Published:Updated:

மெட்ராஸ்ல யாருக்கும் இல்லாத பேரு!

மெட்ராஸ்ல யாருக்கும் இல்லாத பேரு!
பிரீமியம் ஸ்டோரி
மெட்ராஸ்ல யாருக்கும் இல்லாத பேரு!

மெட்ராஸ்ல யாருக்கும் இல்லாத பேரு!

மெட்ராஸ்ல யாருக்கும் இல்லாத பேரு!

மெட்ராஸ்ல யாருக்கும் இல்லாத பேரு!

Published:Updated:
மெட்ராஸ்ல யாருக்கும் இல்லாத பேரு!
பிரீமியம் ஸ்டோரி
மெட்ராஸ்ல யாருக்கும் இல்லாத பேரு!

சென்னை, பாரிமுனையில் வணிகப் பரபரப்பு தொற்றிக் கிடக்கும் ரத்தன்பஜாரில், அகன்ற பிளாட்பாரத்தில் மிரனைச் சந்தித்தேன். காதல் மனைவி சித்ரா, தன் இருப்பிடத்திலேயே உப்பில் ஊறவைத்த நெல்லிக்காய், மாங்காய்களை விற்றுக்கொண்டிருக்கிறார். மிரனுக்கு 25 வயது. பிரதான வேலை, கானா பாடல் எழுதுவது. பகுதி நேர வேலை, மீன்பாடி வண்டி ஓட்டுவது.

யூடியூபில் கானா பாடிக் கலக்கும் சுதாகர், ஜூனியர் நித்யா, பாலச்சந்தர், மைக்கேல் எனப் பலருக்கும் பாடல்கள் சப்ளை, மிரன்தான். கல்லூரி மாணவர்களைக் கொள்ளைகொண்ட `மூக்குத்தி மூக்குத்தி...’, அஜித் ரசிகர்கள் கொண்டாடும் `ஏகப்பட்ட ஆபரேஷன்...’  `மாட்டுனா மட்டனு... சிக்குனாக்கா சிக்கனு...’ என மிரனின் ஹிட் லிஸ்ட் நீள்கிறது. `வடசென்னை’ படத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

``இது மட்டுமில்லண்ணா... டான்ஸ், சைக்கிள் ஸ்டன்ட், பைக் ஸ்டன்ட், ஜிம்னாஸ்டிக்குன்னு நிறைய வெச்சிருக்கேன். வரப்போற ஒரு படத்துக்கு ஆறு பாட்டு எழுதிக் குடுத்திருக்கேன். ஒரு படத்துல அசிஸ்டென்ட் டைரக்டராவும் வேலைசெஞ்சிருக்கேன்” - படபடவெனப் பேசும் மிரனை எப்போதும் பத்து இளைஞர்கள் சூழ்ந்து நிற்கிறார்கள்.

மெட்ராஸ்ல யாருக்கும் இல்லாத பேரு!

``நம்ம ஏரியா வால்டாக்ஸ் ரோடுண்ணா... சித்ரா வீடு ரத்தன்பஜார். வீடுன்னா, இதோ இந்த பிளாட்பாரம்தான். தலைமுறை தலைமுறையா இதுதானே நமக்கெல்லாம் வூடு. பத்தாவது படிக்கும்போதே லவ்வாயிருச்சு. `எதுனா சாதிச்சுட்டு வா... கல்யாணம் கட்டிக்கிலாம்’னு சொல்லிட்டா. நம்ம  தலைமுறையில யாரும் பள்ளிக்கூடம் தாண்டல. நல்லா படிச்சு ஒரு பட்டம் வாங்கிருவோம்னு `விஸ்காம்’-ல சேர்ந்தேன். ரெண்டாவது செமஸ்டருக்கு பீஸ் கட்ட முடியல.

அப்பா, மீன்பாடி வண்டி ஓட்டிக்கிட்டிருக்கார். படிப்பே வேணாம்னு வெளியில வந்துட்டேன். எனக்குப் பத்து வயசு இருக்கும்போது, அம்மா செத்துப்போச்சு. `இனிமே என் எதிர்காலம் இந்தப் புள்ளைங்கதான்’னு வேறொரு வாழ்க்கையைத் தேடிக்காம எங்களுக்காகவே மீன்பாடி வண்டி மிதிச்சாரு அப்பா. அவரோட சுமையைப் பகிர்ந்துக்குவோம்னு நானும் மீன்பாடி வண்டிய ஓட்ட ஆரம்பிச்சேன்.

அங்கேயிங்கேன்னு ஆளைப் புடிச்சு கலா மாஸ்டரோட அக்கா ஜெயந்தி மாஸ்டர்கிட்ட டான்ஸ் கத்துக்கிட்டேன். `டான்ஸ் யூனியன்ல சேர்ந்தா பெரியாளா ஆயிறலாம்... சித்ராவைக் கல்யாணம் பண்ணிக்கலாம்’ங்கிற கனவோடு போய் விசாரிச்சேன். `மூன்றரை லட்சம் கட்டுனாதான் கார்டு கிடைக்கும்’னு சொல்லிட்டாங்க. அதுவும் கைக்கெட்டாமப்போயிருச்சு.

கோயில் திருவிழாக்கள்ல ஆடப் போனேன். குரூப்ல நின்னு ஆடுற சான்ஸ்தான் கிடைச்சது. இருபது பாட்டுக்கு ஆடவெச்சுட்டு, 300 ரூபா கொடுப்பாங்க. அதுவே, ஜிம்னாஸ்டிக் பசங்க ஒரு பாட்டுக்கு வந்து பல்டி அடிச்சுட்டு 300 ரூபாயை வாங்கிட்டுப் போயிருவானுங்க. அதுக்காகவே ஜிம்னாஸ்டிக் கத்துக்கிட்டேன். சாக்கும்பர், சம்மர் சால்ட், பேக் பிலிப்னு எல்லாத்தையும் கலந்துகட்டுவேன். விஜய் டிவி-யில `கிங் ஆப் டான்ஸ்’லயும் ஆடினேன். ஓரளவுக்கு நாலு பேரு பார்த்துப் பாராட்டத் தொடங்கிய பிறகு, சித்ராகிட்ட போய் நின்னேன். கையைப் பிடிச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டா” - மிரன் சொல்ல, வெட்கப்பட்டுச் சிரிக்கிறார் சித்ரா.

``அதென்ன, மிரன்... பெயர் வித்தியாசமா இருக்கே?”

``எங்க அம்மா வெச்ச பேருண்ணா... ஒருநாள் எங்க அம்மாகிட்ட, `ஏம்மா இந்தப் பேரை வெச்சே?’ன்னு கேட்டேன். `மெட்ராஸ்ல வேற யாருக்கும் இல்லாத பேரா உனக்கு வெக்கணும்னு நினைச்சுதான் வெச்சேன்’னுச்சு. `எம் பேருக்கு என்ன அர்த்தம்?’னு கேட்டேன்.  `அப்ப வாயில வந்துச்சு, வெச்சேன்... அர்த்தமெல்லாம் தெரியாது’ன்னுச்சு. எங்க வாழ்க்கையே அப்படித்தான். அன்னைக்குக் கிடைக்கிற சந்தோஷம்... அன்னைக்குக் கிடைக்கிற வருமானம்... நாளையைப் பத்திக் கவலையே பட மாட்டோம்” என்கிற மிரன், தொடர்கிறார்.

``முதல்ல சினிமா மெட்டுல பாடுறதுதான் கானான்னு நினைச்சேன். ரஞ்சித் அண்ணா அறிமுகம் கிடைச்ச பிறகு நிறைய விஷயங்கள் புரிஞ்சது.  `முதல்ல நிறைய படி. எழுத்து, இலக்கியமெல்லாம் அப்புறம்’னு அண்ணன்தான் வழிகாட்டுனார். அம்பேத்கர், மார்க்ஸ், பெரியார்னு நிறைய ஆளுமைகளைப் படிக்க ஆரம்பிச்சேன். பிளாட்பார வாழ்க்கைக்குப் பின்னாடியிருக்கிற அரசியல், மத்தவங்க எங்களைப் பார்க்கிற பார்வை... எல்லாம் புரியத் தொடங்குச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெட்ராஸ்ல யாருக்கும் இல்லாத பேரு!

கொஞ்சம் கொஞ்சம் அரசியல் சேர்த்து, பாட்டு எழுத ஆரம்பிச்சேன். கானாங்கிறது வெறும் சென்னை பாஷையில உருவாகுற பாட்டு இல்லை. சென்னைக்குன்னு தனியா ஒரு மொழியே இல்லை. இங்கே `பஜார் பாஷை’ன்னு ஒண்ணு இருக்கு. பொருள் வாங்க வந்தவருக்குப் புரியாம வியாபாரிங்க பேசிக்கிறது. திருநங்கைகளுக்குத் தனிமொழி இருக்கு. மார்வாடிகளோட மொழி, உருதுன்னு எல்லாம் கலந்த கலவைதான் சென்னை மொழி. எல்லா மொழிகளோட தாக்கமும் கானாவுல இருக்கு. பெருசா லட்சியமெல்லாம் இல்லை. பிளாட்பாரத்துல பொறந்தவன், கஞ்சாவும் சாராயமும் குடிச்சு சாகணும்னு இல்லாம, இந்த ரோட்டுல இருந்து ஒருத்தன் வந்தான்... சினிமாவுல நல்லதா நாலு பாட்டு எழுதுனான்... அக்கறையா ஒரு படம் எடுத்தான்னு இருக்கணும். அப்படி ஒரு லைனோட வாழ்க்கை முடிஞ்சா போதும்.”

கனவுகளோடு பேசி முடிக்கிற மிரன், கானாவுக்கே உரிய, மயக்கும் குரலில் பாடுகிறார்...

``ரோட்டோரம் பிளாட்பாரம் எங்க வீடுங்க
எங்களுக்கும் கொடுத்தாங்க ஆதார் கார்டுங்க...
எங்களுக்குத் தேவையே இல்லை ஹவுஸிங் போர்டுங்க
எங்களை மாதிரி நீங்களும் வந்து வாழ்ந்துபாருங்க
ரோட்டுல இருந்தாலும் லைஃப்ஸ்டைல் டிரஸ்ஸுங்க
போனாலும் போவோம் ஸ்லீப்பர் கோச் பஸ்ஸுங்க...
கூவாறு நாத்தம்... எங்களுக்கு பெர்ஃப்யூம் வாசம்...”


எல்லாக் கவலைகளையும் தள்ளிப்போட்டுவிட்டு மிரனைச் சுற்றிக் குவிந்து நின்று கைதட்டுகிறார்கள், சென்னை நகரத்தால் தெருவில் நிறுத்தப்பட்ட பூர்வகுடி மக்கள்!

வெ.நீலகண்டன், படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism