Published:Updated:

'லாரி பேக்கர் பாணி'யில் வீடு... நாம் அறியாத நாசரின் இன்னொரு முகம்! #VikatanDiwaliMalar2019

லாரி பேக்கர்
லாரி பேக்கர்

'லாரி பேக்கர் பாணி' என்பது ஒரு கட்டுமானம் அல்ல; அதற்குள் ஒரு சித்தாந்தம் இருப்பதை உணர்ந்தேன். அந்த பாணி கட்டடக்கலை இந்தியாவுக்கு மிக அவசியம்

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் தனித்துவமான நடிப்பால் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருப்பவர், நடிகர் நாசர். தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் நடித்துவரும் நாசர் எழுத்து, நாடகம், இயக்கம், ஓவியம் எனப் பன்முக ஆளுமைகொண்டவர். நாம் அறியாத இன்னொரு முகமும் இவருக்கு உண்டு. அது கட்டடக்கலை சார்ந்த அவரின் அதீத ஆர்வம். 'மரபு சார்ந்த, மண் சார்ந்த, இயற்கைச்சூழல் சார்ந்த வீடுகளை வடிவமைப்பதில் விற்பன்னர் இந்தக் கலைஞர்' என்றே சொல்லலாம். பிரபல கட்டடக்கலை வல்லுநர் லாரி பேக்கர் பாணியில் இவரும் வீடுகளை வடிவமைக்கிறார். புதிதாக வீடுகட்ட விரும்பும் நண்பர்களுக்கு ஆர்வத்தோடு ஆலோசனை வழங்குகிறார். இது குறித்து அவரிடம் பேசினோம்.

"லாரி பேக்கர் முறையில்தான் உங்கள் வீட்டையும் கட்டியிருக்கிறீர்களா?"

லாரி பேக்கர்
லாரி பேக்கர்

> விகடன் தீபாவளி மலர் 2019... அப்படி என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

"ஆமாம். 25 ஆண்டுகளுக்கு முன்னர், வீடுகட்ட முயன்றபோது, என் நண்பரும் பொறியாளருமான வைத்தியநாதன்தான் லாரி பேக்கர் பற்றிச் சொன்னார். அவருடைய கட்டட முறையைப் பற்றித் தேடியபோதுதான் 'லாரி பேக்கர் பாணி' என்பது ஒரு கட்டுமானம் அல்ல; அதற்குள் ஒரு சித்தாந்தம் இருப்பதை உணர்ந்தேன். அந்த பாணி கட்டடக்கலை இந்தியாவுக்கு மிக அவசியம். ஏனென்றால், உலகிலேயே நடுத்தர, கீழ் நடுத்தர வகுப்புகளைச் சேர்ந்த மக்களை அதிகம்கொண்டது இந்தியா. இந்த வகுப்பு மக்களுக்கு வீடு என்பது ஒரு முக்கியமான விஷயம். அதைக் குறைந்த செலவில் கட்டுவதற்கு வழிகாட்டுவதுதான் லாரி பேக்கர் பாணி."

"லாரி பேக்கரைப் பற்றிச் சொல்லுங்களேன்..."

"இங்கிலாந்தைச் சேர்ந்த லாரி பேக்கர் கட்டடக்கலை படித்தவர். அங்கே படித்துவிட்டு சந்தர்ப்பவசத்தால் இந்தியா வந்தபோது, இந்தியாவிலிருந்த வீடுகளின் ஆழத்தையும் அதன் தனித் தன்மையையும் கற்றறிந்தார். காந்தியின் மீது பெரும் ஈடுபாடுகொண்ட லாரி பேக்கர், ஒருமுறை காந்தியைச் சந்தித்தார். அப்போது காந்தி, 'எங்கள் நாட்டில் பலர் இருப்பதற்கு வீடில்லாமல் இருக்கிறார்கள். அந்த மக்கள் பயன்படும்படி வீடுகளை அமைக்க வேண்டும். அதிலும் கிராமங்களிலுள்ள எளிய மக்களுக்குத்தான் நீங்கள் அதிகம் தேவைப்படுகிறீர்கள்' என்று வேண்டுகோள் விடுத்தார். அதன் பிறகு இங்கிலாந்து சென்று இந்தியா திரும்பிய லாரி பேக்கர், அறுபதுகளில் கேரளாவுக்கு வந்தார். கேரளாவின் இயற்கைச் சூழலும், மண்ணின் தன்மையும் அவரை வெகுவாக ஈர்த்துவிட, அங்கேயே தங்கிப் பல கட்டடங்களைக் கட்டிக் கொடுத்தார்."

'லாரி பேக்கர் பாணி'யில் வீடு...  நாம் அறியாத நாசரின் இன்னொரு முகம்!  #VikatanDiwaliMalar2019

"இந்த பாணியில் வீடு கட்டுவதால் என்ன லாபம்?"

"வீட்டைப் பொறுத்தவரை அதில் போடும் முதலீடு திரும்பக் கிடைப்பதில்லை. அதில் ஏன் நாம் பணத்தை விரயமாக்க வேண்டும் என்று எண்ணி, 'அரை கிலோமீட்டர் சுற்றளவில் கிடைக்கும் பொருள்களைக்கொண்டே வீட்டைக் கட்டிக்கொள்ள வேண்டும்' என்பது அவரது கொள்கை. இன்னொன்று, வீடு என்பது அவரவர் ரசனை, தேவையைப் பொறுத்தது. ஒருவருக்கு வீடுகட்ட வேண்டுமென்றால், அவர்களோடு மூன்று மாதங்களாவது செலவிடுவார். பிறகு வீட்டிலுள்ள அனைவரின் பழக்க வழக்கங்கள் அடிப்படையில் பொதுத் தன்மையற்று வீட்டைக் கட்டுவார். அப்படிக் கட்டிக் கொடுத்ததுதான் மலையாளத் திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனின் வீடு. இந்தியன் காபி ஹவுஸ் (திருவனந்தபுரம்), அரசு மருத்துவமனைகள், தேவாலயங்கள் எனப் பல கட்டடங்களைக் கேரளாவில் கட்டியிருக்கிறார். இன்றைக்கு இருக்கும் சூழலில் நகரமோ, கிராமமோ லாரிபேக்கர் பாணியில் வீட்டைக் கட்டும்போது வழக்கமாகக் கட்ட ஆகும் செலவைவிட 25 சதவிகிதத்துக்குமேல் மிச்சப்படுத்த முடியும்."

- இந்தப் பாணியைப் பற்றி இன்னும் விரிவாகவும், வீட்டை அலங்கரிக்க பழையப் பொருள்களைத் தேடித்தேடி நாடியதன் மூலம் 'பொறுக்கீஸ்' குழு உருவானது குறித்தும் விரிவாகப் பேசியிருக்கிறார், நடிகர் நாசர். விகடன் தீபாவளி மலரில் வெளியாகியுள்ள "வீடு என்பது அவரவர் ரசனையைப் பொறுத்தது!" எனும் கட்டிடக் கலைப் பகுதியை முழுமையாக வாசிக்கலாம்.

> விகடன் தீபாவளி மலர் 2019... அப்படி என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

'லாரி பேக்கர் பாணி'யில் வீடு...  நாம் அறியாத நாசரின் இன்னொரு முகம்!  #VikatanDiwaliMalar2019

> விகடன் தீபாவளி மலர் 2019... அப்படி என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

அடுத்த கட்டுரைக்கு