Published:Updated:

தர்மசங்கடம் பாஸ்!

பிந்து - சுஜா வருணி
பிரீமியம் ஸ்டோரி
பிந்து - சுஜா வருணி

கொஞ்ச நாள் முன்னாடி என்னுடைய பெயர்ல சமூகவலைதளங்கள்ல போலியா கணக்கு இருக்குன்னு எனக்குத் தகவல் வந்தது

தர்மசங்கடம் பாஸ்!

கொஞ்ச நாள் முன்னாடி என்னுடைய பெயர்ல சமூகவலைதளங்கள்ல போலியா கணக்கு இருக்குன்னு எனக்குத் தகவல் வந்தது

Published:Updated:
பிந்து - சுஜா வருணி
பிரீமியம் ஸ்டோரி
பிந்து - சுஜா வருணி
தர்ம சங்கடமான சூழல் என்பது வாழ்க்கையில் பலரும் எதிர்கொள்ளும் ஒன்றுதான். சிலருக்குக் காலத்துக்கும் மறக்காது அந்த நிகழ்வு. ‘உங்கள் வாழ்க்கையில் அப்படி என்ன நடந்தது’ என இவர்களைக் கேட்டோம்.
தர்மசங்கடம் பாஸ்!

பிந்து (நடிகை)

“ஒருமுறை சென்னையில் ஷாப்பிங் போயிருந்தேன். அங்க எனக்குப் பிடிச்சிருந்த ஒரு புடவையை நான் கேட்க, கரெக்டா அதே புடவையை அதே டைம்ல இன்னொரு பொண்ணும் கேட்டாங்க. என்ன ஒரு சோகம்னா, அந்தக் குறிப்பிட்ட டிசைன்ல அந்த ஒரு புடவைதான் இருக்கு. யார் முதல்ல கேட்டதுன்னு தெரியாம கடைக்காரர் முழிச்சிட்டிருக்கார். யாருக்குக் கொடுக்கறதுன்னு அவருக்கு ஒரே குழப்பம். அந்த சேல்ஸ்மேனும் சரி, புடவையைக் கேட்ட அந்தப் பொண்ணும் சரி, டிவியில என் சீரியலைப் பார்க்கற வங்கதானாம். கடைசியில அந்தப் பொண்ணு எனக்காக விட்டுக்கொடுக்க, புடவையை நானே எடுத்துட்டு வந்துட்டேன்.

அப்ப அந்தப் பொண்ணுகிட்ட மறக்காம நம்பர் வாங்கிட்டு, என்னுடைய போன் நம்பரும் கொடுத்துட்டு வந்தேன். வீட்டுக்கு வந்த பிறகு மறுநாள் யோசிச்சுப் பார்த்தப்பதான். நம்ம சீரியலை ரசிக்கறவங்கன்னு தெரிஞ்சும் அந்த இடத்துல விட்டுக்கொடுக்காம வந்துட்டோமேன்னு ரொம்ப ஃபீலா இருந்தது.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, அவங்க அப்பப்ப போன் செய்து நலம் விசாரிப்பாங்க. என்னுடைய சீரியல் பார்த்துட்டுப் பேசுவாங்க. இப்ப ரெண்டு பேருக்கிடையில் நல்ல நட்பு உண்டாகிடுச்சு. இருந்தாலும் இன்னைக்கும் அவங்ககிட்ட இருந்து போன் வர்றப்பெல்லாம் எனக்குள்ள ஒரு தர்மசங்கடமான உணர்வு வர்றதைத் தடுக்க முடியலை.’’

தர்மசங்கடம் பாஸ்!

சித்து (நடிகர்)

“கொஞ்ச நாள் முன்னாடி என்னுடைய பெயர்ல சமூகவலைதளங்கள்ல போலியா கணக்கு இருக்குன்னு எனக்குத் தகவல் வந்தது. செக் பண்ணிப் பார்த்தா, ‘என்னுடைய மேனஜர்’னு குறிப்பிட்டு ஒரு கணக்கு இயங்கிட்டிருந்தது. கணக்கை ஆபரேட் பண்றது யாருன்னே தெரியலை. கடைசியில அந்த அக்கவுன்ட் பத்தி எல்லாருக்கும் உஷார் படுத்தினேன்.

இதுல என்ன தர்மசங்கடம்னா, இந்த மாதிரியான போலிக் கணக்குகள் பத்தி எச்சரிக்கை செய்றப்ப, நம்ம கூடவே இருக்கிற நண்பர்கள், உதவியாளர்கள் சிலர், நான் அவங்களைத் தப்பா நினைச்சுக் கிடுவேனோன்னு நினைச்சு சங்கடப்படுறாங்க. எனக்குமே அந்த நேரத்துல ஒரு சங்கடமாத்தான் இருந்தது. யாரோ செய்ற சில சேட்டைகள் சமயங்கள்ல ச‌ம்பந்த மில்லாதவங்களைக்கூட சங்கடப் படுத்திடுது.’’

தர்மசங்கடம் பாஸ்!

சுஜா வருணி (நடிகை)

“ஒருமுறை என் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக். ஹாஸ்பிட்டலுக்குப் போய் ஆன்ஜியோகிராம் பண்ணிப் பார்த்தோம். இதயத்துல பிளாக் இருக்குன்னு சொன்னாங்க. சரிசெய்ய இரண்டரை லட்சம் வரை தேவைப்பட்டது. என்கிட்ட கையில அன்னைக்கு 20,000 ரூபாய்தான் இருந்தது. அழுதுட்டே இருந்தேன். யார்கிட்ட கேட்கிறதுன்னு ரொம்பவே தயக்கமா இருந்தது.

கடைசியில ரொம்பத் தெரிஞ்சவங்ககிட்ட மட்டும் கொஞ்சம் கொஞ்சமா பணம் வாங்கற மாதிரி ஆச்சு. அவங்க என் தேவையறிஞ்சு உடனடியாத் தந்தாலும், எனக்கு அந்த உதவியைக் கேட்கறதுக்கு ரொம்பவும் தர்மசங்கடமா இருந்தது. ஆனா அந்த உதவியாலதான் அம்மா உடல்நிலை சரியானது. அந்தச் சூழலை இன்னைக்கு நினைச்சாலும் ஒரு மாதிரியாத்தான் இருக்கு.’’

தர்மசங்கடம் பாஸ்!

இயக்குநர் சரண்

“மாதவனை வைத்து ‘ஜேஜே’ படத்தை இயக்கிக்கொண்டிருந்த நேரம் அது. அப்பதான் ‘ஜெமினி புரொடக்‌ஷன்’ங்கிற என்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனமும் தொடங்கப் பட்டது. அந்தக் கம்பெனிக்காக ஹரி இயக்க ‘ஆறு’ படத்துக்கு ஒப்பந்தம் செய்திருந்தேன்.

‘ஹீரோவாக மாதவனையே கமிட் செய்துடலாமா’ன்னு ஹரிகிட்ட கேட்டேன். அவரும் சரின்னு சொன்னார். உடனே ஒரு நல்ல நாள் பார்த்துப் பூஜை போட்டு மாதவனுக்கு அட்வான்ஸும் கொடுத்தாச்சு.

ஆனா அடுத்த சில நாள்களில் எனக்கு போன் செய்த ஹரி, சூர்யாவை கமிட் செய்யலாம்னு நினைக்க‌றதாச் சொன்னார். அவர்கிட்ட எப்படி மறுக்கறதுன்னு தெரியாததால ஓ.கே சொல்லிட்டேன். அதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் ஒருவிதமான கூச்சத்தால் மாதவனைச் சந்திக்கவும் இல்லை, பேசவும் இல்லை.’’

தர்மசங்கடம் பாஸ்!

சாம்ஸ் (நடிகர்)

‘`என் பொண்ணு ஸ்கூல் முடிஞ்சு நாலு மணிக்கு வீட்டுக்கு வருவாங்க‌. அவங்க வீட்டுக்குள் நுழையக் கதவை தட்டினாலோ அல்லது காலிங் பெல் அடிச்சாலோ, ‘செல்லக்குட்டி, தங்கக் குட்டி, பட்டுக்குட்டின்னு கொஞ்சிக்கிட்டே போய் கதவைத் திறந்து கூட்டிட்டு வருவேன். இது ரொம்ப நாள் பழக்கம்.

ஒருநாள் சரியா நாலு மணிக்கு காலிங் பெல் சத்தம். வழக்கம்போல ‘பட்டுக்குட்டி, லட்டுக்குட்டின்னபடியே கதவைத் திறந்து கொஞ்சக் கை நீட்டினா எதிரே எங்க வீட்டு வேலைக்காரம்மா.

வழக்கமா அஞ்சு மணிக்கு வர்றவங்க, அன்னைக்கு வேலையை சீக்கிரமா முடிச்சிட்டுப் போகணும்னு ஒரு மணிநேரம் முன்னதா வந்துட்டாங்க. அப்படியே ஒரு நிமிஷம் ஜெர்க் ஆகி நான் நின்னுட, அந்தம்மாவுக்கு வெட்கம் ஒருபக்கம், சிரிப்பு ஒரு பக்கம்.

அப்புறமென்ன, இந்தச் சூழலை என் மனைவிகிட்டேயும் சொல்ல, அவங்களும் அவங்க பங்குக்கு என்னைக் கலாய்ச்சுக் காயப்போட்டாங்க. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சாயங்காலம் காலிங் பெல் சத்தம் கேட்டாலே உஷாரா நடந்துக்கறேன்.’’

தர்மசங்கடம் பாஸ்!

பரத் (நடிகர்)

“சேனல் விருது வழங்கும் விழாவுக்கு ரெண்டு மூணு வருஷமா என்னுடன் என் அப்பா வந்திட்டிருந்தார். ஆனா அந்த வருஷங்கள்ல எனக்கு விருது கிடைக்கலை. வருஷா வருஷம் அப்பா ஏமாந்துட்டே இருக்காரேன்னு போன வருஷம் அப்பாவை மட்டுமல்ல, வீட்டுல யாரையுமே நான் கூட்டிட்டுப் போகலை. ஆனா, விழா அரங்கத்துக்குப் போனா திடீர்னு அங்க என் மனைவி இருக்காங்க. கடந்த வருஷம் விருது இருக்குன்னு எனக்கே தெரியாம சேனல், என் மனைவிக்கு மட்டும் தகவல் சொல்லி சர்ப்ரைஸா அவங்களை அங்க வரச் சொல்லியிருக்காங்க. விழா முடிச்சு வீட்டுக்கு வந்தா, என் அம்மா, `ஏம்ப்பா, உன் அப்பா நீ விருது வாங்கறதைப் பார்க்கணும்னு ஒவ்வொரு வருஷமும் போய் ஏமாந்தாரே, இந்த வருஷம் விருது வாங்கறப்ப, நீ அவரைக் கூட்டிப் போயிருக்கலாமே’ன்னு ஒரு கேள்வி கேட்டாங்க. எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை.”

தர்மசங்கடம் பாஸ்!

இயக்குநர் எழில்

“ ‘தீபாவளி’ பட ஷூட்டிங்கில் எனக்கு ஒரு அனுபவம். குளியலறையிலிருந்து ஜெயம் ரவியின் சட்டையைப் போட்டுகிட்டு, கைலியை மடிச்சுக் கட்டிட்டு பாவனா வெளியில வர்ற மாதிரியான சீன். சட்டை போடறதுல பிரச்னை இல்லை. ஆனா கைலியை மடிச்சுக்கட்டிட்டு வந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. பாவனாகிட்ட மடிச்சுக் கட்டிட்டு வரச் சொல்லத் தயக்கமா இருந்தது. கோபப் படுவாங்களோன்னு நினைச்சோம். உதவி இயக்குநர்கள்கிட்ட பேசிச் சொல்லச் சொன்னா, அவங்களும் தயங்கறாங்க.

சரி, கேட்டுப்பார்த்துடுவோம்னு நானே தயாரான அந்த நொடி, நாங்க எதிர்பார்த்தபடி, கைலியை மடிச்சுக் கட்டியபடி அவங்களே எங்க முன்னாடி வந்து நிக்கறாங்க. ‘கேரளாவுல இப்படித்தான் கைலி கட்டுவோம்’னு அவங்களே சொன்னதும்தான், எனக்கு ‘அப்பாடா’ன்னு இருந்தது. அந்தக் காட்சி நாங்க எதிர்பார்த்தபடியே நல்லா வந்தது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism