Published:Updated:

சொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்!

சொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்!
சொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்!

சீனாவின் ஹாங்காங்கில் சூப்பர்ஸ்டார்  சௌ யூன்-ஃ பாட் (chow  yun -fat), பைரேட்ஸ் ஆப் தி கரிபியன், கிரௌசிங் டைகர், ஹிடன் டிராகன் ஆகிய திரைப்படங்கள் மூலம் சர்வதேசப் புகழ் பெற்றவர். ஹாங்காங்கில் அதிகபட்ச சம்பளம் வாங்குவதில் இரண்டாம் இடத்தில் இருப்பவர். இவர் சமீபத்தில் தன்னுடைய மொத்த சொத்தான 5,250 கோடி ரூபாயைப் பல்வேறு சமூக அமைப்புகளுக்குப் பகிர்ந்து அளிப்பதாகச் செய்தி வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அந்நாட்டு ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த அவர், தன்னுடைய தேவைகள் மிகக் குறைவு எனவும், ஒரு மாதத்தில் தனக்காக வெறும் 7,500 ரூபாய்தான் செலவாகிறது என்றும் கூறியிருக்கிறார்.

விலையுயர்ந்த கார் எதுவும் அவர் வைத்திருக்கவில்லை என்கின்றனர். எப்போதும் அவர் பொதுமக்கள் போக்குவரத்தைத்தான் பயன்படுத்துகிறாராம். சாதாரண உணவகங்களில் சாப்பிடுவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார் சௌ யூன்-ஃ பாட். "நான் அடுத்தவருக்காக உடை அணிவதில்லை, எனக்கு அது வசதியாக இருந்தால் போதுமானது" என்று சொல்லும் அவர், சாதாரண தள்ளுபடி கடைகளில் கிடைக்கும் துணிகளையே விரும்பி அணிகிறார். 17 ஆண்டுகள் ஒரே நோக்கியா செல்போனைப் பயன்படுத்தியதாகச் சொல்லும் அவர், அது பழுதாகிப்போனதால், இரண்டாண்டுகளாகத்தான் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார் என்கின்றனர்.

ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த சௌ யூன்-ஃ பாட் எளிமைக்குப் பெயர்போனவர் என்கின்றனர். "உடலுக்கு வெளியே இருக்கும் விஷயங்களுக்காக உடல் நலத்தைத் தியாகம் செய்வது, வாழ்வின் மிகப் பெரிய தவறு" என்று சொல்லும் சூப்பர் ஸ்டார் சௌ யூன்-ஃ பாட், மலையேறுவது, ஓட்டப் பயிற்சி செய்வதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார். அவர் தானமாகக் கொடுக்கவிருக்கும் சொத்து பற்றி கேள்வி எழுப்பியபோது, "இந்தப் பணம் என்னுடையது அல்ல, தற்போதைக்கு அதைப் பத்திரப்படுத்தி வைக்கவே என்னிடம் கொடுக்கப்பட்டது. சாதாரணமான, மகிழ்ச்சியான ஒரு மனிதனாக வாழ்வதே என் கனவு. வாழ்வில் மிகவும் கடினமானது பணம் சம்பாதிப்பது அல்ல, மாறாக அமைதியான மனநிலையோடு, கவலையற்ற எளிமையான வாழ்க்கையை வாழ்வதே கடினமானது" என்று தெரிவித்துள்ளார்.