Published:Updated:

"பகல் 12 மணிக்கு எங்களுக்கு அப்பாயின்மென்ட்... ராத்திரி ஜெயலலிதா ஹாஸ்பிட்டல்ல அனுமதி!" நடிகர் வையாபுரி மனைவி

"பகல் 12 மணிக்கு எங்களுக்கு அப்பாயின்மென்ட்... ராத்திரி ஜெயலலிதா ஹாஸ்பிட்டல்ல அனுமதி!" நடிகர் வையாபுரி மனைவி
"பகல் 12 மணிக்கு எங்களுக்கு அப்பாயின்மென்ட்... ராத்திரி ஜெயலலிதா ஹாஸ்பிட்டல்ல அனுமதி!" நடிகர் வையாபுரி மனைவி


" 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு, கணவரின் அன்பும் அக்கறையும் அதிகமாகி இருக்கு. நானும் குழந்தைகளும் ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கோம்" - உற்சாகமாகப் பேசுகிறார், நடிகர் வையாபுரியின் மனைவி, ஆனந்தி. கணவரின் அரசியல் நிலைப்பாடு, மகளின் ஓவியம் மற்றும் நடனத் திறமைகளைப் பற்றி பகிர்ந்துகொண்டார். 

"என் பொண்ணு ஷிவானி, எட்டாவது முடிக்கப்போகிறாள். எல்.கே.ஜி படிக்கும்போதிலிருந்தே டிராயிங்ல அதிக ஆர்வம். டிராயிங் க்ளாஸூக்கு அனுப்பினோம். அவளின் திறமையைப் பார்த்த நடிகரும் ஓவியருமான பாண்டு சார், உத்வேகம் கொடுத்தார். அப்புறம், கே.கே.நகரில் இருக்கும் 'அன்னை காமாட்சி கலைக்கூடத்தில்' வெங்கடாசலம் மாஸ்டர்கிட்ட க்ளாஸூக்கு அனுப்பினோம். தஞ்சாவூர் பெயின்டிங் சிறப்பாகச் செய்வாள். பொதுவா, பெயின்டிங்ல டிப்ளமோ கோர்ஸ் பண்றதுக்கு 10 மாசம் பயிற்சி எடுக்கணும். என் பொண்ணு, மூணே மாசத்தில் முடிக்கப்போகிறாள்.

படிப்பு பாதிக்கப்படக்கூடாதுனு வாரத்தில் சில மணி நேரமே பயிற்சி வகுப்புக்குப் போகிறாள். ஃப்ரீ டைமில் டான்ஸ் பிராக்டீஸும் செய்வாள். அவள் இன்ஸ்டிட்யூட்டில் வருடம்தோறும் பெயின்டிங் கண்காட்சி வைப்பாங்க. அதில், பலரும் தங்கள் ஓவியத்தை காட்சிப்படுத்துவாங்க. அதில் என் பொண்ணு ஓர் இயற்கை காட்சி பெயின்டிங்கை வெச்சிருந்தாள். அதைப் பலரும் பாராட்டினாங்க. கணவருக்கு நெருங்கிய சினிமா பிரபலங்களைக் கண்காட்சிக்கு கூப்பிட்டிருந்தோம். நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் கலந்துகிட்டாங்க. இப்போ, பி.எஃப்.ஏ ( பேச்சுலர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் ) கோர்ஸ் படிக்க ஆசைப்படறாள். அது நிச்சயம் நடக்கும். பரதநாட்டியத்தில் அரங்கேற்றமும் செய்திருக்கிறாள்" என மகளின் பெருமைகளைப் பூரிப்புடன் சொல்லிக்கொண்டே சென்றார் ஆனந்தி. 

