Published:Updated:

பாரதிதாசனுக்கு சென்னையில் நினைவு இல்லம் அமையுமா?

பாரதிதாசன்

சில படங்களுக்கு திரைக்கதையும் உரையாடலும் பாடல்களும் எழுதிய பாரதிதாசன், தன்னுடைய வாழ்வின் இறுதிக்கட்டத்தில் தானே திரைப்படங்கள் எடுக்க முனைந்தார்.

பாரதிதாசனுக்கு சென்னையில் நினைவு இல்லம் அமையுமா?

சில படங்களுக்கு திரைக்கதையும் உரையாடலும் பாடல்களும் எழுதிய பாரதிதாசன், தன்னுடைய வாழ்வின் இறுதிக்கட்டத்தில் தானே திரைப்படங்கள் எடுக்க முனைந்தார்.

Published:Updated:
பாரதிதாசன்

“என்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;

எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்துநூ றாக!

ஒன்றேனும் தமிழர்நடை யுடைபா வனைகள்

உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர்உள்ள தில்லை!

ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதா யில்லை!

ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவா யில்லை!

ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவா யில்லை!

ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதா யில்லை!”

இப்படி தமிழ்த் திரைப்படங்களை விமர்சனம் செய்து “தமிழ்நாட்டில் சினிமா” என்னும் கவிதையை எழுதிய காலத்திலேயே, 1937ஆம் ஆண்டில் ‘பாலாமணி அல்லது பக்காதிருடன்’, ‘கவி காளமேகம்’, ‘இராமானுசர்’ ஆகிய படங்களோடு, அவரது திரையுலகப் பயணம் தொடங்கியது. தொடர்ந்து சில படங்களுக்கு திரைக்கதையும் உரையாடலும் பாடல்களும் எழுதிய பாரதிதாசன், தன்னுடைய வாழ்வின் இறுதிக்கட்டத்தில் தானே திரைப்படங்கள் எடுக்க முனைந்தார்.

1960 அக்டோபர் 14 அன்று சென்னையில் பாவேந்தர் பிக்சர்ஸ் என்னும் திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். பாண்டியன் பரிசு, முரடன் முத்து, பாரதியார் ஆகிய படங்களைத் தயாரிப்பதற்கான வேலைகளை மேற்கொண்டார். அப்பொழுது சென்னை தியாகராய நகரின் ராமன் தெருவில் 10-ம் எண் வீட்டில் குடியிருந்தார். அப்பொழுது, அவ்வீட்டிற்கு வந்த கண்ணதாசன், "குரல் கெட்ட குயிலே கேள்” என, தான் பாரதிதாசனை விமர்சித்து எழுதியதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டார். சி.பா.ஆதித்தனார் தன்னுடைய நாம் தமிழர் இயக்கத்திற்காக தமிழுவுணர்வுப் பாடல்களை எழுதித் தருமாறு பாரதிதாசனை வேண்டிக்கொண்டதும் இவ்வீட்டில்தான்.

26-1-1962 அன்று அனைத்துலகத் தமிழ்க்கவிஞர் பெருமன்றம் என்னும் அமைப்பு பாரதிதாசனால் உருவாக்கப்பட்டதும் இவ்வீட்டில்தான். பொன்னடியான் உதவியோடு ‘குயில்’ இதழை அவர் மீண்டும் 1962 எப்ரல் 15 முதல் 1962 ஆகஸ்ட் 1ஆம் நாள் வரை வெளியிட்டது இவ்வீட்டிலிருந்துதான். ஈரோடு தமிழன்பன், சிற்பி பாலசுப்பிரமணியன் போன்றவர்களின் படைப்புகளுக்கு அவர் அணிந்துரையும், சீனி.விசுவநாதன் போன்றோருக்குக் கட்டுரைகள் எழுதிக்கொடுத்ததும் இவ்வீட்டிலிருந்துதான். அவரது கண்ணகி புரட்சி காப்பியம், மணிமேகலை வெண்பா ஆகியன அச்சேறியதும், மதுரை சண்முகவடிவு சுப்புலெட்சுமி பெங்களூரில் தமிழிலும் பாடினார் என்பதற்காகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து பாரதிதாசன் கண்டித்து கூட்டம் ஒன்றை நடத்தியதும் அவர் இவ்வீட்டில் வாழ்ந்தபொழுதுதான்.

சென்னையில் பாரதிதாசன் வாழ்ந்த இல்லம்
சென்னையில் பாரதிதாசன் வாழ்ந்த இல்லம்
சென்னையில் பாவேந்தர் வாழ்ந்த இந்த வீட்டை நாட்டுடைமையாக்கி, அதனுடைய பழமை மாறாமல், பாவேந்தர் பெயரால் ஒரு நூலகத்தையும் ஆய்வகத்தையும் தமிழிசை உள்ளிட்ட கலைகளைக் கற்றுத்தரும் கலைப்பள்ளி ஒன்றையும் தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

அவரால் நம்பப்பட்டவர்கள் பலரும் ஒத்துழைக்காததால் அவரது திரைப்பட முயற்சிகள் தடைபட்டதும் அந்தத் தடைகளைத் தாண்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொழுதே 21.4.1964ஆம் ஆண்டில் தன்னுடைய 73ஆவது வயதில் சென்னை அரசு மருத்துவமனையில் காலமாதும் அவர் இவ்வீட்டில் வாழ்ந்தபொழுதுதான்.

இவ்வாறு பாரதிதாசனின் இறுதிக்கட்ட வாழ்வோடு ஒன்றிவிட்ட அவ்வீடு இப்பொழுதும் பழமை மாறாமல் இருக்கிறது. பாரதியாருக்கு அவர் பிறந்த எட்டையபுரத்திலும், வாழ்ந்த புதுச்சேரியிலும் நினைவு இல்லங்கள் இருந்தபொழுதிலும் சென்னை திருவல்லிக்கேணி துளசிங்கப்பெருமாள் கோவில் தெருவில் அவர் வாழ்ந்த வீட்டை நாட்டுடையாக்கி நினைவு இல்லம் அமைத்ததைப் போல, பாவேந்தர் வாழ்ந்த இந்த வீட்டையும் நாட்டுடைமையாக்கி, அதனுடைய பழமை மாறாமல் பாவேந்தர் பெயரால் ஒரு நூலகத்தையும் ஆய்வகத்தையும் தமிழிசை உள்ளிட்ட கலைகளைக் கற்றுத்தரும் கலைப்பள்ளி ஒன்றையும் தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

அரிஅரவேலன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.