Published:Updated:

''வாடி போடினு பேசுற அளவுக்கு அவ ஒருத்திதான் க்ளோஸ்!’’ - ஜெயசுதா

``சினிமாவில் இந்தப் பிரச்னை இல்லைனு சொன்னா... அது பொய். எல்லா காலத்திலும் இந்தப் பிரச்னை உண்டு. யாரும் யாரையும் நேரடியா வந்து கேட்க மாட்டாங்க. இன்னொருத்தர் மூலமாகதான் அந்த மாதிரியான செய்திகளும் அழைப்புகளும் வரும்."

''வாடி போடினு பேசுற அளவுக்கு அவ ஒருத்திதான் க்ளோஸ்!’’  - ஜெயசுதா
''வாடி போடினு பேசுற அளவுக்கு அவ ஒருத்திதான் க்ளோஸ்!’’ - ஜெயசுதா

தென்னிந்திய சினிமாவில் நாயகியாகக் கலக்கியவர்களில் ஒருவர், நடிகை ஜெயசுதா. ஆந்திராவில் செட்டிலானவர், தமிழ்ப் படங்களில் மிக அரிதாக நடிக்கிறார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில், 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

``தமிழ்ப் படங்கள்ல நடிக்கிறதை ரொம்பவே குறைச்சுகிட்டீங்களா?"

"அப்படியில்லை. 80, 90-கள்ல நூற்றுக்கணக்கான படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன். தெலுங்குப் படங்கள்ல பெரிய புகழ்பெற்றேன். கல்யாணம், குடும்ப வாழ்க்கை, அரசியல்னு பிஸியாகிட்டதால செலக்டிவாதான் நடிக்கிறேன். என் கதாபாத்திரம் பெரிதாகப் பேசப்படுற பெரிய பட்ஜெட் படங்கள்லதான் நடிக்கிறேன். லாஸ்டா 'தோழா'ல நடிச்சேன். இப்போ, 'செக்கச் சிவந்த வானம்' . இதுல என் மனசுக்கு நிறைவான ரோல்ல நடிச்சிருக்கேன். சென்னையிலதான் எனக்கான போர்ஷன் ஷூட் நடந்துச்சு. நிறைவா நடிச்சுட்டுப் போனேன்."

``அடிக்கடி சென்னை வருவீங்களா?"

(சிரிப்பவர்), "நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைலதான். அதனால சென்னை எனக்கு எப்பவும் பியூட்டிஃபுல். ஃபேமிலி மற்றும் ஃப்ரெண்ட்ஸை மீட் பண்ண அடிக்கடி இங்க வருவேன். அப்படி வர்றப்ப எல்லாம் என் ஃபேவரைட் ஹோட்டல்களுக்குத் தவறாம போய் சாப்பிடுவேன். நேரம் கிடைச்சா, பீச்சுக்குப் போவேன். பெரும்பாலும் இந்தி, தமிழ்ப் பாடல்களைதான் வீட்ல அடிக்கடி கேட்பேன். தமிழ்நாட்டுல நடக்கிற விஷயங்களைத் தொடர்ந்து அப்டேட் பண்ணிகிட்டே இருப்பேன்." 

``இயக்குநர் பாலசந்தர் பற்றி..."

``என் குருநாதர். என் சினிமா வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில் எனக்கு நடிப்பைச் சொல்லிக்கொடுத்தவர். நடிக்கிற காலத்துல என்னை தன் பொண்ணு மாதிரி பார்த்துகிட்டார். அவருக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல எவ்வளவு கோபம் வந்தாலும், என்னைப் பார்த்ததும் அமைதியாகிடுவார். என் மேல் அதிக அக்கறை கொண்டவர். நமக்குனு தனி கொள்கைகள் இருக்கணும். அதை யாருக்காகவும் எப்போதும் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. யாருக்கும் பயப்படாமல், நம்ம விருப்பப்படி சுயமா செயல்படணும்ங்கிறதை அவர்கிட்ட கத்துகிட்டேன். அந்தப் பாடம், என் வாழ்க்கைக்கு இப்போ வரை பெரிய உதவியா இருக்குது." 

``உங்க சினிமா குளோஸ் ஃப்ரெண்ட் ஒருவர் பற்றி..." 

``பல குளோஸ் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. வாடி, போடி நட்புனா, அது நடிகை ஜெயபிரதாதான். அவதான் அடிக்கடி எனக்குப் போன் பண்ணுவா. 'ஏன்டீ... ஒரு போன்கூட பண்ண மாட்டீயா?'னு செல்லமா கோபப்படுவா. என்னைப் பத்தி எல்லாமும் தெரிஞ்ச தோழி அவதான்."

``ஒரே வருஷத்துக்கு 24 படங்களில் நடிச்சீருக்கீங்க. இன்னிக்கு வருஷத்துக்குப் பத்து படங்கள் ஹிட் ஆவதே பெரிய விஷயமா இருக்கிறதே?"

``காலமாற்றமும், ரசனை மாற்றமும்தான் இதுக்குக் காரணம். எல்லா வகையிலயும் மாற்றங்கள் நடந்திருக்குது. எங்க காலத்தில் சினிமாதான் மக்களின் பிரதான பொழுதுபோக்கு. இப்போ உள்ள தலைமுறைக்கு நிறைய வகையில் என்டர்டெய்ன்மென்ட் கிடைக்குது. அதனால சினிமாங்கிறது இன்றைய தலைமுறையினருக்கு பிரதான பொழுதுபோக்குக் கிடையாது."

``அட்ஜெஸ்ட்மென்ட்ங்கிற விஷயம் ஆந்திராவை அதிரவைத்திருக்கிறதே..."

``சினிமாவில் இந்தப் பிரச்னை இல்லைனு சொன்னா... அது பொய். எல்லாக் காலத்திலும் இந்தப் பிரச்னை உண்டு. யாரும் யாரையும் நேரடியா வந்து கேட்க மாட்டாங்க. இன்னொருத்தர் மூலமாகதான் அந்த மாதிரியான செய்திகளும் அழைப்புகளும் வரும். மிகக் கண்டிப்பான என் அப்பாவைப் பற்றி சினிமா துறையினருக்கு நல்லாவே தெரியும். அதனால, எங்கிட்ட தவறான கண்ணோட்டத்தில்கூட யாரும் பழக மாட்டாங்க. ஆரம்பத்தில் இருந்து எல்லோர்கிட்டயும் கண்டிப்போடுதான் பழகுவேன். அதனால, எனக்கு அந்த மாதிரியான அழைப்புகள் வந்ததில்லை."