பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இது கொண்டாட்டத்தின் திருவிழா..!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019

னவரி வந்தாலே தமிழகம் பொங்கல் திருவிழாக் கொண்டாட்டத்தில் மூழ்கிப்போகும். தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் என்னும் மூன்று பொங்கலோடு நான்கு ஆண்டுகளாக நான்காம் பொங்கல் இணைந்துள்ளது. அதுதான் ஊரே எதிர்பார்க்கும் உற்சாகப் பொங்கல்; ஆனந்த விகடன் சினிமா விருதுகள். இந்த ஆண்டும் கொண்டாட்டத்தின் திருவிழாவாக அரங்கேறிய ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவின் துளிகள் இவை.

இது கொண்டாட்டத்தின் திருவிழா..!

விருது விழாவுக்கான கவுன்ட் டவுன் முடிந்து தொகுப்பாளர்களாக நகைச்சுவை நடிகர் சதீஷ் மற்றும் சின்னத்திரைத் தொகுப்பாளரும் நடிகையுமான நட்சத்திரா மேடையில் தோன்றினர். புது மாப்பிள்ளை சதீஷ் விழா முழுவதும் தன் குறும்புக் கலாய்ப்புகளை ஆங்காங்கே தெறிக்கவிட, மேடையேறிய நட்சத்திரங்களும் பதிலுக்கு அவரைக் கலாய்க்க, அதனால் சிரிப்பொலிகளும் கரவொலிகளும் ஒவ்வொரு விருதுக்கும் ஓவர்டைம் பார்த்தன.

 • விகடன் குழுமத்தின் உயரிய விருதான எஸ்.எஸ்.வாசன் விருதைத் தொகுத்து வழங்க மேடையில் தோன்றினார் ராதிகா சரத்குமார். விருதைப் பெறும் இயக்குநர் பாரதிராஜாவை தான் முதன்முதலில் சந்தித்ததைப் பற்றி சுவைபடப் பகிர்ந்துகொண்டார். மூத்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு விருதை வழங்க விகடன் விருது விழாவுக்கு வருகை வந்திருந்த அத்தனை இயக்குநர்களும் மேடையேறியது தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான தருணமாக அமைந்தது. எஸ்.பி.முத்துராமன், பார்த்திபன், வெற்றிமாறன், தனுஷ், மிஷ்கின், செல்வராகவன், செழியன் மற்றும் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் ஆகியோர் இணைந்து இந்த மாபெரும் கௌரவத்தை பாரதிராஜாவுக்கு வழங்கினர். பார்வையாளர்கள் எழுந்து நின்று அந்த மூத்த கலைஞனுக்கு மரியாதை செலுத்தினர்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019

விருதைப் பெற்ற பாரதிராஜா, “என் இனிய தமிழ்மக்களே! எஸ்.எஸ்.வாசன் விருது பெறுவது ரொம்ப சந்தோஷம். பிரமாண்டத்தைத் தமிழ் உலகுக்கு முதலில் சொன்னவர் எஸ்.எஸ்.வாசன். அதுதான் ‘சந்திரலேகா!’ மிக எளிமையாக வாழ்ந்து எல்லோரையும் அண்ணாந்து பார்க்க வைத்தவர். இந்த விருதை இந்த பாரதிராஜா வாங்குவது பெருமையான விஷயம். இதற்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. விகடன் குழுமத்தைச் சேர்ந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். இன்றுவரை ஆனந்த விகடனின் அதிகபட்ச மதிப்பெண் பெற்றது என் முதல் படம்தான் என்பதில் எனக்குத் தனிப்பெருமை” என உருக, அரங்கத்தில் கலவையாய் உணர்ச்சிகள் ஊற்றெடுத்தன.

 • சிறந்த படத்துக்கான விருதை மிஷ்கின் வழங்க, ‘பேரன்பு’ படத்திற்காக அதன் இயக்குநர் ராமும், தயாரிப்பாளர் தேனப்பனும் பெற்றுக்கொண்டனர். ‘மம்மூட்டியும், தேனப்பனும் இல்லாமல் இந்தப்படம் நிகழ்ந்திருக்காது’ என்பதைப் பதிவு செய்தார் ராம். மிஷ்கினிடமும் ராமிடமும் ‘ஆனந்தவிகடன் எதுக்கு சார் எப்போ பார்த்தாலும் கம்மியாவே மார்க் போடுறாங்க?’ என்று சதீஷ் கொளுத்திப்போட, ‘ஆமா, என் படம் எதுவுமே அதிக மார்க் வாங்குனதில்ல’ என்றார் மிஷ்கின். ‘மத்த விருதுகளுக்கு நடுவர்கள் யாருன்னு தெரியும். இந்த விருதுக்குத்தான் நடுவர் யாருன்னே தெரியாது. மார்க் வேணாம்னு ஒருபடம் எடுத்தாலும் அதுக்கும் மார்க் போடுவாங்க விகடன்’ எனச் சிரித்தபடி சொன்னார் ராம்.

