Published:Updated:

`மூணு வார தனிமை, நண்பர்களின் வேண்டுதல், மகனுடன் சந்திப்பு!' - பூர்ணிமாவின் கோவிட் கால அனுபவம்

பாக்யராஜ் - பூர்ணிமா
News
பாக்யராஜ் - பூர்ணிமா

தமிழ் சினிமா நட்சத்திர தம்பதியரான பாக்யராஜ் - பூர்ணிமா பாக்யராஜுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் வழிகாட்டுதலுடன் விரைவாகக் குணமாகியுள்ளனர். மூன்று வார வீட்டுத் தனிமையில் இருந்த பூர்ணிமா, தனது கோவிட் கால அனுபவங்களைப் பகிர்கிறார்.

கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிர நிலையை எட்டியிருக்கிறது. ஊரடங்கின் பலனாக, வரும் நாள்களில் தொற்றின் வேகம் படிப்படியாகக் குறையும் என்று நம்பிக்கையூட்டுகின்றனர் மருத்துவ வல்லுநர்கள். கடந்த ஆண்டில் உருவான முதல் அலையைவிடவும், தற்போதைய இரண்டாவது அலையால் ஏற்பட்டிருக்கும் அச்சமும் பாதிப்பும் அதிகம்தான். ஆனாலும்கூட, நம்பிக்கையுடனும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றியும் இந்தச் சூழலையும் எளிதில் கடக்கலாம். இதைத்தான், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களும் தெரிவிக்கின்றனர்.

குடும்பத்தினருடன் பூர்ணிமா
குடும்பத்தினருடன் பூர்ணிமா

தமிழ் சினிமா நட்சத்திர தம்பதியரான பாக்யராஜ் - பூர்ணிமா பாக்யராஜுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் வழிகாட்டுதலுடன் விரைவாகக் குணமாகியுள்ளனர். மூன்று வார வீட்டுத் தனிமையில் இருந்த பூர்ணிமா, தனது கோவிட் கால அனுபவங்களைப் பகிர்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``கொரோனா முதல் அலை வந்ததுல இருந்தே நாங்க முறையான பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம். தொடர்ந்து ஷூட்டிங் போனாலும்கூட, வெளியில போனா தவறாம மாஸ்க் போடுவேன். அதிகம் கூட்டம் உள்ள இடங்களுக்குப் போறதைத் தவிர்த்துடுவேன். இதை என் குடும்பத்துல எல்லோருமே கடைப்பிடிச்சாங்க. நானும் என் கணவரும் முறையா ரெண்டு தவணை தடுப்பூசியையும் போட்டுக்கிட்டோம். கொரோனா ரெண்டாவது அலை பரவ ஆரம்பிச்சதுமே, அத்தியாவசியத் தேவைகளுக்குத் தவிர்த்துப் பெரும்பாலும் வீட்டுலயேதான் இருந்தோம்.

பூர்ணிமா
பூர்ணிமா

கடந்த ஏப்ரல் மாசத்துலயே ஷூட்டிங் போறதையும் தவிர்த்துட்டேன். பாதுகாப்புடன் இருந்தும்கூட, எனக்கும் என் கணவருக்கும் கொரோனா எப்படி வந்துச்சுன்னே தெரியல. நாங்க வீட்டுலயே இருந்தாலும், எங்களைச் சந்திக்க வந்த சிலர் எங்களோடு போட்டோ எடுத்துகிட்டாங்க. அப்போ நாங்களும் அவங்களும் சில நிமிடங்களுக்கு மாஸ்க் கழற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுச்சு. அதன் மூலமா எங்களுக்கு பாதிப்பு வந்துச்சான்னு தெரியல. லேசான அறிகுறி அல்லது அறிகுறியே இல்லாமலும்கூட சிலருக்கு கொரோனா ஏற்படுதுனு சொல்றாங்க. அப்படியான நபர்கள் யார் மூலமா எங்களுக்கு கொரோனா பரவியிருக்கக்கூடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மே முதல் வாரத்துல என் கணவருக்கு ஜலதோஷத்துடன், லேசான காய்ச்சலும் ஏற்பட்டுச்சு. அடுத்த சில தினங்கள்லயே அதே அறிகுறிகள் எனக்கும் ஏற்பட்டுச்சு. ஓரளவுக்கு யூகிச்சுகிட்டு, எங்க பர்சனல் டாக்டர்கிட்ட பேசினோம். `இதே அறிகுறிகள் சில நாள்களுக்குத் தொடருதான்னு பாருங்க'ன்னு சொன்னார். அதேபோல அறிகுறிகள் நீடிக்கவே, ஆஸ்பத்திரிக்குப் போய் சில டெஸ்ட் எடுத்தோம். அதுல எங்க ரெண்டு பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியாச்சு.

பாக்யராஜ் - பூர்ணிமா
பாக்யராஜ் - பூர்ணிமா

எங்களுக்கு லேசான அறிகுறிகளுடன் கூடிய கோவிட்தான் இருந்துச்சு. அதனால, வீட்டுல இருந்தே சரிப்படுத்திக்கலாம்னு டாக்டர் சொன்னார். வீட்டுல இருந்தாலும்கூட எல்லா நேரமும் மாஸ்க் போட்டுகிட்டோம். வெளி நபர்களைச் சந்திக்காம, எங்க பெட்ரூமை விட்டு வெளியே எங்கயும் போகாம ரொம்பவே கட்டுப்பாடுகளுடன் இருந்தோம். கணவருக்கும் எனக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருந்ததால, இருவரும் ஒரே ரூம்ல எங்களைத் தனிமைப்படுத்திகிட்டோம்.

