Published:Updated:

``அப்பாவுக்கு இளையராஜா அங்கிள் ஆறுதலா இருந்தார்!" 'மலேசியா' வாசுதேவன் மகள் பிரஷாந்தினி

``அப்பாவுக்கு இளையராஜா அங்கிள் ஆறுதலா இருந்தார்!" 'மலேசியா' வாசுதேவன் மகள் பிரஷாந்தினி
``அப்பாவுக்கு இளையராஜா அங்கிள் ஆறுதலா இருந்தார்!" 'மலேசியா' வாசுதேவன் மகள் பிரஷாந்தினி

`` 'எது நடந்தாலும் அது நல்லதுக்குதான். நான் உண்மையான உழைப்பைக் கொடுத்திருக்கேன். மக்களும் என் பாடல்களை ரசிச்சு பாராட்டறாங்க. அது போதும்'னு அடிக்கடிச் சொல்வார்."


 

ம்பீரமான குரலில் எட்டாயிரத்துக்கும் அதிகமான திரையிசைப் பின்னணிப் பாடல்கள். 80-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திரம், வில்லன் கதாபாத்திர நடிப்பு எனத் தமிழ் சினிமாவில் தனி அடையாளத்துடன் ஜொலித்தவர், மலேசியா வாசுதேவன். இவர் மண்ணுலகைவிட்டுப் பிரிந்து 7 ஆண்டுகள் ஆனாலும், பாடல்கள் மற்றும் நடிப்பின் வாயிலாக உயிர்ப்போடுதான் இருக்கிறார். அவரது பிறந்தநாள் ஜூன் 15. அந்தத் திரைக்கலைஞரின் நினைவுகளைப் பகிர்கிறார், மலேசியா வாசுதேவன் மகளான, பின்னணிப் பாடகி பிரஷாந்தினி.

``அப்பா மலேசியாவில் பிறந்து வளர்ந்தார். இயல்பிலேயே இசைஞானம் அதிகம் இருந்துள்ளது. ஒரு பாட்டைக் கேட்டதுமே தப்பில்லாமல் திருப்பிப் பாடுவாராம். மலேசியாவில் நாடகங்களில் நடிச்சுட்டிருந்தார். அவர் நடிச்ச 'ரத்தப் பேய்' நாடகம், சினிமாவா எடுக்கப்பட்டது. அதில் நடிக்கிறதுக்காக சென்னைக்கு வந்தவர், இங்கேயே செட்டில் ஆகிட்டார். இளையராஜா சாருடன் நட்பாகி, அவருடன் பல மேடை நிகழ்ச்சிகளில் அப்பா பாடியிருக்கார். 1970-களில் சினிமாவில் பின்னணிப் பாட ஆரம்பிச்சார். `16 வயதினிலே' படத்தில்தான் அவருக்குப் பாடகராக பிரேக் கிடைச்சது. அதில், 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு', 'செவ்வந்தி பூ முடிச்ச' என அப்பா பாடிய ரெண்டு பாடலும் பெரிய ஹிட். ஒருகட்டத்தில் நடிப்பிலும் பிஸியாக, அவர் வாரத்தில் ஒருநாள் எங்களோடு வீட்டில் செலவிட்டாலே பெரிய விஷயமா இருந்துச்சு.

