா... நீங்க அப்படின்னா அப்புறம் நாங்க எப்படி?' என்ற ரகத்தில் தனக்கான கேரக்டரைக் கச்சிதமாக செய்திருக்கிறார் பூர்ணா. படத்தின் பெரும்பலம் இந்த மூவர்தான்!

தவிர, தலையைத் தட்டிய குற்றத்துக்காக 'போய்யா... இன்னைக்கு உன் நாள் நல்லாவே இருக்காது' என ராமுக்கு சாபம் கொடுக்கும் சிறுவன், மிஷ்கினின் சித்தப்பா மற்றும் மிஷ்கினின் 'ரகரகமான' அடியாட்கள், கரும்பு ஜூஸ் கடை அம்மா, அடிவாங்கும் ஜோசியக்கார நண்பர்,ராம் துவளும்போது தைரியம் கொடுக்கும் 'பொய்யாமொழி' டீக்கடை மாஸ்டர்,  வாடகை சைக்கிள் கொடுக்கும் நபர், குப்பை பொறுக்கும் ஆள், 'இங்கிலீஷ்' பைத்தியம் ஷாஜி... எனப் படத்தில் இடம்பெற்ற பல குட்டிக் குட்டிக் கேரக்டர்களில் சுவாரஸ்யம் அதிகம். பல அடிகளுக்கு மத்தியிலும் பளிச் ஐடியாக்கள் கொடுத்து மிஷ்கினிடம் பரிசு பெறும் கேரக்டருக்கு கூடுதல் லைக்ஸ். படத்தில் சிங்கிள் ப்ரேமில் வந்து போகிறவருக்கும் ஒரு கதை இருப்பதாக பார்வையாளிடம் கடத்துகிற திரைக்கதை பாராட்டுக்குரியது. வசனங்களிலும் சில பல கதை லேயர்கள். “வெளியே ஒரு பெரியவர் பிச்சையெடுத்துக்கொண்டிருப்பார், அவர் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி. அவர்கிட்ட ஒரு கையெழுத்து வாங்கிட்டு வாங்க. சுயமரியாதைத் திருமணமா பதிவு பண்ணிடலாம்” என பதிவாளர் சொல்கிற இடம் ஓர் உதாரணம்.  

வழக்கமான மிஷ்கின் படங்களில் இருக்கும் ஷாட், இருட்டு, சோகப் பின்னணி இசை என எதுவும் இல்லாமல், காமெடி சரவெடி கொளுத்த முயற்சி செய்திருக்கிறார் மிஷ்கின். அதைக் கச்சிதமாகக் கையாண்டு இயக்கியிருக்கிறார், படத்தின் இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யா. வெல்கம் பாஸ்! ஒளிப்பதிவாளர் கார்த்திக் வெங்கட்ராமின் உழைப்பு அபாரம். மிஷ்கின் டெம்ப்ளேட்டுகளில் இருந்து தனித்துத் தெரிய, ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். குறிப்பாக, 'ஸ்டேபிள்' ஷாட்கள் அதிக கவனம் பெறுகிறது. ரன்னிங், சேஸிங் எனப் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் திரைக்கதைக்குத் தொய்வில்லாத வடிவம் கொடுத்திருக்கிறார், எடிட்டர் S. ஜூலியன். அரோல் கொரேலியின் பின்னணி இசை திரைக்கதையோடு இரண்டறக் கலந்து ஒலிக்கிறது. தமிழச்சி தங்கபாண்டியன் எழுதியுள்ள 'அண்ணாந்து பார்' பாடல் கச்சிதமான இடத்தில் பொருத்தப்பட்டு பார்வையாளனுக்கு உணர்வைக் கடத்துகிறது.

டார்க் ஹீயூமர் என்றாலும், ‘கர்ப்பிணி' பூர்ணா தாறுமாறாக சுவற்றைத் தாண்டுவது, ஓடுவது, திடீர் திடீரென நடக்கும் மனமாற்றங்கள்... எனப் படத்தின் 'நெகட்டிவ்' ஏரியாவைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். காமெடியாகவே நகரும் திரைக்கதையில் ஆங்காங்கே வரும் எமோஷனல் காட்சிகள், முன்கூட்டியே கணிக்கும் விதத்தில் இருப்பது மற்றொரு குறை. மிஷ்கினின் ஆளுமை இயக்குநர் ஆதித்யாவை திரைமொழியிலும் பெரிதும் பாதித்திருக்கிறது.

வன்முறை - அன்பு இரண்டின் மோதலில், முதன்முறையாக அந்தக் கத்தியில் ரத்தம் படியும் இடம் செம. அனைத்துத் தரப்பு பார்வையாளர்களுக்குமான ஒரு சுவாரஸ்ய சினிமா சவரக்கத்தி!