கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

பாடம் சொன்ன பள்ளிக்கூடம்!

அனுமோல்
பிரீமியம் ஸ்டோரி
News
அனுமோல்

அப்போது நான் நான்காவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. வகுப்பில் துக்கத்தை அடக்கமுடியாமல் சதா அழுதுகொண்டிருந்தேன்.

“பள்ளிகள் திறக்க ஆரம்பித்துவிட்டன. ‘உங்களால் மறக்க முடியாத பள்ளிநாள் எது?’ என்று இவர்களிடம் கேட்டோம்.
பாடம் சொன்ன பள்ளிக்கூடம்!

ஷீலா ராஜ்குமார் நடிகை

``என்னுடைய ஸ்கூல் நாள்களில் மறக்க முடியாத தினங்கள் நிறைய இருக்கு. முதல்நாள் ஸ்கூல்ல சேர்ந்ததுல இருந்து நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. அதுல பலரும் இப்ப வரை என் நட்புப் பட்டியல்ல இருக்காங்க. நான் ஐந்தாவது படிக்கும்போது முதன் முதலா மேடை ஏறினேன். அப்ப உள்ள ஷீலாவுக்கு மேடைன்னா ரொம்ப பயம். மேடை முன்னாடி ஆடியன்ஸ் கூட்டத்தைப் பார்த்து அந்த ஷீலா மிரண்டுட்டா. அதனால நான் முதன்முதலா பங்கேற்ற மாறுவேடப் போட்டியில் தோத்துப்போனேன். அந்த மேடை பயத்தை இப்பவும் மறக்க முடியாது. அதன்பிறகு தொடர்ந்த பயிற்சிகள் மூலம் அந்த பயத்தைப் போக்கிட்டேன். ஆனாலும் இப்பவும் நான் மேடை ஏறும்போது, முதல் மேடை அனுபவம் நினைவில் வந்துபோகும். தன்னம்பிக்கையும் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்னு உணர்ந்த தினமும் அதான்.''

பாடம் சொன்ன பள்ளிக்கூடம்!

அனுமோல் நடிகை

“அப்போது நான் நான்காவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. வகுப்பில் துக்கத்தை அடக்கமுடியாமல் சதா அழுதுகொண்டிருந்தேன். அப்போது அதைக் கவனித்துக்கொண்டிருந்த எங்கள் மேத்ஸ் டீச்சர் ஜெயா, என்னிடம் வந்து தலையைத் தடவி அணைத்துக்கொண்டு `ஏன் அழுகிறாய்’ என்று கேட்டார். சொன்னேன். மருத்துவமனைக்குக் கூட்டிப்போய் அப்பாவைக் காண்பித்தார். மறுபடியும் என் அப்பாவிற்காகப் பள்ளியில் பிரார்த்தனை நடத்தினார். அப்பா அந்தச் சமயம் என்னை விட்டுப் பிரிந்துவிட்டாலும், பள்ளி சேர்ந்து நடத்திய பிரார்த்தனை, காட்டிய பிரியம், அந்த அன்பான ஜெயா டீச்சர் இவர்களை மறக்க முடியாது. அப்பாவின் நினைவு வரும்போதெல்லாம், இவையும் நினைவுக்கு வரும்.”

பாடம் சொன்ன பள்ளிக்கூடம்!

பார்வதி திரைப்படப் பாடலாசிரியர்

“எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது பள்ளியில் ஒரு டெஸ்ட் வைத்தார்கள். ஒரு கவிதை எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார்கள். நானும் கவிதை எழுதியிருந்தேன். அதைப் படித்துவிட்டு ஆசிரியை சாவித்திரி ‘இது உன் வயதுக்கு எழுதுகிற கவிதையாக இல்லை, மிகச் சிறப்பாக ஆழ்ந்து எழுதியிருக்கிறாய். எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது’ எனச் சொன்னார்கள். அதுதான் நான் கவிஞர் ஆனதற்கான முதல்புள்ளி என நினைக்கிறேன். பிற்பாடு கவிதையை வாழ்வாக மாற்றிக் கொண்டதற்கான அடிப்படையாகக்கூட இந்த வார்த்தை அமைந்திருக்கலாம். ‘எழுத்துகள் நடந்தால் உரைநடை, நடனமாடினால் கவிதை’ என்று அவர்கள் சொன்னது இன்னமும் என் காதில் ஒலிக்கிறது!’’

பாடம் சொன்ன பள்ளிக்கூடம்!

யமுனா சின்னதுரை நடிகை

“ஸ்கூல் படிக்கும்போது எங்க அம்மா எங்களை டூருக்கெல்லாம் கூட்டிட்டுப்போனதே இல்லை. எங்களுக்கு லீவு விட்டாங்கன்னா நேரா எங்க பாட்டி வீட்டுக்குத்தான் கூட்டிட்டுப் போவாங்க. அதனால எட்டாம் வகுப்பு படிக்கும்போது நான், என் தங்கச்சி, என் இரண்டு ஃப்ரெண்ட்ஸ் சேர்ந்து பீச் போகலாம்னு முடிவு பண்ணியிருந்தோம். ஸ்கூல் கட் அடிச்சிட்டு ஒரு ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போய் யூனிபார்ம் மாத்திட்டு, தலையை வேற மாதிரி பின்னிட்டு பஸ் ஏறி பீச் போயிட்டோம். ஸ்கூல் விட்டு எந்த டைம் வீட்டுக்குப் போவோமோ அதே டைமை நோட் பண்ணிட்டு மறுபடி யூனிபார்ம் மாத்தி, இரட்டை ஜடை பின்னி வீட்டுக்குப் போயிட்டோம். அப்போ ஜாலியா அதைப் பண்ணிட்டோம். இப்போ அது எவ்வளவு பெரிய தப்புன்னு புரியுது. அதனாலேயே இப்போ என் பசங்களை அடிக்கடி அவங்க விரும்புற இடங்களுக்குக் கூட்டிட்டுப் போயிடுவேன். நாம பண்ணுன தப்பை நம்ம பிள்ளைங்களும் பண்ணிடக் கூடாதுங்க!”

பாடம் சொன்ன பள்ளிக்கூடம்!

டி.இமான் இசையமைப்பாளர்

``நான் எட்டாவது படிக்கும்போது நடந்த ஒரு விஷயத்தை மறக்கவே முடியாது. டான்போஸ்கோ ஸ்கூல்லதான் படிச்சேன். எங்க ஸ்கூல்ல நடக்கற கல்ச்சுரல்ஸ் போட்டிகள் காலேஜ் நிகழ்ச்சிகளுக்கே சவால் விடக்கூடிய அளவுல பிரமாண்டமா நடக்கும். அந்த கல்சுரல்ஸ்ல நான் கீபோர்டு வாசிச்சேன். அதுவும் ஸ்டைலா என் கால் எல்போகிட்ட வெச்சு கீபோர்டை ப்ளே பண்ணினேன். என் இசைக்குப் பரிசும் கிடைச்சது. சிறப்பு விருந்தினரா வந்திருந்த நடிகர் விவேக் சார் கையால அந்தப் பரிசை வாங்கினேன். இதை விவேக் சார் ஞாபகம் வெச்சிருந்தார். அவர் இறக்கறதுக்கு முன்னாடி கலந்துகிட்ட ஒரு நிகழ்ச்சியிலகூட, `ஒரு நிகழ்ச்சியில் ஒரு குண்டுப் பையன் நல்லா கீபோர்டு வாசிக்கறான்னு பரிசு கொடுத்தேன். அந்தப் பையன் இப்ப இசையமைப்பாளரா அசத்துறான். அவர்தான் இமான்'னு பேசியிருக்கார். அப்படி ஒரு சந்தோஷமான நாள் அது.''

பாடம் சொன்ன பள்ளிக்கூடம்!

