Published:Updated:

சிவாஜியின் இதயத்தில் இடம்பிடிக்கக் காரணமான வசனம்? `பராசக்தி' கருணாநிதி - ஆரூர்தாஸ் நினைவலைகள்

சிவாஜியின் இதயத்தில் இடம்பிடிக்கக் காரணமான வசனம்? `பராசக்தி' கருணாநிதி - ஆரூர்தாஸ் நினைவலைகள்
சிவாஜியின் இதயத்தில் இடம்பிடிக்கக் காரணமான வசனம்? `பராசக்தி' கருணாநிதி - ஆரூர்தாஸ் நினைவலைகள்

னக்கும் கருணாநிதிக்கும் பூர்வஜென்ம தொடர்பு இருந்ததாகவே கருதுகிறேன் என்று இந்தத் தொடரின் நிறைவுப் பகுதியில் தெரிவிக்கிறார் ஆரூர் தாஸ். 

`பாசமலர்' படத்தில் முதலாளியாக சிவாஜி கணேசனும், தொழிலாளியாக ஜெமினி கணேசனும் மோதுகின்ற ஒரு காட்சியில், நான் புதிதாகச் சிந்தித்ததன் விளைவாகப் புதிய வசனங்களை எழுதி, சிவாஜியின் இதயத்தில் சிறப்பானதோர் இடம்பிடித்தேன். அதன்மூலம் சிவாஜியுடைய ஆஸ்தான வசனகர்த்தாவாகி, அவர் நடித்த இருபத்தெட்டு படங்களுக்கு வசனம் எழுதி சாதனை புரியும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. எடுத்துக்காட்டாக, `பாசமலர்' படத்தில் அந்தக் காட்சியில் நான் எழுதிய சில வசனங்களை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

சிவாஜி: ``அன்றைக்கு நம்மோடு வேலை பார்த்தவன், இன்றைக்கு இந்த உயர்ந்த நிலைக்கு வந்து விட்டானே என்ற வயிற்றெரிச்சல் உனக்கு”.

ஜெமினி: "தவறு. தனக்குத் தண்ணீர் இல்லாததால் ஒரு செடி கருகுமே தவிர, இன்னொரு செடிக்குக் கிடைக்கிறதே என்ற ஏக்கத்தால் எந்தச் செடியும் எரிவதில்லை. இந்தத் தத்துவத்தில் வளர்ந்து தன்னம்பிக்கையில் மலர்ந்து, கவலை இல்லாத வாழ்வு நடத்துகின்ற என்னை விட்டுவிட்டு, வேறு எவனாவது கையாலாகாதவனிடம் உன் வயிற்றெரிச்சல் கதையைச் சொல். நான் இங்கு வந்திருப்பது பொதுநலத்துக்காக. அதைப் புரிந்துகொள்”.

சிவாஜி: ``பொது நலம்... எது பொதுநலம்? பொறியிலே பலகாரம் வைப்பது எலியின் பசியைப் போக்கவா? புற்றுக்கு அருகே நின்று மகுடி ஊதுவது, நாகத்தின் காதுகளை நாதத்தால் குளிர வைக்கவா? காட்டிலே குழி பறிப்பது யானை ஓய்வு எடுப்பதற்கா? கணையை வில்லிலே பூட்டுவது கலைமானுக்கு வேடிக்கை காட்டவா? அல்ல... இதெல்லாம் `பிறர் துன்பத்தில் இன்பம் காண வேண்டும்' என்ற பேய் வெறி! அந்த வெறிதான் உனக்கும்”.

ஜெமினி: ``இல்லை. மெழுகுவத்தி எரிந்து ஒளியைக் கொடுப்பதோடு, தன் மேனியையும் உருக்கிக் கொள்கிறது".

(இந்த வசனம், ஞாயிறுதோறும் நான் தேவாலயத்திற்குச் சென்று வழிபடும்போது, அங்குப் பீடத்தில் வைக்கப்பட்டு எரிந்து உருகி வழிந்துகொண்டிருக்கும் மெழுகுவத்தியைப் பார்த்து, அந்த `இன்ஸ்பிரேஷனில்’ பிறந்தது). 
தியாகத்துக்கு எடுத்துக்காட்டாக முதன்முதலில் மெழுகுவத்தியை ஒப்பிட்டு, ஐம்பத்தெட்டு (58) ஆண்டுகளுக்கு முன்பே வசனம் எழுதியது அடியேன்தான் என்பதை இங்கே அடக்கத்துடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். 

மெழுகுவத்தியுடன், இன்னும் இரண்டு எடுத்துக்காட்டுகளைப் புதிதாகச் சொல்லலாமே என்று சிந்தித்தேன் உடனே ஊதுவத்தியும், சந்தனமும் என் சிந்தனையில் தோன்றின. எனவே, இப்படி எழுதினேன்:

`மெழுகுவத்தி எரிந்து ஒளியைக் கொடுப்பதோடு, தன் மேனியையும் உருக்கிக் கொள்கிறது; ஊதுவத்தி நறுமணத்தைக் கொடுத்த பிறகு உருவமற்றுச் சாம்பலாகிறது. தேய்ந்து தேய்ந்து மணத்தைக் கொடுக்கும் சந்தனக் கட்டை போன்றவர்கள் தியாகிகளும் பொதுநலவாதிகளும் என்பதைப் புரிந்துகொள்!”.
`பாசமலர்’ படத்தில் நான் எழுதிய இந்த வசனங்களைக் கேட்டு அன்றைக்குத் திரை அரங்குகளில் எல்லாம் ரசிகர்கள் கைதட்டித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.

இப்போது என் சொந்த வாழ்க்கைக்கு வந்து, சுருக்கமாக விஷயத்தைச் சொல்லி முடிக்கிறேன்.

காலமும், விதியும் இணைந்து என் கரங்களைப் பிடித்து, கரந்தை தமிழ்க் கல்லூரிக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, சென்னை கோடம்பாக்கத்திற்குக் கூட்டி வந்து 1953-ல் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் மாற்றுமொழியிலிருந்து தமிழாக்கம் செய்வது ஆகிய கலைகளில் கை தேர்ந்தவராகவும், புகழ்பெற்றவராகவும் விளங்கிய `அமரகவி’ தஞ்சை ராமையாதாஸிடம் உதவியாளராகச் சேர்த்து வைத்தது.

அப்போது எனக்கு வயது 22. என் மாதச் சம்பளம் ஐந்து பத்து ரூபாய் நோட்டுகள்! என் ஆரம்பத் திரைப்பட ஆசான் ஆன அவர்தான் என்னை ‘ஆரூர்தாஸ்’ என்று அழைக்க ஆரம்பித்து, அவருடைய ஆசீர்வாதத்தினால் அதுவே நிலைத்து வெளிச்சம் பெற்று விளங்குகின்றது. அவரிடம்தான் தமிழாக்கக் கலையைக் (Dubbing) கற்றுக்கொண்டேன். அதுதான் முதலில் எனக்கு கை கொடுத்துத் தூக்கிவிட்டு, நான் முன்னேறுவதற்கு முதற்படியாக அமைந்து, திரைப்படத்துறைக்கு என்னை அடையாளம் காட்டியது. அதைத் தொடர்ந்து கதை, வசனகர்த்தாவாக என்னுடைய எழுச்சி வெகுவிரைவாகவும், விமரிசையாகவும் நடைபெற்றது.

1959-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு அன்றைய சினிமா வானின் மிகச் சிறந்த இரு துருவங்களாகத் திகழ்ந்த, என்றைக்கும் ஈடு இணையற்ற `மக்கள் திலகம்', `நடிகர் திலகம்' இருவரையும் ஒரே சமயத்தில் என் முதுகில் சுமந்துகொண்டு முதல் குதிரையாக ஓடி, அன்னையின் அருளால் வெற்றிமேல் வெற்றி பெற்றேன். எல்லாவற்றுக்கும் மேலாக, 77 ஆண்டுகளுக்கு முன்னர் 1941-ம் ஆண்டில் என் பத்தாவது வயதில், எந்த 17 வயது இளைஞரான மு.கருணாநிதியை எங்கள் பள்ளி வாதாமரத்தடியில் பார்த்தேனோ, அவர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆகி, அவர் கையால் `கலைமாமணி' விருது, `அறிஞர் அண்ணா விருது', கலை வித்தகர் பட்டத்துடன்கூடிய ஐந்து சவரன் பொற்பதக்கப் பரிசு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 80-வது பிறந்த நாளில் ‘சிவாஜி விருது'டன் கூடிய 50,000 ரூபாய் ரொக்கப் பரிசு' எனப் பல பரிசுகளும் விருதுகளும் பெற்று கௌரவிக்கப்பட்டேன். இவை எல்லாம் எனக்கும், கருணாநிதிக்கும் உள்ள ‘பூர்வ ஜென்ம பந்தம்’ காரணமாகவே நடைபெற்றதாக நான் உணர்கிறேன்.

கலைஞர் திரைக்கதை வசனம் எழுதி 1948-ல் வெளிவந்த ஜூபிடர் பிக்சர்ஸ் `அபிமன்யு’ படத்தின் உச்சகட்ட குருக்ஷேத்திரப் போர்க்களக்காட்சி!

ஒருபுறம் பஞ்ச பாண்டவராகிய யுதிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் அணிவகுத்து நிற்க, அவர்களின் நடுவில் பார்த்தசாரதியாக பரந்தாமன் கிருஷ்ணன். எதிர்புறம், கௌரவர்களான துரியோதனன், துச்சாதனன், கர்ணன், அவனுடைய ரத சாரதியான சல்லியன், பிதாமகரான பீஷ்மர், நடுநாயகமாக துரோணாச்சாரியார் ஆகியோர் நிற்கின்றனர்.

அர்ச்சுனன் மகனான இளைஞன் அபிமன்யு தன் அணிவகுப்பிலிருந்து ஒரு அடி முன்னால் வருகிறான். அம்புறாத் தூளியிலிருந்து ஒரு கணையை உருவி எடுத்துக் கையில் உள்ள காண்டீபத்தை நாணேற்றி துரோணாச்சாரியின் நெஞ்சுக்கு நேரே குறி வைக்கிறான். அதைக் கண்டு ஆச்சாரியார் சற்றுப் பின்வாங்குகிறார்.

அபிமன்யு அம்பை எய்கிறான். அது துரோணாச்சாரியாரைச் சுற்றி ஒரு முறை வலம் வந்து, அவர் பாதத்தடியில் வீழ்கிறது. அந்தக் கட்டத்தில் கலைஞர் எழுதிய வசனம்... 

அபிமன்யு சொல்கிறான்... ``தந்தையின் குருவுக்குத் தனயனின் வணக்கம்!”
அந்தக் காட்சியை நினைவுபடுத்தி, இதோ இன்றைக்கு என்னுடைய வசனம்:
`என்னை வளர்த்த என் தமிழ்த் தமையனார் கலைஞரின் காலடிக்கு, இந்த ஆரூர்த்தம்பியின் பேனா வணக்கம்!'

- முற்றும்