'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகான கணவரின் மாற்றங்கள் குறித்துப் பேசியபோது, "அந்த நிகழ்ச்சிக்கு முன்புவரை எங்களிடம் பெருசா அக்கறை காட்டினதில்லை. ஆனால், அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, அவர் ரொம்பவே மாறிட்டார். ஓய்வு நேரங்களில் எங்களிடம் அதிகம் பேசி அன்பா நடந்துக்கிறார். எங்க தேவைகளை உணர்ந்து நிறைவேற்றுகிறார். வெளியிடங்களுக்குக் கூட்டிட்டுப் போறார். இப்போ, ரெண்டு படங்களில் நடிச்சுகிட்டிருக்கார். முன்புபோல பெரிய வாய்ப்பு வர்றதில்லை. 'என் திறமைக்கான அங்கீகாரம் சரியா கிடைக்கிறதில்லை'னு வருத்தப்படறார். 'பிக் பாஸ்' நிகழ்ச்சி முடிஞ்ச சமயத்தில், சக போட்டியாளர்கள் அடிக்கடி மீட் பண்ணி பேசிட்டிருந்தாங்க. இப்போ, நிலைமை மாறிடுச்சு. எல்லோரும் அவங்கவங்க வேலையில் கவனம் செலுத்துறாங்க. ஆரவ், காயத்ரி ரகுராம், சினேகன், ஆர்த்தி என நாலு பேர் மட்டும் என் கணவரோடு தொடர்ந்து பழகிட்டு இருக்காங்க. மத்தவங்களுக்கு போன் பண்ணினாலும், ரெஸ்பான்ஸ் பண்றதில்லைன்னு சொல்வார்" என்கிறார். 

கமல்ஹாசனின் கட்சியில் வையாபுரி இணைந்ததாக வந்த தகவலை மறுக்கும் ஆனந்தி, "என் கணவர் எந்தப் புதுக்கட்சியிலும் சேரலை. சில வருஷத்துக்கு முன்னாடி அவருக்குப் பட வாய்ப்புகள் குறைஞ்சது. படிச்சவங்களா இருந்தால் ஒரு வேலை இல்லைன்னா இன்னொரு வேலைன்னு மாறிடுவாங்க. எங்களை மாதிரி சினிமாகாரங்களுக்கு என்ன வழி? செலவுகளைச் சமாளிக்க அதிமுகவில் உறுப்பினரா சேர்ந்து, பிரசாரங்களுக்குப் போனார். அதுவுமில்லாமல், என் கணவருக்கு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மேலே ரொம்ப மரியாதை. தொடர்ந்து கட்சியின் கூட்டங்களில் நட்சத்திரப் பேச்சாளரா பேசினார். ஜெயலலிதா அம்மாவும் எங்க குடும்பத்தின் மேலே அன்பு வெச்சிருந்தாங்க. எங்களை நேர்ல வரவழைச்சு வாழ்த்தியிருக்காங்க. அவங்க ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்பட்ட தினத்தில்தான் எங்க மகளின் அரங்கேற்ற நிகழ்வுக்கான அழைப்புதழ் கொடுக்க அப்பாயின்மென்ட் கொடுத்திருந்தாங்க. 

காலை 12 மணிக்கு போயஸ் கார்டன் போயிட்டோம். 'அம்மாவை இப்போ சந்திக்க முடியாது. அழைப்பிதழை கொடுத்துடுறோம்'னு பூங்குன்றன் சார் வாங்கிகிட்டார். என் கணவர் இன்னும் அதிமுகவில்தான் இருக்கார். அங்கே இப்போ பிரிவுகள் ஏற்பட்டிருந்தாலும், அது ஜெயலலிதா வளர்த்த கட்சி. சீக்கிரமே பிரச்னைகள் தீர்ந்து, பழைய உற்சாகம் வரும்னு கணவர் உறுதியா நம்புறார். கமல்ஹாசன் சார் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியைத் தொடங்கினபோது, அறிமுக நிகழ்ச்சியில் கலந்துக்க அழைப்பு வந்துச்சு. அவர் மீதிருக்கும் மதிப்பு காரணமாகத்தான், நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டார். மற்றபடி வேற கட்சியில் என் கணவர் சேரலை" என்கிறார் ஆனந்தி.