Published:Updated:

`100 பேருக்கு உணவு, இன்ஸ்டா மூலம் நிதி திரட்டல்!' - கொரோனா சூழலில் சேவையாற்றும் நட்சத்திர தம்பதிகள்

கணேஷ்கர் - ஆர்த்தி
கணேஷ்கர் - ஆர்த்தி

நட்சத்திர தம்பதியரான கணேஷ்கர் - ஆர்த்தி மற்றும் அமித் பார்கவ் - ஶ்ரீரஞ்சனி தம்பதியர், இக்கட்டான கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு உணவு கொடுப்பது, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்குவதற்கு நிதி திரட்டிக்கொடுப்பது என நம்பிக்கையை விதைக்கின்றனர். இந்தத் தம்பதியர்களிடம் பேசினோம்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், அனைத்துத் தரப்பு மக்களும் பல்வேறு வகையிலும் சிரமங்களையும் துன்பங்களையும் எதிர்கொண்டனர். அவர்களுக்கு உதவும் நோக்கத்தில், சினிமா மற்றும் சின்னத்திரைப் பிரபலங்கள் பலரும் தன்னார்வலர்களாகக் களத்தில் இறங்கினர். அந்த வகையில், சினிமா நட்சத்திரங்களான கணேஷ்கர் - ஆர்த்தி தம்பதியர், நூற்றுக்கணக்கானோருக்குத் தொடர்ந்து உணவு கொடுத்து வருகின்றனர்.

கணேஷ்கர் - ஆர்த்தி
கணேஷ்கர் - ஆர்த்தி

சின்னத்திரை நட்சத்திரங்களான அமித் பார்கவ் - ஶ்ரீரஞ்சனி தம்பதியர், அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்குவதற்கு நிதி திரட்டிக்கொடுக்கும் பணிகளைச் செய்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில், நம்பிக்கையை விதைக்கும் இந்தத் தம்பதியர்களிடம் பேசினோம்.

குடும்பத்தினர் ஆதரவுடன், உணவின்றித் தவிக்கும் பலருக்கும் வாரம்தோறும் உணவு வழங்கும் பணியைப் பல ஆண்டுகளாகச் செய்துவந்துள்ளார் கணேஷ்கர். திருமணத்துக்குப் பிறகு, மனைவி ஆர்த்தியுடன் இணைந்து உணவு வழங்கும் சேவையை இடைவிடாமல் செய்துவருகிறார் கணேஷ்கர். இதுகுறித்துப் பேசும் கணேஷ்கர் - ஆர்த்தி இணை, ``வாரம்தோறும் வியாழக்கிழமை தோறும் கோயில்லயும், ஞாயிற்றுக்கிழமை தோறும் சாலையோரத்துல இருக்கிற ஆதரவற்றவங்க, சாப்பாடு இல்லாம சிரமப்படுறவங்களுக்கும் உணவு கொடுக்கிறதை வழக்கமா செய்துட்டிருக்கோம். இதுக்காகவே வாரத்துல ரெண்டு தினங்கள்ல ஷூட்டிங், வெளியூர் பயணங்களைக் கூடுமானவரை தவிர்த்திடுவோம்.

கணேஷ்கர் - ஆர்த்தி
கணேஷ்கர் - ஆர்த்தி
ஊரடங்கில் பசிபோக்கும் அன்பு சுவர் - நெகிழவைக்கும் கும்பகோணம் இளைஞர்களின் சேவை!

வீட்டுலயே சமைச்சு, பார்சல் பண்ணிப்போம். வளசரவாக்கம் முதல் வள்ளுவர் கோட்டம் வரை கார்லயே கொண்டுபோய் எங்க கையாலயே மக்களுக்கு உணவு கொடுத்து சந்தோஷப்படுவோம். சாப்பாடு வாங்கினதும், `ஒருவேளை பசியாவது நமக்குத் தீர்ந்திடும்'னு மக்கள் முகத்துல விவரிக்க இயலாத மகிழ்ச்சி வெளிப்படும். அப்போ அவங்க வெளிப்படுத்துற அன்புக்கும் நன்றிக்கும் எதுவுமே இணையாகாது. இந்த நிலையில, கொரோனா இரண்டாவது அலையில மறுபடியும் லாக்டெளன் வந்து ஆதரவற்ற மக்கள் பலரும் உணவுக்கு சிரமப்பட்டாங்க. அதனால, வாரத்துல நாலு நாள்கள் வரைக்கும் உணவு கொடுக்க ஆரம்பிச்சோம்.

கடந்த ரெண்டு மாதங்களா, கேட்டரிங் வேலை செய்யுற நண்பர் ஒருத்தர்கிட்ட ஆர்டர் கொடுத்து உணவுகளை வாங்கிக்குறோம். கலவை சாதம், சாம்பார், ரசம் மற்றும் பொரியலுடன் கூடிய சாதம்னு ஏதாச்சும் ஒரு வகை உணவை, மதிய நேரத்துல மட்டும் தலா நூறு பேருக்குக் கொடுக்கிறோம். இந்த முறை சாமான்ய மக்கள் தவிர, முன்களப் பணியாளர்களுக்கும் உணவு கொடுக்கிறோம். எங்களால முடிஞ்ச இந்தச் சின்ன பங்களிப்பை, நிறைவுடன் செய்யுறோம். இன்னும் அதிகளவிலான மக்களுக்கு உதவி செய்ய ஆசை. அதுக்கான முயற்சியிலும் கவனம் செலுத்துறோம்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

அமித் பார்கவ் - ஶ்ரீரஞ்சனி
அமித் பார்கவ் - ஶ்ரீரஞ்சனி

ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்கும் பணிகளுக்கு நிதி திரட்டும் வேலையில் அதிக ஆர்வம் செலுத்திவருகின்றனர் அமித் பார்கவ் - ஶ்ரீரஞ்சனி இணை. இதுகுறித்துப் பேசுபவர்கள், ``வட மாநிலத்தைத் தலைமையிடமா கொண்டு செயல்படுற `மிலாப்'ங்கிற அமைப்பு, கோவிட் நேரத்துல பலதரப்பட்ட மக்களுக்கும் உதவிகளைச் செய்யுறாங்க. அந்த அமைப்புடன் தொடர்புடைய நிர்மல் ராகவன், தமிழ்நாட்டுலயும் மக்களுக்குத் தேவையான உதவிகளுக்குப் பலருடன் இணைஞ்சு வேலை செய்யுறார். அவருடன் எங்களுக்கு அறிமுகம் கிடைச்சது.

லாக்டெளன் நேரத்துல ஆக்ஸிஜன் பற்றாக்குறைப் பெரும் சிக்கலா உருவாச்சு. இதுக்காகப் பலரும் பெரு நகரங்கள்ல கூடுதல் கவனம் கொடுத்த நிலையில, டெல்டா பகுதிகள்லயும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருந்ததைக் கேள்விப்பட்டோம். அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை உட்பட டெல்டா பகுதிகள்ல பல்வேறு கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிகளுக்கும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தேவைப்படுதுனு தெரிஞ்சது. அதுக்காக 20 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும்னு சொன்னாங்க. உடனே நிதி திரட்டுற முயற்சியில இறங்கினோம். இதுகுறித்து தெரிஞ்ச நண்பர்கள், உறவினர்கள்கிட்ட பேசினோம்.

ஆக்ஸிஜன் செறிவூட்டி வழங்கும் பணி
ஆக்ஸிஜன் செறிவூட்டி வழங்கும் பணி
`கொரோனா நோயாளிகளுக்கு மூன்று வேளையும் ஊட்டச்சத்து உணவு!' - ஒரு குடும்பத்தின் உன்னத சேவை

எங்க ரெண்டு பேரின் இன்ஸ்டாகிராம் பக்கத்துலயும் மக்களுடன் நேரலையில உரையாடினோம். நிதி திரட்டுற நோக்கம் பத்தி பேசினதோடு, அந்த நேரலையில மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில பாட்டுப் பாடுறது உட்பட பல்வேறு வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இதுவரைக்கும் நாலு லட்சம் ரூபாய்க்கு மேல நிதி கிடைச்சிருக்கு. அதன் மூலம் முதல்கட்டமா அஞ்சு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்கப்பட்டு, அவை சில கவர்மென்ட் ஆஸ்பத்திரிகள்ல மக்கள் பயன்பாட்டுல இருக்கு.

இன்னும் சில ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்குறத்துக்கு நிதி திரட்டுற வேலைகளைத் தொடர்ந்து செய்யுறோம். லாக்டெளன்ல ஷூட்டிங் இல்லாட்டியும்கூட, எங்களால பாதுகாப்பா இருக்க முடியுது. ஆனா, அடிப்படை தேவைகள் கிடைக்காம நிறைய மக்கள் சிரமப்படுறாங்க. இதையெல்லாம் தெரிஞ்சுகிட்டு, எங்களால அமைதியா கடந்துபோக முடியல. அதனாலதான், எங்களால இயன்ற பங்களிப்பைக் கொடுக்கும் நோக்கத்துல நிதி திரட்டிக்கொடுக்கிறோம்" என்று புன்னகையுடன் முடித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு