Published:Updated:

`வீட்டில் இருந்தே வேலை, நீடிக்கும் பயம், விரைவில் நோ மாஸ்க்!' - நடிகை ஜெயஶ்ரீயின் அமெரிக்க அனுபவம்

ஜெயஶ்ரீ
ஜெயஶ்ரீ

கொரோனாவின் தாக்கம், அமெரிக்க மக்களின் வாழ்க்கை முறையை பெருமளவில் மாற்றியிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் ஐ.டி நிறுவன ஊழியராகப் பணியாற்றும் நடிகை ஜெயஶ்ரீயிடம், அந்த நாட்டின் ஓராண்டுக்கால நிலவரம் குறித்துப் பேசினோம்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பாதிப்பில் உலக வல்லரசுகளில் முதன்மை நாடான அமெரிக்காதான் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. பொருளாதாரச் சரிவுடன், அங்கு பெருமளவில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. கொரோனாவின் தாக்கம், அமெரிக்க மக்களின் வாழ்க்கை முறையை பெருமளவில் மாற்றியிருக்கிறது. பெரும்பாலான ஊழியர்கள் ஓராண்டுக்கும் மேலாக வீட்டில் இருந்தே பணியாற்றுகின்றனர். கொரோனா பரவல் குறைந்து, நிலைமை தற்போது இயல்புநிலைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் ஐ.டி நிறுவன ஊழியராகப் பணியாற்றும் நடிகை ஜெயஶ்ரீயிடம், அந்த நாட்டின் ஓராண்டுக்கால நிலவரம் குறித்துப் பேசினோம்.

ஜெயஶ்ரீ
ஜெயஶ்ரீ

``போன வருஷம் உலக அளவுல அமெரிக்காவுலதான் கொரோனா பரவல் அதிகமா இருந்துச்சு. பெரும்பாலான நிறுவனங்கள்லயும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறை உடனடியா அமலாச்சு. முன்னணி ஐ.டி கம்பெனியில மேனேஜரா வேலை செய்யுறேன். தினசரி வேலைகள் பாதிக்காதவாறு, ஊழியர்களுக்கு பல்வேறு வசதிகளைச் செஞ்சு கொடுத்தாங்க.

அமெரிக்காவுல ஐ.டி நிறுவனங்கள், வங்கி நிறுவனங்கள் அதிகளவுல இயங்குது. இவை உட்பட பல நிறுவனங்கள்லயும் போன வருஷம் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் ஏற்பட்டுச்சு. என்னோட கம்பெனியில சில மாசங்களுக்கு எல்லாப் பணியாளர்களுக்கும் 25 சதவிகித ஊதியத்தைப் பிடித்தம் செஞ்சாங்க. அந்தப் பிடிப்புத் தொகை எல்லாத்தையும் ஆகஸ்ட் மாசம் கொடுத்துட்டாங்க. பிறகு, வழக்கமான சம்பளத்துடன், ஊதிய உயர்வும் கிடைச்சது. அதே சமயம், வேலை இழந்தோர் வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் துறையில பதிவுசெய்ய அரசு ஏற்பாடு செஞ்சது. மறுபடியும் வேலை கிடைக்கும் வரை, அவங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுது. இந்த வகையில, ஆபீஸ் போறவங்க மட்டுமல்லாம, கூலி வேலை செய்றவங்க வரை எல்லோரும் பயனடையுறாங்க.

அமெரிக்கா
அமெரிக்கா

நண்பர்கள் வட்டாரத்துல பலரும் கொரோனாவால பாதிக்கப்பட்டாங்க; உயிரிழந்தாங்க. ஆஸ்பத்திரிகள்ல இறந்துபோனவங்க உடல்களை வைக்க இடம் இல்லாம, ஐஸ் பெட்டியில் பலருடைய உடல்களையும் பல நாள்கள் வெச்சிருந்தாங்க. ஒரு கட்டத்துல செய்திகள் பார்க்கிறதையே குறைச்சுகிட்டோம்.

கலிஃபோர்னியா மாகாணத்துல, சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில வசிக்கிறேன். எங்க பகுதியிலும் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்ததால, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகளவுல இருந்துச்சு. தேவையான மளிகைப் பொருள்களை ஆன்லைன்ல மட்டுமே வாங்கினோம். எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பார்க் இருக்கு. அங்க மட்டும்தான் அவ்வப்போது வாக்கிங் போனோம். மத்தபடி, பல மாசங்களுக்கு வீட்டுக்குள்ளயே முடங்கியிருந்தோம். இதனால, ஒருகட்டத்துல கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டுச்சு" என்பவர், லாக்டெளன் தளர்வுக்குப் பிறகான மாற்றங்களைப் பகிர்ந்தார்.

ஜெயஶ்ரீ
ஜெயஶ்ரீ

``எல்லாத் தரப்பினரும் பாதிக்கப்பட்டாலும், தொற்றின் வேகத்தைக் குறைக்க லாக்டெளன்தான் சரியான தீர்வுங்கிறதை மக்களும் சரியா புரிஞ்சுகிட்டு அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. ஆன்லைன் டெலிவரி செய்யுறவங்க, முன்களப் பணியாளர்கள் தவிர யாருமே சாலையில நடமாட அனுமதிக்கப்படல. இந்த நிலையில, கடந்த ஆகஸ்ட் மாசத்துல இருந்துதான் சில தளர்வுகள் வழங்கப்பட்டது. வயசானவங்க, நடுத்தர வயதினர்னு பலருக்கும் பிரிவு வாரியா குறிப்பிட்ட சில மணிநேரம் மட்டும் ஷாப்பிங் போக அனுமதி வழங்கப்பட்டுச்சு. அப்பல்லாம் பயந்துகிட்டேதான் ஷாப்பிங் போனோம். வாங்கிட்டு வந்த மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உட்பட எல்லாத்தையும் கழுவி, சுத்தம் பண்ணிட்டுத்தான் வீட்டுக்குள்ள கொண்டுபோனோம்.

