Published:Updated:

``ஹாலிவுட்டே எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருமணம்... வாழ்த்துகள் ஜஸ்டின் பீபர் - ஹெய்லி!" #JustinBieberHaileyBaldwin

``ஹாலிவுட்டே எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருமணம்... வாழ்த்துகள் ஜஸ்டின் பீபர் - ஹெய்லி!" #JustinBieberHaileyBaldwin
``ஹாலிவுட்டே எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருமணம்... வாழ்த்துகள் ஜஸ்டின் பீபர் - ஹெய்லி!" #JustinBieberHaileyBaldwin

பாடகர் ஜஸ்டின் பீபர், அமெரிக்க மாடல் ஹெய்லியைக் கரம் பிடிக்கவிருக்கிறார்.

``டிஸ்னிலேன்ட் போக வேண்டும் என்ற சிறிய கனவிலிருந்து ஆரம்பித்ததுதான் இப்பெரிய பயணம். ஆம், எல்லாக் குழந்தைகளும் சிறுவயதில் ஆசைப்படும் சாதாரணமான கனவுதான் இச்சிறுவனை அசாதாரணமான காரியத்தில் ஈடுபட வைத்தது. அப்போது அவன் நினைக்கவில்லை வாழ்க்கையில் இப்படியான ஓர் உயரத்தைத் தொடுவோம் என்று. தனது டிஸ்னிலேன்ட் கனவை நனவாக்க பல வழிகளைத் தேடினான் அவன். தனக்குத் தெரிந்த, நன்கு அறிந்த பாடல்களைத் தெருவோரம் நின்று பாடத் தொடங்கினான். அதன் மூலம் 3,000 டாலர்கள் பணம் சம்பாதித்தான். அத்தொகையை வைத்து அவனும், அவனது அம்மா பேட்டீ மாலெட்டியும் முதல் முறையாக டிஸ்னிலேன்ட் சென்று வந்தனர். அந்தச் சிறுவனின் பெயர், ஜஸ்டின் பீபர்

ஜஸ்டினின் அம்மா கனடா நாட்டின் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர். சிறுவயதில் தனது தோழியின் தாத்தா ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானவர். அச்சம்பவம் இவரைப் பெருந்துயருக்குத் தள்ளியது. பிறகு வேலை பார்க்குமிடத்தில் தனது தோழனால், பின் காதலனால் எனப் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கிறார். எந்த அளவுக்கு என்றால், 'முதலில் மிகவும் அருவருப்பாகவும், கூச்சமாகவும் இருந்தது. நாளடைவில் இத்தொல்லை எனக்குப் பழக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது' எனச் சொல்லும் அளவுக்கு! ஆம், தனது பேட்டி ஒன்றில் மாலெட்டீ கூறியுள்ள வார்த்தைகள்தாம் இவை. 'காதலனால் நேர்ந்தது எப்படி பாலியல் தொல்லை ஆகும்?' என்ற கேள்வி எழலாம். ஒரு பெண்ணுக்கு விருப்பமில்லாத பட்சத்தில் அவரை வற்புறுத்தும் எந்தவொரு செயலுக்கும் அர்த்தம் தொல்லைதான். பின்பு தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் தொகுத்து 'Nowhere But Up: The Story of Justin Bieber's Mom' என்ற புத்தகத்தை எழுதினார். பீபரின் பாடல்களைப் போலவே, இப்புத்தகமும் மில்லியன் டாலர் பணத்தை ஈட்டித் தந்தது. 

தனது 15-வது வயதில் ஜெரிமி பீபர் என்ற இசையமைப்பாளரைக் காதலிக்கத் தொடங்கினார். ஆனால், 13 வயதிலேயே பெட்டீ மாலெட்டி போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்பது முக்கியமான ஒன்று. இந்தப் பழக்கம்தான் இவரின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஒருநாள் மாலெட்டீ தற்கொலைக்கு முயன்றபோது, காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றுதான் மாலெட்டியும், ஜெரிமியும் சந்தித்துக்கொண்ட கடைசி நாள். கிட்டத்தட்ட ஆறுமாத கால சிகிச்சைக்குப் பிறகு கண்விழித்துப் பார்த்தபோதுதான், மாலெட்டீ கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தார். டாக்டர் மூலம் இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டது. தனது 16-வது வயதில் கையில் ஒரு குழந்தை! தன் குழந்தைக்கு ஜெரிமியின் குடும்பப் பெயரான பீபர் என்பதையே வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். அதனால்தான், குழந்தைக்கு ஜஸ்டின் பீபர் என்ற பெயர். இருந்தும், மாலெட்டியை கடைசிவரை ஜெரிமி திருமணம் செய்துகொள்ளவில்லை. எத்தனையோ முறை சம்மதிக்கவைக்க முயற்சி செய்தபோதும், ஜெரிமி திருமணத்துக்குத் தயாராக இல்லை. பல சிரமங்களுக்கிடையே மாலெட்டீ தனி ஆளாக ஜஸ்டினை வளர்ந்து வந்தார். கடைசி வரை மாலெட்டீ வாழ்க்கையில் 'திருமணம்' என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது. 

ஒரு கணவனாக இல்லையென்றாலும், ஒரு தந்தையாக ஜஸ்டினுக்கு என்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையும் செய்துவந்தார் ஜெரிமி. கார் ஓட்டுவது, கிட்டார் வாசிப்பது, விளையாட்டில் இருந்த ஆர்வம்... போன்ற ஜஸ்டினின் செயல்களுக்குக் காரணம், தந்தைதான். மேலும், தன் மகனை ஏரோஸ்மித், மெட்டாலிஷியா, ஜிமி ஹெண்ட்ரிக்ஸ் போன்ற ராக் பாடகர்களுக்கும் பீபரை அறிமுகப்படுத்தி வைத்தார். 

லண்டனின் பிறந்து ஸ்ட்ராட்ஃபோர்டில் வளர்ந்தவர், ஜஸ்டின் பீபர். சிறுவயதிலிருந்தே மிகுந்த இசை ஆர்வத்தோடு இருந்ததால், பியானோ, கிட்டார், டிரம்பெட் ஆகியவற்றை சுயமாகவே வாசிக்கக் கற்றுக்கொண்டார். 'வீட்டில் சும்மா இருக்கும் நேரமெல்லாம் வாயில் ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருப்பான், ஜஸ்டின்' என்று மாலெட்டீ பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். தன் மகனின் இசைத் திறமையை உலகுக்கு உணர்த்த மாலெட்டீ ஜஸ்டினின் நிகழ்ச்சிகளை யூடியூபில் பகிரத் தொடங்கினார். 

ஜஸ்டினின் நிகழ்ச்சிகள் யாவும் யூடியூபில் கொஞ்சம் கொஞ்சமாக கவனம் பெறத் தொடங்கின. அவருடைய குரலும், இசையும் பலருக்குப் பிடித்துப்போனது. இந்த நேரத்தில் ஸ்கூட்டர் ப்ரௌன் என்பவர் இணையத்தில் வேறொன்றைப் பற்றித் தேடிக்கொண்டிருந்தபோது, எதேச்சையாக ஜஸ்டினின் வீடியோ ஒன்றைக் க்ளிக் செய்துவிட்டார். ஜஸ்டினின் குரல் அவருக்குப் பிடித்துப்போக, அவரைத் தேட ஆரம்பித்தார். 

ப்ரௌன் திறமையிருந்தும் பலருக்கும் தெரியாத இளைஞர்களைக் கண்டுபிடித்து, வளர்த்து, அவர்களின் வெற்றிக்கு வழிவகுப்பவர். ஜஸ்டின் எந்தக் கட்டடத்துக்கு முன்னே வாசிக்கிறான் என்று வீடியோவைப் பார்த்துக் கண்டுபிடித்தார், ப்ரௌன். அங்கிருந்து நூல் பிடித்துச் சென்று அவனுடைய பள்ளியைக் கண்டுபிடித்தார். பள்ளியின் பொறுப்பாளர்களிடம் விசாரித்து, மாலெட்டீயைச் சந்தித்துவிட்டார். 