என் அண்ணன், அக்காவைவிட அப்பாவுக்கு என் மேலே கூடுதல் பாசம். அவர் வீட்டிலிருக்கும்போது அவர் மடியில படுத்து, கொஞ்சி விளையாடுவோம். அப்போ, 'கால் வலிக்குதுப்பா. இன்னிக்கு  ஸ்கூலுக்கு லீவு போட்டுறவா?'னு தயங்கிட்டே கேட்பேன். 'சரிம்மா! நாளைக்கு போயிட்டா போச்சு'னு சொல்வார். இப்படி அவரை நல்லா தாஜா பண்ணி, அடிக்கடி ஸ்கூலுக்கு லீவு போடுவோம். ஒருநாள் ஓய்வு கிடைச்சாலும், எங்களை அவுட்டிங் கூட்டுட்டுப் போயிடுவார். பீச், ஹோட்டல், பார்க் என மிட்நைட் வரை சுத்துவோம். வெளியூருக்கும் மலேசியாவுக்கும் கூட்டிட்டுப்போவார். ஃப்ரீ டைம் முழுக்கவே எங்களுக்குத்தான் ஒதுக்குவார். மியூசிக், ரெக்கார்டிங் பற்றி நிறைய சொல்வார். சக இசைக் கலைஞர்கள் பற்றி சொல்வார். அப்பாவின் நண்பர்களான இளையராஜா அங்கிள், கங்கை அமரன் அங்கிள், எஸ்.பி.பாலசுப்ரமணியம் அங்கிள் பற்றி பெருமையா சொல்வார்" என்கிற பிரஷாந்தினி, அப்பாவைப் பார்த்துப் பயந்த ஒரு தருணத்தை நினைவுகூர்கிறார். 

 ``நான், அப்பாவுடன் ரெக்கார்டிங் தியேட்டருக்குப் போனதில்லை. ஆனால், சில ஷூட்டிங்குக்குப் போயிருக்கேன். அவர் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, பிரபலம் என்கிற தோரணையில நடந்துக்கவே மாட்டார். அதுதான் அவரிடம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பொதுவா, ஷூட்டிங் முடிஞ்சதும் மேக்கப்பை கலைச்சுட்டுதான் வீட்டுக்கு வருவார். 'கைதியின் டைரி' படத்தில் அப்பா வில்லன். அப்போ, நான் சின்னப் பொண்ணு. ஒருநாள், ஷூட்டிங் முடிஞ்சு அந்தப் படத்தின் மேக்கப்லேயே வீட்டுக்கு வந்துட்டார். 'அப்பா வந்துட்டார்'னு அம்மா சொல்ல, அவரோடு விளையாடலாம்னு வேகமா ஹாலுக்கு ஓடினேன். அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியலை. அதனால், தள்ளி நின்னு பார்த்தேன். 'வாம்மா! ஏன் ஒரு மாதிரியா பார்க்கிறே. அப்பா பக்கத்துல வா'னு சொன்னார். 'நீங்க அப்பாயில்லை. நான் உங்க பக்கத்துல வரமாட்டேன்'னு சொன்னேன். உடனே சிரிச்சுகிட்டே ரூமுக்குள்ள போனவர், மேக்கப்பை கலைச்சுட்டு வந்தார். 'ஹை அப்பா'னு கட்டிப்பிடிச்சேன். அதுக்கப்புறம், மேக்கப்போடு ஒருநாளும் வீட்டுக்கு வந்ததில்லை.

தினமும் காலையில் அஞ்சு மணிக்கு எழுந்துருவார். ஆர்மோனியம் வாசிச்சு, உறக்கப் பாடிப் பயிற்சி எடுப்பார். எங்களுக்கும் சொல்லிக்கொடுப்பார். அப்படித்தான் எங்க மூணு பேருக்கும் இசை ஆர்வம் வந்துச்சு. அப்பா முறைப்படி இசை கற்கலை. ஆனால், தினமும் பயிற்சி எடுத்து இசைத்திறனை வளர்த்துக்கிட்டார். அதன் பலனாக, 8,000 திரைப்படப் பாடல்களுக்கும் மேல் பாடியிருக்கார். இளையராஜா அங்கிள் இசையில் அப்பா பாடிய பாடல்கள் பொக்கிஷங்கள். அவை காலத்தால் அழியாது. குறிப்பா, ரஜினிகாந்த் சாருக்கு பாடிய பாடல்கள் செம ஹிட்டாச்சு. சில படங்களுக்கு இசையும் அமைச்சார். 'நீ சிரித்தால் தீபாவளி' என ஒரு படத்தை இயக்கினார்.

அப்பாகிட்ட அடிப்படையான இசையைக் கற்றும், எதிர்கால ஆர்வம் பற்றி தெளிவும் இல்லாமல்தான் இருந்தேன். காலேஜ் முடிச்சதும், ஹாரீஸ் ஜெயராஜ் சார்கிட்ட வாய்ப்பு கேட்டேன். '12 பி' படத்தில் 'லவ் பண்ணு'  என் முதல் பின்னணிப் பாடல். அந்தப் பாடல் ரிலீஸான பிறகுதான் அப்பாகிட்ட சர்ப்ரைஸா சொல்லி சந்தோஷப்படுத்தினேன். தொடர்ந்து இசைத்துறையிலேயே வொர்க் பண்ண ஊக்கம் கொடுத்தார். தனக்கு அப்புறம் தன் வாரிசு இசைத்துறையில் இருக்கிறதை நினைச்சு சந்தோஷப்பட்டார். அப்பாவுடன் பல மேடைகளில் பாடியிருக்கேன். 'வாரணம் ஆயிரம்' படத்தில் நான் பாடிய 'முன்தினம் பார்த்தேனே' பாடல் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அண்ணன், அக்கா கல்யாணத்துக்குப் பிறகு, அப்பாவுடன் நாலு வருஷம் ரொம்ப சிநேகத்துடன் இருந்தேன். என் காதல் திருமணத்தை அப்பா சிறப்பா நடத்திவெச்சார். என்னை மாமியார் வீட்டுல விட்டுட்டு திரும்பிப் போகும்போது, தேம்பித் தேம்பி அழுதார். அதை என் வாழ்நாளில் மறக்கமுடியாது. அவரின் இறுதிக்காலம் வரை தினமும் அஞ்சு முறையாவது என்கிட்ட போனில் பேசுவார். என் வீட்டுக்காரர் எஸ்.பிரேம், எக்ஸிகுட்டிவ் புரொடியூஷரா இருக்கார். அவர் மீதும் அப்பாவுக்கு அன்பு அதிகம்."

``உங்க அப்பாவுக்குரிய சரியான அங்கீகாரம் கிடைக்கலைனு நினைக்கிறீங்களா?'' எனக் கேட்டால் சற்றே மெளனித்து தொடர்கிறார் பிரஷாந்தினி.

``பலரும் இதுபற்றி வெளிப்படையா பேசியிருக்காங்க. என் அப்பான்னு இல்லை. அவர் இடத்துல வேறு யார் இருந்திருந்தாலும் அங்கீகாரம் கிடைச்சு இருக்கணும். அந்த அளவுக்கு இசையிலும் நடிப்பிலும் சாதனை செய்திருக்கார். தனக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கலையேனு அப்பா கலவைப்பட்டதில்லை. 'எது நடந்தாலும் அது நல்லதுக்குதான். நான் உண்மையான உழைப்பைக் கொடுத்திருக்கேன். மக்களும் என் பாடல்களை ரசிச்சு பாராட்டறாங்க. அது போதும்'னு அடிக்கடி சொல்வார். அப்பாவுக்கு டயாபடீஸ் பிரச்னை இருந்துச்சு. சர்க்கரை அளவு கூடி சிரமப்படும் நிலையிலும் ஷூட்டிங் போனார். ரெக்கார்டிங்ல பாடல்களையும் பாடினார். அவர் காலில் இருந்த ஒரு காயம் ஆறாமல் உடல்நிலை மோசமாச்சு. ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணினோம். 2011 பிப்ரவரி 20-ம் தேதி காலமாகிட்டார். அப்போ ஹாஸ்பிட்டலுக்கும் வீட்டுக்கும் வந்த இளையராஜா அங்கிள், எங்களுக்குப் பக்கபலமா இருந்தார். அப்பாவின் குரல் இன்னும் பாடல்களில் ஒலிச்சுட்டே இருக்கு. அதனால அவர் இன்னும் வாழ்ந்துட்டுதான் இருக்கார். அவர் பயன்படுத்தின தம்புரா, ஆர்மோனியத்தைப் பொக்கிஷமா பாதுகாத்துட்டு இருக்கேன்" என நெகிழ்கிறார் பிரஷாந்தினி.

அடுத்த கட்டுரைக்கு