Published:Updated:

"பெரியாரிஸ்ட்டுகளிடம் தெளிவில்லை... இயக்கப் பெண்களையே அசிங்கப்படுத்துறாங்க!"- நடிகை கஸ்தூரி

கஸ்தூரி
கஸ்தூரி

"திராவிட அரசியலில் பெண்களுக்கு மரியாதை கொடுக்கணும் என்கிற அடிப்படை கொள்கையே அடிபட்டு போயிருச்சுனு நினைக்கிறேன். நான் பெரியாரை எதிர்க்கலை, பெரியாரிஸ்ட்டுகளைத்தான் எதிர்க்கிறேன்."

கஸ்தூரி பா.ஜ.க-வில் சேரப்போகிறார் எனச் செய்திகள் பரவுவதால் உண்மை என்ன என அவரிடமே விசாரித்தேன். எப்போதும்போல வெளிப்படையாக நிறைய விஷயங்கள் பேசினார் கஸ்தூரி.

"எனக்கு கட்சி அரசியலில் பெருசா நாட்டம் இருந்ததில்லை. அரசியல் விமர்சகரா இருப்பதே பெரிய டாஸ்க். ஏன்னா, ஒரு பெண் அரசியல் விமர்சகரை அவ்ளோ சீக்கிரம் இந்த சமூகம் ஏற்பதில்லை. சினிமா நடிகை அரசியல் விமர்சனம் பண்றது இங்க புதுசு. நம்மை யாரும் ஈஸியா வெல்கம் பண்ணிற மாட்டாங்க. ஆனா, இப்போதான், கஸ்தூரி சரியா பேசுறாங்கனு மரியாதை வந்துட்டு இருக்கு. 'சோ' அவர்களின் வழியில் அரசியல் பார்வையாளராக, விமர்சகராக இருக்கத்தான் விருப்பம். தவிர, கட்சி அரசியலில் சேர்ந்து தேர்தலில் நிற்கணும்னு எந்தவொரு குறிக்கோளும் இல்ல. மக்கள் சேவையைத்தான் நான் அரசியலா நினைக்கிறேன்.

கஸ்தூரி
கஸ்தூரி

'மகளிர் உரிமை'தான் என்னோட குறிக்கோள். ஆனா, இதுக்கே சில பண உதவிகள் தேவைப்படும்னு இப்போதான் தெரிய வருது. என்னோட நலவிரும்பி ஒருத்தர், 'தனியாளா இறங்காதீங்க. ஏதாவதொரு கட்சியோட ஆதரவுடன் செயல்படுங்கனு' சொன்னார். என்னை மாதிரி பொதுவெளியில் இயங்குற பெண்களும் வீட்டுக்குள்ளேயே இயங்கிக்கிட்டு இருக்குற பெண்களும் சந்திக்கிற பிரச்னைகளுக்கான விமோசனம் மற்றும் விடைகளைத் தேடணும்னு நினைக்குறேன். இப்படியிருக்குற சூழலில், நூறு சதவிகிதம் பெண்களை மதிக்குற கட்சியா இருக்கணும்னு நினைக்குறேன். அப்போதானே, என்னால் அந்தக் கட்சியில் சேர முடியும். ஆனா, அந்த மாதிரி பெண்களை மதிக்கிற கட்சி தமிழ்நாட்டுல என்ன இருக்கு?

சோஷியல் மீடியாவில் தன்னை பெரியாரிஸ்ட்டுனு சொல்லிக்கிறவங்க என்னோட சாதி, குடும்பம், தொழில், தனிமனித உரிமையைக் கொச்சைப்படுத்தி பேசிட்டே இருக்காங்க. பெரியாரிஸம் பேசுறவங்கிட்ட எந்தத் தெளிவும் இல்லை. சொல்லப்போனா, எனக்கு தெரிஞ்ச பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் பெரியாரிஸ்ட்டா இருக்காங்க. இயக்கத்தில் இருக்கும் அவங்களையே பெரியாரிஸ்ட்னு சொல்லிக்கிறவங்க அசிங்கமா பேசுறாங்க. இதை என்கிட்ட அந்தத் தொகுப்பாளினியே சொல்லி புலம்பியிருக்காங்க. திராவிட அரசியலில் பெண்களுக்கு மரியாதை கொடுக்கணும் என்கிற அடிப்படை கொள்கையே அடிபட்டு போயிருச்சுனு நினைக்கிறேன். நான் பெரியாரை எதிர்க்கல, பெரியாரிஸ்ட்டுகளைத்தான் எதிர்க்கிறேன்.

கஸ்தூரி
கஸ்தூரி

இங்க இப்படின்னா ஒரு தேசிய கட்சியை சேர்ந்தவங்க, வயதான பெண்மணி தங்கியிருக்குற வீட்டுக்கு வெளியே சிறுநீர் கழிக்குறவங்களா இருக்காங்க. அவங்களுக்கு அந்தக் கட்சில பதவி உயர்வும் கொடுக்குறாங்க. இதில், நான் எந்தப் பக்கம் போக முடியும்? சரி, அடுத்ததா இருக்குற வளர்ந்து வர கட்சிகளை எடுத்துக்கிட்டா, வளர்ந்துட்டு வர கட்சியில் சேர்றதுனால என்னைப் போன்ற அரசியல் கத்துக்குட்டிகளுக்கும் லாபம் இல்லை. அப்படிப்பட்ட கட்சிகளுக்கும் லாபம் இல்லை.

