`உங்கள் முதல் காதலைப் பற்றிச் சொல்ல முடியுமா?' - `பியார் பிரேமா காதல்' ஆடியோ லாஞ்சில் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு, தனக்கு அப்படியொரு காதல் இருப்பதையும் அது தன் மனைவிக்கும் தெரியும் என்றும் நேர்மையாக ஒப்புக் கொண்டார் இயக்குநர் அமீர். அந்தக் காதலி, இயக்குநரின் அவளாக இருக்கலாம் என்கிற எதிர்பார்ப்பில் ``உங்களின் அவள் பற்றிப் பகிர முடியுமா?'' என்று கேட்டோம்.

``என் `அவள்' பற்றிப் பேச வேண்டுமா... காதலியைப் பற்றிப் பேச வேண்டுமா?'' - அதிரடி இன்ட்ரோவுடன் ஆரம்பிக்கிறார் அமீர். இரண்டு பேருமே சுவாரஸ்யமானவர்கள்தானே... அதனால் இருவரைப் பற்றியும் பேசச் சொன்னோம்.

``எல்லோர் வாழ்க்கையிலும் பெண் என்பவள் முக்கியமானவள். சிலருக்கு அம்மா, சிலருக்கு மனைவி, சிலருக்கு சகோதரி. ஜனனத்தின் தொடக்கமே பெண்தான். ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமான காதலில்தான் ஜனனமே உருவாகிறது. ஆண்பால் பெண்பாலின் மீது ஈர்ப்புகொள்வது தவிர்க்க முடியாதது. இயற்கையின் அடிப்படையிலும் மருத்துவ அடிப்படையிலும் ஓர் ஆண் ஒரு பெண்ணின் மீது ஈர்ப்புகொள்வது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, அதுதான் சரியான மரபும்கூட. அப்படி ஈர்க்கவில்லை என்றால்தான் பிரச்னை.

ஒரு பெண் மீது எப்போதெல் லாம் ஈர்ப்பு வரலாம் என்பதற்கு விதி இருக்கிறதா என்றால், இல்லை. அது நினைவுதெரிந்த வயதிலிருந்து வரும். ஓர் ஆணுக்கு ஒரு பெண்மீது இத்தனை வயதுக்குமேல் ஈர்ப்பு இருக்கக் கூடாது என்பது நமது சமூக அமைப்பும் கலாசாரமும் போட்ட கட்டுப்பாடே தவிர, உடல்ரீதியாகவும் உள்ளரீதியாகவும் அப்படி எந்தக் கட்டுப்பாடும் இல்லையே!

என் வாழ்க்கையில் எத்தனையோ பெண்கள், என்னை ஈர்த்திருக்கலாம்; பிரமிக்கவைத்திருக்கலாம்; என்னை அண்ணாந்து பார்க்கவைத்திருக்கலாம்; என்மீது அதிக அன்பு செலுத்தியிருக்கலாம்; என்னை அடிமைப்படுத்தியிருக்கலாம். அவர்களில் யார் ரொம்பக் காலம் என்னுடன் இருந்தார்கள் என்பதைப் பொறுத்தே என் வாழ்க்கையில் அந்தப் பெண்ணுக்கான முக்கியத்துவம் தீர்மானிக்கப்படுகிறது. அப்படியான பந்தயத்தில் முதலில் வந்து நிற்பது என் மனைவி ஆபிதா'' - தன் மனைவி மீதான அன்பைப் பற்றி முதன்முறையாக மனம்திறக்கிறார் அமீர்.

``எனக்கும் என் தாய்க்குமான உறவு என்பது கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள். ஆனால், நானும் அவரும் பகிர்ந்துகொண்ட காலம் மிகக் குறைவு. அவர் செய்த தியாகங்களை இப்போதும் நினைத்துப்பார்க்கிறேன். எனக்கு விவரம் தெரிந்த வயதில், அதாவது எட்டு அல்லது பத்து வயதிலிருந்துதான் நான் அம்மாவுடன் நெருக்கமாக இருந்திருக்கிறேன். என் மனைவிக்கும் அப்படித்தான். அவர் பிறந்த வீட்டில் இருந்த காலம் குறைவு. திருமணத்துக்குப் பிறகு இருபது வருடங்களாக என்னுடன் பயணித்துக்கொண்டிருக்கிறார். அவரது வாழ்க்கையில் அதிகமாக இருந்தவன் நான். என் வாழ்க்கையில் அதிகம் இருந்தவர் என் மனைவி.