மாலெட்டீயிடம் ஜஸ்டினுக்கு அருமையான எதிர்காலம் இருப்பதை அவருக்கு உணர்த்த முயன்றார். முதலில் தயங்கிய மாலெட்டீ, பிறகு ஜஸ்டினை ப்ரௌன் வசம் ஒப்படைத்தார். ப்ரௌனும் பல இசை நிறுவனங்களுக்கு ஜஸ்டினை அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார். ஆனால், எந்த நிறுவனமும் ஜஸ்டினை நம்பி வாய்ப்பு தரத் தயாராக இல்லை. 

பின் ஒருநாள், ப்ரௌனும், ஜஸ்டினும் சேர்ந்து தாங்களே ஓர் இசை ஆல்பத்தை சொந்த செலவில் எடுக்க முற்பட்டனர். அப்படி எடுத்த சில வீடியோக்களைத் தொடர்ந்து யூடியூபில் வெளியிட்டு வந்தனர். பல மில்லியன் பார்வைகளைக் கடந்த நிலையில், பல இசை நிறுவனங்கள் ஜஸ்டின் பக்கம் திரும்பின. 'தி ஐலண்ட் டெஃப் ஜாம் மியூசிக் குரூப்' நிறுவனத்தின் மூலம் 2009-ம் ஆண்டில் ஜஸ்டினின் முதல் சிங்கிள் பாடலான 'ஒன் டைம்' வெளியானது. 15 வயதிலேயே தனது சிங்கிள் டிராக்கை வெளியிட்ட ஜஸ்டினின் ஆல்பத்தை மக்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 

ஒரு வருடம் கழித்து ஜஸ்டினின் 'மை வேர்ல்ட்' வெளியானது. பிறகு அவருடைய அத்தனை ஆல்பங்களும் வெற்றிதான். மொழி வித்தியாசம் பாராமல் பல நாட்டு மக்கள் ஜஸ்டினைக் கொண்டாட ஆரம்பித்தனர். குறிப்பாக, இளைஞர்கள், அதிலும் குறிப்பாக இளம் பெண்கள் இவரது இசையையும், நடனத்தையும் கண்டு கிறங்கிப்போனார்கள். வெகுசில ஆண்டுகளிலேயே டாப் பாப் சிங்கர்கள் பட்டியலில் இடம்பெற்றார், ஜஸ்டின் பீபர்.  

கடந்த ஆண்டு மே 10-ம் தேதி அன்று முதன்முதலாக இந்தியாவில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். மும்பையில் நடைபெற்ற இவரின் நிகழ்ச்சிக்கு ரூபாய் 4,000 முதல் டிக்கெட் விலையாக வசூலிக்கப்பட்டது. ஆன்லைனில் தவணைக்குகூட இவரின் டிக்கெட்டுகளை விற்பனை செய்தனர். அந்த அளவுக்கு இந்தியாவிலும் கொண்டாடப்பட்ட ஜஸ்டினை, தன்னம்பிக்கையின் மறுபெயர் எனலாம்!

ஜூலை 7-தேதி ஜஸ்டின் - ஹெய்லி இருவருக்கும் நிச்சயம் முடிந்திருக்கிறது. 7-ம் தேதி, 7-வது மாதம் இவர்களுக்கு நிச்சயம் நடக்க வேண்டும் என்பது அம்மா மாலெட்டீயின் விருப்பம் என்று ஜஸ்டின் கூறியிருக்கிறார். ஹெய்லி பால்ட்வின், 21 வயதாகும் அமெரிக்காவைச் சேர்ந்த மாடல். மேலும், ஜஸ்டின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹெய்லி பால்ட்வின் பற்றியும், விரைவில் இவர்களது வாழ்க்கையைத் தொடங்கவிருப்பதைப் பற்றியும் பெரிய குறிப்பு ஒன்றை எழுதியிருக்கிறார். இவர்களின் திருமணத்தை ஹாலிவுட் உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது. மனம் நிறைந்த வாழ்க்கைக்கும், இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தவும் வாழ்த்துகள் ஜஸ்டின் - ஹெய்லி.

அடுத்த கட்டுரைக்கு