Published:Updated:

நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் கோடி!

ஷெரின்
பிரீமியம் ஸ்டோரி
ஷெரின்

என் வாழ்க்கையில நான் நன்றிக்கடன் பட்டிருக்கிற முதல் நபர் என் அம்மா. அவங்களைப் பத்தி நிறைய இடங்கள்ல சொல்லிட்டேன்

நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் கோடி!

என் வாழ்க்கையில நான் நன்றிக்கடன் பட்டிருக்கிற முதல் நபர் என் அம்மா. அவங்களைப் பத்தி நிறைய இடங்கள்ல சொல்லிட்டேன்

Published:Updated:
ஷெரின்
பிரீமியம் ஸ்டோரி
ஷெரின்
‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் இவ்வளவு கடன்’ என்று அதிர்ச்சியளித்திருக்கிறது தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை. அதெல்லாம் இருக்கட்டும், நீங்கள் வாழ்க்கையில் யாருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறீர்கள்?’ என்று இவர்களிடம் கேட்டோம்.
நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் கோடி!

ஐஸ்வர்யா மேனன்

“நான் எப்பவுமே எல்லோருக்குமே நன்றிக்கடன்பட்டிருக்கணும்னு நினைக்கிறவள். நான் அதிகமா பயன்படுத்துற வார்த்தையே ‘தேங்க் யூ’தான். என் அம்மா எனக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்தால் கூட ‘தேங்க் யூ’ சொல்லுவேன். நான் மட்டுமல்ல, எல்லாருமே அவங்கவங்க வாழ்க்கையில எல்லாத்துக்குமே நன்றிக்கடன்பட்டிருக்கணும்னு நினைக்கிறேன். குடிக்கிற தண்ணீர், சாப்பிடுகிற உணவு, இருக்கிற வீடுன்னு

எல்லாத்துக்கும் நன்றி சொல்லணும். என்னுடைய நெருக்கமான நண்பர்களுக்கு என்னைப் பத்தித் தெரியும். இந்த உலகத்துக்கே நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்னு சொல்லலாம். இப்போ நீங்க எனக்கு போன் பண்ணி இந்த விஷயத்தைக் கேட்டதுக்காக உங்களுக்கும் நன்றி.’’

நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் கோடி!

ஷெரின்

“என் வாழ்க்கையில நான் நன்றிக்கடன் பட்டிருக்கிற முதல் நபர் என் அம்மா. அவங்களைப் பத்தி நிறைய இடங்கள்ல சொல்லிட்டேன். அதனால முக்கியமான இன்னொருத்தர் பத்தி இங்க சொல்றேன். அவர் என் வளர்ப்புத் தந்தை. அப்பா இல்லாமல் வளர்ந்ததால, அப்பாவுடைய அன்பு எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியாது. அந்த அன்பை எனக்குக் குறையாமத் தந்தவர் அவர். அம்மா சிலநேரம் திட்டுறப்போ, நானும் அவரும் ரகசியமா பேசிச் சிரிச்சிட்டிருப்போம், அதே சமயம் நிறைய சீரியஸான உரையாடல்களும் எங்க ரெண்டு பேருக்கிடையிலும் இருந்திருக்கு. எனவே, என் வாழ்நாள் முழுக்க அவருக்குமே நான் நன்றிக்கடன்பட்டிருக்கேன்.’’

நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் கோடி!

சி சத்யா - இசையமைப்பாளர்

“சினிமாவில் காலூன்ற நினைத்த காலம். இசையில் நிறைய ஈடுபாடு இருந்தது. அதற்கு முன்பாக என்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், அனுபவச் சேர்க்கைக்கும் நிறைய உழைக்க வேண்டி இருந்தது. அப்போது பாலபாரதியிடம் வேலை செய்துகொண்டிருந்தேன். என்னைத் தனித்து வெளிப்படுத்திக்கொள்ள முயன்றபோது, அரவணைத்து என்னை இனங்கண்டு வாய்ப்பு தந்தவர் ‘அபிநயா கிரியேஷன்ஸ்’ ஜே.கிருஷ்ணசாமி. இன்றிருக்கிற என் எல்லா நல்ல நிலைக்கும் அவர் என்மீது வைத்த அந்த முதல் நம்பிக்கையே காரணம்.

