Published:Updated:

``நடிகர் எஸ்.வி.சேகர் கைது எப்போது..?" திண்டாடும் போலீஸ் !

``நடிகர் எஸ்.வி.சேகர் கைது எப்போது..?" திண்டாடும் போலீஸ் !
``நடிகர் எஸ்.வி.சேகர் கைது எப்போது..?" திண்டாடும் போலீஸ் !

``நடிகர் எஸ்.வி.சேகர் கைது எப்போது..?" திண்டாடும் போலீஸ் !

டிகரும், பி.ஜே.பி பிரமுகருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் தனது முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தை பகிர்ந்திருந்தார். இதற்கு நடிகர் ரஜினிகாந்த், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பி.ஜே.பி. தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தி.மு.க. எம்.பி. கனிமொழி என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புக் குரல் தெரிவித்திருந்தனர். அனைத்து அரசியல் கட்சிகளுமே எஸ்.வி.சேகரின் அந்தக் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில், எஸ்.வி.சேகரைக் கைது செய்ய வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் சங்கங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது சென்னை போலீஸார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னைக் கைதுசெய்யாமல் இருக்க எஸ்.வி. சேகர், முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

பத்திரிகையாளர்கள், மாதர் சங்கங்கள், பெண் வக்கீல் சங்கங்கள் போன்றவை அவருக்கு முன் ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, முன் ஜாமீன் வழங்காமல் வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, இந்த வழக்கை கோடைகால நீதிபதி விசாரிப்பார் என்று முன் ஜாமீன் மனுவைத் தள்ளி வைத்தார். இந்நிலையில், எஸ்.வி. சேகரின் முன் ஜாமீன் மனு, நீதிபதி எஸ்.ராமதிலகம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. எஸ்.வி.சேகர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ரகுநாதன், ``எஸ்.வி.சேகர், ஒரு இன்ஜினீயரிங் முடித்த பட்டதாரி. ஒலிப்பதிவாளர், போட்டோகிராபர், வீடியோ கிராபர், எடிட்டர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் என பல துறைகளில் இருப்பவர். திருமலை என்பவர் முகநூல் தளத்தில் பதிவிட்டதை அவர் படித்துப் பார்க்காமல், தெரியாமல் வெளியிட்டுவிட்டார். அதற்காக அவர் பகிரங்க மன்னிப்பும் கேட்டுவிட்டார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என்று வாதிட்டார்.

இந்த வழக்கில் அனைத்துத்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராமதிலகம், எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பில், ``தவறுதலாகச் செய்யும் ஒரு செயலும் குற்றச்செயலும் ஒன்றாகிவிடாது. குழந்தைகள் மட்டுமே தவறு செய்வார்கள். அந்தச் செயலை பெரியவர்கள் செய்தால் அது குற்றம். எஸ்.வி.சேகர், பெண்களுக்கு எதிராக தெரிவித்துள்ள கருத்து, வேலைக்குச் செல்லும் பெண்கள் மீது சமூகத்தில் ஒரு சந்தேகப் பார்வையை ஏற்படுத்தும். எஸ்.வி.சேகரின் கருத்து, பெண்களின் எதிர்காலத்தை அழித்துவிடும். எனவே, எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. அவரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்கிறேன். சாதாரண மனிதருக்கு எதிரான வழக்கை போலீஸார் எப்படி விசாரிப்பார்களோ, அதுபோல இந்த வழக்கையும் விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்து தள்ளுபடி செய்தார்.

சென்னை உயர்நீதிமன்றம், முன் ஜாமீன் தர மறுத்துவிட்டதால், டெல்லி உச்ச நீதிமன்றத்தை நாடினார் எஸ்.வி.சேகர். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஜூன் 1-ம் தேதிவரை அவரைக் கைது செய்ய தடை விதித்திருந்தது. இந்நிலையில், இன்று அவரது மனு விசாரணைக்கு வந்தது. சேகருக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், விசாரணை நீதிமன்றமான அங்கு, எஸ்.வி.சேகர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு, அதன் பிறகே மேல் நடவடிக்கை என்ன? என்பதை முடிவெடுக்கலாம் என்று எஸ்.வி.சேகர் தரப்பு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

நீதிமன்றத்தில் சரண்டர் ஆகி, ஜாமீன் பெற்றுக்கொள்ள முடியுமா? என்று சட்ட நிபுணர்களுடன் எஸ்.வி. சேகர் ஆலோசனை நடத்தி வருகிறார் என்று தெரிகிறது. இதற்கிடையே, ``எஸ்.வி.சேகர் எங்கு இருக்கிறார்? எங்கு செல்கிறார்?" என்று சென்னை போலீஸார் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக சென்னை போலீஸ் உயர் அதிகாரிகள் சொல்கிறார்கள். அதே நேரத்தில், எஸ்.வி.சேகர் வீட்டைத் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 30 பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கேமராமேன்கள்  எங்கு இருக்கிறார்கள் என்றும் போலீஸார் நோட்டமிட்டு வருகிறார்களாம். ஆனாலும், இப்போது எஸ்.வி.சேகரைக் கைது செய்ய முடியாமல், போலீஸார் திணறிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், எஸ்.வி.சேகர் வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தந்துள்ள நெருக்கடி காவல்துறைக்கு நிர்பந்தங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ``எஸ்.வி. சேகர் விஷயத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும். யாருக்கு ஆதரவாகவும் நாங்கள் செயல்பட மாட்டோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு