Published:Updated:

எந்திரன் டு தர்பார்... எப்படியிருந்தது ரஜினியின் கடந்த பத்தாண்டு பயணம்?!

 ரஜினி
ரஜினி

ரஜினியின் ரசிகர்களின் மனப்பான்மையில் யோசித்தால், தங்களின் கடவுள் திரையில் தோன்றுவதே அவர்களுக்கு ஒரு பெரிய திருவிழாதான். என்றாலும், அவர்களாலேயே 'லிங்கா', 'தர்பார்' போன்ற படங்களை ஓட வைக்க இயலவில்லை அல்லவா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அக்டோபர் 2010-ல் எந்திரன் வெளியாகும்போது ரஜினிகாந்த்துக்கு வயது 60. 1999 வரை, கிட்டத்தட்ட வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்கள் நடித்துக்கொண்டிருந்தவர், 'படையப்பா'வுக்குப் பின்னர் அடுத்த பத்தாண்டுகளில் மூன்றே படங்களில் மட்டுமே பிரதான வேடங்களிலும் (பாபா, சந்திரமுகி, சிவாஜி), ஒரு படத்தில் கௌரவ வேடத்திலும் (குசேலன்) நடித்தார். உண்மையில் 2000 முதல் 2010 தான் ரஜினியின் திரைவாழ்க்கையில் சவாலான ஆண்டுகள். 2002-ல் வெளியான 'பாபா' சரியாகப் போகாமல், அதன்பின் மூன்று வருடங்கள் கழித்து வெளியான 'சந்திரமுகி'யும், பின்னர் வெளியான 'சிவாஜி'யும் சூப்பர்ஹிட்களாக மாற, அதன்பின்னர் கௌரவ வேடத்தில் நடித்த 'குசேலன்' சரியாக ஓடவில்லை. இந்த காலகட்டத்தில்தான் 'எந்திரன்' வெளியாகிறது.

'எந்திரன்' படம் மிகப்பெரிய் ஹிட்டாக மாறுகிறது. ஆனால், அதன்பின் ரஜினிகாந்த்தின் உடல்நிலை சரியில்லாமல் போக, அடுத்த படமாக வந்திருக்கவேண்டிய 'ராணா' கைவிடப்படுகிறது. பின்னர் மூன்று வருடங்கள் கழித்து, ஒரு மோஷன் கேப்சர் அனிமேஷன் படமாக, அந்தக் கதை சிறிது மாற்றப்பட்டு, 'கோச்சடையான்' என வெளியாகிறது. அதன்பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து 2014-ல் 'லிங்கா'. இந்த இரண்டு படங்களும், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

எந்திரன்
எந்திரன்

இவற்றுக்குப் பின்னர்தான், ரஜினிகாந்த், தனது வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்குகிறார். அதன்பலனாக, 'கபாலி'யும், 'காலா'வும் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியாகின்றன. இவை இரண்டுமே, ரஜினி பாணி தடாலடி ஆக்‌ஷன் படங்களாக இல்லாமல், சமூகப் பிரச்னைகளை அழுத்தமாகப் பேசின. ரஜினியுமே எல்லாவற்றையும் செய்யக்கூடிய ஒரு சூப்பர் ஹீரோ போன்ற வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்காமல், ஒரு குடும்பத்தின் தலைவராக, வாழ்க்கை, சமுதாயம் என்று பல பிரச்னைகளை சந்திப்பவராக நடித்தார். இதன்பின்னர் வந்த 'பேட்ட'யும் சரி, அதன்பின் வந்த 'தர்பார்', படமும் சரி, ரஜினியை நடுத்தர வயது நபராகவே காட்டின. இப்போது எழுபது வயதாகும் ரஜினி நடிக்கும் அடுத்த படமான 'அண்ணாத்த'விலும் இதேபோன்று நடுத்தர வயது மனிதராகவே நடிப்பார் என்று தெரிகிறது.

இதையெல்லாம் விரிவாக விவாதிப்பது ஏனென்றால், ரஜினிகாந்த் ஏராளமான படங்களில் ஒரு மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக எக்கச்சக்கமான கதாபாத்திரங்களில் நடித்துத் தள்ளியாயிற்று. அவரது ரசிகர்களுக்குத் திகட்டத் திகட்டப் பாடல்கள், கதாபாத்திரங்கள், வசனங்கள், சண்டைக்காட்சிகள், காமெடிகள் என்று ஏராளமான, வித்தியாசமான விருந்துகளும் படைத்தாயிற்று. 'படையப்பா'வுக்குப் பின்னர் வந்த 'பாபா' படத்திலேயே, வழக்கமான ரஜினியாக இல்லாமல், சற்றே முதிர்ந்துபோன ரஜினியை நாம் பார்த்தோம். அப்போதே, க்ளின்ட் ஈஸ்ட்வுட், ராபர்ட் டி நீரோ, அமிதாப் பச்சன் முதலிய நாயகர்கள், தங்களின் நடுத்தர வயதுகளில், ஹீரோ என்பதில் இருந்து சற்றே மாறி, மார்க்கெட் நழுவ ஆரம்பித்திருந்த காலத்தில் டக்கென்று வயதுக்கேற்ற கதாபாத்திரங்கள் செய்ய ஆரம்பித்ததை ரஜினியும் செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

அவரது கடைசி நான்கு படங்களான 'கபாலி', 'காலா', 'பேட்ட', 'தர்பார்' ஆகியவைகளில் ஏற்கெனவே இப்படி நடிக்கத் துவங்கியாயிற்று. எனினும், இப்படி 'பாபா' காலத்திலேயே ரஜினி செய்திருந்தால் 'பாபா', 'லிங்கா', 'குசேலன்' போன்ற படங்களுக்குப் பதில் அவசியம் வித்தியாசமான படங்கள் நமக்குக் கிடைத்திருக்கலாம்.
காலா
காலா

ரஜினியின் கடைசிப் பத்தாண்டுகளின் திரைவாழ்க்கையை எடுத்துக்கொண்டால், அவருக்குப் பின் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று ஒரு பட்டாளமே தங்களை நன்றாக நிறுவிக்கொண்ட ஆண்டாக இவற்றைச் சொல்லலாம். இவர்களில் அஜித்தும் விஜய்யும் பல ஆண்டுகள் முன்னரே ரஜினிக்குப் போட்டியாளர்கள். கூடவே இன்னும் பல நடிகர்கள் உண்டு. 'மங்காத்தா', 'ஆரம்பம்', 'வீரம்', 'வேதாளம்', 'என்னை அறிந்தால்', 'விஸ்வாசம்', 'நேர்கொண்ட பார்வை' என்று அஜித்தும், 'காவலன்', 'நண்பன்', 'துப்பாக்கி', 'கத்தி', 'தெறி', 'மெர்சல்', 'சர்கார்', 'பிகில்' என்று விஜய்யும், 'ஆடுகளம்', 'மாப்பிள்ளை', 'மயக்கம் என்ன', 'ராஞ்சனா', 'வேலையில்லா பட்டதாரி', 'ஷமிதாப்', 'அனேகன்', 'மாரி', 'வடசென்னை', 'அசுரன்' என்று தனுஷும் தங்களை நிரூபித்த பத்தாண்டுகள் இவை. இவர்களைத்தவிர, ஏராளமான நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோர் சூப்பர்ஹிட்களைக் கொடுத்த காலகட்டம் இது. ஒரே ஒரு பிரமாண்ட நடிகர் என்ற இமேஜில் இருந்து, ரஜினி, விஜய், அஜித், சூர்யா என்று ரஜினியின் மார்க்கெட் மாறிய காலகட்டம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது உலகில் அத்தனை சூப்பர்ஸ்டார் நடிகர்களுக்கும் நடப்பதே. ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்த ஹீரோக்களையும் அவர்களின் அடுத்த தலைமுறை ஹீரோக்கள் ஓரம்கட்டிவிட்டு வளரவே செய்வார்கள். எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியை ரஜினி மற்றும் கமல் மிஞ்சினர். இப்போது ரஜினி மற்றும் கமலை, அஜித் மற்றும் விஜய் ஆகியோர் மிஞ்சுகின்றனர்.

