Published:Updated:

"மிஷின் மாதிரி நடிக்கிறோம்னு தோன ஆரம்பிச்சிடுச்சு!" - மனம் திறக்கும் `வாரணம் ஆயிரம்' தீபா நரேந்திரா

தீபா நரேந்திரா

`வாரணம் ஆயிரம்' படத்தில் சூர்யாவின் தங்கையாக நடித்தவர் என்று சொன்னால் சட்டென இவர் முகம் நினைவில் வந்து போகும். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா துறையில் இருந்து ஒதுங்கியிருக்கிறார்!

"மிஷின் மாதிரி நடிக்கிறோம்னு தோன ஆரம்பிச்சிடுச்சு!" - மனம் திறக்கும் `வாரணம் ஆயிரம்' தீபா நரேந்திரா

`வாரணம் ஆயிரம்' படத்தில் சூர்யாவின் தங்கையாக நடித்தவர் என்று சொன்னால் சட்டென இவர் முகம் நினைவில் வந்து போகும். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா துறையில் இருந்து ஒதுங்கியிருக்கிறார்!

Published:Updated:
தீபா நரேந்திரா

பரதநாட்டியக் கலைஞர், நடிகர் என பன்முகம் கொண்டவர் தீபா நரேந்திரா. 'வாரணம் ஆயிரம்' படத்தில் சூர்யாவின் தங்கையாக நடித்தவர் என்று சொன்னால் சட்டென இவர் முகம் நினைவில் வந்துபோகும். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா துறையில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். பல மாணவர்களுக்குத் தன் கணவருடன் சேர்ந்து பரதம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவரை சந்திக்கச் சென்றோம்.

தீபா நரேந்திரா
தீபா நரேந்திரா

நான் பிறந்து, வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். எல்கேஜி படிக்கும்போதே பரதநாட்டியமும் கத்துக்க ஆரம்பிச்சிட்டேன். ஸ்கூல் முடிச்சிட்டு டான்ஸ் கத்துக்கிறதுங்கிறது என் வழக்கமாகிடுச்சு. டான்ஸாக இருக்கட்டும், மியூசிக் ஆக இருக்கட்டும் ஆர்ட் பொறுத்தவரை அவையெல்லாம் நம்முடைய அகாடமிக்கு உதவியாகத்தான் இருக்குமே தவிர அதனால நம்மளுடைய படிப்பெல்லாம் கெட்டுப்போகாது. டைம் மேனேஜ்மென்ட் மட்டும் அதுக்கு ரொம்பவே முக்கியம். படிப்பில் ஆர்வம் இல்லாதவங்கதான் இந்த மாதிரியான ஆர்ட் எல்லாம் கத்துப்பாங்க என்கிற தவறான புரிதலும் இங்க இருக்கு என்றவரிடம் மீடியா என்ட்ரி குறித்துக் கேட்கவும் சிரிக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுவரை நானாக எந்த வாய்ப்பும் தேடி போனதில்லை. என்னை நம்பி நீங்க இது பண்ணா நல்லா இருக்கும்னு தேடி வர்ற வாய்ப்புகளை மட்டும்தான் இதுவரை தேர்ந்தெடுத்திருக்கேன். டான்ஸ் மூலமாகத்தான் ஆங்கரிங் வாய்ப்பு கிடைச்சது. அதைப் பார்த்துட்டு கவிதாலயா கிருஷ்ணன் இந்தக் கேரக்டருக்கு நீங்க சரியா இருப்பீங்கன்னு சொல்லி ஆடிஷனுக்கு கூப்பிட்டார். டான்ஸ், நடிப்பு எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. அதனால, ஆடிஷனில் இயல்பாக அவங்க சொன்னதை உள்வாங்கிட்டு நடிச்சேன். உடனே நாளையில் இருந்து ஷூட்டிங் வந்துடுங்கன்னு சொல்லிட்டாங்க. அந்த சீரியலில் நடிச்சிட்டு இருந்த ஹீரோயினுக்கு பதிலாக நான் என்ட்ரியானேன்.