இந்த இருபதாண்டு காலத்தில் என்னை முழுமையாக அறிந்தவர் அவர். நான் என்ன சாப்பிடுவேன், எனக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, என் நிறை குறைகள் என எல்லாம் அவருக்குத் தெரியும். நான் தவறு செய்வேனா, மாட்டேனா என்பதை என் அக்காவோ, அம்மாவோ கண்டுபிடிக்க முடியாது. என் மனைவிக்குத் தெரியும். என் வருமானம் நேர்மையானதா, நான் யாரை உண்மையாக நேசிக்கிறேன் என எல்லாம் அறிந்தவர்.

யாரேனும் பல் துலக்காமல் பக்கத்தில் வந்தால் நாம் சகித்துக்கொள்ள மாட்டோம். கணவராகிய நாம் மட்டும் சிகரெட் பிடித்துவிட்டு மனைவியின் அருகில் உட்காருவோம்; அவளை முத்தமிடுவோம். சிகரெட் புகையின் துர்நாற்றம் அவளுக்கு அருவருப்பை ஏற்படுத்தலாம். ஆனாலும், அதைப் பெரிதாக நினைக்காமல் அருகில் அமர்ந்திருப்பாள். இப்படித்தான் என் மனைவி வந்த நாள் முதல் என் தவறுகள் தெரிந்து அமைதியாக இருந்திருக்கிறார். ஏற்றுக்கொள்ளக்கூடியதும் ஏற்கவே முடியாததுமான என் தவறுகள் எல்லாவற்றையும் புரிந்துகொண்டவர். முதல் குழந்தை பிறந்த பிறகுதான் நான் உதவி இயக்குநராகச் சென்னைக்கு வந்தேன். `இவன் தேர்ந்தெடுத்த சினிமா பாதை சரியானதா? இவனை நம்பி வந்துவிட்டோமே... வாழ முடியுமா?' போன்ற எல்லாக் கேள்விகளையும் மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டு, நம்பிக்கையோடு காத்திருந்தவர் என் மனைவி.

எனக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். அப்பா அருகில் இல்லாமல் குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகப்பெரிய சிரமம். அதையும் கடந்தார். ஒருநாள்கூட குடும்பப் பிரச்னைகளை என் காதுக்குக் கொண்டுவந்ததில்லை. சினிமாவில் ஜெயித்த பிறகு, பல ஊர்களிலும் பல நாடுகளிலும் விதவிதமான உணவுகளைச் சாப்பிட்டிருக்கிறேன். அதன் தாக்கத்தில் வீட்டுச் சாப்பாட்டைக் குறை சொல்லி யிருக்கிறேன். அப்போதும் கோபப்படாமல் தன்னை மேம்படுத்திக்கொள்ளவே நினைத்திருக்கிறார்.

என் மனைவிக்கு, பொன் பொருள்களில் ஆர்வம் கிடையாது; எதையும் கேட்டு வாங்கிக்கொள்ளும் குணம் கிடையாது. அவருக்கு அதிகபட்சமாக சந்தோஷம் தரும் விஷயம் என்றால், நான் அவர் அருகிலேயே இருப்பது மட்டுமே. திருமணமான நாள் முதல் இன்று வரை அந்த ஆசை துளிக்கூட மாறவில்லை.

மனைவி விரும்புகிறார் என்பதால் நான் என் இயல்பைத் தொலைத்துவிட்டு வீட்டுக்குள் முடங்கினால், எனக்குப் பின்னால் உள்ளவர்கள் என்னை முந்திச் சென்றுவிடுவார்கள். அந்த விரக்தியையும் நான் என் குடும்பத்தாரிடம்தான் வெளிப்படுத்த வேண்டியிருக்கும். கணவன் தன்னுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்கிற ஆசை, எல்லா மனைவிகளுக்கும் இருக்கும். கணவர்களுக்கு அது சாத்தியமில்லை. அது பொதுவிதி. இதையும் ஒருகட்டத்தில் என் மனைவி புரிந்துகொண்டார்.