இது கொண்டாட்டத்தின் திருவிழா..!
 • சிறந்த இயக்குநருக்கான விருதை வழங்க இயக்குநர் பாரதிராஜா மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டனர். இவர்களுடன் நிப்பான் பெயின்ட்டின் தலைவர் (டெகரேட்டிவ் பிசினஸ்) மகேஷ் S.ஆனந்த்தும் மேடையேறினார். ‘அசுரன்’ படத்துக்காக வெற்றி மாறன் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார். “இன்னைக்கு ஒரு படம் தியேட்டர்ல 100 நாள் ஓடுதுங்கறது பெரிய விஷயம். இந்தப் படம் அப்படி ஓடினதுக்குக் காரணம் மக்கள்தான். என்கூடவே எல்லாமுமா இருந்த என் டீமுக்கு மிகப்பெரிய நன்றி’ என்றவர், தனுஷை முதன்முதலில் பாலுமகேந்திராவின் ‘அது ஒரு கனாக்காலம்’ படத்துக்காகச் சந்தித்ததை நினைவுகூர்ந்தார். “அடுத்து சூரியோட சேர்ந்து எல்ரெட் குமாருக்காக ஒரு படம் பண்றேன். அதை முடிச்சதும் தாணு சாருக்காக சூர்யா சாரோட சேர்ந்து ஒரு படம் பண்றேன். படத்தோட டைட்டில் ‘வாடிவாசல்.’ சி.சு.செல்லப்பாவோட ‘வாடிவாசல்’ நாவலை அடிப்படையா வெச்சு இந்தப் படம் இருக்கும்’’ என எக்ஸ்க்ளூசிவ் தகவலை வெளியிட்டார்.

 • `அடுத்த விருது சிறந்த நடிகருக்கான விருது’ எனத் தொகுப்பாளர்கள் அறிவித்த நொடியில் அரங்கைத் தொற்றிக்கொண்டது ஆயிரம் ஜூல்ஸ் எனர்ஜி. ‘அசுரன்’ பின்னணி இசை ஒலிக்க வேட்டி சட்டையில் மேடைக்கு வந்தார் தனுஷ். கைத்தட்டல்களும் விசில் சத்தமும் அடங்க வெகுநேரமாக, அமைதியாக அவ்வளவையும் ஏற்றுக்கொண்டார் தனுஷ். அவருக்கு இயக்குநர்கள் பா.இரஞ்சித்தும் சிறுத்தை சிவாவும் விருது வழங்கினார்கள். இவர்களோடு வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் வசந்த்தும் இருந்தார்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019

“போன வருஷம் ‘வடசென்னை’க்காக இதே விருதை வாங்கறப்ப, அடுத்த வருஷம் அசுரனா உங்களைச் சந்திக்கறேன்னு சொல்லிருந்தேன். ஆனா, அசுரனுக்கும் இப்படியொரு வரவேற்பு கொடுப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கலை. தொடர்ந்து இரண்டாவது முறையாக விகடன் விருதை வாங்குறது பெருமையா இருக்கு. விகடனுக்கு நன்றி! நிறைய இடத்துல சிவசாமி எங்களை விட்டுப்போகலைன்னு சொல்றாங்க. சிவசாமி இன்னமும் என்னையுமே விட்டுட்டுப் போகல. அவர் எனக்குள்ளயும் இருக்கிறார். போன வருஷம் அன்பு, இந்த வருஷம் சிவசாமி. அன்பே சிவம்! அவ்ளோதான்! ஒரு நடிகனுக்கு அவனோட கரியர்ல ஒரு சில தடவை மட்டுமே கிடைக்கற இப்படியொரு கேரக்டரைக் கொடுத்த வெற்றி மாறனுக்கு நன்றி!” என்று நெகிழ்ந்தார்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019

‘அசுரன் 2’ எடுக்கலாமே?’ என்ற கேள்விக்கு, “மொதல்ல புதுப்பேட்டை 2-க்கு ஒரு வழி பண்ணுவோம்! அசுரன் 2-க்கு வெற்றி மாறன்தான் வழி சொல்லணும்” என்று தனுஷ் பதில் சொல்ல, அரங்கம் மீண்டும் அதிர்ந்தது. “எனக்குப் படம் ரொம்பப் புடிச்சது. படம் ரொம்பப் பெரிய வெற்றி அடைஞ்சிருக்கு. பொதுவா இப்படியான படங்கள் ஓடாதுன்னு ஒரு பேச்சு பரவலா இருக்கும். ஆனாலும் மதுரை மாதிரியான ஊர்கள்லயே அசுரன் வெற்றிபெற்றது என்னை மாதிரியான இயக்குநர்களுக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கு’ என அரசியல் பார்வையோடு கருத்தைப் பகிர்ந்துகொண்டார் இரஞ்சித்.

 • தனுஷுக்கு விருது அளித்ததும் வெற்றி மாறனும் மேடைக்கு அழைக்கப்பட்டார். இதுவரை நீங்கள் இருவரும் மற்றவரிடம் கேட்காத, ஆனால் கேட்க நினைக்கும் ஒரு விஷயத்தை மேடையில் கேட்டுகொள்ளலாம் என்று சொன்னவுடன், நீண்ட யோசனைக்குச் சென்றனர் இருவரும். தனுஷ், “வடசென்னை 2 எப்போ? அன்புவின் எழுச்சி எப்போ?” என்று வெற்றி மாறனைச் சீண்ட, அவர், “நானும் அதையேதான் யோசிச்சுட்டிருக்கேன். நிறைய ப்ளான் பண்ணவேண்டியிருக்கு. ரொம்ப சீக்கிரம் எல்லாம் செட்டானதும் சொல்றோம்!” என்றார். பிறகு, இருவரும் ஒருவரையொருவர் எந்த அளவு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு விளையாட்டு நடத்தப்பட்டது. அதன் பின்னர், சிவசாமி கதாபாத்திரத்தின் துண்டையும் கம்பையும் வெற்றிமாறன் தனுஷுக்கே பரிசளிக்க, தனுஷ் சிவசாமியாக மீண்டும் ஒருமுறை தன் நிலத்தில் களமாடினார்.

 • தமிழில் மீண்டும் தன் இன்னிங்ஸை ஒரு சிக்ஸரோடு ஆரம்பித்திருக்கும் தாப்ஸிக்கு சிறந்த நடிகைக்கான விருதை வழங்கினார் `அசுரன் ‘ தனுஷ். ஆடுகளம் ஐரினையும், கே.பி.கருப்பையும் ஒன்பது ஆண்டுகளுக்குப்பின் மேடையேற்றி அழகு பார்த்தது விகடன், அதுவும் ஆடுகளம் ரிலீஸான அதே தேதியில்! “ஆடுகளத்தின் போது எனக்கு நடிக்கவே தெரியாது. ஆனால் இப்போது, ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் சிறந்த நடிகை விருது கிடைத்திருக்கிறது. என்னை சினிமாவுக்குள் அழைத்து வந்ததற்கும், நடிப்பு சொல்லிக்கொடுத்ததற்கும் வெற்றி மாறனுக்கு நன்றி. அப்போது புதுமுகமாய் அறிமுகமான என்னோடு பொறுமையாய் நடித்த தனுஷுக்கும் நன்றி. நாம மூணு பேரும் சேர்ந்து இன்னொரு படம் பண்ணலாம் சார்’ என வெற்றி மாறனுக்குக் கோரிக்கை வைத்தார் தாப்ஸி.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019

வீல்சேரில் கட்டுண்டு முகபாவனைகளால் வித்தியாசம் காட்டிய ‘கேம் ஓவர்’ தாப்ஸிக்கு ‘சோல் ஃப்ரீ’ அறக்கட்டளை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்காக உழைக்கும் ப்ரீத்தி னிவாசனை அறிமுகப்படுத்தியது விகடன் மேடை. ‘எங்களை மாதிரி மாற்றுத்திறனாளிகள் தியேட்டருக்குப் போய்ப் படம் பார்க்க சரியான ரேம்ப் வசதி இல்லை’ என ப்ரீத்தி கோரிக்கை வைக்க, அருகில் நின்ற தனுஷ் அதைக் கூர்ந்து கவனித்தார்.

 • மாஸ் ஹீரோக்கள் அனைவருக்கும் தீம் மியூசிக் போட்டு கெத்து காட்டிய யுவன், ‘மங்காத்தா’ தீம் அதிர அரங்கிற்குள் கெத்தாக என்ட்ரி கொடுக்க, அப்ளாஸ் அடங்க வெகுநேரமானது. பேரன்பு, சூப்பர் டீலக்ஸ் எனப் பின்னணி இசையில் வெரைட்டி விருந்து படைத்த யுவனுக்கு, `புதுப்பேட்டை’ தீம் அதிர மேடையேறிய செல்வராகவன் விருது கொடுத்தார். “அதெப்படி சார், உங்க ரெண்டு பேர் கெமிஸ்ட்ரி மட்டும் இவ்ளோ சூப்பரா ஒர்க் அவுட் ஆகுது?” என சதீஷ் கேட்க, “செல்வாவுக்கு என்ன வேணும்னு எனக்கு நல்லாத் தெரியும். ராம், விஷ்ணுவர்தன், அமீர், தியாகராஜன் குமாரராஜா... இவங்ககூடயும் எனக்கு நல்லா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும்” என்றார் யுவன். பார்வையாளர்களின் விருப்பமான, ‘புதுப்பேட்டை 2’ எப்போ வரும்?’ என்ற கேள்விக்கு, ‘சீக்கிரமே’ என சூசகமாய் பதிலளித்தார் செல்வா.

 • ஸ்டன்ட் மாஸ்டராக இருந்து வில்லனாக புரொமோஷன் பெற்று இப்போது விருதை வென்றுள்ள சீனியர் மாஸ்டர் ஸ்டன் சிவாவுக்கு சிறந்த வில்லனுக்கான விருது வழங்கினார் விகடனின் ஹாட்ரிக் வின்னரான திலிப் சுப்பராயன். “எப்போதும் க்ளீன் ஷேவ்டு லுக்கில் இருக்கும் நான் இந்தப் படத்திற்காக தாடி வளர்க்க, இப்போது அதுவே என் லுக்காகிவிட்டது’ என, தன் கெட்டப்பின் காரணத்தையும் சொன்னார்.

இது கொண்டாட்டத்தின் திருவிழா..!
 • தமிழ்சினிமாவின் மறக்கமுடியாத வில்லி கதாபாத்திரத்தைக் கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார், சிறந்த வில்லிக்கான விருதை சாய் தன்ஷிகாவுக்கு வழங்கினார். “தமிழ் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என கோலிவுட் இயக்குநர்களைக் கேட்டுக்கொண்டார் சாய் தன்ஷிகா. கபாலி ரஜினி வசனத்தை லேடி கபாலியாக மாறி அவர் பேச, பார்வையாளர்கள் கைதட்டி ஆதரவு தெரிவித்தனர்.

 • ஜார்ஜ் மரியான், ‘சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதைப் பெற, ஜார்ஜ் மரியானின் நாடகக் கால ஜூனியர் நாசர் விருதை வழங்கினார். “ஜார்ஜ் அண்ணன் நாடகத்துறையில எங்களுக்கெல்லாம் சீனியர். அவரை மாதிரி நடிக்கணும்னு நான் அப்போ எல்லாம் நிறைய ஏங்குவேன்’ என உருக, அதற்கு ஜார்ஜ் கொடுத்த ரியாக்‌ஷனைக் காண கண்கோடி வேண்டும். “இன்னும் ஆறு ஆண்டுகளில் விகடன் குழுமம் நூறு ஆண்டுகளை எட்டவிருக்கிறது. அப்படியான குழுமம் எனக்கு விருது அளித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி” என நெகிழ்ந்தார் ஜார்ஜ்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019
 • சூப்பர் டீலக்ஸ் படத்திற்காகச் சிறந்த குணசித்திர நடிகை விருது வென்ற ரம்யா கிருஷ்ணன் தன் இயக்குநரை வாய்நிறைய புகழ்ந்தார். ‘சூப்பர் டீலக்ஸில் நான் எடுத்த ஒவ்வொரு டேக்கிலும் என் நடிப்பு மேலும் ஒரு அடி மேலே சென்றதை உணர்ந்தேன். இனி நான் நடிக்கும் படங்களில் அந்த வித்தியாசத்தை நீங்களும் உணர்வீர்கள். அதற்குக் காரணம் தியாகராஜன் குமாரராஜா மட்டுமே’ எனச் சிலாகித்தார் ரம்யா கிருஷ்ணன். பினிஷிங் பன்ச்சாக ‘படையப்பா’ டயலாக்கை வெவ்வேறு மாடுலேஷனில் பேசவும் தயங்கவில்லை இந்த நீலாம்பரி.

 • டெரர் வில்லன் ஆனந்த்ராஜுக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதைக் கொடுத்தார்கள் சாக்ஷியும் சஞ்சிதா ஷெட்டியும்! விருதைப் பெற்றவர், “எனக்கே இது நகைச்சுவையாதான் இருக்கு. கடைசில என்ன இப்படி ஆக்கிட்டீங்களேப்பா! இயக்குநர் கல்யாணுக்குத்தான் எல்லாப் பெருமையும் சேரும்’’ என வெட்கம் பாதி, காமெடி மீதியாக அனுபவம் பகிர்ந்தார் ஆனந்தராஜ்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019
 • விழாவின் முக்கிய அம்சமாக விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘லாபம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. “சக மனிதனை எப்படி மதிக்க வேண்டும் என்பதை ஜனநாதனைப் பார்த்துதான் கற்றுக்கொண்டேன்” என ஜனநாதனைத் தான் முதன்முதலில் சந்தித்த நிகழ்வின் கதை குறித்துக் கூறினார் விஜய் சேதுபதி. ஸ்ருதி, ‘ஜனநாதன், விஜய் சேதுபதியோடு நான் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி’ என்றார். பின்னர், இந்தப் படத்தின் முதல் டிக்கெட்டை விகடனே பெற்றுக்கொள்வதாகக் கூறி, 120 ரூபாய் ஃப்ரேம் செய்யப்பட்டு படக்குழுவுக்கு அளிக்கப்பட்டது.

 • தன் முதல் படமான சொல்லாமலே மூலம் சொல்லியடித்த இயக்குநர் சசி, தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்த செழியனுக்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை வழங்கினார். ஆனந்த விகடன் எப்படித் தனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது என்பதைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் செழியன்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019
 • சிறந்த அறிமுக நடிகருக்கான விருது ‘ஆதித்ய வர்மா’வாக அசரடித்த த்ருவ் விக்ரமுக்கு வழங்கப்பட்டது. விருதை விஜய் சேதுபதியும் யாஸ்கோ ஷர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விவேக் ஆனந்தனும் வழங்கினர். விருது பெற்ற த்ருவ் விக்ரம், சில நொடிகள் நெகிழ்ச்சியில் வார்த்தைகள் வராமல் தடுமாறினார். “இந்தப் படத்துக்காக எங்க அப்பா அவரோட வேலையையெல்லாம் ஒதுக்கிவெச்சுட்டு 10 மாசம் வொர்க் பண்ணினார். நீங்க திரையில பார்த்தது என் உருவம் மட்டும்தான். ஆனா, அதைச் செதுக்கியது என் அப்பாதான். இது அவருக்கான அவார்ட்!” என்றவர், ‘எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்ச நடிகர் விஜய் சேதுபதி. அவர் கையால விருதுன்னு நம்பவே முடியல. கை கால் எல்லாம் உதறுதுங்க’ எனக் குழந்தையாய்க் குதூகலித்தார். அவரை இயல்பு நிலைக்குக் கொண்டுவர தன் டிரேடுமார்க் முத்தத்தை விஜய் சேதுபதி கொடுக்க, அரங்கம் ஆர்ப்பரித்தது. அப்படியே மிதந்து மேலே சென்ற த்ருவ் தரைக்கு வர சில நிமிடங்களாயின.

