சினிமா
Published:Updated:

“முதல் வேலை இதுதான்!”

அம்மு ராமச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
அம்மு ராமச்சந்திரன்

ஒரு மழைக்காலத்தில் பலரை வெள்ளத்தில் இருந்து மீட்டு, உணவும் அளித்து அவர்களைக் காத்தது இன்றைக்கும் எனக்கு நினைவு இருக்கிறது

‘நீங்கள் பார்த்த முதல் வேலை எது, அதில் மறக்க முடியாத நினைவுகள் எவை’ என்று இவர்களிடம் கேட்டோம்.
“முதல் வேலை இதுதான்!”

வசந்த் ரவி (நடிகர்)

“என்னைப் பொறுத்தவரைக்கும் முதன்முதலாப் பார்த்ததுன்னு ரெண்டு வேலைகளைச் சொல்றதுதான் சரியா இருக்கும். படிப்பு முடிஞ்சதும் வேலைன்னு செஞ்சது எங்களுடைய சொந்த ஓட்டல்லதான். அப்பாவுக்குத் துணையா ஓட்டல் நிர்வாகத்துல சிலநாள் ஈடுபட்டேன். சம்பளமில்லாத வேலை. ஆனாலும் அதை ஈடுபாட்டுடன் செய்தேன்.

சம்பளம் வாங்கிட்டுச் செய்த முதல் வேலைன்னா அது `தரமணி' படத்துல நடிச்சதுதான். அந்தப் படம் என் வாழ்க்கையில முக்கியமான திருப்புமுனைன்னு சொல்லலாம். படத்துல ஒரு காட்சியில ரயில்வே ஸ்டேஷன்ல குடிச்சிட்டு நடிக்கிற மாதிரி ஒரு சீன். அந்தக் காட்சிக்காக நிஜமாகவே குடிச்சேன். வாழ்க்கையில் முதன்முதலா நான் குடிச்சதும் அன்னைக்குத்தான். படம் வெளியானதும், அந்தக் காட்சிக்குப் பெரிய வரவேற்பும் கிடைச்சது.''

“முதல் வேலை இதுதான்!”

பார்வதி நாயர் (நடிகை)

“ ‘ஏசியா நெட்'டின் ஆங்கிலச் சேனலான ரோஸ் பவுல்ல வி.ஜே-வா ஒரு ஷோ பண்ணினதுதான் என்னுடைய முதல் வேலை. அந்தச் சமயம் ஸ்கூல் ஸ்டூடண்ட். `ஷோ'வுக்கு செமயான வரவேற்பு கிடைச்சது. இத்தனைக்கும் ஸ்கூல் விடுமுறை நேரத்தில சும்மா வாய்ப்பு கிடைச்சதேன்னு பண்ணினேன். ஆனா, விடுமுறை முடிஞ்சு ஸ்கூல் போனப்ப, கிளாஸ்ல ஃப்ரெண்ட்ஸ் அவ்வளவு பேரும் என்னைப் பாராட்டினது இன்னைக்கும் நல்லா நினைவில் இருக்கு. அவ்வளவு தூரத்துக்கு அந்த ஷோ ரீச் ஆச்சு.''

“முதல் வேலை இதுதான்!”

விவேகா (பாடலாசிரியர்)

“பாடலாசிரியர் ஆவதற்கு முன்னால் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் செய்தியாளராக இருந்தேன். நிறைய பேரை சந்தித்ததும், மிக எளிமையான மனிதர்களைப் பேட்டி கண்டதும், அவர்களின் வாழ்க்கையை அறிந்துகொண்டதும் இன்றுவரை உதவுகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் நம்பிக்கையோடு நம்மிடம் பல உண்மைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது மனம் உடைந்து அழுதுவிடுவார்கள். நமது வார்த்தைகளில் அவர்கள் ஆறுதல் பெறுவதை நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு மழைக்காலத்தில் பலரை வெள்ளத்தில் இருந்து மீட்டு, உணவும் அளித்து அவர்களைக் காத்தது இன்றைக்கும் எனக்கு நினைவு இருக்கிறது.”

“முதல் வேலை இதுதான்!”

