லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

சிவாஜி கொடுத்த அடி, கணவரின் இழப்பு, இன்றுவரை நடிப்பு!

ஜெயசுதா
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயசுதா

ஜெயசுதாவின் எவர்கிரீன் நினைவுகள்

12 வயதில் நடிக்கத் தொடங்கிய ஜெயசுதாவுக்கு, திரைத்துறையில் தற்போது பொன் விழா ஆண்டு. ‘இதி கதா காது’, ‘பிரேமாபிஷேகம்’, ‘யவடு’ உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தெலுங்குப் படங்களில் நடித்து, டோலிவுட்டில் ‘சஹஜ நடி’யாக (சகஜமான நடிகை) இன்றளவும் கொண்டாடப்படும் ஜெய சுதா, தமிழ் நாட்டுப் பெண். ‘அரங்கேற்றம்’, ‘பாண்டியன்’, ‘தவசி’, ‘தோழா’, ‘செக்க சிவந்த வானம்’ உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

50 ஆண்டுக்கால திரைப் பயணம் குறித்த சுவாரஸ்யமான நினைவுகளைப் பகிரும் ஜெயசுதாவின் பேச்சில் தெலுங்குக் கலப்பில்லாத சுத்த தமிழ்.

சிவாஜி கொடுத்த அடி, கணவரின் இழப்பு, இன்றுவரை நடிப்பு!

“சென்னையில சேப்பாக்கம் ஸ்டேடியம் பக்கத்துலதான் எங்க வீடு இருந்துச்சு. அதனாலயோ என்னவோ, படிப்பைக் காட்டிலும் ஸ்போர்ட்ஸ்லதான் எனக்கு அதிக ஆர்வம். என்னோட அத்தை விஜய நிர்மலா தெலுங்கு சினிமாவுல நடிகை யாவும் இயக்குநராவும் கலக்கினவங்க. என் சின்ன வயசுல, அத்தை இயக்கின படங்களின் ஷூட்டிங் பார்க்கப் போவேன். அந்தத் தாக்கத்துல, சினிமால நடிக்கும் ஆசை அதிகமாச்சு. ஏழாவது படிச்சப்போ, அத்தை இயக்கின ‘பண்டன்டி காபுரம்’ படத்துல அறிமுக மானேன். நடிகை பானுமதி அம்மா இயக்கின ஒரு தெலுங்குப் படத்துல ஒருநாள் மட்டும் நடிச்சேன். சில காரணத்துக்காக அந்தப் படத்துல இருந்து என்னை நீக்கிட்டாங்க. அந்த வருத்தத்துல, சினிமாவுல புகழ்பெறணும்னு தீர்க்கமா முடிவெடுத்தேன்.

‘பெத்த மனம் பித்து’ படம் மூலமா தமிழ் சினிமாவுல ஓரளவுக்கு எனக்கு அங்கீகாரம் கிடைச்சது. பின்னர், ‘அபூர்வ ராகங்கள்’, ‘நினைத்தாலே இனிக்கும்’ உட்பட கே.பால சந்தர் சார் இயக்கத்துல நடிச்ச சில படங்கள்தான், என்னோட சினிமா பயணத் துக்கு அஸ்திவாரமா அமைஞ்சது. அடுத் தடுத்து பல தமிழ்ப் படங்கள்ல நடிச்சாலும், அவை எனக்குப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுக்கல. இந்த நிலையில, ‘ஜோதி’ங்கிற தெலுங்குப் படத்துல அழுத்தமான ரோல்ல நடிச்சேன். ஆனந்தக் கண்ணீருடன் என் னோட வெற்றிப் பயணத்தைத் தொடங்கி னேன்”

- திரையுலக நினைவுகளை அசைபோடும் ஜெயசுதாவுக்கு, ‘ஜோதி’ படத்துக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் அமைந்ததெல்லாம் அசுரத்தனமான வளர்ச்சி.

“ ‘அவர்கள்’ படத்தின் தெலுங்கு ரீமேக்ல, என்மீது பெரிய நம்பிக்கை வெச்சு சுஜாதா ரோல்ல என்னை நடிக்க வெச்சார் கே.பாலசந்தர் சார். அதன் பிறகு, என்னோட நடிப்புத் திறமையை நம்பி, இயக்குநர்கள் தாசரி நாராயண ராவ் சாரும், ராகவேந்திர ராவ் சாரும் எனக்காகவே பவர்ஃபுல்லான படைப்புகளை உருவாக்கினாங்க. தெலுங்கு சினிமாவுல அந்தக் காலத்துல உச்ச நடிகர்களா இருந்த என்.டி. ராம ராவ், நாகேஸ்வர ராவ், கிருஷ்ணம் ராஜு, சோபன் பாபு, சிரஞ்சீவி, மோகன் பாபு உள்ளிட்ட பலருடனும் நிறைய படங்கள்ல ஜோடியா நடிச்சேன். அந்த நடிகர்கள் என்னோட கால்ஷீட்டுக் காகக் காத்திருக்கும் அள வுக்கு, இரவு பகலா ஓய்வில்லாம நடிச்சேன். ஏராளமான விருதுகள், நிறை வான வருமானம், புகழ் வெளிச்சம்னு 25 வயசுக் குள்ளயே அளவுக்கு அதிக மான வளர்ச்சியைப் பார்த் துட்டேன்.

ஒருகட்டத்துல, தெலுங்கு சினிமாவுல மட்டுமே அதிகமா கவனம் செலுத்த லாம்னு முடிவெடுத்து, மற்ற மொழிப் பட வாய்ப்புகளைத் தவிர்த்தேன். சினிமா பயணத்துல நான் எடுத்த தவறான முடிவு அதுதான்னு அடிக்கடி தோணும். அந்த முடிவால, சிவாஜி சார்கூட பல தமிழ்ப் பட வாய்ப்பு களையும், ‘நல்லவனுக்கு நல்லவன்’ல ரஜினியுடனும், ‘சலங்கை ஒலி’யில கமலு டனும் ஜோடியா நடிக்க வந்த வாய்ப்புகளை மிஸ் பண்ணிட்டேன். ‘வாழ்க்கை’ படத்துல அம்பிகா ரோல்ல என்னை நடிக்க வைக்க சிவாஜி சார் ரொம்பவே மெனக்கெட்டார். அது நடக்காம போனதைச் சுட்டிக்காட்டி, ஒருமுறை என் முதுகுலயே அவர் பலமா அடிச்சார். ரஜினிக்கு மகளா, ஜோடியா, அக்காவா நடிச்ச ஒரே நடிகை நானாகத்தான் இருப்பேன். ‘சூர்யவம்சம்’ படத்தின் இந்தி ரீமேக்ல, தமிழ்ல ராதிகா நடிச்ச ரோல்ல நான் நடிச்சேன். பல இந்திப் பட வாய்ப்புகளை மிஸ் பண்ணி யிருந்தாலும், அந்தப் படத்துல அமிதாப் பச்சன் சாருக்கு ஜோடியா நடிச்சது பெருமிதம். ஆந்திராவுல எல்லாத் தரப்பு மக்களுக்கும் என்னைத் தெரியும். ஆனா, பல தமிழ்ப் படங்கள்ல நடிச்சிருந்தாலும் கூட, என்னோட தாய் வீடான தமிழ்நாட்டுல பெரும்பாலான மக்களுக்கு என்னைத் தெரியாது. அந்த வருத்தம் எனக்கு உண்டு”

- ஜெயசுதாவின் பேச்சில், தமிழ்ப் படங்களில் அதிகம் நடிக்காத ஏக்கம் எதிரொலிக்கிறது. 300-க்கும் அதிகமான படங்கள், 10 முறை ஆந்திர அரசின் ‘நந்தி விருது’களை வென்றது, இடைவிடாத சினிமா பயணம் எனக் கலக்குபவருக்கு, கணவர் நிதின் கபூரின் இழப்பு மீளா சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவாஜி கொடுத்த அடி, கணவரின் இழப்பு, இன்றுவரை நடிப்பு!

“நிதின் என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட். கல்யாணத்துக்குப் பிறகும் என் விருப்பப்படி தொடர்ந்து நடிக்க ஊக்கம் கொடுத்தார். வசதி வாய்ப்புகள் அதிகம் இருந்தும், அதைச் சரியான முறையில முதலீடு செய்யத் தவறிட்டோம். தெலுங்கிலும் இந்தியிலும் சில படங்களைத் தயாரிச்சோம். அதுல ஏகப்பட்ட கடன் ஆகிடுச்சு. அதையெல்லாம் சரி செய்ய சொத்துகளை வித்தோம். அந்த இழப்புகளும், அதனால உண்டான மன அழுத்தமும் அவரை ரொம்பவே பாதிச்சது. எல்லாம் கைமீறிப் போய், தற்கொலைங்கிற தவறான முடிவைத் தேடிக்கிட்டார். முதல் இன்னிங்ஸ்ல பெரிய அளவுல வளர்ச்சியையும் சந்தோஷத்தையும் எனக்குக் கொடுத்த கடவுள், ரெண்டாவது இன்னிங்ஸ்ல சோதனைகளைக் கொடுத்து வாழ்க்கையோட ஏற்ற இறக்கங்களை உணர்த்திட்டார். இப்போ மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியாச்சு. ஆனா, நிதினோட இழப்புல இருந்து மட்டும் முழுசா மீள முடியல.

‘வலிமை’ படத்துல அஜித்துக்கு அம்மாவா ஒருநாள் ஷூட்டிங் போனேன். கொரோனா பரவல் அதிகரிக்கவே, அந்தப் படத்துல இருந்து விலகிட்டேன். தெலுங்கு முன்னணி நடிகர்களுக்கு அம்மா ரோல்கள்ல நடிக்கிறேன். இத்தனை வருஷங்கள் ஓடியும்கூட, இப்பவும் சினிமாவுல எனக்கான முக்கியத் துவம் இருக்கிறது பெரிய கொடுப் பினை. சினிமாவைத் தவிர எனக்கு வேறெதுவும் தெரியாது. அந்தத் தொழில்தான் எனக்கான பிடிப்பு. தொடர்ந்து நடிப்பேன்”

- யதார்த்தமான பேச்சால், உரையாடலின் நிறைவில் மனதில் குடிகொள்கிறார் சஹஜ நடி!