Published:Updated:

"அப்போ நாலு வேலையாள்... 10 நாய்கள்... இப்போ தனிமை ஏழை!" நடிகை பிந்து கோஷ்

"அப்போ நாலு வேலையாள்... 10 நாய்கள்... இப்போ தனிமை ஏழை!" நடிகை பிந்து கோஷ்
"அப்போ நாலு வேலையாள்... 10 நாய்கள்... இப்போ தனிமை ஏழை!" நடிகை பிந்து கோஷ்

"அப்போ நாலு வேலையாள்... 10 நாய்கள்... இப்போ தனிமை ஏழை!" நடிகை பிந்து கோஷ்

மிழ் சினிமாவில் மூத்த கலைஞரில் ஒருவர் நடிகை பிந்துகோஷ். தற்போது, உடல்நலக்குறைவால் சினிமா துறையிலிருந்து ஒதுங்கி இருக்கும் இவர், சென்னை விருகம்பாக்கத்திலுள்ள சிறிய வாடகை வீட்டில் தனிமையில் வசித்துவருகிறார். வறுமை நிலையில் இருக்கும் இவரின் பேட்டி சில வாரங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில் வெளியானது. அதைப் படித்த பொதுமக்கள் பலரும் பிந்துகோஷைச் சந்தித்துப் பேசிவருகின்றனர். இதுவரை தன்னைக் கண்டுகொள்ள யாருமில்லாத நிலையில் இருந்தவர், தற்போது சற்றே உற்சாகமடைந்துள்ளார். 

"நான் கடைசியா சினிமாவில் நடிச்சு 25 வருஷத்துக்கும் மேலயே இருக்கும். அதுக்கப்புறம் என்னைப் பலரும் மறந்துட்டாங்க. சினிமாக்காரர்களையும் வதந்தியையும் பிரிக்க முடியாது. அதுக்கு நானும் விதிவிலக்கில்லை. நான் இறந்துட்டதாகவும் பல முறை வதந்திகள் வந்திருக்குது. இந்நிலையிலதான் ஆனந்த விகடன்ல என்னோட பேட்டி வெளியாச்சு. அதுக்குப் பிறகு, 'உங்க பேட்டியைப் படிச்சோம். கண்கலங்கிடுச்சு. எவ்வளவு செல்வச் செழிப்பா வாழ்ந்திருக்கீங்க. இந்த நிலையில் உங்களைப் பார்க்க வருத்தமா இருக்குது'னு அக்கம்பக்கத்தினர் பலரும் ஆறுதலாப் பேசுறாங்க. நான் உயிரோடு இருக்கிற விஷயமே இப்போதான் பலருக்கும் தெரிஞ்சிருக்குது. 

குறிப்பா ஆனந்த விகடன்ல என் கட்டுரை ரிலீஸான அடுத்த நாளே, நடிகர் விஷால் தன் மேனேஜர் மூலமா ஐயாயிரம் ரூபாய் கொடுத்தனுப்பினார். மறுநாள் எங்கிட்ட போன்ல பேசின விஷால், 'இனி மாதம்தோறும் 2,500 ரூபாய் வழங்குறேன். புதுப்பிக்கப்படாமல் இருக்கிற உங்க நடிகர் சங்க உறுப்பினர் சந்தாவைப் புதுப்பிச்சுத்தரேன்'னு சொன்னார். அதன்படி மறுபடியும் நடிகர் சங்கத்துல உறுப்பினராகப்போறேன். அதுக்காகச் சமீபத்துலதான் மகன் மற்றும் மருமகள் உதவியோட ஆதார் கார்டு மற்றும் பேன் கார்டுக்கு விண்ணப்பிச்சிருக்கேன். சென்னை தசரதபுரத்துல ஒரே தெருவுலதான் நடிகை கோவை சரளாவும் நானும் பல வருஷங்களுக்கு முன்னாடி வசிச்சோம். நாங்க ரெண்டு பேரும் பல வருஷ ஃப்ரெண்ட்ஸ். சரளாதான் சமீபத்துல என்னைப் பார்க்க வந்து ஆறுதல் சொல்லிட்டு போனாங்க. மத்தபடி வேற யாரும் என்னை வந்து பார்க்கலை" என்கிறார் பிந்துகோஷ். தன் வயிற்றில் பெல்ட் அணிந்திருப்பதற்கான காரணத்தைக் கேட்டதும், சற்றே சோகமாகிறார். 

"தைராய்டு பிரச்னைதான் என் உடல்நலனை ரொம்பவே பலகீனமாக்கிடுச்சு. அதனாலதான் என்னால தொடர்ந்து நடிக்க முடியலை. கணவர் இறந்ததும், கடந்த 13 வருஷமா வீட்டோடு முடங்கியிருக்கும் தனிமை வாழ்க்கையே என் நிலையாகிடுச்சு. கொஞ்ச தூரம் நடக்கவே, எனக்கு ரெண்டு பேரின் உதவி தேவைப்படுது. சில நாள்களுக்கு முன்ன வீட்டுக்குள்ள கீழ விழுந்துட்டேன். அதனாலதான் பெல்ட் கட்டிகிட்டிருக்கேன். இந்த உடல்நிலையிலயும் இன்னும் நடக்கணும், டான்ஸ் ஆடணும்னு ஆசை வருது. என்ன பண்றது... ஆடிய கால் சும்மா இருக்க மாட்டேங்குதே. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான பெரிய ஆர்டிஸ்டுங்ககூட நிறைய படங்கள்ல நடிச்சேன். அவங்களோடு நிறைய பாடல்கள்ல டான்ஸ் ஆடியிருக்கேன். அந்த மெமரீஸைத் தினமும் நினைச்சுப்பார்த்து சந்தோஷப்படுவேன். 'அப்படியெல்லாம் ஆடியிருக்கோமே. இப்போ ஆட முடியலையே'னு ஃபீல் பண்ணுவேன். 

சினிமாவுல பீக்ல இருந்த சமயம். உழைச்சு சேர்த்த பணத்துல தசரதபுரத்துல பங்களா வீடு கட்டி வசிச்சேன். சமையலுக்கு, வீட்டு வேலைக்குனு தனித்தனியே நாலு வேலையாள்கள் இருந்தாங்க. பத்து நாய்களை வளர்ந்தேன். கார்லதான் பெரும்பாலும் வெளிய போவேன். குடும்ப வறுமையால் அந்த வீட்டை வித்துட்ட நிலையில, இன்னிக்கு ஆட்டோல போறதுக்கே பல முறை யோசிக்கிறேன். ஒவ்வொரு நாளும் மூணு வேளையும் பதினாறு மாத்திரைகளைச் சாப்பிடுறேன். நிறைய மாத்திரைகளைச் சாப்பிவதால சைடு எஃபெக்ட் வருது. அதுக்காகச் சாப்பிடாமலும் இருக்க முடியலை. மாதமானா ரெண்டு டாக்டர்கள்கிட்ட ரெகுலரா செக்கப் பண்ணிக்கிறேன். இதுக்கெல்லாம் போதிய பணவசதியில்லை. சிரமத்துலதான் இருக்கேன். சேர்ல உட்கார்ந்தபடியே சமைச்சுடுவேன். எப்படியோ, ஒவ்வொரு நாள் பொழுதையும் ஓட்டிக்கிட்டிருக்கேன்" என்று கலங்குகிறார் பிந்து கோஷ்.

"மிகச் செல்வச்செழிப்போடு வாழ்ந்த நிலையில, இன்றைய என் நிலையை நினைச்சு ரொம்பவே வருந்துறேன். எதுவுமே நிரந்தரமில்லைங்கிறதுக்கு என் வாழ்க்கை நிதர்சன உதாரணம். யாருக்கும் தொல்லையில்லாம, கடைசிக் காலத்துல போய்ச் சேரணும்னு ஆசைப்படுறேன். அது ஒண்ணுதான் என்னோட ஒரே ஆசை" என நெகிழ்கிறார் பிந்து கோஷ்.
 

அடுத்த கட்டுரைக்கு