பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

மகத்தான பெண்களுக்கு மரியாதை விழா!

`அவள் விருதுகள்’ விழா
பிரீமியம் ஸ்டோரி
News
`அவள் விருதுகள்’ விழா

முதல் விருதாக ‘மாண்புமிகு அதிகாரி’ விருதைப் பெற்றுக்கொண்டார் இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ்.

சினிமா, இலக்கியம், விவசாயம், வர்த்தகம் எனப் பல்வேறு துறைகளில் உயரம்தொட்ட சாதனைப்பெண்களை மேடையேற்றி அங்கீகரிக்கும் `அவள் விருதுகள்’ விழா மூன்றாம் ஆண்டாக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக நடந்துமுடிந்தது. இந்தக் கொண்டாட்ட விழாவின் சில துளிகள்...

 • தொகுப்பாளர்கள் மிர்ச்சி விஜய்யும் வீஜே அஞ்சனாவும் திரிகொளுத்த, ‘பட்டாஸ்’ படப்புகழ் ஐரீன் செல்வராஜ் குழு, தமிழர்களின் பாரம்பர்ய தற்காப்புக் கலையான அடிமுறையை நேரடியாகச் செய்துகாட்டி அதிரடித் தொடக்கம் கொடுத்தனர்.

`அவள் விருதுகள்’
`அவள் விருதுகள்’
 • முதல் விருதாக ‘மாண்புமிகு அதிகாரி’ விருதைப் பெற்றுக்கொண்டார் இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ். சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துவரும் இவருக்கு ஐபிஎஸ் அதிகாரிகளான திலகவதியும் வனிதாவும் விருதை வழங்கினர்.

 • தமிழன்னை விருதை மருத்துவர் சாந்தா பெற்றார். 93 ஆண்டுக்கால வாழ்க்கையில் 68 ஆண்டுகளைப் புற்றுநோய் மருத்துவத்துக்காக அர்ப்பணித்த இவருக்கு மருத்துவர்கள் ஹெச்.வி.ஹண்டே, கே.எம்.செரியன், மல்லிகா திருவதனன் ஆகியோர் விருதை வழங்கினர். அரங்கமே எழுந்து நின்று சாந்தாவை வணங்கியது. அவரோ, “மொத்தப் பெருமையும் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டையே சேரும். அதில் நான் ஒரு சிறு அங்கம்தான்” என்றார். புற்றுநோய் பற்றிய தவறான நம்பிக்கைகளை நீக்கவும், புற்றுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கவும் பார்வையாளர்களால் உறுதிமொழி எடுக்கப்பட்டது. சாந்தாவின் உயரிய பணியைப் பாராட்டி விகடனின் மேலாண் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் ஒரு லட்ச ரூபாய்க்குக் காசோலை வழங்கினார்.

`அவள் விருதுகள்’
`அவள் விருதுகள்’
 • சாகச மங்கைக்கான விருதை நடிகர் பரத்திட மிருந்து பெற்றுக்கொண்டார் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் மரைன் பைலட்டான ரேஷ்மா நிலோஃபர். “உங்கள் குழந்தைகளை ஆண், பெண் என்று பிரித்துப்பார்க்காமல் அவர்களுக்குப் பிடித்த துறையில் சிறகடித்துப் பறக்கவிடுங்கள்” என, பெற்றோர் செய்யவேண்டிய சிறிய சாகசத்தைச் சொல்லிவிட்டுச் சென்றார் ரேஷ்மா.

 • நியூரோ-மஸ்குலர் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்துவரும் ஸ்வர்ணலதாவுக்கான ‘செயல் புயல்’ விருதை அவர் கணவரிடம், நீதியரசர் சந்துரு வழங்கினார்.

`அவள் விருதுகள்’
`அவள் விருதுகள்’
 • குயின் தொடரில் இளம்வயது சக்தி சேஷாத்ரியாகவே வாழ்ந்து தனது கரியரின் ஆரம்பத்திலேயே சிக்ஸர் அடித்திருந்தார் அஞ்சனா ஜெயபிரகாஷ். இவருக்கான ‘யூத் ஸ்டார்’ விருதை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா மற்றும் இயக்குநர் பிரசாத் முருகேசன் வழங்கினர்.

 • க்யூட் எக்ஸ்பிரஷன்களால் நெட்டிசன் மனங்களைக் கொள்ளையடித்த ‘பவி டீச்சர்’ சகாய பிரிகிடாதான் இந்த வருட ‘வைரல் ஸ்டார்.’ ‘நக்கலைட்ஸ்’ புகழ் தனம், ‘மிஸ் இந்தியா’ வென்ற அனு கீர்த்தி வாஸ் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகியோர் விருதை வழங்கினர்.

`அவள் விருதுகள்’
`அவள் விருதுகள்’
 • அவமானங்களை நடனத்தால் வென்று திருநங்கைகளின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் நர்த்தகி நடராஜுக்கு ‘கலைநாயகி’ விருது வழங்க பாடகி நித்ய மகாதேவனும், நடிகை அர்ச்சனாவும் மேடையேறினர். “பால்நிலை பொருட்டு பல அவமானங்களையும் உணர்வுமறுப்புகளையும் 1980-களில் சந்தித்தேன். அப்போதே எனது புகைப் படத்தை அட்டைப்படத்தில் அச்சிட்டு அங்கீகரித்தது விகடன். இந்த விருதும் என்னைப் போன்ற பலருக்கும் பாதை அமைத்துக்கொடுக்கும்” என்றார் நர்த்தகி நம்பிக்கையுடன்.

 • ‘பெஸ்ட் மாம்’ விருதை வழங்க அனிருத்தின் அம்மா லட்சுமி ரவிச்சந்தரும் தனுஷின் பெற்றோர் விஜயலட்சுமி - கஸ்தூரி ராஜாவும் மேடையேறினர். அனிருத் அம்மாவிடம் “அனிருத் எப்படி இவ்வளவு ஒல்லியா இருக்காரு?” என மிர்ச்சி விஜய் ஜாலியாகக் கேட்க “இப்போ எல்லாருமே அத நோக்கித்தானே ஓடிட்டிருக்காங்க” எனக் கலகலத்தார் லட்சுமி. அதே கேள்வியுடன் தனுஷ் பெற்றோர் பக்கம் திரும்ப “தனுஷோட சுறுசுறுப்புதாங்க காரணம்” என்று ஃபிட்னஸ் ரகசியம் உடைத்தார் விஜயலட்சுமி. இவர்களிடமிருந்து ‘பெஸ்ட் மாம்’ விருதை மகளுடன் பெற்றுக்கொண்டார் கலைச்செல்வி. மூளை வளர்ச்சியில் சிக்கலோடு பிறந்த, பார்வைச்சவாலுடைய குழந்தையான ஜோதியைப் பெரும் போராட்டத்துக்கு நடுவே பின்னணிப் பாடகியாக்கியிருக்கிறார் கலைச்செல்வி.

`அவள் விருதுகள்’
`அவள் விருதுகள்’
 • ‘பிசினஸ் குயின்’ விருதை மது சரண் பெற்றார். பியூட்டி சலூன், ஸ்கின் கேர், ஹேர் கேர் நிலையங்கள், உணவகங்கள், டே கேர் ஸ்கூல் என 10 நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திவரும் இவருக்கு கலைப்புலி எஸ்.தாணு மற்றும் நடிகை தீபா வெங்கட் விருது வழங்கினர். இத்துடன், நாணயம் விகடன் மற்றும் மார்க்கெட் ஆஃப் இந்தியா இணைந்து வழங்கும், ‘டிரேட் சாம்பியன் அவார்ட்ஸ் 2020’-ன் லோகோவும் அறிமுகம் செய்யப் பட்டது. மாவட்டந்தோறும் சிறந்த வர்த்தகர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.

 • பசுமைப் பெண் விருதை நடிகை சீதா மற்றும் ரம்யா பாண்டியனிடமிருந்து பெற்றார் விவசாயி தமிழ்ச்செல்வி. இந்த ‘வாழை நாயகி’க்கு விருதுடன் வாழைப் பூக்களினாலான கிரீடமும் அணிவிக்கப்பட்டது.

 • ‘இலக்கிய ஆளுமை’ விருதை இயக்குநர் வசந்தபாலன் மற்றும் எழுத்தாளரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான மு.ராஜேந்திரன் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்டார் கவிஞர் அ.வெண்ணிலா.

`அவள் விருதுகள்’
`அவள் விருதுகள்’
 • மேடையேறிய நதியாவிடம் “உங்களுக்கு வயசே ஆகல மேடம். இன்னைக்கு லைவ்வா அத உங்களுக்கு நிரூபிச்சுக் காட்றோம் பாருங்க” என நதியாவின் பழைய புகைப்படங்களைக் காட்டி, அவை எந்த வருடம் எடுக்கப்பட்டவை என்று அவரிடமே கேட்டு டெஸ்ட் வைத்தனர் தொகுப்பாளர்கள். எம்.குமரன் சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பார்த்து “1986, 87 இருக்கும்” என நதியா சொல்ல “நாங்கதான் அப்பவே சொன்னோமே” என்று தங்கள் வாதத்தை நிரூபித்துக் காட்டினார்கள் தொகுப்பாளர்கள். ‘கல்வி தேவதை’ விருதை ஆசிரியர் கிருஷ்ணவேணிக்கு வழங்கினார் நதியா. தன் முயற்சிகளால் முகப்பேர் புளியமர ஸ்கூலுக்குப் புதிய அடையாளம் கொடுத்தவர் கிருஷ்ணவேணி.

 • விளிம்புநிலை மற்றும் பழங்குடிச் சமூக மக்களின் நலனுக்காக உழைக்கும் மக்கள் மருத்துவர் அனுரத்னா ‘சேவை தேவதை’ விருதை மருத்துவர்கள் ஜீவானந்தம் மற்றும் கமலா செல்வராஜ் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

`அவள் விருதுகள்’
`அவள் விருதுகள்’
 • பேட்மின்டனில் சாதித்துக்கொண்டிருக்கும் இளம் வீராங்கனையான ஜெர்லின் அனிகாவுக்கு ‘லிட்டில் சாம்பியன்’ விருது வழங்கப்பட்டது. பேச்சு மற்றும் செவித்திறன் சவால் உடைய இவர் தன் தந்தையுடன் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார். விருதை நடிகர் சாந்தனு மற்றும் கிகி தம்பதியர் வழங்கினர்.

 • ‘சூப்பர் வுமன்’ விருதை நடிகைகள் அம்பிகா மற்றும் ரேகாவிடமிருந்து பெற்றுக்கொண்டார் பேராசிரியர் மோகனா. தனது 72-வது வயதிலும் சரா சரியாக மாதம் 12,000 கி.மீ தூரம் பயணித்துக் கொண்டிருக்கும் மோகனா புற்றுநோயையும் வென்றவர். தனக்கு மனவலிமையைத் தந்த புற்றுநோய்க்கு நன்றி சொல்லிப் பேச ஆரம்பித்தவர் “புற்றுநோய் குறித்த போதிய விழிப்புணர்வை அரசு செய்ய வேண்டும். மனிதர்கள் மலம் அள்ளும் அவலத்தை ஒழிப்பதே என் குறிக்கோள்” என, தனது சமூகக் குரலைப் பதிவுசெய்தார்.

`அவள் விருதுகள்’
`அவள் விருதுகள்’
 • ‘எவர்கிரீன் நாயகி’ விருதை இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மற்றும் இயக்குநர் கஸ்தூரி ராஜாவிடமிருந்து பெற்றுக்கொண்டார் குஷ்பு. “அறிமுகம் செய்துவைத்ததே நான்தான். தமிழில் ஒரு வார்த்தைகூடத் தெரியாத குஷ்பு, கலைஞர் இருக்கும் அதே மேடையில் பேசும் அளவுக்கு உயரம் தொட்டுள்ளார். இதற்குப் பின் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது” என மனதாரப் பாராட்டினார் எஸ்.பி.முத்துராமன். “சினிமா விருதுகள் பல வாங்கியிருக்கேன். ஆனால், அவள் விருது ரொம்ப ஸ்பெஷல். இங்கு இருக்கும் அனைவருமே என்னைவிட அதிகம் சாதித்தவர்கள். நாங்கள் திரையில்தான் நாயகிகள், இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் நாயகிகள்” என அனைவருக்கும் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார் குஷ்பு. எவர்கிரீன் நாயகிக்கு வாழ்த்து தெரிவிக்க அவரின் நெருங்கிய தோழியான கலா மாஸ்டரும் சர்ப்ரைஸாக மேடையேற ‘ரம் பம் பம் ஆரம்பம்’ பாடலுக்கு நடனமாடி அரங்கைத் தெறிக்கவிட்டனர் இருவரும்!