என் மனசாட்சி, 'அரசியலுக்கு நீ சுத்தமா லாயக்கு இல்லனு' சொல்லுது. ஏன்னா, இன்னைக்கு இருக்குற தமிழக அரசியல்ல யார் எது பேசுனாலும் ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுடணும். காரி துப்புனாகூட தொடைச்சிக்கணும். பெர்சனல் அட்டாக் பண்ணாலும் தாங்கணும். எதையும் தாங்கும் இதயம் இருக்கணும். இதுக்கு அப்புறம் கொள்கை, நேர்மையை சமயத்துக்கு ஏத்த மாதிரி மாத்திக்கணும். ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாற எந்தவொரு தயக்கமும் இருக்கக்கூடாது. இதில், எந்தக் குணமும் என்கிட்ட இல்ல. அதனால, அரசியலுக்கு நான் சரிப்பட மாட்டேன். இருந்தும், இயக்கம் ஆரம்பிக்கணும், பெண்களுக்காகப் போராடணும்னு நினைக்குறேன். நான் பெற்ற வலியை எந்தப் பெண்களும் படக்கூடாதுனு நினைக்குறேன். அடுத்த தலைமுறை பெண்கள் நல்லாயிருக்கணும்னு வெறியோட, ஒரு நெருப்போட இருக்கேன். அரசியலில் சேருவேனா, இல்லையான்னு வருஷ கணக்கு, மாச கணக்கு எல்லாம் போடாம சரியான பதில் சொல்லிடுவேன்.

மத்தபடி பிஜேபில சேரப் போறேன்னு சொல்றது சிலரின் யூகம். நான் பிறந்த சாதியை வெச்சு இப்படி பேசிட்டு இருக்காங்க. கஸ்தூரி இந்த சாதியைச் சேர்ந்தவங்க, அதனால, இந்த சாதி இருக்குற கட்சியில் கஸ்தூரி சேருவாங்கனு சிலர் முடிவு பண்ணிட்டாங்க. பிறப்பால் என்னோட இரண்டு சமூகங்களும் பிஜேபில இருக்குறதுனால இந்த யூகம் பரவலா பேசப்படுதுன்னு நினைக்குறேன். ஆனால், இந்த யூகத்துல உண்மையில்லை.

திருமாவை பெருசா மதிக்குறவ நான். ஆனா, அவருடைய எல்லா பேச்சுகளும் ஏற்புடையதா இல்லை. குறிப்பா, அவர் நடிகைகள் பற்றி பேசுனது எல்லாம் எனக்கு சுத்தமாப் பிடிக்கல. பேசியிருக்க வேண்டாம் அப்படிங்கறது என்னோட தாழ்மையான கருத்து. அதே மாதிரி இந்தியாவைப் பொருத்தவரைக்கும் பெண்களைத் தெய்வமா வணங்கும் மதங்கள் இங்கே உண்டு. அதில் இருக்கற பெண்களை கொச்சைப்படுத்தி பேசுனது தெய்வ நம்பிக்கை இருக்கக்கூடிய எனக்கு ஏற்புடையதா இல்ல. திருமாவை தனிப்பட்ட முறையில மதிக்கிறேன். ஆனா, அவருடைய பொது வெளிப்பாட்டை எதிர்க்கத்தான் செய்வேன்" என்ற கஸ்தூரியிடம், "சினிமா பிரபலங்கள் பலரும் தொடர்ந்து ஏன் பா.ஜ.க-வில் சேர்கிறார்கள்?" எனக் கேட்டேன்.

பிஜேபி
பிஜேபி

"சினிமா பிரபலங்கள் பிஜேபியில சேர்வதற்கு ஒரே காரணம்தான். மற்ற எல்லா கட்சியும் 'நீ கூத்தாடி'னு முத்திரை குத்திறும். கொச்சையா பேசிடுவாங்க. ஆனா, பிஜேபி மட்டும்தான் சினிமா பிரபலங்களை வெல்கம் பண்றாங்க. அதனாலதான் குஷ்பு உள்பட பலரும் அந்தக் கட்சிக்குப் போறாங்க. மரியாதை கிடைக்கிறதைத் தாண்டி அவமரியாதை இல்லாம இருக்காங்க. அசிங்கப்படாம இருக்காங்க. பத்மஶ்ரீ கமல்ஹாசனையே கூத்தாடினு ஒரு கட்சி சொல்லுது. இன்னொரு கட்சியைச் சேர்ந்த இளைய தலைவரே நடிகரா இருந்துட்டு மற்ற எல்லா நடிகரையும் அசிங்கமா பேசுறார். அதேசமயம் ஒன்றரை மாதத்துக்கு முன்னாடி பெரிய ஹேஷ்டாக் எல்லாம் போட்டு மோடியையும், அமித் ஷாவையும் எதிர்த்த குஷ்பு, இப்போ வெல்கம் ஹேஷ்டேக் போடுறது எல்லாம் எனக்கு செட்டாகாது. குஷ்புவுடைய மனப்பக்குவத்தை பாராட்டுறேன். ஒரு சார்பு நிலை எடுத்துட்டு, அதில் இருந்து அப்படியே வேற சார்பு நிலைக்கு மாறுனது எல்லாம் எல்லோருக்கும் சாத்தியமில்ல. இதை குஷ்பு வெற்றிகரமா செஞ்சுட்டு இருக்காங்க. அந்தத் திறமை எனக்கு இல்லை!" எனச் சிரிக்கிறார் கஸ்தூரி.

அடுத்த கட்டுரைக்கு