நான் என் மனைவியை எந்த விஷயத்திலும் கட்டுப்படுத்துவதில்லை. விரும்புகிற இடத்துக்குப் போகவும், விரும்பியதைச் செய்யவும் தடைபோட்டதில்லை. `உங்களுக்கான தேடலைத் தொடங்குங்கள்' என்பதே என் மனைவி உள்பட எல்லாப் பெண்களுக்கான என் அட்வைஸ். வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு `ஹோம் மேக்கர்' எனச் சொல்லிக்கொள்வதைப் பெருமையாக நினைக்காதீர்கள். காலையில் குழந்தைகளையும் கணவரையும் கவனித்து அனுப்பிய பிறகான நேரத்தில் உங்களுக்கு என ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். தோழிகளைச் சந்தியுங்கள். திருமணத்துக்குப் பிறகு ஏன் பெண்கள் அவர்களது நட்பைத் தொலைக்க வேண்டும்? ஆண்கள் அப்படித் தொலைப்பதில்லையே! இதையேதான் என் மனைவிக்கும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்தப் புரிந்துணர்வை எல்லாம் தாண்டி, எல்லா தம்பதியரையும்போல எங்களுக்குள்ளும் அடிக்கடி கருத்துவேறுபாடுகள் வருவதுண்டு. அது அதிக நேரம் நீடிக்கக் கூடாது என்பதில் நான் கவனமாக இருப்பேன். ஆனாலும், சமாதானத்தில் மனைவிதான் முந்திக்கொள்வார். அன்பு செலுத்துவதிலிருந்து அனுசரித்துச்செல்வது வரை எல்லாவற்றிலும் அவரே முந்திக் கொள்வதால்தான், பந்தயத்திலும் அவரே முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். எனக்காக இத்தனையையும் சகித்துக்கொண்டு வாழும் அவருக்கு, ஒன்றை மட்டுமே உறுதிசெய்ய எனக்கு ஆசை. என்னால் என் மனைவி எந்தவிதத்திலும் வேதனைப்படக் கூடாது. என்னுடன் வாழப்போகிற காலம் முழுக்க அதை அவருக்கு நான் செய்ய முடிந்தால் அதுவே பெரிய விஷயம்.''

மனைவியின் அன்பில் தன்னை மறந்தவருக்கு மீண்டும் அந்த `முதல் காதலை' நினைவூட்டினோம்.

``என் வாழ்க்கையில் நான் போய்க் கொண்டிருந்த பாதையில் ஒரு பெண் மீது பிரியம் ஏற்பட்டது. இருவரின் விருப்பங்களும் ஒரே மாதிரி இருந்தன. அவர் நன்றாக இருக்க வேண்டும், அவரது வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. அது இரக்கத்தின் தொடக்கமாகவோ, புரிந்துணர்வின் தொடக்கமாகவோ, அன்பின் தொடக்கமாகவோ இருந்திருக்கலாம். அவர் யாருடன் இருந்தாலும் எங்கே இருந்தாலும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைக்கும் அக்கறை அது. அவ்வளவுதான். என் மனைவிக்கும் அந்த அன்பு புரியும். ஏனென்றால், என்னைப் பற்றி முழுமையாக அறிந்தவர் என் மனைவி. நான் தவறு செய்ய மாட்டேன் என்கிற நம்பிக்கை அவருக்கு உண்டு.''

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றுணர்த்துகிறது அமீரின் அன்புப் பகிர்வு!

- ஆர்.வைதேகி

`பெண் சுதந்திரம்
பேணாத நாடு - மனிதப்
பேயாடும் காடு - அங்கு
வாழாது நீதி
இருக்காது சமத்துவம்
தழைக்காது விடுதலை
பிழைக்காது மானுடம்
நிலைக்காது வெற்றி
எம்நில பெண் தனக்கு
பாரதியும் தாசனுமாக
போர்க்குணம் புகுத்தி
புதுநெறி பரப்பி
தோழியாக தொண்டராக
வழிகாட்டி நெறிகாட்டும்
வளமார் பணியை
வளையாது செய்து
துணிவாகத் தொடரும்
`அவள் விகடன்'
சேவையும் தொண்டும்
நாளும் தொடர
ஆலாகப் பெருக
நலம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

- இயக்குநர் அமீர்