பலத்த போட்டி இருந்தாலுமே, கடந்த பத்தாண்டுகளில் வந்த ரஜினி படங்களில், 'கபாலி'யை எடுத்துக்கொண்டால் பல ஆண்டுகள் சிறையில் இருப்பவராக, வெளியே வந்து தொலைந்துபோன தனது மனைவியைத் தேடுபவராக, தன்னைச் சேர்ந்த, தன்னையே நம்பிக்கொண்டிருக்கும் மக்களின் தலைவனாக, உரிமைக்காகக் குரல்கொடுக்கும் போராளியாக, அன்பான கணவனாக, பாசமான தந்தையாக மிக வித்தியாசமான நடிப்பைக் கொடுத்திருந்தார் ரஜினி.

கபாலி
கபாலி

அதேபோல் 'காலா'வில் இழந்த காதலியை சந்திக்கும்போதும் சரி, ஒரு மிகப்பெரிய குடும்பத் தலைவனாக இருப்பதிலும் சரி, மனைவியை இத்தனை வருடங்கள் கழித்தும் காதலிப்பவராக, மகன்களுடன் நேரும் பிரச்னையைப் பொறுப்பாக சரி செய்பவராக மிக இயல்பாக நடித்திருந்தார். குறிப்பாக போலிஸ் ஸ்டேஷனில் அடி வாங்கும் காட்சியைச் சொல்லலாம். ரஜினி படங்களில் ரஜினி இப்படி அடி வாங்கினால் ரசிகர்கள் கொந்தளித்துவிடுவதே வழக்கம். ஆனால், இந்தப் படத்தில் அந்தக் காட்சி மிக இயல்பாகப் படத்துடன் பொருந்தியது. அதற்கு இரஞ்சித்தின் இயக்கத்துடன் சேர்ந்த ரஜினியின் அற்புதமான நடிப்பே காரணம். அந்தப் படத்தில் ஒரு பிரமாண்டமான அரசியல்வாதியை எதிர்க்கும் காட்சிகளில் ரசிகர்கள் விரும்பும் ரஜினி என்ற சூப்பர்ஸ்டாரின் நடிப்பைக் காணமுடியும். அதுவே 'பேட்ட'யில், ரஜினி ரசிகரான இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், ரஜினியின் ரசிகர்களுக்குத் தனக்குப் பிடித்த ரஜினியை விதவிதமாகக் காட்டினார். ரஜினிக்கேற்ற பன்ச் காட்சிகள் படம் முழுதும் இருந்தன. ரஜினியின் இயல்பான நகைச்சுவை சார்ந்த வசனங்கள், சிம்ரனுடனான அவரது குறும்பான காட்சிகள் என்று எல்லாமே ஒரு கலவையாகப் 'பேட்ட'யில் இருந்தது. விஜய் சேதுபதி போன்ற ஒரு நடிகருக்கான இடத்தைக் கொடுத்து, அவருடன் இயல்பாகப் பொருந்தி நடித்திருந்தார்.

'தர்பார்' ஒன்றுதான் அவரது கடைசியான நான்கு படங்களில் பொருந்தாமலேயே போய்விட்ட படம். திரைக்கதை ரீதியாகவும் சரி, காட்சி ரீதியாகவும் சரி, மிகவும் சாதாரணமான படமாகவே அது இருந்தது. ரஜினி என்ற ஒரு பிரமாண்டமான நடிகருக்கான சரியான தீனி போடாமல், ரஜினி வந்தால் மட்டும் போதும் என்றே எடுக்கப்பட்ட படமாகவே அது அமைந்துவிட்டது. 'நாட்டுக்கொரு நல்லவன்', 'கர்ஜனை', 'லிங்கா' போன்ற மிகச்சில அலுப்பூட்டக்கூடிய படங்களில் இறுதியாகப் போய்ச்சேர்ந்துகொண்டது மட்டுமே தர்பாரால் ரஜினிக்கு நடந்த ஒரே விஷயம்.

தர்பார்
தர்பார்

திரைப்படங்களை மட்டுமே எடுத்துக்கொண்டால், ரஜினி என்ற நடிகர், இன்னுமே தொடர்ந்து நடிக்கவேண்டும் என்று முடிவுசெய்தால், க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் ஒரு 'Unforgiven' போலவோ, அமிதாப்பின் 'Black' போலவோ 'சீனி கம்' போலவோ, சிவாஜியின் 'முதல் மரியாதை' போலவோ இன்னும் ரஜினி துணிந்து அசத்தக்கூடிய கதாபாத்திரங்கள் ஏராளம் உள்ளன. தனது இமேஜ் என்ற பொறியில் மாட்டிக்கொள்ளாமல் இதை இறங்கி இனியும் ரஜினி செய்தால், அவசியம் இத்தகைய வித்தியாசமான கதாபாத்திரங்களுக்காகப் பாராட்டப்படுவார். இமேஜில் மாட்டிக்கொண்டு 'லிங்கா', 'தர்பார்' போன்ற படங்களில் நடிப்பதைவிட, அவசியம் புதிய முயற்சிகள் வரவேற்கவே படும் என்று தோன்றுகிறது.

ரஜினியின் ரசிகர்களின் மனப்பான்மையில் யோசித்தால், தங்களின் கடவுள் திரையில் தோன்றுவதே அவர்களுக்கு ஒரு பெரிய திருவிழாதான். என்றாலும், அவர்களாலேயே 'லிங்கா', 'தர்பார்' போன்ற படங்களை ஓட வைக்க இயலவில்லை அல்லவா? 'Bucket list', 'Se7en', 'Bridges of Madison County', சீனி கம் போன்ற வித்தியாசமான வேடங்களை இப்போது ரஜினி செய்தால் அவசியம் ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாகவே இருக்கும் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது.

அதேபோல, திரைவாழ்க்கை என்பதை விட்டுவிட்டு, 2010ல் இருந்து ரஜினியின் அரசியல் கருத்துகளை கவனித்தால், தமிழகத்தில் நடக்கும் பல பிரச்னைகளில் அவரது கருத்துகள் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டே வந்திருக்கின்றன. அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது பல்லாண்டுகளாக விவாதிக்கப்பட்டு, இப்போது ‘வருவேன்’ என்று சொல்லியிருக்கிறார். அரசியலைப் பொறுத்தவரையுமே இந்தப் பத்தாண்டுகள் ரஜினிக்குக் குழப்பமானவையே.
முரட்டுக்காளை
முரட்டுக்காளை

1975ல் அபூர்வ ராகங்களில் அறிமுகமான ரஜினி என்ற நல்ல நடிகர், தொடர்ந்து 45 வருடங்களாகத் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறார். சூப்பர் ஸ்டார் என்பது பொதுவாக டாப் நடிகர்கள் அனைவரையும் குறிக்கும் வார்த்தையாக இருந்தாலும், தமிழில் அது ரஜினியை மட்டுமே குறிக்கும் வார்த்தையாக மாறிப் பலகாலம் ஆகிறது. ரஜினி என்றாலே ரசிகர்கள் மனதில் தோன்றும் சிலிர்ப்பும் ஆர்வமும் ஈடு இணை இல்லாதது. இப்படி ஒரு பிரமாண்டமான ரசிகர் படை, உலகிலேயே மிகச்சில நடிகர்களுக்கே உண்டு.

அப்படிப்பட்ட ஒரு நடிகர், இன்னுமே வித்தியாசமான, அட்டகாசமான படங்களில் நடிக்கவேண்டும், ரசிகர்களுக்குப் புதிய, சுவாரஸ்யமான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தவேண்டும். அதற்கான திறமையும், ஆர்வமும், ஆற்றலும் ரஜினியிடம் உண்டு. எதிர்பார்ப்போம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு