Published:Updated:

"நான் இப்போ ரெண்டு குழந்தைகளின் அம்மா!" நடிகை நீபா

"நான் இப்போ ரெண்டு குழந்தைகளின் அம்மா!" நடிகை நீபா
"நான் இப்போ ரெண்டு குழந்தைகளின் அம்மா!" நடிகை நீபா

"அம்மாவின் திறமைக்கு இன்னும் அதிக வாய்ப்புகள், புகழ் கிடைச்சிருக்கணும். ஆனா, கிடைக்கலை. காரணம், அவங்க ரொம்பவே நேர்மையான வழியில் போக ஆசைப்பட்டதால். நான் சொல்ற அர்த்தம் உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன்."

"கடந்த அஞ்சு வருஷமா சினிமாவிலிருந்து விலகியிருக்கேன். குடும்பத்துக்கு அதிக நேரத்தை ஒதுக்கிட்டு, டான்ஸ் வகுப்புகளும் எடுத்துட்டிருக்கேன். வாழ்க்கை அமைதியா போயிட்டு இருக்குது" - உற்சாகமாகப் பேசுகிறார் நடிகை நீபா. நடிப்பு, டான்ஸ், குடும்பம் பற்றிப் பேசுகிறார்.

"திருமண வாழ்க்கை எப்படிப் போகுது?"

"2013-ம் வருஷம் கல்யாணம் ஆச்சு. அதுக்குப் பிறகு சினிமா, சின்னத்திரைனு எதிலும் வொர்க் பண்ணலை. கல்யாணமான ஒன்றரை வருஷத்துலயே முதல் பொண்ணு ஸ்ரேயா பிறந்தாங்க. இப்போ பையன் சரண் பிறந்து எட்டு மாசமாகுது. குடும்பம், குழந்தைங்கனு இல்லறத்துலதான் அதிகமா கவனம் செலுத்துறேன். கணவர் சிவக்குமார் அன்பானவர். திருமண வாழ்க்கை சிறப்பா போகுது."

"இந்த இடைப்பட்ட காலத்தில் சினிமா வாய்ப்புகள் வந்ததா?"

" 'சின்ன வயசுலருந்து சினிமாவுல நிறைய வொர்க் பண்ணிட்ட. இனி தேவைப்பட்டால் ரெஸ்ட் எடுத்துக்கோ'னு கல்யாணம் ஆன தருணத்தில் கணவர் சொன்னார். எனக்கும் கொஞ்சக்காலம் ஓய்வெடுக்க தோணுச்சு. அப்போ சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. நான் ஏத்துக்கலை. ஆனா, டான்ஸை என்னிக்குமே கைவிட விரும்பலை. அதுதான் எனக்கான அடையாளம். தெரிஞ்ச குழந்தைகள் பலர் எங்கிட்ட டான்ஸ் கத்துக்க வந்தாங்க. அப்படித் தொடங்கி, இப்போ வீட்டுல இருந்தபடியே நிறைய குழந்தைகளுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுக்கிறேன். சீக்கிரமே ஓர் இன்ஸ்டிட்யூட் ஆரம்பிக்கப்போறேன்."

"டான்ஸரான நீங்க, நடிக்க வந்தது எப்படி?"

"அப்பா வாமன் மற்றும் அம்மா மாலினி ரெண்டு பேரும் ஃபேமஸான டான்ஸர்ஸ். என் சின்ன வயசுல அம்மாகிட்ட கிளாசிக்கல் டான்ஸ் கத்துக்க ஆரம்பிச்சேன். அப்போ அம்மா சினிமாவுல பிஸியா இருந்தாங்க. அதனால, ஒரு மாஸ்டர்கிட்ட முறைப்படி டான்ஸ் கத்துகிட்டு அரங்கேற்றம் செய்தேன். நடிகை ஶ்ரீதேவியின் மிகத் தீவிரமான ரசிகை நான். அவங்க நடிச்ச 'ஜெகதீக வீருடு அதிலோக சுந்தரி' படத்தை ஆயிரம் முறைக்கும் மேலயே பார்த்திருப்பேன். சின்ன வயசுல இருந்து ஶ்ரீதேவின் படங்களைப் பார்த்து, ஒருகட்டத்துல  நடிகையாகணும்னு ஆசைப்பட்டேன். அம்மாகிட்டச் சொன்னேன். 'உன் சொந்தத் திறமையில முன்னுக்கு வா'னு சொல்லிட்டாங்க. ஸ்கூல் முடிச்ச தருணம். விஜய் டிவி 'காவியாஞ்சலி' சீரியல் ஆடிஷன்ல செகலக்ட் ஆனேன். அந்த சீரியல்ல ஹீரோயினா நடிச்சேன். அடுத்தடுத்து நிறைய சீரியல்கள் மற்றும் படங்கள்ல நடிச்சேன். இடையில், என் அம்மா, ஶ்ரீதர், லாரன்ஸ் உள்ளிட்ட பல டான்ஸ் மாஸ்டர்கள்கிட்ட அசிஸ்டென்டா வொர்க் பண்ணினேன். சன் டிவி 'மஸ்தானா மஸ்தானா' மற்றும் கலைஞர் டிவி 'மானாட மயிலாட' நிகழ்ச்சிகளின் டைட்டில் வின்னரானேன். ரெண்டு படங்கள்ல டான்ஸ் மாஸ்டராவும் வொர்க் பண்ணியிருக்கேன்."

"ஶ்ரீதேவியை நேர்ல சந்திச்சிருக்கீங்களா?"

"ஶ்ரீதேவியின் நிறைய படங்கள்ல அம்மா வொர்க் பண்ணியிருக்காங்க. அவங்களுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்திருக்காங்க. நான் அவங்களைச் சந்திக்க ரொம்பவே ஆசைப்பட்டது என் அம்மாவுக்குத் தெரியும். ஆனா, அம்மா வேலை விஷயத்துல மட்டும்தான் கவனம் செலுத்துவாங்க. மத்தபடி சிபாரிசு, ஹெல்ப்னு எந்த எதிர்பார்ப்புக்கும் யார்கிட்டயும் போக மாட்டாங்க. அதனால என்னால   ஶ்ரீதேவியைச் சந்திக்க முடியாம இருந்துச்சு. அம்மா 'புலி' படத்துல வொர்க் பண்ணினாங்க. அப்படத்தின் ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன்ல நானும் கலந்துக்கிட்டேன். அப்போதான் ஶ்ரீதேவியைச் சந்திச்சேன். ஆனா, அவங்ககிட்ட பர்சனாலா பேச முடியலை. ஶ்ரீதேவியின் இறப்புக்கு ரொம்பவே வருந்தினேன்."

" 'காவலன்' படத்தில் நடித்த அனுபவம் பற்றி..."

"அதில் வடிவேலு சாருக்கு ஜோடியா நடிச்சேன். என் ஸ்கூல் டைம் ஃபேவரைட், விஜய் சார். அவருடன் நடிச்சது அளவில்லா மகிழ்ச்சி. ரொம்பவே ஹேப்பியா நடிச்சோம். எல்லோரும் நிறைய விஷயங்களைப் பேசினோம். வடிவேலு சார் செமையா எல்லோரையும் கலாய்ச்சு சிரிக்க வைப்பார். நான் காமெடி ரோல்லயும் நல்லா நடிப்பேன் என்பதை தெரியப்படுத்தத்தான் அந்தப் படத்துல நடிச்சேன். அதுக்குப் பிறகு நிறைய காமெடி ரோல்கள்ல வாய்ப்புகள் வந்துச்சு. அதையெல்லாம் மறுத்துட்டேன்." 

"அம்மாவின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கலைனு நினைக்கிறீங்களா?"

"நிச்சயமாக. அம்மா மாலினி, தன்னோட சின்ன வயசுல டான்ஸ் கரியரை தேர்வு செய்தாங்க. பல முன்னணி டான்ஸ் மாஸ்டர்ஸ்கிட்ட அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணியிருக்காங்க. நிறையக் கஷ்டத்துக்குப் பிறகுதான் அவங்களுக்கு டான்ஸ் மாஸ்டர் அங்கீகாரம் கிடைச்சுது. 'பொற்காலம் (தஞ்சாவூரு மண்ணை எடுத்து)', 'வருஷமெல்லாம் வசந்தம்' (எங்கே அந்த வெண்ணிலா உள்பட அப்படத்தில் மூணு பாடல்கள்)' 'காதலுடன் (எல்லாப் பாடல்களும்)'னு தமிழ், தெலுங்குல நிறைய படங்கள்ல வொர்க் பண்ணியிருக்காங்க. ஆனா, அம்மாவின் திறமைக்கு இன்னும் அதிக வாய்ப்புகள், புகழ் கிடைச்சிருக்கணும். ஆனா, கிடைக்கலை. காரணம், அவங்க ரொம்பவே நேர்மையான வழியில் போக ஆசைப்பட்டதால். நான் சொல்ற அர்த்தம் உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். தன் பெற்றோர், கணவர், குழந்தைகள், பேரக் குழந்தைகள்னு எங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணிச்சுகிட்டாங்க. அவங்களுக்குனு பெரிசா எந்த ஆசையும் வெச்சுக்க மாட்டாங்க. என் தம்பி ஐடி கம்பெனியில வொர்க் பண்றான். 'சினிமாவில் வொர்க் பண்ணினது போதும். நாங்க உன்னைப் பார்த்துக்கிறோம்'னு நானும் தம்பியும் அம்மாகிட்ட பல முறைச் சொல்லிட்டோம். ஆனா, 'என் கடைசி காலம் வரை நடிப்பு, டான்ஸ்னுதான் இருப்பேன். வொர்க் பண்ணிட்டே என் உயிர் போகணும்'னு சொல்லுறாங்க. அதுக்குப் பெரிய சென்டிமென்ட் காரணம் வெச்சிருக்காங்க. அந்த அளவுக்கு அம்மா சினிமாவை நேசிக்கிறாங்க." 

அடுத்த கட்டுரைக்கு