வசந்த் இயக்குநர்

``தி.நகர் பனகல் பார்க் பக்கம் இருக்கற ராமகிருஷ்ணா ஸ்கூல்லதான் படிச்சேன். அங்கே எனக்கு அட்மிஷன் கிடைச்ச நாளை மறக்கவே முடியாது. அன்னிக்கு என்னை எங்க அப்பா அழைச்சிட்டுப்போனாங்க. ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்னாடி மொதல்ல பாண்டி பஜாருக்குப் போனோம். அங்கே எனக்கு ஊதா கலர் டவுசரும், வெள்ளைக்கலர் சட்டையுமா யூனிபார்ம் வாங்கிக் கொடுத்து, போட்டுக்க வெச்சார். நான் இன்னும் ஸ்கூல்ல சேரவே இல்ல. ஆனா, அட்மிஷன் கிடைச்ச மாதிரி யூனிபார்ம் போட்டுவிடுறீங்களேப்பான்னு சொன்னேன். உடனே எங்க அப்பா, ‘எதுவுமே நடந்துட்டதா நினைச்சா, கண்டிப்பா அது நடந்தே தீரும். நீ ஸ்கூல் யூனிபார்மோட போய் நின்னா, ஹெட்மாஸ்டர் உன்னைப் பார்த்தவுடனே ஸ்கூல்ல சேர்த்துக்குவார். கண்டிப்பா உனக்கு சீட் கிடைக்கும்'னார். அதே போல ஸ்கூல் யூனிபார்மோடு போய் நின்னேன். அட்மிஷன் கிடைச்சது. எனக்குள் பாசிட்டிவ் எண்ணங்களை விதைச்சதே எங்க அப்பாதான். அன்னிக்கு மதியமே ஸ்கூல்ல மாணவர்களுக்கான மீட்டிங்கில் தமிழ்வாணன் விருந்தினரா வந்து, ‘துணிவே துணை'ங்கற தலைப்பில பேசினதைக் கேட்டேன். அவர், ‘துணிவே துணை என்பது வாழ்க்கையில நாம சாதிக்க எந்த அளவுக்கு உதவுது’ன்னு விவேகானந்தரின் மேற்கோள்களோடு விளக்கினது இன்னும் ஞாபகத்துல நிற்குது. அந்த ஒருநாளால்தான் எனக்குள் பாசிட்டிவ் சிந்தனைகள் வேரூன்றி நிற்குது.''

பாடம் சொன்ன பள்ளிக்கூடம்!

அஸீம் நடிகர்

“சென்னை ஆசான் மெமோரியல் பள்ளியில் +2 படிச்சிக்கிட்டிருந்த ஒரு நாள்ல கணித ஆசிரியை வித்யா ‘என்ன ஆகப்போறீங்க'ன்னு எல்லோரிடமும் கேட்டாங்க. ‘நடிகராவேன்'னு சொன்னேன். ‘அடுத்த ஒரு வாரத்துக்கு என் பீரியட்ல நீ வகுப்புக்கு வெளியிலதான் நிற்கணும்’னு சொல்லி நிற்க வெச்சாங்க. அப்போ பசங்ககிட்ட ‘இதே ஸ்கூல், நடிகனானதும் என்னைக் கூப்பிடுதா இல்லையா பாருங்க’ன்னு அன்னைக்குச் சொன்னேன். 2013-ம் வருடம் செப்டம்பர் 4-ம் தேதி நடிகனான பிறகு, முதல் முறையா சிறப்பு விருந்தினரா நிகழ்ச்சி ஒண்ணுல கலந்துக்க அங்க போனேன். அதே கணித ஆசிரியை நான் வகுப்புக்கு வெளியில நின்னதை நினைவுகூர்ந்து, ‘இப்போ அஸீமால் பள்ளி பெருமைப்படுது'ன்னு பேசினாங்க. அஜித், உன்னிகிருஷ்ணன், பிரஜின்னு நிறைய சினிமா செலிபிரிட்டிகள் படிச்ச பள்ளிக்கூடம்தான் என்னுடைய பள்ளி!”