 • தன் முதல் படத்திலேயே இரண்டு நாயகர்களுடன் போட்டிபோட்டுத் தன் நடிப்புத் திறமையை நிரூபித்த லிஜோமோள் ஜோஸுக்கு, மூத்த நடிகை அம்பிகாவும், ஆதவ் கண்ணதாசனும் விருது அளித்தனர். “ ஹீரோவுக்கு அக்காவாக நடிப்பதைப் பற்றிப் பெரிதாக நான் யோசிக்கவில்லை. சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் ஆகிய இரு நடிகர்கள் ஒரு படத்தில் இருக்கும்போது அதில் அறிமுகமாவது பெரிய விஷயமாயிற்றே’’ என லிஜோமோள் சொல்ல, தன் ஜூனியரை ஆரத்தி எடுத்து கோலிவுட்டுக்கு வரவேற்றார் அம்பிகா.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019
 • சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை வழங்க, குழந்தைகளை மட்டுமே கதைநாயகர்களாக வைத்து ‘கோலி சோடா’ எடுத்த விஜய் மில்டன் மேடையேறினார். “குழந்தைகளை வைத்து வேலை வாங்குவது மிகவும் சுலபம். அவர்கள் நம் எதிர்பார்ப்பை மிஞ்சும்வகையில் அவுட்புட் கொடுக்க முயல்வார்கள்” எனத் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டவர், ‘கேடி (எ) கருப்புதுரை’யில் அட்டகாசம் செய்த சிறுவன் நாகவிஷாலுக்கு விருதை வழங்கினார். படத்தின் வைரல் வசனங்களைப் பேசிக்காட்டும்படி தொகுப்பாளர்கள் நாகவிஷாலிடம் கோரிக்கை வைக்க, தன் துறுதுறு உடல்மொழியுடன் வசனங்களைப் பேசிக்காட்டினார் நாகவிஷால். வெரைட்டி நடிப்பில் அசத்திய சிறுவனுக்கு வசந்த் அண்ட் கோ நிறுவனம் தொலைக்காட்சி ஒன்றையும் பரிசளித்தது.

 • சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை வழங்குவதற்காக அழைக்கப்பட்ட ஒளிப்பதிவாளர் பி.சி.ராம், ‘’அடுத்த வருஷம் இந்த விருதை நான் வாங்குவேன் பாருங்க’’ என சபதம் செய்ய, அரங்கில் பலத்த கரகோஷம். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்காக இவ்விருதைப் பெற்றுக்கொண்டார்கள் ஒளிப்பதிவாளர்கள் பி.எஸ்.வினோத்தும் நீரவ் ஷாவும். முதலில் பேசிய பி.எஸ். வினோத், “படம் பார்த்தவர்கள், ‘இதில் எது நீங்கள் எடுத்தது, எது நீரவ் எடுத்தது என்றே தெரியவில்லை’ எனச் சிலாகித்தார்கள். அந்த அளவிற்கு எனக்கும் நீரவ்விற்கும் ஒரே அலைவரிசை” என நீரவ் ஷாவின் தோள் தட்டினார். “இந்த விருதை நான் பெறுவதற்கு முக்கியக் காரணமாக நான் கருதுவது பி.சி.ராம் அவர்களைத்தான். அவர் அன்றொரு நாள் என்னைத் தன் டீமில் சேர்த்துக்கொள்ளவில்லையென்றால் இன்று இந்த மேடையில் நான் இல்லை!” என குருபக்தியோடு குறிப்பிட்டார் நீரவ் ஷா. ‘தியாகராஜன் குமாரராஜா ஒரு காட்சிக்காக எவ்வளவு மெனக்கெடுவார்?’ என சதீஷ் கேட்க, ‘ஒருசில காட்சிகள் எல்லாம் 75 டேக் வரை போகும். அவ்வளவு பர்ஃபெக்‌ஷன் எதிர்பார்ப்பார் அவர்’ என எல்லாரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் நீரவ்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019
 • சிறந்த படத்தொகுப்புக்கான விருதை மனோபாலா, ஆதித்ய வர்மா இசையமைப்பாளர் ரதன் வழங்க, `கேம் ஓவர்’ படத்துக்காக அதைப் பெற்றுக்கொண்டார் ரிச்சர்டு கெவின். “எல்லா வீட்டுலயும் இருக்குற பெரிய தல ஆனந்த விகடன்தான். எங்க வீட்லயும் அப்படித்தான். `கேம் ஓவர்’ படத்துக்காக மூணு வரி என்னைப் பத்தி விகடன்ல எழுதியிருக்கறதா என் பெரியப்பா சொன்னார். அந்த வரிகள்தான் எனக்கு இந்த விருதைப் பெற்றுக்கொடுத்திருக்கு” என தனக்கும் ஆனந்தவிகடனுக்குமான உறவைப் பகிர்ந்துகொண்டார் ரிச்சர்டு கெவின்.

 • ‘எல்லாப் படங்களிலும் அரசியல் இருக்கிறது. சில படங்கள் அதை வெளிப்படையாகப் பேசுகின்றன. ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும்கூட அரசியல் இருக்கிறது’ என்ற ஆழமான கருத்தை முன்வைத்தார் இயக்குநர் எஸ்.பி ஜனநாதன். சிறந்த கதைக்கான விருதை அவர் அதியன் ஆதிரைக்கு வழங்க, அதைக் கீழிருந்தபடி நெகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தார் அதியனின் குரு பா.இரஞ்சித். ‘வழக்கு எண் 18/9’ படத்தின்போது தியேட்டரில் ‘தோழர்’ என அழைத்த ஒரே காரணத்துக்காக ஜனநாதன் தனக்கு பாப்கார்ன் வாங்கித் தந்ததை நினைவுகூர்ந்தார் அதியன்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019
 • சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றுக்கொண்ட மிஷ்கின், “தியாகராஜன் குமாரராஜா அவருக்கு வேண்டியது வர்றவரை விடமாட்டார். முதல்ல என் மனைவி ரோல்ல நடிச்ச நதியா என்னை அறையுற காட்சில 80 முறை ரீடேக் போனோம். அதுக்கு அப்புறம் அவங்களுக்குப் பதிலா ரம்யா கிருஷ்ணன் வந்தாங்க. அவங்களும் தன் பங்குக்கு அறைய நூத்துக்கணக்குல அறை வாங்கினேன் சார்’’ என ஷுட்டிங் ஸ்பாட் நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார். நீலன் கே.சேகர் விருதைத் தன் அப்பாவுக்கு சமர்ப்பிப்பதாய் சொன்னது நெகிழ்ச்சி. இருவருக்குமான விருதுகளை வழங்கியது பார்த்திபன்.

 • சிறந்த வசனத்துக்கான விருதை இந்த ஆண்டு, கேடி (எ) கருப்புதுரை, சில்லுக்கருப்பட்டி என இரண்டு படங்கள் பகிர்ந்துகொண்டன. ‘’ஒரு படத்துக்கு வசனகர்த்தாவா இருக்கறவன் மொதல்ல அந்தப் படத்துல இருக்கற மௌனத்துக்கு மரியாதை குடுக்கணும்னு பாலுமகேந்திரா சார் சொல்லுவார். அதைத்தான் இந்தப் படத்தில் செய்திருந்தோம். இந்த விருதை பாலுமகேந்திராவுக்கும் அவரோட பயிற்சிப் பட்டறைக்கும் டெடிகேட் செய்றேன்” என நெகிழ்ந்தார் `கேடி’ படத்தின் வசனகர்த்தா சபரிவாசன். ‘’ ‘சில்லுக்கருப்பட்டி’ படம் டிசம்பர் 27-ம் தேதி ரிலீஸானது. வருஷத்தோட கடைசிப் படமா ரிலீஸானாலும் அதுக்காகக் காத்திருந்து ஐந்து பிரிவுகள்ல நாமினேட் செஞ்சு இப்போ விருதும் கொடுக்கிற விகடனின் பொறுப்புணர்ச்சிக்கு நன்றி’’ என நெகிழ்ச்சி ததும்பக் கூறினார் ஹலிதா சமீம். இவர்களுக்கு விருது வழங்கியது, ‘மச்சான்ஸ்’ புகழ் நமீதா.

 • வடக்கூரையும், தெக்கூரையும் நம் கண்முன் மெய்ப்பித்துக் காட்டிய ‘அசுரன்’ கலை இயக்குநர் ஜாக்கிக்கு சிறந்த கலை இயக்கத்துக்கான விருதைத் தந்து கௌரவித்தனர் ஐசரி கணேஷ், அதுல்யா ரவி மற்றும் வித்யா பிரதீப். “அசுரனுக்கு முன் நான்கு முறை மட்டுமே கால் செய்தார் வெற்றிமாறன். அதற்குப் பிறகு நாங்கள் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. தற்போது மீண்டும் கால் செய்து, இந்த ஆண்டு மூன்று படங்கள் செய்கிறோம் எனக் கூறியிருக்கிறார்” என ஆச்சர்யம் கொடுத்த ஜாக்கி, தனக்கு வலதுகரமாய் இருந்த உதவியாளருக்கும் நன்றி சொன்னார்.

 • `அசுரன்’ கதாபாத்திரங்களுக்கு ஒப்பனை செய்த கலைஞர்கள் நெல்லை V.சண்முகம், K.வேல்முருகன், நஹூஷ் N.பைஸ், அமல்தேவ் J.R ஆகியோருக்கு, பிக்பாஸ் பிரபலங்கள் அபிராமி மற்றும் லாஸ்லியா சிறந்த ஒப்பனைக்கான விருதை வழங்கினர்.

இது கொண்டாட்டத்தின் திருவிழா..!
 • ‘நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்’ என டபுள் வெறித்தனமாக வெற்றிப் படிக்கட்டுகளைத் தொட்டு மேடைக்கு வந்தனர் ஷோபி, லலிதா ஷோபி இணை. அட்டகாசமாக நடனமாடும் வேதிகா, இவர்களுக்குச் சிறந்த நடனத்துக்கான விருதை வழங்கினார். ‘ஆயிரம் பேர், நான்கு நாள்கள், தளபதியோட வேகத்துக்கு ஈடுகொடுக்க ரொம்ப மெனக்கெட்டோம்’ என ஷூட்டிங் ஸ்பாட்டை நினைவுகூர்ந்தார் ஷோபி. ‘எல்லாப் புகழும் விஜய் சாருக்குத்தான்’ என உணர்ச்சிவயப்பட்டார் லலிதா ஷோபி.

 • ஸ்டைலிஷ் இயக்குநர் கௌதமின் படங்களை மேலும் அழகாக மெருகேற்றும் உத்ரா மேனனுக்கு ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்காக ‘சிறந்த ஆடை வடிவமைப்பாளர்’ விருது வழங்கப்பட்டது. ‘என்னை அங்கீகரித்த விகடனுக்கு நன்றி’ என ஷாட் அண்ட் ஸ்வீட்டாக அவர் பேச, சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார் அவருக்கு விருது வழங்கிய சுனைனா.

இது கொண்டாட்டத்தின் திருவிழா..!
 • சிறந்த பாடலாசிரியருக்கான விருதை விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் கைகளிலிருந்து பெற்றுக்கொண்டார் யுகபாரதி. “மூன்றாவது முறையாக விகடன் விருது பெறுகிறேன். தேசிய விருதில் என் பெயர் இருக்கிறதா என்றுகூடப் பார்க்கமாட்டேன். ஆனால், வருடா வருடம் விகடன் விருதில் என் பெயர் இருக்கிறதா என்று பார்ப்பேன்” என்று நெகிழ்ந்தார்.

 • ‘எள்ளுவய பூக்கலயே’ என இந்த ஆண்டின் மகத்தான குரலாக ஒலித்த சைந்தவிக்குச் சிறந்த பாடகிக்கான விருதை யுகபாரதியும், ஏ.ஆர்.அமீனும் வழங்கினார்கள். ``மொதல்ல என்னை ட்ராக் பாடத்தான் சொன்னாரு ஜி.வி. ‘நான் சும்மா முயற்சி பண்ணிப் பார்க்குறேனே’ன்னு சொல்லி, பாட்டை முழுசா பாடிக்காமிச்சேன். ‘நல்லாதான் இருக்கு. ஆனா வைக்கம் விஜயலட்சுமியே பாடட்டும்’னு வெற்றிமாறன் சொன்னா நான் அதுக்கு மறுப்பு சொல்லமாட்டேன்’னு சொன்னார். நல்லவேளை, டைரக்டருக்கும் நான் பாடினது பிடிச்சது’’ என்றார் சைந்தவி. ``இவங்கதான் பாடினாங்கன்னு மொதல்ல எனக்குத் தெரியாது. பாட்டை மட்டும் கேட்டுட்டு ‘இந்தப் பாட்டு பாடின பொண்ணு எங்கேயோ போகப்போகுது பாருங்க. நல்ல வாழ்க்கை அமையப்போகுது’ன்னு ஜி.விகிட்ட சொன்னேன். ‘அவங்களுக்கு ஏற்கெனவே நல்ல வாழ்க்கை அமைஞ்சாச்சு’ன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னார் ஜி.வி’’ என கலகலத்தார் யுகபாரதி. முத்தாய்ப்பு முடிவாக பாடலை சைந்தவி பாட, கனத்த மெளனத்தில் ஆழ்ந்தது அரங்கு.

 • கேடி (எ) கருப்புதுரை மற்றும் சில்லுக்கருப்பட்டி என இரண்டு ஸ்வீட் சர்ப்ரைஸ்களைக் கடந்த ஆண்டு கொடுத்த பெண் இயக்குநர்கள் மதுமிதா மற்றும் ஹலீதா ஷமீம் ஆகியோரை மேடையில் ஏற்றி ஸ்பெஷலாய்க் கொண்டாடியது விகடன். முதலில் பேசிய ஹலிதா ஷமீம், “நிறைய பேர் இந்தப் புத்தாண்டை பாசிட்டிவ்வா ஆரம்பிக்க என் படத்தைப் பார்த்ததா சொன்னாங்க. ரொம்பவே சந்தோஷமா இருந்தது” என்றார். அடுத்து பேசிய மதுமிதா, “விகடனுக்கு நன்றி! பெண்கள் நாங்க இதை சாதிச்சோம்னா அதுக்குப் பின்னாடி நிறைய ஆண்கள் இருந்தாங்க. அவங்களுக்கும் கண்டிப்பா நன்றிகள் சொல்லணும். எல்லோரும் சேர்ந்து ஒரு படைப்பை உருவாக்கி அதுக்குக் கிடைச்ச வெற்றிதான் இது!” என சூப்பராக முடித்தார்.

 • ‘கோமாளி’ படக்குழுவுக்கு சிறந்த படக்குழுவுக்கான விருதை வழங்கினார் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன். மொத்தக் குழுவும் மேடையேறியபின், ``இந்தப் படம் ஒரு பஸ் மாதிரிங்க. என்னை நம்பி ஐசரி கணேஷ் சார் எனக்கு ஒரு பஸ் குடுத்துட்டார். ஆனா, எனக்கு அது சரியா ஓட்டத் தெரியாது. ஏன்னா அனுபவம் கம்மி. அதனால ஒரு பெரிய டீமை பின்னாடி வெச்சுட்டு பஸ்ஸைத் தள்ளவிட்டேன். ‘தள்ளு தள்ளு’ன்னு சொன்னது மட்டும்தான் நான். தள்ளுனது எல்லாம் இவங்கதான்” என்று நெகிழ்ந்தார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.