என‌க்கான முதல் நிலையைத் தேர்வு செய்து, ஒரு புது வாழ்க்கையை அமைத்துத் தந்து, ஆதரவு தந்ததுடன், தொடர்ந்து நான் உருவாகி வரத் துணையாகவும் இருந்த அவரை வாழ்நாளின் கடைசி நாள் வரை மறக்க மாட்டேன். அந்தப் பெருந்தகையாளரை கொரோனாத் தொற்றால் இழந்துவிட்டேன். இருந்தும் இன்றும் எனது நாளின் முதல் ஞாபகம் அவரிடமிருந்தே தொடங்குகிறது.”

நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் கோடி!

கார்த்திக் நேத்தா

“தேர்ந்த குடிகாரனாக இருந்த காலம். உயர்தர சிறந்த மது வகைகளை ருசித்து வரலாம் எனப் பாண்டிச்சேரி போயிருந்தேன். அங்கு போய் மதுவை ருசித்ததில் போதை அதிகமாகி, தன்னிலை துறந்து அங்கேயே ஒரு இடத்தில் விழுந்து கிடந்தேன். வைத்திருந்த பணத்தை யாரோ எடுத்துக்கொண்டார்கள்.

கொஞ்சம் மயக்கம் தெளிந்தால், அநாதையாக, கொண்டதே கோலமாக நிற்கிறேன். அலைபேசியும் இல்லை. அப்படியே கால்நடையாக மரக்காணம் வரைக்கும் வந்து விட்டேன். அதற்கு மேல் செல்ல காலில் வலு இல்லை. பசி உயிரை உறிஞ்சுகிறது. ஒரு பாலத்து ஓரமாகச் சரிந்து உட்கார்ந்தேன். அங்கே கூழ் விற்கிற ஒரு பெண்மணி எனக்கு அதை ஊற்றித் தந்து ‘பார்த்துப் போய்ச்சேரு தம்பி’ என்கிறார். எனக்குக் கண்ணீர் பெருகி ஆறாக ஓடுகிறது.

அடுத்து கொஞ்ச தூரம் கடந்து மரக்காணம் டோல்கேட் வந்தால், ஒரு கறிக்கடை பாய், உடன் அவர் மனைவியும் இருந்தார். செய்வதறியாமல் உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்துக்கொண்டே இருந்த அவர்கள் குடிக்கத் தண்ணீரும், கையில் நூறு ரூபாயும் கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள். இந்த இரண்டு பேரும்தான் குடிப்பழக்கத்தை நான் விட்டொழிக்க முதல் காரணமானார்கள்.

அதற்கடுத்து என்னை விடுவிக்க எத்தனையோ பேர் முயன்றாலும் என்னை அன்பில் நனைத்த ‘கூழ்’ அம்மாவுக்கும் ‘கறிக்கடை’ பாய்க்கும் நான் ரொம்பவே நன்றிக்கடன்பட்டிருக்கேன்.”

நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் கோடி!

பொன்ராம்

“வாழ்க்கையில நிறைய பேருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன். பலருக்கும் நன்றி சொல்லிட்டேன். ஒரே ஒருத்தருக்கு மட்டும் நன்றி சொல்ல முடியல. அவங்க அமுதாக்கா. நான் இயக்குநர் ஆகுறதுக்கு முன்னாடி நடந்த ஒரு முக்கியமான சம்பவம் அது. அப்ப நான் எங்க ஊர்ல இருந்து சமயநல்லூர்ல இருக்கற எங்க பாட்டி வீட்டுக்குப் போவேன். அங்கே எங்க தாய்மாமா, பாட்டின்னு நிறைய பேர் இருக்காங்க. அவங்க எல்லாருமே ரொம்ப வசதியானவங்க. ஒரு சமயம் அவங்க வீட்டுக்குப் போயிருந்தேன். அந்த நேரத்தில் எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமான சூழல். தாய்மாமா உட்பட பலர்கிட்டேயும் அவங்கள பார்த்த பிறகு நான் கிளம்புறேன்னு சொன்னேன். ‘சரி கிளம்புங்க’ன்னு சொன்னாங்க. நான் சென்னைக்கு வரவேண்டிய சூழல். அப்ப என் கையில வெறுமன இருநூறு ரூபாதான் இருந்தது. ஒரே பஸ்ஸில இல்லாமல், வேறு வேறு பஸ்ஸைப் பிடிச்சுப் போனாலும் குறைஞ்சது 250 ரூபாய் ஆகும்.

எனக்கு அவங்ககிட்ட 50 ரூபாய் கேட்க கூச்சமாகவும் இருக்கு. ‘சென்னைக்குப் போறானே, அவன் கையில பணம் வச்சிருக்கானா? கேட்டு நாம குடுத்து அனுப்புவோம்’னு அவங்களுக்குத் தோணல உதவி வேணுமான்னு கேட்கவும் இல்ல. நான் சென்னைக்குப் போறேன்னு தாய்மாமா உட்பட சொந்தங்கள்கிட்ட சொல்றேன். ‘ஊருக்குப் போறீயா? சரி, போயிட்டு வா’ன்னு மட்டும் அவங்ககிட்ட இருந்து பதில் வருது. பணம் இல்லாமல் சென்னைக்குப் போக முடியாதேன்னு எனக்கு அழுகையும் முட்டிக்கிட்டு வருது.

அந்த ஊர்ல கடைசி வீட்டுல எங்க சித்தியோட மகள் அமுதா இருந்தாங்க. என்னை மாதிரியே அவங்களும் கஷ்டப்படுற குடும்பம். அவங்க வீட்டுக்கு, சொல்லிட்டுப் போயிடலாம்னு போயிருந்தேன். சாப்பிட்டேன். அமுதாக்கா என்னைப் பாத்துட்டு, ‘உன் முகமே சரியில்லையே... உன் கையில காசு இருக்கா?”ன்னு கேட்டாங்க. ‘இல்லக்கா... ஒரு ஐம்பது ரூபா கம்மியா இருக்கு. தேவைப்படுது’ன்னு சொன்னேன். உடனே அவங்க எனக்கு ரெண்டு ஐம்பது ரூபாய்த் தாளை எடுத்துட்டு வந்து குடுத்தாங்க. வசதியான யாருமே எனக்குப் பணம் கொடுக்கல.

அந்த நூறு ரூபாய், அமுதாக்கா ஆசீர்வாதம் ரெண்டையும் எடுத்துக்கிட்டுதான் சென்னை வந்தேன். நான் கல்யாணம் ஆகி, சென்னையில கொஞ்சம் செட்டில் ஆன பிறகு நன்றி சொல்லப் போனால், அவங்க ஒரு விபத்துல இறந்துபோயிட்டாங்கன்னு தெரிய வந்துச்சு. இன்னிக்கு வரைக்குமே அவங்ககிட்ட நன்றி சொல்ல முடியாமப் போச்சேன்னு மனசு உறுத்திக்கிட்டே இருக்கு.’’

நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் கோடி!

பத்மலதா (பாடகி)

“அம்மா விஜயலட்சுமியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் மூணு நாளுக்கு முன்னாடிதான் வந்து போச்சு. சின்ன வயசுல பாட்டு கிளாஸ் சேர்த்து விட்டு இன்றைய என் அடையாளத்துக்குக் காரணமானது அவங்கதான். ‘மியூசிக் தொடர்பா நீ என்னென்ன கத்துக்கணும்னு நினைக்கிறயோ அத்தனையும் கத்துக்கோ’ன்னு என்னை உற்சாகப் படுத்திட்டே இருந்தாங்க. அவங்க பார்க்க நான் சினிமாவுல பாடி பல மேடைகள்ல விருதெல்லாம் வாங்கிட்டேன்.

ஆனாலும் கடைசியா ஏ.ஆர்.ரகுமான் சாருடைய கே.எம்.மியூசிக் அகாடமியில வெஸ்டர்ன் கிளாசிகல் ‘ஆபெரா’ கத்துக்கணும்னு சேர்ந்தேன். சேரும்போது அம்மா இருந்தாங்க. ஒரு வருஷத்தில் அந்தப் பரீட்சையை முடிச்சு அதுல பாஸ்னு தகவல் வந்த அந்த நாள் அதைக் கேட்க என் அம்மா இல்லை. உடல்நிலை சரியில்லைன்னு ஒரேயொரு நாள் ஹாஸ்பிடல் போனவங்க, அன்னைக்கே இறந்துட்டாங்க. என்னுடைய அந்த சந்தோஷத்தை அம்மாவுடன் கொண்டாட முடியாமப்போனது இன்னமும் வருத்தமா இருக்கு.

மியூசிக்ல என்னை ஆளாக்கினது போலவே, பொறுமை, நிதானம், யாரையும் புண்படுத்தக்கூடாதுங்கிற மாதிரியான அட்வைஸ் மூலமா என் வாழ்க்கையையும் அழகானதாச் செதுக்கிய என் அம்மாவுக்கு வாழ்நாள் முழுக்கக் கடன்பட்டிருக்கேன்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism