Published:Updated:

ஹலோ கார்க்கி... அணிச்சல் வெட்டுங்க, உலவிரவு போங்க! #HBDMadhanKarky

ஹலோ கார்க்கி... அணிச்சல் வெட்டுங்க, உலவிரவு போங்க! #HBDMadhanKarky
ஹலோ கார்க்கி... அணிச்சல் வெட்டுங்க, உலவிரவு போங்க! #HBDMadhanKarky

உலவிரவு, கொஞ்சாலி, யவ்வனா, யவ்வத்தின் நுதிகாண என்று தமிழிசைப் பாடல்கள் சொற்களை முன்னிலைப்படுத்தி ரசிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பாடலின் வெற்றி இசையாக வெளிப்படுத்தப்பட்டாலும்,  ஜீவன் அதன் வரிகள் என்பது மறுப்பதற்கில்லை.
மதன் கார்க்கியின் சொற்பிரயோகங்கள் இந்த ஜீவனை நியாயப்படுத்தும் சான்றிதழ்.

பல கவிஞர்களைக் கண்ட தமிழ் சினிமா, ஒரு கம்ப்யூட்டர் கலைஞனையும் மதன் கார்க்கி வடிவில் பாடலாசிரியராக ஏற்றுக்கொண்டது.

``அப்பா... நான் பாட்டு எழுதலாம்னு இருக்கேன்" என்று கார்க்கி சொன்னதும் ``எல்லா situations-ம் எழுதியாச்சு. புதுசா இப்போ ஏதுமில்லையே" என்று பதில் சொல்லியிருக்கிறார் வைரமுத்து. கிடைக்கும் சூழ்நிலைகளுக்கு மற்றவர்களிடமிருந்து தனித்திருக்க சொற்கள் அளவிலும் பொருள் அளவிலும் சிறப்பாக எழுதுவது இவர் கையாளும் பாணி.

வெறும் வைரமுத்துவின் வாரிசு என்பது மட்டுமே இவருக்கான முகவரி அல்ல; கல்விதான் இவருக்கு முதல் அஸ்திவாரம். `எந்திரன்' திரைப்படத்தில் சுஜாதாவின் இழப்பை ஈடுசெய்ய தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியமர்த்தப்பட்ட கார்க்கியின் சினிமாப் பயணம் பெருமையாக நீண்டுகொண்டிருக்கிறது.

கதாபாத்திரங்களுக்குப் பாட்டு எழுதும்போது கதைமாந்தரின் வாழ்க்கையிலிருந்து சொற்களைத் தேடுவது கார்க்கியின் தனித்துவம். `இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ...' என்று எழுதியது பிரமாண்டம் என்றால் `pencil-ஐ சீவிடும் பென்சிலையே...' என்று ஒரு micro-art செய்யும் பெண்ணை வர்ணித்திருந்தது அழகியல் நிகழ்வு. ஒரு புகைப்படக் கலைஞனாக `ஏனோ குவியமில்லாத காட்சிப்பேழை', ஒரு மீனவனாக `ஒனக்காக வலையொண்ணு வலையொண்ணு விரிச்சிருக்கேன் நான் தவமிருக்கேன்', ஒரு ஈயாக  `ஈயின்னா பாத்தான் என்ன பூச்சியில சேத்தான், அங்கதானே அவன் தோத்தான்', ஒரு ராணுவ வீரனாக `தடதடவென ராணுவம் புகுந்திடும் ஒரு சாலையில் அதிர்வுடன் நுழைந்தாயடி என்னில்`  என்று அனைத்து தளங்களிலும் வெவ்வேறு பரிமாணத்தில் எழுதிவருகிறார் கார்க்கி. வைரமுத்துவும் மதன் கார்க்கியும் வரிகளைக் கையாளும்விதம் ஆச்சர்யம்.

`அம்பிகாபதி' படத்தில் `ஒளியாக வந்தாய்...' பாடலில் வைரமுத்து எழுதியிருந்த வரிகள் இவை.

`இந்த வையம் பூமி எல்லாம் மாயம் என்றேனே, 

உன்னைப் பார்த்த பின்பு எல்லாம் நியாயம் என்றேனே'

இந்த அடிப்படையை கார்க்கி தனது  `24' படத்தில் `நான் உன் அழகினிலே...' பாடலில் இப்படிப் பயன்படுத்துகிறார்.

`வானம் கனவு பூமி கனவு, 

நீயும் நானும் நிஜம்தானே'

ஒரு வாய்ப்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதில் கார்க்கி மிகச்சிறந்தவர். சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்வதில் கார்க்கியின் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

எண்பதுகளில் தனிப்பெரும் இசை சாம்ராஜ்ஜியத்தை தங்களது நான்கு கைகளில் தாங்கியவர்கள் இளையராஜாவும் வைரமுத்துவும்.

நீரோடை நடுவில் கிடக்கும் பாறை ஒன்று நீரை விலக்கி திசைகளைத் திரிப்பதுபோல காரணங்களற்ற திசைகளில் பிரிந்து இருவரும் பயணிக்கத் தொடங்கினார்கள். இன்று வரை அவர்களின் பயணங்கள் தனித்த பாதைகளோடு தூரங்கள் கடந்து நீண்டுவிட்டன. அவர்களின் இணைப்பு என்பது இனி சாத்தியமில்லாத ஒன்றாகிவிட்டது. இப்படியிருக்க, யுவனின் 100-வது படமாக வந்த `பிரியாணி'யில் முதன்முதலாக யுவனுடன் இணைந்து பணியாற்றினார் கார்க்கி. யுவனுக்காக கார்க்கி எழுதிய முதல் பாடல்  `நெஞ்சைத் தாக்கிடும்...' எனத் தொடங்கும் `பாம் பாம் பாம் பெண்ணே...'.

`புன்னகை மன்ன'னில் பிரிந்த இரண்டு ஆளுமைகளின் கடந்தகால நினைவுகளை ஒரு காதல் பாடலின் வழியே எழுதினார் கார்க்கி. 

`நேற்றின் வாசனை மீண்டும் காற்றிலே
நேற்றின் பாடலோ மீண்டும் காதிலே!'

அந்த வாசனைதான் ராஜாவும் வைரமுத்துவும் நுகர்ந்தவை. இன்று யுவனும்  கார்க்கியும் சுவாசித்துவருகிறார்கள். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன் காற்றில் கலந்த அந்த வாசனையை, கார்க்கி தனது வரிகளில் மீட்டெடுத்தார். 

`பொன்மாலை ஒன்று மீண்டும் உண்டானதே
ஏதேதோ எண்ணம் எல்லாம் மீண்டும் பூக்கின்றதே!'

இதில் வரும் `பொன்மாலை - ராஜாவும் வைரமுத்துவும் இணைந்து பணியாற்றிய முதல் பாடல் `இது ஒரு பொன்மாலைப்பொழுது - நிழல்கள்'.
`ஏதேதோ எண்ணம்' - இருவரும் இணைந்து பணியாற்றிய கடைசிப் பாடல் `ஏதேதோ எண்ணம் வளர்ந்தேன் - புன்னகை மன்னன்'.

யுவனுடன் சேர்ந்த முதல் பாடலை தனக்கான வாய்ப்பாக எழுதி கடந்தகால ஞாபகங்களை ஒரு ரசிகனாக வெளிப்படுத்தியிருந்தார்.

ரஹ்மான் வந்த சமயம்  `அவர் கம்ப்யூட்டரைக்கொண்டு இசையமைக்கிறார். ஒரிஜினாலிட்டி இல்லை' என்று விமர்சிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தின் தொழில்நுட்பத்தை ரஹ்மான் இசைக்குப் பயன்படுத்திக்கொண்டார். அதேபோல `கம்யூட்டரைப் பயன்படுத்தி பாட்டு எழுதுகிறார்' என்ற விமர்சனம் கார்க்கி மீது வைக்கப்படுகிறது. அதை அப்படிப் பார்க்காமல் இக்கால தேவைகளுக்கேற்ப தன்னை தொழில்நுட்பத்தோடு இணைத்து இயக்கிக்கொள்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு பாடலுக்கான வெற்றி அதில் நாம் பயன்படுத்தும் சொற்களின் புதுமையில் இருக்கிறது என்பதை, கார்க்கி தனது பாடல்கள் அனைத்திலும் நிரூபித்துவருகிறார். பொன்மாலைப் பொழுது, இளைய நிலா, வெள்ளை மழை என்று எழுதிய புதுமையின் முன்னோடி வைரமுத்துவின் விதைக்கு இந்த வீரியம் இருப்பதில் நிச்சயம் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

இப்படி செய்யும் புதுமைகளால்தான் இன்று தனக்கென ஒரு பாணியில் தனித்து இருக்கிறார் கார்க்கி.

கார்க்கி வரிகளில் :-

`இன்றெந்தன் வீட்டின் கண்ணாடி பார்த்து 
பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னேனே!

ஏனென்றால், உன் பிறந்த நாள்!'

வாழ்த்துகள் மதன் கார்க்கி.