கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

சூப்பர் மேன்... சூப்பர் வுமன்!

மகேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
News
மகேஸ்வரி

என் படங்களைப் பார்க்கிறவங்களுக்குத் தெரியும், நான் செலக்ட் பண்ற படங்கள் எல்லாமே கலகலன்னு எண்டர்டெயின்மென்டா இருக்கும்னு.

‘உங்கள் வாழ்க்கையையும் உலகத்தையும் மாற்றும்படி ஓர் அபூர்வ சக்தி உங்களுக்குக் கிடைக்குமென்றால், என்ன சக்தியைக் கேட்பீர்கள்?’ என இவர்களைக் கேட்டோம்.
சூப்பர் மேன்... சூப்பர் வுமன்!

சாக்ஷி அகர்வால்

“பெண்களுக்கு எப்போதும் ஒரு சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி இருக்கணும்னு ஆசைப்படறேன். எதிர்பாராத பிரச்னையிலும் உயிருக்கு ஆபத்தான சூழலிலும் சிக்குகிற பெண்களைக் காக்க உதவுற ஓர் அபூர்வ சக்தியைக் கேட்பேன். இந்த நாட்டில் உள்ள பெண்களை மட்டுமல்ல.. இந்த பூமியில் உள்ள பெண்கள் அத்தனை பேரையுமே ஆபத்திலிருந்து காப்பாத்தணும்.”

சூப்பர் மேன்... சூப்பர் வுமன்!

வாணி போஜன்

“என்னுடைய வாழ்க்கையை மட்டும் மாத்துற எந்த அபூர்வ சக்தியும் எனக்கு வேண்டாம். ஏன்னா, என் வாழ்க்கை எப்படி இருக்கோ, அதை அப்படியே வாழத்தான் விரும்பறேன். ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் நல்ல மனுஷியா இருக்க அவை உதவும். ஆனா, உலகத்தை மாத்தற ஒரு சக்தி கிடைக்குதுன்னா, இப்போதைக்கு கொரோனாவை முழுமையா ஒழிக்கற சூப்பர் பவரைக் கேட்பேன். நான் கேட்க விரும்புறது கரெக்ட்தானே?’’

சூப்பர் மேன்... சூப்பர் வுமன்!

நிக்கி கல்ராணி

“என் படங்களைப் பார்க்கிறவங்களுக்குத் தெரியும், நான் செலக்ட் பண்ற படங்கள் எல்லாமே கலகலன்னு எண்டர்டெயின்மென்டா இருக்கும்னு. ஆடியன்ஸும் சந்தோஷமாப் பார்த்துட்டுப் போவாங்க. ஸ்ட்ரெஸ் ஃப்ரீயா வச்சுக்கற படங்கள பண்றதுக்குக் காரணமிருக்கு. நமக்கு ஸ்ட்ரெஸ் இருப்பதால்தான் நிறைய பிரச்னைகள் வருது. நாம ஹேப்பியா இருந்தா சுத்தி இருக்கறவங்களும் சந்தோஷமா இருப்பாங்க. அதனால எல்லாரையும் ஸ்ட்ரெஸ் ஃப்ரீயா இருக்க வைக்கற அபூர்வ சக்தியைக் கேட்பேன்.”

சூப்பர் மேன்... சூப்பர் வுமன்!

மகேஸ்வரி

“சக்தி கிடைக்குதோ இல்லையோ, இப்படியொரு கேள்வியை யாராவது கேட்க மாட்டாங்களா, அதுமூலமா கொஞ்ச நேரத்துக்காவது அந்த உணர்வை அனுபவிச்சிட மாட்டோமான்னு ரொம்ப நாளா நினைச்சிட்டிருந்தேன். ஒண்ணுமில்லீங்க, நான் விரும்பற சூப்பர் பவர், கெட்டவங்களை மட்டும் எனக்கு அடையாளம் கண்டுபிடிச்சிடணும்கிறதுதான். ‘நாம நினைக்கிறது இவளுக்கு எப்படித் தெரியுது’ன்னு அவங்க ஷாக் ஆகிடணும். அவங்க நினைப்பு, போடற திட்டம் எல்லாத்தையும் இதன் மூலமா நான் தவிடு பொடியாக்கிட்டேன்னா, அதன்பிறகு என்னைச் சுத்தி ஒருத்தர்கூட கெட்டவங்கன்னு இருக்க மாட்டாங்க இல்லையா?”

சூப்பர் மேன்... சூப்பர் வுமன்!

இயக்குநர் வசந்தபாலன்

“இப்படியான கேள்வியும் அதுக்குக் கிடைக்கிற பதிலுமே முக்கால்வாசி பாலிவுட் படங்களின் கதை ஆதாரமா இருக்கு. `சூப்பர்மேன்’, `ஸ்பைடர்மேன்’ தொடங்கி ‘அவெஞ்சர்ஸ்’ வரை உலகத்தைக் காப்பாற்றும் ஒரு சக்தி கதாநாயகனுக்குக் கிடைத்துவிட, தனி மனிதனாக அவன் உலகத்தைக் காப்பாத்துறான்னு சொல்றாங்க. என்னைப் பொறுத்தவரை தனிமனிதனோ அல்லது ஏதேனுமொரு சக்தியோ உலகைக் காப்பாத்தும்னு நம்புறது மூடநம்பிக்கை.

ஒரு தத்துவம்தான் உலகத்தையும் உங்களையும் காப்பாற்றும் பெரும் சக்தி. உலகெங்கும் 16 வகையான ஆட்சி முறைகள் இருக்கின்றன. எல்லா ஆட்சி முறைகளும் விமர்சனங்களுக்குள்ளாகி, கேலிக்குள்ளாகி பலவீனமாகியும் நிற்கின்றன. எனக்குக் கொஞ்சமாவது நம்பிக்கை தரும் ஜனநாயக அமைப்பிலுமே தேர்தல் முறையும் நீதித்துறையும் ஆட்டம் கண்டு நிற்கின்றன. ஆகவே, ஒருவேளை நான் நம்பாத ஒரு சக்தி எனக்குக் கிடைக்கும்னா, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்பெறும்படி பதினேழாவது ஆட்சிமுறையைக் கண்டுபிடிக்கும் சக்தியை வேண்டி நிற்பேன்.”

சூப்பர் மேன்... சூப்பர் வுமன்!

கருணாகரன்

“கோபப்படக் கூடாதுன்னு கேட்பேன். கோபம் இல்லைன்னாலே நம்ம தனிப்பட்ட வாழ்க்கையும் மாறிடும்; உலகமும் மாறிடும். எல்லோரும் சந்தோஷமா இருக்கலாம். என்ன நடந்தாலும் கோபப்படாமல் இருக்கிறது பெரிய விஷயம். சென்னையில ரோட்டுல போகும்போது, குறைந்தபட்சம் ரெண்டு பேரோட சண்டை போடாமல் கார், பைக் ஓட்டிக்கிட்டுப் போக முடியாது. அந்தச் சண்டைக்குக் காரணம் கோபம்தானே? அதேபோல எனக்கு மட்டுமல்ல, மத்தவங்களுக்காகவும் சேர்த்தேதான் இந்த வரத்தைக் கேட்டாகணும். ஏன்னா, நான் கோபப்படாம இருக்கிறேன்னு வலிய வம்புக்கு யாரும் வரக்கூடாதில்லையா?”

சூப்பர் மேன்... சூப்பர் வுமன்!

இயக்குநர் பிரம்மா

“மனிதனுக்கு இருக்கிற ஆறாவது அறிவை அகற்றிவிடுவேன். அதுவே தேவைக்கு அதிகமாக ஆசைப்படவும் யோசிக்கவும் வைக்கிறது. பறவைகளும் விலங்குகளும் தன் உணவிற்காக மட்டும் அலைந்து திரிந்து, நிம்மதி கொள்கின்றன. ஆனா மனித சிந்தனைதான் அழிவுப்பாதையை நோக்கி நகர்த்திக்கொண்டு போகிறது. அதனால், ஆறாவது அறிவு வேண்டாம். இந்த அறிவுதான் பூமியில் மற்ற ஜீவராசிகளையுமேகூட நிம்மதியாக வாழ விடாமல் செய்கிறது. நமது சமூகம், நமது குடும்பம் என எல்லோரும் இதனால் குறுகி நின்று விடுகிறார்கள்.”

சூப்பர் மேன்... சூப்பர் வுமன்!

ஆர்.டி. ராஜசேகர்

“லாக்டௌன் சமயத்தில் சொந்த ஊருக்குப் போயிருந்தேன். கண்ணுக்குக் குளிர்ச்சியா வயல்களில் நல்ல பசுமை. பெட்ரோல் வாசனையே இல்லாத சுகாதாரம் நிரம்பிய காற்று தாராளமாகக் கிடைச்சுது. அதனால, அந்த அபூர்வ சக்தி எனக்குக் கிடைச்சா மொத்த இந்தியாவுக்கும் சாப்பாடு கிடைக்கிற மாதிரி நெல், தானிய வகைகள் விளைகிற ஒரு இடமா தமிழ்நாட்டை மாற்றிவிடுவேன்.”