தீபா நரேந்திரா
தீபா நரேந்திரா

அப்போதெல்லாம் லைவ் டப்பிங் தான் இருக்கும். அவங்க பேசுற டெக்னிக்கல் வார்த்தைகள் என்னன்னுகூட எனக்குத் தெரியாது. ஸ்கிரிப்ட் எதுவும் கொடுக்கலை. இயல்பா என்ன கதைக்களம்னு மட்டும் சொல்லிக் கொடுத்தாங்க. அந்த சீரியலில் கொஞ்ச எபிசோட்களுக்கு எபிசோட் இயக்குநர் சமுத்திரகனி தான் டைரக்ட் பண்ணினார். அவர் நிறைய விஷயங்கள் எனக்கு சொல்லிக் கொடுத்தார். எல்லாரும் எல்கேஜியில் இருந்து ஆரம்பிப்பாங்க.. எனக்கு நேரடியா 12-ம் வகுப்பு படிக்கிற மாதிரியான வாய்ப்பு அமைஞ்சது. திருமணத்திற்குப் பிறகுதான் நான் நடிக்கவே ஆரம்பிச்சேன்.

என் கணவர் நரேந்திரா. ரொம்ப வருஷம் அவர் கூட சேர்ந்து ஒர்க் பண்ணினேன். அவர் பரதநாட்டியத்தில் என்னைவிட சூப்பர் சீனியர். ரெண்டு பேருக்கும் ஒருத்தரையொருத்தர் பிடிச்சிருந்தது. வீட்ல சொல்லி பெரியவங்க சம்மதத்துடன் திருமணம் பண்ணிக்கிட்டோம். என்னுடைய குரு, ஃப்ரெண்ட், நலம் விரும்பி எல்லாமே அவர் தான்! டான்ஸ் பொறுத்தவரை இன்றைக்கும் அவர் முன்னாடி நிற்கும்போது நான் ஸ்டூடன்ட் ஆகத்தான் நிற்பேன். அவர் கூட சேர்ந்து ஆடணும்னுலாம் நான் யோசிச்சதேயில்லை. அவர் மேடையில் ஆடுறதை பார்க்கவே எனக்கு ரொம்ப பிடிக்கும். எதார்த்தமா ஒருநாள் 'கோலங்கள்' சீரியலுக்காக அவரை கேட்டாங்க. அவர் ஓகே சொல்லி நடிச்சிட்டு இருந்தார். அவருடன் நானும் செட்டுக்கு போயிருந்தேன். அங்கே என்னைப் பார்த்துட்டு உங்க மனைவி நடிப்பாங்களான்னு என் கணவர்கிட்ட திருச்செல்வம் சார் கேட்டிருக்கார். அவர் அவங்ககிட்டயே நேரடியா கேளுங்கன்னு சொல்லவும் என்கிட்ட கேட்டார். நானும் ஓகே சொல்லி தேவயாணி மேடத்துடைய தம்பி மனைவியாக நடிச்சேன். 'இது ஒரு காதல் கதை' நடிக்கும்போதே அந்தத் தொடரிலும் நடிச்சேன். கிட்டத்தட்ட 6 வருடங்கள் அந்தத் தொடர் போச்சு. டீம் எல்லாரும் ஃபேமிலி மாதிரி ஆகிட்டோம். அடுத்து 'மேகலா' உட்பட பல சீரியல்களில் நடிச்சேன் என்றவரிடம் 'வாரணம் ஆயிரம்' பட அனுபவம் குறித்துக் கேட்கவும் சிரிக்கிறார்.

தீபா நரேந்திரா
தீபா நரேந்திரா

சமீபத்தில் மைலாப்பூரில் மாஸ்க் மாட்டிட்டு ஷாப்பிங் பண்ணிட்டு இருந்தேன். என் கண்ணை பார்த்துட்டு நீங்க தானே சூர்யா தங்கச்சின்னு ஒருத்தங்க கேட்டாங்க. இத்தனை வருஷம் என்னை ஞாபகம் வச்சியிருக்கீங்களான்னு எனக்கே ஆச்சரியமா இருந்தது. இதற்கான எல்லா கிரிட்டும் இயக்குநர் கெளதம் மேனன் சாருக்கு தான் சொல்லணும். அந்தப் படமும் எதார்த்தமாகத்தான் அமைஞ்சது. ஆடிஷன் எதுவும் இல்லாம 'மேகலா' சீரியல் பார்த்துட்டு என்னை செலக்ட் பண்ணினாங்க. நான், சூர்யா சார், சிம்ரன் மேம் எல்லாரும் சாதாரணமா வீட்ல உட்கார்ந்து இருக்கிற மாதிரி உட்கார்ந்திருந்தோம். நீங்க சீரியல் பண்றவங்க. வெளி ஆள் அப்படிங்கிற உணர்வு அங்க இல்லவேயில்லை. இவ்ளோ பெரிய விஷயம் பண்றோம் என்பதே தெரியாம பண்ணிட்டேன். சூர்யா சார் இரட்டை வேடத்தில் நடிச்சதனால அவர் மேக்கப் மாத்திட்டு வர கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆகும். அதுவரை எல்லாரும் வெயிட் பண்ணி ஷூட் பண்ணுவோம். அதுவரை அப்படி ரெட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறவங்க கூட சேர்ந்து நான் நடிச்சதில்லைங்கிறதனால அதெல்லாம் நல்ல அனுபவமா இருந்தது. கடைசியா இறுதிச் சடங்கு செய்யுற சீன் எடுக்கிறதுக்காக இராமேஸ்வரம் போனோம். மதுரையில் இருந்து ரோடு வழி காரில் நான், சூர்யா சார், சிம்ரன் மேம், திவ்யா மேம் மட்டும் போனோம். சினிமானாலே பெரிய ஆர்ட்டிஸ்ட் கூட அத்தனை பேர் இருப்பாங்க அப்படின்னுலாம் சொல்லுவாங்க. ஆனா, அப்படி எதுவுமே இல்லாம ஃபேமிலியில் உள்ள நாலு பேர் கிளம்பி போனா எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது. ரொம்ப புரொபஷனலா எங்க ஷூட் இருந்துச்சு. சூர்யா சாரை நேரடியாகப் பார்த்து அவர்கிட்ட பல விஷயங்கள் கத்துக்க வாய்ப்பு கிடைச்சது. பலர் என்னை அஞ்சல, அஞ்சலன்னு தான் கூப்பிடுவாங்க. ஏங்க நான் அஞ்சல இல்லைங்கன்னு சொல்லுவேன்.

அந்தப் படம் முடிஞ்சதும் தொடர்ந்து தங்கச்சி கேரக்டருக்காகவே கூப்டாங்க. அதனால பல வாய்ப்புகளை வேண்டாம்னு தவிர்த்தேன். சீரியல் பொறுத்தவரை தொடர்ந்து அழுகிற காட்சிகளே பண்ணிட்டு இருந்தேன். மிஷின் மாதிரி நடிக்கிறோம்னு ஃபீல் வர ஆரம்பிச்சிடுச்சு. நடிப்பு எனக்கான துறை கிடையாது. உடம்பு முடியலைன்னாலும் ஷூட்டிற்கு வந்தே ஆகணும்னு சொல்லுவாங்க. எனக்கு நிம்மதி முக்கியம். அதையும் தாண்டி மரியாதை ரொம்பவே முக்கியம். நைட்ல ஃபோன் பண்ணி நாளைக்கு ஷூட் இருக்கு வந்துடுங்கன்னு சொல்லுவாங்க. நாளைக்கு நான் என் வீட்டில் இருப்பேனா, இருக்க மாட்டேனாங்கிறதையே நான் முடிவெடுக்க முடியாத நிலை எல்லாம் வந்துச்சு. எப்பவும் பரபரப்பா இயங்குறதுங்கிறது எனக்கு செட் ஆகாது. மேனேஜர்ஸ் அவங்க பேசுற டோனே வேற மாதிரி இருக்கும். 12,14 மணி நேரம் ஒர்க் பண்ணிட்டு அதுல கிடைக்கிற பணம் நகைக்கும், டிரெஸ்ஸிற்குமே சரியா இருக்கும். சரி நாம ஏதாவது கத்துக்கிறோமா அப்படின்னா அதுவும் இல்லை. பிறகு எதுக்கு இதெல்லாம் பண்ணனும்னு தோண ஆரம்பிச்சது. அதுக்கு ஏற்ற மாதிரி என்னால என்னை மாத்திக்க முடியாது. எனக்கு அது செட் ஆகாது. அதனாலதான் என் கணவருடன் டிஸ்கஸ் பண்ணி இந்தத் துறையே வேண்டாம்னு அதிலிருந்து ஒதுங்கினேன்.

தீபா நரேந்திரா
தீபா நரேந்திரா

விளம்பரப்படங்கள் எல்லாம் பண்ணியிருக்கேன். அதெல்லாம் ரெண்டு, மூணு நாள் தான் ஷூட் இருக்கும் என்பதால் அதுக்கு ஓகே சொல்லிடுவேன். எங்க விருப்பப்படி இந்த 12 ஆண்டுகள் நிம்மதியா வாழ்ந்துட்டு இருக்கோம். தவிர, நானும் என் கணவரும் டான்ஸ் கிளாஸூம் எடுத்துட்டு இருக்கோம். அதுவே அதிக அளவில் மனநிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொடுக்குது!' எனப் புன்னகைக்கிறார் தீபா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism