Published:Updated:

``விஜய்ணா சொன்ன அட்வைஸ்... லோகேஷ் கேட்ட கேள்வி!''- விஜய் `64'அனுபவம் சொல்லும் சாந்தனு!

விஜய் மற்றும் சாந்தனு
விஜய் மற்றும் சாந்தனு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 64-வது படத்தின் பூஜை நேற்று நடந்தது. படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க ஹீரோயினாக 'பேட்ட' படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், படத்தின் முக்கியமான ரோலில் நடிகர் சாந்தனு நடிக்கிறார். இதுகுறித்து சாந்தனுவிடம் பேசினேன்.

``என்னோட பிறந்தநாள் அன்னைக்குக்கூட இத்தனை வாழ்த்துகள் வந்ததில்லை. `விஜய் 64' படத்துல கமிட்டானதுக்கு சோஷியல் மீடியாவில் இருக்கிற நிறைய பேர் வாழ்த்துகள் சொல்லிட்டிருக்காங்க. இந்த நிமிஷம் வரைக்கும் என்னோட போன் அடிச்சிக்கிட்டேதான் இருக்கு. இன்னும் நான் அந்த ஸ்பெஷல் மோட்ல இருந்து வெளியே வரவே இல்லை. அதே இடத்துலதான் நின்னுட்டு இருக்கேன். விஜய் அண்ணா மேனேஜர் ஜெகதீஷ்தான் எனக்கு போன் பண்ணி, `டைரக்டர் லோகேஷ் கனகராஜ் உங்களைப் பாக்கணும்னு சொல்றார்'னு சொன்னார்.

Vijay 64 Movie Pooja
Vijay 64 Movie Pooja

ஒருவித பதற்றமான மனநிலையிலேயே டைரக்டரைப் போய் பார்த்தேன். அவர் 'தளபதி 64 படத்துல நடிக்குறீங்களா?'ன்னு கேட்டார். அவர் சொன்னபோது ரொம்ப சந்தோஷமா இருந்தது. மறுவார்த்தை பேசல. நிச்சயமாக படத்தோட முதல்நாள் ஷூட்டிங் போது விஜய் அண்ணாகூட நடிக்குறப்போ அவரோட நடிப்பைப் பார்த்து அப்படியே பிரமிச்சு நின்னுருவேன். ஏன்னா, அவர் நடிச்சதுக்குப் பிறகு திரும்பி நடிப்பேனா... இல்லை அவர் நடிக்குறதை மட்டும் பார்த்துட்டு இருப்பேனானு தெரியல. எப்போவுமே விஜய் அண்ணா என்கிட்ட பொதுநிகழ்ச்சிகளில் பேசிதான் பார்த்திருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்டில அவர்கூட நடிச்ச அனுபவம் எனக்கு இல்லை.

சின்ன வயசுல இருந்தே விஜய்ணாவை பிடிக்கும். ஆனா, 'கில்லி' படத்துல இருந்துதான் அவருடைய ரசிகனா மாறிட்டேன். அவரை பெரிய ஹீரோவா இந்தப் படத்துல இருந்து பாக்க ஆரம்பிச்சிட்டேன். அவர் எப்போவும் பெரிய ஹீரோதான். எனக்குள்ளே ஒரு ரசிகன் மனப்பக்குவத்தை இந்தப் படம்தான் ஏற்படுத்துச்சு. வீட்ல விஜய் அண்ணா படத்துல நடிக்குற விஷயத்தைச் சொன்னவுடனே எல்லாரும் ரொம்ப ஹேப்பி. நானும் ரொம்ப குதிச்சிக்கிட்டே இருக்கேன். `ஆச்சர்யப்பட்டுட்டே இருக்காத, அவர்கூட நடிக்கணும்'னு வீட்ல சொன்னாங்க. மொத்தத்துல நான் ரொம்ப ஹேப்பிங்க. என்னோட மனைவி `படத்துல யோசிக்கமா நடி'னு சொன்னா.. இதுல யோசிக்க எதுவுமே இல்லைனு சொன்னேன்.

விஜய்யுடன் சாந்தனு
விஜய்யுடன் சாந்தனு

நேற்று பூஜைலதான் விஜய் அண்ணாவைப் பார்த்தேன். உள்ளே வந்தவுடனே 'ஹலோ ஹலோ'னு எல்லார்கிட்டயும் கை கொடுத்தார். என்னைப் பார்த்துட்டு தலையை ஆட்டுன மாதிரி எனக்குத் தோணுச்சு. `வெல்கம் ஆன் போர்ட்'னு அவரோட கண்ணு சொன்ன மாதிரி இருந்தது. அவர்கிட்ட போனேன் என்னை கட்டிப்பிடிச்சார். கலங்கி நின்னேன். ரொம்ப ஹேப்பியா இருந்தது. இந்தப் படத்துல எத்தனை பேர் நடிச்சாலும் எல்லாரும் தளபதி விஜய் அண்ணாவைதான் பார்ப்பாங்க. விஜய்ங்கிற ஒருத்தருக்காகத்தான் எல்லாரும் தியேட்டருக்குள்ள வருவாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் என்னைத் தெரியாதவங்க என்னோட மூஞ்சிகூட பாக்காதவங்க இந்தப் படம் மூலமா என்னைப் பார்ப்பாங்க. அவங்க எல்லார்கிட்டயும் விஜய் அண்ணா படம் என்னைக் கொண்டு போய்ச் சேர்க்கும். எனக்கான ஒரு அறிமுகம் கிடைக்கும். பாலிவுட் நடிகர் ஒருத்தர், `நீங்க எவ்வளவு திறமைசாலியா இருந்தாலும் அது இந்த உலகத்துக்குத் தேவையில்லை.

யாருக்கும் அது தெரியப் போறதில்லை. ஆனா, நாம யார்கூட சேர்ந்து வேலை பாக்குறமோ அப்போதான் நமக்கான அங்கீகாரம் இங்கே கிடைக்கும்'னு சொல்லியிருந்தார். அந்த வார்த்தைகள் எனக்குப் பிடிக்கும். அதேமாதிரிதான் நான் விஜய் அண்ணாகூட நடிக்குறப்போதான் என்னோட நடிப்பு வெளியே வரும்னு நினைக்குறேன். `நீங்க ஹீரோவா நடிச்சிட்டு வர்றீங்க. உங்களுக்கான அங்கீகாரத்தை உருவாக்கிட்டு வர்றீங்க. என்னோட படத்துல முக்கியமான ரோல் உங்களைத் தேடிவரும். அப்போ நீங்க அதுல நடிக்கணும். சும்மா ஏதோ படத்துல இருக்கோம்னு எதாவது ரோல் வந்தா அதை நீங்க பண்ணக்கூடாது'னு விஜய் அண்ணா என்கிட்ட சொல்லியிருக்கார். இந்தப் படம் அப்படிப்பட்ட படமா இருக்கும்னு நம்புறேன்'' என்கிறார் சாந்தனு பாக்யராஜ்.

அடுத்த கட்டுரைக்கு