 • தயாரிப்பாளர் சி.வி.குமாரும், நடிகை ஜனனி ஐயரும் சிறந்த தயாரிப்புக்கான விருதை வழங்கக் கூட்டாக மேடையேறினார்கள். ‘கேடி (எ) கருப்புதுரை’ படத்தைத் தயாரித்த சரிகமா நிறுவனத்தின் விக்ரம் மெஹ்ரா மற்றும் சித்தார்த் ஆனந்த்குமாருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. “ஹீரோ இல்லாத படம். ஒரே ஒரு சிறுவன், அவனோடு சுற்றித்திரியும் முதியவர் - இப்படி ஒரு கதையைத் தயாரிக்கும் துணிச்சலான முடிவை எப்படி எடுத்தீர்கள்?” என்ற கேள்விக்குப் பதிலளித்த சித்தார்த் ஆனந்த்குமார், “இயக்குநர் மதுமிதாவை முழுமையாக நம்பினோம். ஸ்க்ரிப்டைப் படித்ததுமே இது மிஸ் பண்ணக்கூடாத படம் என்பதை உணர்ந்தோம்!” என உற்சாகமாய்க் கூறினார்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019

`ஒத்த செருப்பு’ படத்துக்காக, ஆனந்த விகடன் விருதுகள் விழாவில் பார்த்திபன் கௌரவிக்கப்பட்டார். “பார்த்திபனின் படங்களைப் பார்த்தே நாங்கள் வளர்ந்தோம்’’ என்று விழா மேடையில் புகழ்ந்தார் இயக்குநர் மிஷ்கின். அடுத்து பேசிய பார்த்திபன், “என் முதல் படமான `புதிய பாதை’ வெளியாவதற்குக் காரணமானவர் விகடனின் நல்லாசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன். `ஒத்த செருப்பு’ படத்தைவிடச் சிறப்பான படத்தை என்னால் எடுக்க முடியும் என நான் நம்பவில்லை. இனி நான் எடுக்கும் படங்களுக்கும் விகடன் விருது அளிக்குமா எனத் தெரியவில்லை. தற்போது எனக்குக் கொடுத்திருப்பதையே என் வாழ்நாள் விருதாகக் கருதிக்கொள்கிறேன். இனிமேல் விகடனிலிருந்து நான் விருதுபெற விரும்பவில்லை” என்று தன் ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.

(பார்த்திபன் என்ற படைப்பாளியின் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறோம். விகடன்மீது அவர் வைத்திருக்கும் மரியாதை மற்றும் நம்பிக்கையைத்தான் அவருடைய பேச்சு வெளிப்படுத்துகிறது. அவர்மீதான எங்களின் நம்பிக்கையும் சேர்ந்துதான், அவருடைய ‘ஒத்த செருப்பு’ படத்தை ஆனந்த விகடன் சினிமா விருதுகளின் பரிந்துரைப் பட்டியலில் பல பிரிவுகளில் இடம்பெறச் செய்தது.)

 • இந்த ஆண்டின் சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான விருதைப் பெற்றுக்கொள்ள மேடையேறினார்கள் ‘விஸ்வாசம்’ படத்தின் இயக்குநர் சிவாவும் தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனும். ‘தல’ படத்திற்கு விருதை வழங்கியது ‘தளபதி’யின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சியும் ஷோபாவும். ‘’படம் பார்த்து நெகிழ்ந்துட்டேன். விஜய்யும் படம் பார்த்துட்டு சிவாவுக்கு போன் பண்ணிப் பாராட்டினார். வொண்டர் சார் நீங்க!’ என சிவாவோடு கைகுலுக்கினார் எஸ்.ஏ.சி.

 • எமோஷனல் மொமன்ட்டுகளுக்கும், மேஜிக் மொமன்ட்டுகளுக்கும் இடையே நாயகிகளின் நடன நிகழ்ச்சிகள் அரங்கை அதன் எனர்ஜி லெவலிலிருந்து இறங்காமல் பார்த்துக்கொண்டது. 90ஸ் கிட்ஸின் நாயகியான ஷெரின், கோமாளி படத்தின் செகண்ட் ஹீரோயின் சம்யுக்தா ஹெக்டே, ‘சிங்கப்பெண்’ இந்துஜா, ‘அடுத்த சாட்டை’ அதுல்யா என கலர்ஃபுல் நடனக் கொண்டாட்டம் கண்களை நிறைத்தது. இவர்கள் அத்தனை பேரையும் வழிநடத்தித் தன் முத்திரையைப் பதித்தார் சாண்டி மாஸ்டர்.

இது கொண்டாட்டத்தின் திருவிழா..!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்வின் மற்றுமொரு ஹைலைட் 2K கிட்ஸ் நாயகன் ஹிப்ஹாப் ஆதியின் லைவ் பர்ஃபாமன்ஸ். குட்டி பாரதிகளுடன் அவர் போட்ட ஆட்டம் எனர்ஜி மீட்டரில் உச்சம் தொட்டது. இப்படி உற்சாகமும் கொண்டாட்டமுமாக நிறைவடைந்தது விழா.