Published:Updated:

“பிரமாதமா வாசிக்கிற!” - இளையராஜா பாராட்டிய 12 வயது இசைப்புயல்!

“பிரமாதமா வாசிக்கிற!” - இளையராஜா பாராட்டிய 12 வயது இசைப்புயல்!
“பிரமாதமா வாசிக்கிற!” - இளையராஜா பாராட்டிய 12 வயது இசைப்புயல்!

“பிரமாதமா வாசிக்கிற!” - இளையராஜா பாராட்டிய 12 வயது இசைப்புயல்!

"பிரம்மாதமா வாசிக்கிற!"-  என்று இளையராஜா பாராட்டிய அந்த  12 வயது  இசைப்புயல்  இவன் தான். 'அம்மன் கோயில் திருவிழாவா, நட்சத்திர விடுதிகளின் கொண்டாட்டமா? கூப்பிடுங்க தீபக் ராம்ஜியை' என்கிறார்கள் மதுரைக்காரர்கள். தனது அதிரடி டிரம்ஸ் இசையால் எல்லோரையும் உற்சாகத்தில் துள்ளவைக்கிறார் இந்த 12 வயது குட்டி சிவமணி. குறுகிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். மதுரை மட்டுமில்லாமல், தமிழகத்தின் பல ஊர்த் திருவிழாக்களுக்கும் தீபக் ராம்ஜியை அழைக்கிறார்கள். 

‘பாடவா என் பாடலை’ என்ற மெலோடியாக இருந்தாலும் சரி, 'ஜிங்கிலிமணி' என்ற அதிரடியாக இருந்தாலும் சரி, புகுந்து புறப்படும் தீபக் ராம்ஜி, “டிவியில் கேட்கும் பாடல்களுக்கு ஏற்ப தாளம் போடுவது ரொம்பப் பிடிக்கும். அப்படித்தான் என்னோட இசை ஆர்வத்தை ஆரம்பிச்சேன். என் அப்பா நல்லா தபேலா வாசிப்பார். அதைப் பார்த்தும் ஆர்வம் வந்துச்சு. டி.வி.யில் டிரம்ஸ் சிவமணியின் நிகழ்ச்சிகளைப் பார்த்து, வீட்டுல இருக்கிற தட்டு, கிண்ணங்களைத் தூக்கிவெச்சுக்கிட்டு தாளம் போடுவேன். 'பாத்திரங்களை உடைச்சுடாதேடா'னு பதறிபோய் அப்பா, சின்ன டிரம்ஸ் வாங்கிக் கொடுத்தார்'' என்று சிரிக்கிறார் தீபக் ராம்ஜி. 

''தொடர்ந்து டிவியில் வரும் பாடல்களில் டிரம்ஸ் அளவுகளை உன்னிப்பாக கவனிச்சு வாசிப்பேன். என்னுடைய இந்த ஆர்வத்தைப் பார்த்த அப்பா, மதுரையில் இருக்கும் ராஜா மாஸ்டரின் இசைப் பள்ளியில் சேர்த்துவிட்டார். நான் இந்தளவுக்கு டிரம்ஸ் வாசிக்க ராஜா மாஸ்டர்தான் காரணம். அப்புறம், லண்டன் டிரினிட்டி மியூசிக் காலேஜில் சேர்ந்து, டிரம்ஸில் எட்டு கிரேடு வரைக்கும் வாங்கிட்டேன். மிருதங்கம், பறை போன்றவற்றையும் வாசிக்க கத்துக்கிட்டு இருக்கேன். உலகம் முழுக்க போய் டிரம்ஸ் வாசிக்கணும். சினிமாவில் எல்லா மியூஸிக் டைரக்டர்ஸ் டியூனிலும் டிரம்ஸ் வாசிக்கணும். பெரிய மியூஸிக் டைரக்டரா வரணும். அப்பாவும் அம்மாவும் ஓகே சொல்லிட்டாங்க. டிரம்ஸ் சிவமணி மாஸ்டரைச் சந்திச்சு, அவர் ஆட்டோகிராப் போட்ட ஸ்டிக்கை, பரிசாக வாங்கினது மறக்க முடியாதது.  இசைஞானி இளையராஜாவை சந்திப்பேன்னு நான் நினைத்தே பார்க்கவில்லை. அவரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கிட்டேன் அது எப்போதும் மறக்க முடியாத நிகழ்வு. அடுத்து, ஏ.ஆர்.ரகுமான் அங்கிளை சந்திக்கணும்’’ என டிரம்ஸ் போலவே படபடவென பேசிக்கொண்டே போகிறார் தீபக் ராம்ஜி. 

தீபக் ராம்ஜிக்கு தமிழக கலை பண்பாட்டுத் துறை கடந்த ஆண்டுக்கான 'கலை இளமணி விருது' வழங்கியுள்ளது. பல்வேறு அமைப்புகளின் விருதுகளாலும் இவரது வீடு ஜொலிக்கிறது. 

ராம்ஜிக்கு ஊக்கச்சக்தியாக விளங்கும், தந்தை ராமமூர்த்தி, “நான் மின் வாரியத்தில் வேலை செய்யறேன். என் மனைவியும் அரசு ஊழியர். எங்களுக்கு எல்லோரையும் போல பையனை டாக்டர், இஞ்ஜினீயர் ஆக்கணும்னு எல்லாம் ஆசை கிடையாது. குழந்தையின் ஆர்வம் என்னமோ அதில் உயரத்துக்கு கொண்டுவரணும்னு நினைக்கிறோம். இசையில்தான் இவனுக்கு ஆர்வம்னு தெரிஞ்சதும் அதுக்கான முயற்சியில் இறங்கிட்டோம். ‘சங்கம்-4’ நிகழ்ச்சிக்கு மதுரைக்கு வந்த டிரம்ஸ் சிவமணியுடன் சேர்ந்து, அவருடைய வேகத்துக்கு டிரம்ஸ் வாசிச்சதைப் பார்த்து அசந்துட்டோம். நடிகர் பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்பு’ பட விழாவிலும் டிரம்ஸ் வாசிச்சான். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அவன் வாசிச்சதைப் பெருமையாக நினைக்கிறோம். சில மாசங்களுக்கு முன்னாடி இசைஞானி இளையராஜாவை சந்திச்சோம். 'பிரமாதமா வாசிக்கிறே. ரொம்ப நல்லா வருவே'னு அவர் ஆசீர்வாதம் செய்த அந்த பொக்கிஷ நிமிடங்களை மறக்கவே முடியாது'' என்று நெகிழ்கிறார். 

ஒரு குட்டி இசைப் புயல் தமிழகத்தைத் தாக்க தயாராகிக்கொண்டிருக்கிறது. 

- செ.சல்மான்

அடுத்த கட்டுரைக்கு