Published:Updated:

"அவனும் நானும், 'மின்னலே' படம், 'ஸ்டுப்பிட்' ரியாக்‌ஷன்...வாவ்..!" - லவ் வித் இந்துஜா #LetsLove #VikatanExclusive

"அவனும் நானும், 'மின்னலே' படம், 'ஸ்டுப்பிட்' ரியாக்‌ஷன்...வாவ்..!" - லவ் வித் இந்துஜா #LetsLove #VikatanExclusive
"அவனும் நானும், 'மின்னலே' படம், 'ஸ்டுப்பிட்' ரியாக்‌ஷன்...வாவ்..!" - லவ் வித் இந்துஜா #LetsLove #VikatanExclusive

'மேயாத மான்' படத்தில் சுடர்விழியாக வந்து தன் நடிப்பில் சுட்டெரித்தவர், இந்துஜா. தன் நடிப்பால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்து தற்போது பல படங்களில் பிஸியாக இருக்கிறார். காதலர் தினத்தை முன்னிட்டு சில பல 'காதல்' கேள்விகளைக் கேட்டோம். அந்த இனிமையான உரையாடலில் அவர் கூறிய சுவாரஸ்யமான பதில்களும் காதல் பற்றிய அவரது ஆசையும் இதோ...
 

நீங்க பண்ண புரபோஸல் அல்லது உங்களுக்கு வந்த புரபோஸல்  

"நான் இது வரைக்கும் புரபோஸ் பண்ணதில்லை. நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது ஒருத்தர் வந்து 'உங்க பின்னால பத்து வருடத்துக்கும்மேல சுத்திக்கிட்டு இருக்கேன்"னு சொன்னார். எனக்கு ஒரே ஷாக்கிங்கா இருந்துச்சு. அப்பவே பத்து வருடமா சுத்திட்டு இருக்கேன்னு சொன்னா, ஏழு வயசில இருந்தே லவ் பண்ணிருக்கார். அப்பப்போ ஒருத்தவங்க கொடுக்கச் சொன்னாங்கனு நிறைய கிஃப்ட் வரும். அதைக் கொடுத்ததெல்லாம் இவர்தான்னு அப்பதான் எனக்குத் தெரியும். ஆனா, கடைசிவரை அவர் சுத்தினேன், சுத்தினேன்னுதான் சொன்னாரே தவிர லவ் புரபோஸ் பண்ணலை."

ப்புரஸ் பண்ணவந்து யாராவது சொதப்பியிருக்காங்களா? 

(சிரிப்புடன் தொடங்குகிறார்...) "நான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும்போது ஒரு பையன் என்கிட்ட வந்து ரொம்ப சீரியஸா புரபோஸ் பண்ணான். கடைசியா பார்த்தா, அவன் ஒன்பதாவது படிக்கிற சின்ன பையன். நான் அவனைவிட சின்னப் பொண்ணுனு நினைச்சு ப்ரபோஸ் பண்ணிட்டான். நான் காலேஜ் பொண்ணுனு தெரிஞ்சவுடனே, அவனுக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னே தெரியலை. செம காமெடியா இருந்துச்சு. இந்த சொதப்பலை மறக்கவே முடியாது".

நீங்க உங்களுடைய காதலருக்கு கிஃப்ட் கொடுக்கணும்னு நினைச்சா, முதல் கிஃப்ட் என்னவா இருக்கும்?  

"வாலட், வாட்ச், போன் இந்த மாதிரி  தினமும் அவங்க பயன்படுத்துற பொருளைத்தான் நான் முதல் கிஃப்ட்டா பிரசென்ட் பண்ணுவேன். அப்போதான், தினமும் நம்மளைப் பத்தி நினைவுகள் அவங்களைச் சுத்தி இருந்துட்டே இருக்கும்" 
 

சிங்கிளா இருந்த நீங்க 'கமிட்' ஆயிட்டா, அதை முதல்ல யார்கிட்ட சொல்வீங்க? 

"கண்டிப்பா என் தங்கச்சி, அண்ணன். இவங்க ரெண்டு பேர்கிட்டதான் சொல்லுவேன். ஏன்னா, இவங்களைச் சமாளிச்சாதான் வீட்டுல நடக்கப்போற பிரச்னைகளையெல்லாம் ஈஸியா சமாளிக்கலாம்." 

காதலர்கூட முதல் செல்ஃபி  எந்த இடத்துல எடுக்கணும்னு ஆசை? 

"நானும் அவங்களும் மட்டும் இருக்கணும். எங்களோட ஃபீல், காதல் எல்லாமே அந்த செல்ஃபியில தெரியணும். மத்தபடி இடமெல்லாம் முக்கியமில்லைங்க" என்றவர், 'சரி.. மாலத்தீவு, கேரளானு இயற்கையை கனெக்ட் பண்ற மாதிரியான இடங்கள் எதுவா இருந்தாலும் ஓகே தான்"

வருங்கால காதலரோட லாங்-டிரைவ்?

"எனக்கு பைக்கைவிட கார்ல லாங்-ட்ரைவ் பண்றதுதான் ரொம்பப் பிடிக்கும். நாங்க ரெண்டு பேரும் மட்டும் கோவா வரைக்கும் லாங் ட்ரைவ் போகணும்னு ஆசை."
 

ரொம்ப பிடிச்ச காதல் திரைப்படம் என்ன?

"நிறைய படங்கள் இருக்கு. 'மின்னலே', 'அலைபாயுதே'தான் என் முதல் சாய்ஸ்."

மனசுக்கு நெருக்கமானவங்களைத் திட்டணும்னா, என்ன வார்த்தையைச் சொல்லி திட்டுவீங்க? 

" 'ஸ்டுப்பிட்'தான் வாயில வரும். அதுவும், எனக்கு மனசுக்குப் பிடிச்சவங்கன்னா, வேற மாடுலேஷன்ல இருக்கும்".

முக்கியமான குறிப்பு : ''இதுல பல கேள்விகளுக்கு நான் கற்பனையாதான் பதில் சொன்னேன். ஏன்னா, நான் இப்போ சிங்கிள்தான்!