Published:Updated:

"`மங்காத்தா 2-க்கு வெங்கட் பிரபுவின் பிளான்; `யூத் பாய்ஸ்' வாட்ஸ்அப் குரூப்!"- வைபவ் சீக்ரெட்ஸ்

'மங்காத்தா'வில்...

"'மங்காத்தா 2'ல நான் இருந்தா எனக்காக கதையையே மாத்த வேண்டியிருக்கும். ஏன்னா, முதல் பாகத்துல நான் இறந்துட்டதால, ரெண்டாவது பார்ட்ல நான் இல்ல. ஆனா..." - வைபவ்

Published:Updated:

"`மங்காத்தா 2-க்கு வெங்கட் பிரபுவின் பிளான்; `யூத் பாய்ஸ்' வாட்ஸ்அப் குரூப்!"- வைபவ் சீக்ரெட்ஸ்

"'மங்காத்தா 2'ல நான் இருந்தா எனக்காக கதையையே மாத்த வேண்டியிருக்கும். ஏன்னா, முதல் பாகத்துல நான் இறந்துட்டதால, ரெண்டாவது பார்ட்ல நான் இல்ல. ஆனா..." - வைபவ்

'மங்காத்தா'வில்...
தமிழ் சினிமாவில் 15வது ஆண்டைக் கொண்டாடுகிறார் வைபவ். `இதயம் முரளி'யாக மனதில் நிற்பவர். வெங்கட்பிரபுவின் ஆஸ்தான டீமில் ஒருவர் என்ற முத்திரையைத் தாண்டி, காமெடி ஹீரோ என்ற பெயரையும் சம்பாதித்திருப்பவர். `காட்டேரி'க்குப் பிறகு தமிழில் மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்ட திருப்தியில் புன்னகைக்கும் வைபவ்விடம் பேசினேன்.

நீங்க வெங்கட் பிரபு, யுவன், பிரேம்ஜி எல்லாருமே ஒரே ஸ்கூல்மேட்ஸாமே.. அப்படியா?

"ஸ்கூல்மேட்ஸ் இல்ல. கிளாஸ்மேட். நான், சினிமாவுக்கு வந்த பிறகுதான் வெங்கட் பிரபு டீம்ல சேர்திருப்பேன்னு பலரும் நினைச்சிருப்பாங்க. ஆனா, அப்படியில்ல. நாங்க சினிமாவுக்கு வர்றதுக்கு முன்பிருந்தே நெருங்கிய நண்பர்கள். யுவன் ஷங்கர் ராஜா என் வீட்டுக்குப் பக்கத்துத் தெரு மட்டுமல்ல, ஸ்கூல்ல என் கிளாஸ் மேட்டும்கூட! பிரேம்ஜியும் என் கிளாஸ் மேட்தான். இதுல, வெங்கட்பிரபு மட்டும் ஒரே ஸ்கூல்னாலும்... அவர் எனக்கு ஒரு வருஷம் சீனியர். நாங்கெல்லாம் சினிமாவுக்கு வருவோம்னு யாருமே நினைச்சதில்ல. இன்னொரு விஷயம், எனக்கு, பிரேம்ஜிக்கெல்லாம் படிப்பு சரியா வரலைன்னு வீட்டுல லண்டனுக்கு அனுப்பி வச்சிட்டாங்க. ஏன்னா, அங்கே எங்களுக்கு முன்னாடி வெங்கட் பிரபு இருந்தார். லண்டன்ல அவர் பார்ட் டைம் வேலைக்கெல்லாம் போய் என்னையும் பிரேம்ஜியையும் 'வானத்தைப் போல' விஜயகாந்த் மாதிரி பார்த்துப்பார். இந்த நட்புப் பட்டியல்ல சமுத்திரக்கனி அண்ணனும் உண்டு. அவர் அப்ப 'அண்ணி'ன்னு டி.வி.சீரியல் இயக்கிட்டிருந்தார்.

வெங்கட்பிரபுவுடன் வைபவ்
வெங்கட்பிரபுவுடன் வைபவ்

எங்க கையில வெறும் ஐந்நூறு ரூபாய் இருக்கும்போதே சந்தோஷமா இருந்திருக்கோம். ஒரு சம்பவம் நல்லா ஞாபகம் இருக்கு. நான், கனியண்ணன், வெங்கட் பிரபு மூணு பேருமே திருப்பதி போலாம்னு கார்ல கிளம்பினோம். கனியண்ணன்தான் காரை ஓட்டினார். அப்ப அவர் கதை சொல்றேன்னு வண்டியை ஓட்டிக்கிட்டே, பின் சீட்டுல இருக்கற எங்களைப் பார்த்துப் பேசிட்டே வந்தார். அதுல வண்டி திசை மாறி சித்தூர் பக்கம் போயிடுச்சு. இடையே கார்ல டீசல் காலியாகிடுச்சு. மூணு பேருமே வண்டியைத் தள்ளிக்கிட்டே போய்ச் சேர்ந்தோம். கனியண்ணன், இப்போ தெலுங்கில வில்லனா கலக்குறார். எப்போ பார்த்தாலும்கூட பழைய நட்போடு பழகுவார். வாட்ஸ் அப்பில் 'யூத் பாய்ஸ்'ன்னு ஒரு வாட்ஸ்அப் குரூப் வச்சிருக்கோம். அதுல நான், பிரேம்ஜி, ஜெய் மூணு பேரும் கலாய்ச்சிட்டிருப்போம். இன்னொரு குருப்ல வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா எல்லாரும் இருக்காங்க."

'மங்காத்தா 2' எப்போ வரும்? அதுல நீங்க இருக்கீங்களா..?

"நான் இருக்க மாட்டேன்னு வெங்கட் சொல்லிட்டார். 'மங்காத்தா2'ல நான் இருந்தா எனக்காக கதையையே மாத்த வேண்டியிருக்கும். ஏன்னா, முதல் பாகத்துல நான் இறந்துட்டதால, ரெண்டாவது பார்ட்ல நான் இல்ல. ஆனா, வெங்கட் பிரபு எதாவது சீக்ரெட்டா பண்ணுவார்னு நினைக்கறேன். அப்படியே ரெண்டாவது பார்ட் இருந்தாலும் அதுல நான் இருக்கறதுக்கான சீன்கள் பத்தி வெங்கட் பிரபுகிட்ட சொல்லியிருக்கேன். அவரும் சிரிச்சுக்கிட்டே கேட்டுட்டு, 'அஜித் சார்கிட்ட இதைச் சொல்லிடுறேன்'னு சொல்லிட்டார்."

உங்க அண்ணன் சுனில், இப்ப பெரிய நடிகராயிட்டார்...

சுனில்
சுனில்

"எதிர்பாராத விதமா நடிகராகிட்டார். இன்னும் ஹீரோவா ஆகலைன்னாலும்... சொல்லமுடியாது. ஹீரோ ஆனாலும் ஆவார். ஷூட்டிங்குக் கூப்பிட தினமும் அவரைத் தேடி இனோவா வந்து நிக்குது. ஆக்‌ஷுவலா, என்னைவிட அவன்தான் வெள்ளையா, கலரா இருப்பான். 'சீதக்காதி'யில அவனை நடிக்கக் கேட்டு எனக்குத்தான் பாலாஜி தரணீதரன் சார் போன் பண்ணினார். 'உங்க அண்ணனை நடிக்கக் கேட்டால் வரமாட்டேங்குறார்'ன்னு சொன்னார். சுனில்கிட்ட கேட்டால், 'நடிப்பு எனக்கு சம்பந்தமில்லாதது'ன்னு என்கிட்ட சொல்லிட்டு, ஷூட்டிங்கில செமையா நடிச்சிட்டு வந்துட்டார். 'டாக்டர்'ல கலக்கினார். இப்ப தனியா ஒரு டீம் அமைச்சிட்டிருக்கார். நிறைய படங்கள்ல நடிக்கறார். இப்ப சூப்பர் ஸ்டாரின் 'ஜெயிலர்' படத்திலும் இருக்கார்."

வைபவ்
வைபவ்

சிம்புவோட குட்புக்லேயும் நீங்க இருக்கீங்க போல..?

"ஆமாங்க. என்னோட எந்தப் படம் வெளியானாலும் முதல் போன்கால் அவர்கிட்ட இருந்துதான் வரும். 'யோவ் பயங்கரமா நடிச்சிருக்கய்யா... சான்ஸே இல்ல'ன்னு பாராட்டுவார். படம் எங்கே பார்த்தீங்கன்னு கேட்டால் 'அதெல்லாம் பார்ப்பேன். ஆனா, எங்கே போய் பார்ப்பேன்னு சொல்ல மாட்டேன். ஆனா, எல்லார் படமும் பார்க்க மாட்டேன். உன் படம் மட்டும்தான் பார்ப்பேன். ஏன்னா, நான் உன்னோட ரசிகன்னு உனக்குத் தெரியாதா?'ன்னு சொல்வார். அவர் என்னைக் கலாய்க்கிறார்னு நினைச்சிட்டேன். சமீபத்துல 'மாநாடு'க்கான நிகழ்ச்சி மும்பையில நடந்தபோது அங்கே சிம்பு சாரைப் பார்த்தேன். 'நான் வைபவ் ஃபேன்...'ன்னு அங்கேயும் சொன்னார். அவர்கிட்ட இதை அப்படியே மீடியாகிட்ட சொல்லுங்கன்னு சொன்னேன். உடனே அவர், 'உன்னைக் கலாய்க்கறேன்னு நினைச்சிட்டியா? வாய்ப்பு வரும்போது மீடியாகிட்ட நான் உன் ரசிகர்ங்கறதைச் சொல்றேன்'ன்னார். நீங்க அவரைப் பேட்டி எடுத்தால், இதை அவர்கிட்டேயே கேட்டுடுங்க!"

அது சரி, உங்க ஃப்ரெண்ட் பிரேம்ஜிக்கு எப்போ கல்யாணம் பண்ணிவைக்கப் போறீங்க?

பிரேம்ஜி அமரன்
பிரேம்ஜி அமரன்

"அவனுக்கு ஐடியாவே இல்லையே! எப்போ அதைக் கேட்டாலும் வேணாம்ங்கறான். 'நீங்கெல்லாம் எப்படி அவஸ்தைப்படுறீங்கன்னு தெரியும். அதனால நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். தெளிவா இருக்கேன்'ன்னு சொல்றான். ஒருத்தரை வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணி வைக்கற எண்ணம் எனக்கு இல்ல."