Published:Updated:

``திருமண கனவிலிருந்த என்னை தர்ஷன் ஏமாற்றிவிட்டார்!''- நடிகை சனம் ஷெட்டியின் 5 பக்க புகார்

பிக்பாஸ் தர்ஷன், நடிகை சனம் ஷெட்டி
பிக்பாஸ் தர்ஷன், நடிகை சனம் ஷெட்டி

தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குச் செல்வதற்குமுன்பே எங்களுக்குள் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பிறகு அவர் என்னை ஏமாற்றிவிட்டார் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்தவர் நடிகை சனம் ஷெட்டி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். `கதம் கதம்', `சதுரம் 2' அம்புலி உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். 2016-ம் ஆண்டு `மிஸ் சௌத் இந்தியா' என்ற பட்டத்தை வென்றவர். பிரபல ஐடி நிறுவனத்தில் இன்ஜினீயராகப் பணியாற்றியவர். இந்த நிலையில் நடிகை சனம்ஷெட்டி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``எனக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷன் என்கிற தியாகராஜன் என்பவருக்கும் 2017-ம் ஆண்டு ஒரு விளம்பர பட ஷூட்டிங் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் மொபைல் எண்களை பகிர்ந்துகொண்டோம். பின்னர் இருவரும் நண்பர்களாகப் பழகி வந்தோம். சினிமாவில் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகளைத் தர்ஷன் தேடிவந்தார்.

தர்ஷன், சனம்ஷெட்டி
தர்ஷன், சனம்ஷெட்டி

நானும் எனக்குத் தெரிந்தவர்களிடம் தர்ஷன் குறித்த தகவல்களைக் கூறியிருந்தேன். இந்தச்சமயத்தில்தான் மேகி என்ற படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தோம். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அக்டோபர் மாதம் மேகாலயாவில் நடந்தது. அது முடிந்து மீண்டும் சென்னை திரும்பினோம். எங்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பு காதலாக மாறியது. தர்ஷனின் காதலை நான் ஏற்றுக்கொண்டேன். என்னை மிகவும் அன்பாக கவனித்துக்கொண்டார். நாங்கள் இருவரும் பல்வேறு நாடுகளுக்கு ஒன்றாக சென்றோம். சமூகவலைதளத்தில் இருவரின் புகைப்படத்தை பதிவிட்டு எங்களைப் பற்றிய தகவலைப் பதிவுசெய்தோம். வாரத்தில் 4 நாள்கள் என அடையாரில் உள்ள என்னுடைய வீட்டில் அவர் தங்குவார். அவரது செலவுகளை நான்தான் பார்த்துக்கொண்டேன். அவருக்காக 15 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளேன்.

தர்ஷனுடன் பழகியபோதுதான் அவர் டூரிஸ்ட் விசா மூலம் இந்தியாவில் தங்கியிருப்பது தெரியவந்தது. விசா காலாவதியானதால் அவர் இலங்கைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என்னுடைய படத்தின் இறுதிகட்ட வேலைகளை நடத்த வேண்டியிருந்தது. வேலைக்கான விசாவுக்கு அப்ளை செய்தோம். பிக் பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்காக நானே விண்ணப்பித்தேன். நானும் பிக்பாஸில் கலந்துகொள்ள முடிவு செய்திருந்தேன். தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதியானது. இந்தத் தகவலை நான் அவரிடம் தெரிவித்தேன்.

நடிகை சனம் ஷெட்டி
நடிகை சனம் ஷெட்டி

இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவு செய்து என் பெற்றோரிடம் பேசினோம். ஆனால் திருமணத்தை தர்ஷன், தன்னுடைய பெற்றோரிடம் இருந்து மறைக்க விரும்பினார். நிச்சயதார்த்தத்துக்குப் பின்னர் அவர்களை சமாதானம் செய்துகொள்ளலாம் என்று என்னிடம் கூறினார். இதையடுத்து, இருவருக்கும் பெங்களூரில் மே 12, 2019-ம் ஆண்டு உறவினர்கள் முன்னிலையில் இந்து சம்பிரதாயப்படி திருமண நிச்சயம் நடந்தது. 2019-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி திருமணத்துக்கு நாள் குறித்தோம். அதன்பின்னர்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் கலந்துகொண்டார். அதன்பின்னர் எனது நிறுவனத்தின் விசாவை முடித்துவிட்டு விஜய் டிவி நிறுவனத்தின் சார்பில் வொர்கிங் விசா எடுத்தார்.

என் குடும்பத்தினர் திருமணத்துக்கான வேலையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், தர்ஷன் திருமணத்தை கொஞ்சம் தள்ளிப்போடலாம் என்று என்னிடம் கூறினார். அது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் தர்ஷன் மீது இருந்த நம்பிக்கையால் அதுதொடர்பாக என் பெற்றோரிடம் நானே பேசினேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் 100 நாள்கள் இருப்பதற்குத் தேவையான ஆடைகளை நான்தான் வாங்கிக் கொடுத்தேன். அதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவானது. நான் அவரை சந்தோஷமாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தேன்.

பிக்பாஸ் தர்ஷன், நடிகை சனம் ஷெட்டி
பிக்பாஸ் தர்ஷன், நடிகை சனம் ஷெட்டி

பிக்பாஸில் இருந்து வெளியே வந்தபின் அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. அவரை சந்திப்பதற்காக அவரது உறவினர் வீட்டுக்குச் சென்றேன். ஆனால், அவர் என்னை இன்முகத்துடன் வரவேற்கவில்லை. அவரது இந்தச் செயல் எனக்கு மிகுந்த மனவருத்தத்தைத் தந்தது. போட்டியிலிருந்து வெளியேறிய விரக்தியில் இருப்பதாக நான் நினைத்துக்கொண்டேன். என்னுடைய போன் அழைப்புகளை தவிர்த்து வந்தார். மெசேஜ் அனுப்பினாலும் எந்த ரிப்ளேவும் இல்லை.

பிக் பாஸ் இறுதிநிகழ்ச்சியின்போதும் என்னிடம் பேசுவதை தவிர்த்தார். நான் அந்த நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறிவிட்டேன். அவரது நடவடிக்கைகள் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கடும் அதிர்ச்சியாக இருந்தது. அதன்பின்னர் நுங்கம்பாக்கத்தில் ஒரு பொது இடத்தில் என்னை சந்திக்க ஒப்புக்கொண்டார். அந்த சந்திப்பின்போது திருமணம் குறித்து பேச்சை எடுத்ததும் என்னை மோசமான வார்த்தைகளால் திட்டினார். அங்கிருந்த ஊழியர்கள் பொதுமக்கள் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தினார். சில நாள்களுக்குப் பிறகு ஷூட்டிங்குக்காக நான் மலேசியா பயணமானேன். அதே விமானத்தில் தர்ஷன் வந்தார். என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நானே வலுக்கட்டாயமாக அவரிடம் சென்று பேசினேன். `என்னை ஏன் நீ காயப்படுத்துகிறாய்' என்றேன். `நம்முடைய உறவை முறித்துக்கொள்ளலாம்' என்றார். அவர் என்னிடம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. பிக்பாஸ் போட்டியாளர் ஒருவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக என்னைவிட்டு விலகுவதாக கூறினார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பிக்பாஸ் தர்ஷன், நடிகை சனம் ஷெட்டி
பிக்பாஸ் தர்ஷன், நடிகை சனம் ஷெட்டி

அவரது வளர்ச்சிக்காக என்னைப் பயன்படுத்திக்கொண்டார்" என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை சனம் ஷெட்டியின் புகார் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தப் புகார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தர்ஷனிடம் விளக்கம் கேட்க அவரைப் பலதடவை தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். ஆனால், அவரின் விளக்கத்தைப் பெற முடியவில்லை. இந்த புகார் தொடர்பாக தர்ஷன் தரப்பில் விளக்கம் அளித்தால் பரிசீலனைக்குப்பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம்.

அடுத்த கட்டுரைக்கு