எங்க உடல்நிலை முன்னேற்றம் பத்தி போன் மூலமா தினமும் டாக்டருக்கு தெரியப்படுத்தினோம். அவர்கிட்ட தொடர்ந்து ஆலோசனைகள் பெற்றோம். இருவருக்கும் உடல்வலி இருந்துச்சு. எனக்கு மட்டும் சுவை உணர்வு குறைஞ்சது. தண்ணீரை சூடுபடுத்தித்தான் குடிச்சோம். ஆக்ஸிஜன் அளவை அவ்வப்போது பரிசோதிச்சோம். ஆவி பிடிச்சோம். நிறைய தண்ணீர் குடிச்சதுடன், எளிதில் ஜீரணமாகும் உணவுகளை அதிகம் எடுத்துகிட்டோம். படிப்படியா எல்லா பாதிப்புகளும் சரியாகி, மூணு வாரங்கள்ல இயல்பு நிலைக்குத் திரும்பினோம்" என்பவரின் குரலில் நம்பிக்கை கூடுகிறது.

பாக்யராஜ் - பூர்ணிமா
பாக்யராஜ் - பூர்ணிமா

``கொரோனா பாதிப்பு பத்தி ஓரளவுக்கு விழிப்புணர்வுடன்தான் இருந்தோம். நம்பிக்கையுடன் இருந்தாலும்கூட, எங்களுக்கு கொரோனா வந்ததும் கொஞ்சம் பயம் ஏற்பட்டுச்சு. எங்க மூலமா குடும்பத்துல மத்த யாருக்கும் பாதிப்பு வந்திடக் கூடாதுனு கவலைப்பட்டோம். நல்லவேளையா பையனுக்கும் மருமகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படல. அவங்க தனி ரூம்ல இருந்தாங்க. அவங்ககூட போன்லதான் தினமும் பேசினோம். 21 நாள்கள் பெட் ரூமை விட்டு நானும் கணவரும் வெளியே வரல. அதன் பிறகு சில தினங்களுக்கு முன்புதான் எங்க பையனையும் மருமகளையும் பார்த்தோம்.

க்வாரன்டீன்ல இருந்தப்போ, சினிமா நண்பர்களோடு போன்ல பேசினதைத் தாண்டி, ஜூம்லயும் உரையாடினோம். நானும் என் கணவரும் சீக்கிரமே குணமாகணும் நம்பிக்கையான வார்த்தைகளைக் கூறி உற்சாகப்படுத்தினதுடன், எங்களுக்காக நண்பர்கள் வேண்டிகிட்டாங்க. அதுக்காக எல்லோருக்கும் ஸ்பெஷல் நன்றி. ஜூம்லயே பெயின்டிங் பயிற்சி வகுப்புல கலந்துகிட்டேன். பிடிச்ச படங்கள் அதிகம் பார்த்தேன்.

பாக்யராஜ் - பூர்ணிமா
பாக்யராஜ் - பூர்ணிமா

பழைய, புதிய படங்கள் பார்க்கிறதுனு கணவரும் பாசிட்டிவ்வான மனநிலையில இருந்தார். கொரோனா பத்தின எதிர்மறையான செய்திகளைப் பார்க்கிறதையும் கேட்கிறதையும் தவிர்த்தோம். இப்போ ஓரளவுக்கு இயல்பு நிலைக்குத் திரும்பிட்டோம். பெட் ரூம்ல இருந்து ஹாலுக்குப் போக ஆரம்பிச்சுட்டோம். ஆனா, வீட்டை விட்டு இன்னும் வெளிய போகல. இன்னும் கொஞ்ச நாள்களுக்கு ஓய்வு தேவைப்படுது. கொரோனா வந்தா, பலருக்கும் பயம் வரக்கூடும். ஆனா, கவலைகளுக்கு இடம் கொடுக்காம உரிய சிகிச்சைகளை எடுத்துக்கணும்.

சிகிச்சையிலோ, வீட்டுத்தனிமையிலோ இருக்கும்போது, நமக்குப் பிடிச்ச, பாசிட்டிவ்வான விஷயங்கள்ல கவனம் செலுத்தணும். இப்படி செஞ்சதாலதான் நாங்க விரைவா குணமானோம். குறிப்பா, தடுப்பூசியைச் சரியான தருணத்துல போட்டுகிட்டதாலதான், கொரோனாவின் தாக்கம் எங்களுக்கு அதிகம் ஏற்படலைனு நினைக்கிறோம். பயமில்லாம, எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கோங்க. தயவுசெஞ்சு வீட்டை விட்டுத் தாண்டினாலே மாஸ்க் அணியணும். முடிஞ்சவரை, வீட்டுக்கு உள்ளேயும்கூட கொஞ்ச காலத்துக்கு மாஸ்க் போட்டுகிட்டு இருக்கலாம். இப்போதைக்கு தனிமனித இடைவெளிதான் எல்லோருக்குமே பாதுகாப்பு.

பூர்ணிமா பாக்யராஜ்
பூர்ணிமா பாக்யராஜ்

மிக அத்தியாவசியத் தேவைக்குத் தவிர, வெளியில எங்கயுமே போகாம இருக்கிறதுதான் நமக்கும் நம்ம குடும்பத்தினருக்கும் நல்லது. உறவினர், நண்பர்கள்கிட்ட போன்ல, ஆன்லைன்ல உரையாடலாம். எந்த வகையிலயும் சோர்வடையாம, வீட்டுக்குள்ளயே இருக்கும் நாள்களை உற்சாகமானதா மாத்திக்கலாம். நம்பிக்கையுடன் இந்த அசாதாரண சூழலையும் கடப்போம்" என்று நம்பிக்கையூட்டி முடிக்கிறார் பூர்ணிமா.