பணியாளர்கள் வராத நிலையில், வழக்கத்தைவிடவும் பணிச்சுமைகள் அதிகரிச்சது. வீட்டுல எல்லோருமே வேலைகளைப் பகிர்ந்து செஞ்சோம். மக்கள் நடமாட்டம் அதிகரிச்சு, கடந்த நவம்பர்ல இந்த நாட்டுல கொரோனா ரெண்டாவது அலை பரவுச்சு. பாதிப்பு அதிகம் இருந்த இடத்துல மட்டும் கட்டுப்பாடுகள் இருந்துச்சே தவிர, நாடு முழுக்க பொது முடக்கம் அறிவிக்கப்படல. தடுப்பூசி போடும் பணி மிக விரைவா தொடங்குச்சு. மக்கள் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கிறாங்க. நானும் தடுப்பூசி போட்டுகிட்டேன். அமெரிக்க மக்கள் தொகையில சரிபாதி மக்கள் தடுப்பூசி போட்டுகிட்டதா சொல்றாங்க. இப்பவும் கொரோனா பரவல் இருந்தாலும், பாதிப்பின் வீரியம் கட்டுக்குள் வந்திடுச்சு. இப்பதான் சில வெளியிடங்களுக்குப் போக ஆரம்பிச்சிருக்கோம்.

ஜெயஶ்ரீ
ஜெயஶ்ரீ

சுற்றுலா தளங்கள், வழிபாட்டுத்தளங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர் ஆகியவற்றுல தினமும் குறிப்பிட்டோருக்கு மட்டும்தான் அனுமதி தரப்படுது. ஸ்கூல், காலேஜ் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த ஒரு வருஷமாவே திறக்கப்படல. ஆன்லைன் வகுப்புகள் மட்டும்தான் நடக்குது. கோடைக்காலம் முடிஞ்சு, ஆகஸ்ட் - செப்டம்பர்லதான் ஸ்கூல், காலேஜ்ல நேரடி வகுப்புகள் நடக்கும்னு சொல்லியிருக்காங்க. வேலை நாள்களுக்கும், விடுமுறை தினத்துக்குமான வித்தியாசமே தெரியாத அளவுல சற்றே இறுக்கமான சூழல்லதான் இப்பவும் இருக்கோம். யார் கூடவும் கைகுலுக்கிப் பேச முடியல. நண்பர்கள் வீட்டுக்கு சகஜமா போக முடியாம, வீட்டுலயேதான் முடங்கியிருக்கோம்" என்பவரின் குரலில் ஆதங்கம் கூடுகிறது.

தான் முன்னெடுத்து நடத்திய நவராத்திரி விழா குறித்துப் பேசுபவர், ``உறவினர்கள், நண்பர்கள் பலரும் கொரோனா சூழலால பல மாசமா உற்சாகம் இல்லாம இருந்தாங்க. எல்லோருக்கும் புத்துணர்வு தரணும்னு, போன வருஷம் ஆன்லைன்ல நவராத்திரி விழாவை நடத்தினேன். அதுல, பக்தி, அரட்டை, கொண்டாட்டம்னு பலவும் இருந்துச்சு. அமெரிக்கா மற்றும் இந்தியாவுல இருக்கும் தோழிகளுடன், சுஹாசினி, குஷ்பு, ரேவதி, பூர்ணிமா பாக்யராஜ், பிரபு உட்பட என்னோட சினிமா நண்பர்கள் பலரும் அந்தக் கொண்டாட்டத்துல கலந்துகிட்டுப் பேசினாங்க. இந்தியாவுல நிலைமை சரியாகிட்டு வந்த நிலையில, இப்போ கொரோனா பாதிப்பு அதிகமாகியிருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கு.

ஜெயஶ்ரீ
ஜெயஶ்ரீ

என் பெற்றோர் சென்னையில வசிக்கிறாங்க. அவங்களையும் நண்பர்களையும் பார்க்க, வருஷத்துக்கு ஓரிரு முறை சென்னை வருவேன். கடந்த ஒரு வருஷமா சென்னைக்கு வர முடியாம, எல்லோர்கூடவும் போன்லயும் ஆன்லைன்லயும்தான் பேசுறேன். வங்கித் துறையில வேலை செய்யுற என்னோட கணவரும் ஒரு வருஷமா வீட்டுல இருந்துதான் வேலை செய்யுறார். கலிஃபோர்னியாவுல ஜூன் 15 வரை கட்டாயமா எல்லோரும் மாஸ்க் அணியணும். அதுக்குப் பிறகு, தடுப்பூசி போட்டுகிட்டவங்க மட்டும் மாஸ்க் இல்லாம வெளியிடங்களுக்குப் போகலாம்னு மாகாண அரசு சொல்லியிருக்கு. சீக்கிரமே நிலைமை சரியாகி, எல்லோரும் இயல்புநிலைக்குத் திரும்பணும்னு ஆசைப்படுறேன்" என்று நம்பிக்கையுடன் முடித்தார் ஜெயஶ்ரீ.

அடுத்த கட்டுரைக்கு