கொரோனா லாக்டெளன் நம்முடைய வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றியமைத்தது. பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைனில் இயங்க ஆரம்பித்தன. நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோமில் முறையில் இயங்க ஆரம்பித்தன. சராசரி மனிதர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை பலரும் யூடியூப் சேனல்களில் களத்தில் இயங்கினர். பலர் புதிய பிசினஸ் தொடங்கினர். தெகிடி, அவன் - இவன் படங்களில் நடித்தவரும், `பிக்பாஸ்' பிரபலமுமான ஜனனி ஐயரும் புதிய பிசினஸ் தொடங்கியுள்ளார். ஃபேஷன் இணையதளம் ஒன்றைத் தொடங்கி, ஆடைகளை விற்பனை செய்து வருகிறார். இது குறித்து நடிகை ஜனனியிடம் பேசினோம்.

``ஒரு பிசினஸ் ஆரம்பிக்கணுங்கிறது எனக்கும் எங்க அக்காவுக்கும் ரொம்ப நாள் ஆசை. ரெண்டு பேருக்குமே ஃபேஷன் சார்ந்த விஷயங்கள்ல ஆர்வம் அதிகம். எங்களுக்கு பர்சனலா வாங்கும்போதே நிறைய தேடி அலைஞ்சு, தனித்துவமான ஆடைகளை செலக்ட் பண்ணுவோம்.
என் ஃபிரெண்ட் சர்க்கிளில் எல்லாருக்குமே என்னுடைய டிரெஸ்ஸிங் சென்ஸ் பிடிக்கும். அதனால் டிரெஸ் சார்ந்து ஒரு பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு பிளான் பண்ணோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை டிரெடிஷனல் ஆடைகளுக்குப் பஞ்சமே இருக்காது. ஆனால், ஒரு வெஸ்டர்ன் ஆடை வாங்கணும்னா மனசுக்குப் பிடிச்ச கலெக்ஷன் கிடைக்க நிறைய அலைய வேண்டியிருக்கும். அப்படி எடுக்கும் டிரெஸ்கூட தனித்துவமா இருக்கும்னு சொல்ல முடியாது.

அதனால் வெஸ்டர்ன் ஆடைகள் பக்கம் எங்க கவனத்தைத் திருப்பினோம் `The Hazel Avenue' என்ற பெயரில் பிசினஸ்க்கான இணையதள பக்கம் தொடங்கினோம். அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகள்லேருந்து டிசைனர்கள்கிட்ட தனித்துவமான ஆடைகளைத் தேர்வு செய்து வாங்கி, விற்பனை செய்துட்டு இருக்கோம்.
ஒரே டிசைனில் நிறைய டிரெஸ் வாங்கிக் குவிக்கிறது கிடையாது. ஒவ்வொரு டிரெஸ்ஸுமே யுனிக்கா இருக்கணும்னு முடிவு செய்து, குறைந்த எண்ணிக்கையில்தான் வாங்குறோம். அப்படி வாங்கும் டிரெஸ்களுக்கு நானும் என் அக்கா கிருத்திகாவும் சேர்ந்து மாடலிங் பண்ணி போட்டோ ஷூட் செய்து ஆன்லைனில் அப்லோடு பண்றோம்.

பிசினஸ் ஆரம்பிச்சதும் கொரோனா லாக்டெளன் வந்ததால பிசினஸ் பிக்-அப் ஆக கொஞ்சம் நேரம் எடுத்துச்சு. இப்போ நிறைய ஆர்டர்கள் வருது. அதுல்யா, பிரியா பவானி சங்கர் மாதிரி செலிபிரெட்டி ஃபிரெண்ட்ஸுக்கும் கூட டிரெஸ் கொடுத்திருக்கோம். இப்போ பிசினஸ் நல்லா போயிட்டு இருக்கு" என்று விடைபெறுகிறார் ஜனனி.