அம்மு ராமச்சந்திரன் (டி.வி நடிகை)

“என் முதல் வேலையே மீடியாவில்தான் ஆரம்பிச்சது. பள்ளி நாள்களிலேயே பாண்டிச்சேரியில் உள்ளூர் சேனலில் ஆங்கரிங் பண்ணினேன். நடிகர் வையாபுரியோட பேட்டியை வேறு ஒரு ஆங்கர் எடுக்கிறதா இருந்துச்சு. கடைசி நேரத்துல திடீர்னு அவங்களால வரமுடியாமப் போக, அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. அதுதான் ஃபர்ஸ்ட் இன்டர்வியூ. டி.வி-க்கு அதுதான் தொடக்கப் புள்ளி. அந்த ஷூட் முடிஞ்சதும் சம்பளமா 1000 ரூபாய் கொடுத்தாங்க. அப்போ எனக்கு அது பெரிய தொகை. அந்தப் பணத்தை வாங்கும்போது அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. அம்மாகிட்ட அதைக் கொடுத்தேன். அதுல இருந்துதான் தொடர்ந்து நிறைய சேனலில் ஆங்கரிங் பண்ண ஆரம்பிச்சேன். 'தாக்‌ஷாயினி'ன்னு ஒருத்தங்கதான் ஆங்கரா என்னைச் செதுக்கினாங்க. இந்த நேர‌த்துல அவங்களுக்கும் என் நன்றியைச் சொல்லியே ஆகணும்.”

“முதல் வேலை இதுதான்!”

தங்கம் தென்னரசு (அமைச்சர்)

“அரசியல் குடும்பப் பின்னணி இருந்த போதும் படித்து முடித்ததும் முழுநேர அரசியலில் ஈடுபடவில்லை. பொறியியல் படிப்பை முடித்து விட்டு முதன்முதலாக வேலைக்கு என நான் சேர்ந்தது, ஸ்பிக் உரத் தொழிற்சாலையில். படித்த படிப்புடன் தொடர்புடைய அந்தப் பணியில் இருந்த நாள்களில் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. குறுகிய காலமே அந்த வேலையில் இருந்தாலும் அந்த நாள்களின் நினைவுகள் என் மனதை விட்டு எப்போதும் அகலாது. ஒரு தொழிற்சாலையில் முதல் பணியைத் தொடங்கி, இன்றைக்குத் தொழில்துறை அமைச்சராகியிருக்கிறேன் என்றால், அது காலமும் கழகமும் தந்த கொடை என்றுதான் சொல்வேன்.”

“முதல் வேலை இதுதான்!”

சுமதி (சொற்பொழிவாளர்)

“இருபது வயதில் வீட்டை விட்டு வெளியேறி, தஞ்சாவூரில் 'New honest & introducers' என்ற நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக வேலைக்குச் சேர்ந்தேன். அந்த வேலையில் சேர்ந்ததற்கு ஒரே காரணம், தங்குமிடம் இலவசம் என்பதுதான். என்னுடைய வேலை, தஞ்சாவூர் வீதிகளில், முதுகெலும்பு முறியும் வலியோடு, தோளில் புத்தகங்களைச் சுமந்து சென்று வீடு வீடாக விற்பதுதான். என்னோடு அபிராமி என்ற பெண்ணும் இருந்தாள். தினமும் இரவு, மொட்டை மாடியில் அவளிடம் ஏதாவது ஒரு தலைப்பில் மேடையில் பேசுவதுபோலப் பேசிக்காட்டுவேன்.அந்தப் பேச்சுதான், வறுமையிலிருந்து என்னை மீட்டு, இன்று உலகெங்கும் போய் சொற்பொழிவாற்றுபவளாக உயர்த்தியிருக்கிறது.

பணியின்போது ஒருமுறை, கும்பகோணத்தில் ஒரு கல்லூரிக்கு விற்பனைப் பிரதிநிதியாகச் சென்றபோது, அக்கல்லூரி முதல்வர் என்னை மிக கடுமையாகப் பேசி விரட்டியதுடன், வாட்ச்மேனிடம், `இவங்களையெல்லாம் ஏன் உள்ள விடுறீங்க' எனக் கோபப்ப‌ட்டார். பதினைந்து வருடங்கள் கழித்து, அதே கல்லூரிக்கு என்னைச் சிறப்பு விருந்தினராக என் பேச்சு அழைத்துப் போனது.

அன்று நான் சேல்ஸ் ரெப் ஆக வேலை பார்த்த தஞ்சாவூரில், இன்று பள்ளி, கல்லூரிகள், லயன்ஸ், ரோட்டரிக்கு பேசப் போகும்போது, ஊரெங்கும் வரவேற்புப் பதாகைகளில் சிரித்துக்கொண்டிருக்கும் என்னைப் பெருமையாகப் பார்த்துக்கொள்வேன்.”