சினிமா
பேட்டிகள்
Published:Updated:

என்னைத் தெரியுமா..?

ஹரிப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
News
ஹரிப்ரியா

CELEBRITY

`இதுவரைக்கும் வெளியில் தெரியாத, உங்களைப் பற்றிய ஒரு தகவல் சொல்லுங்க’ என இவர்களிடம் கேட்டோம்.
என்னைத் தெரியுமா..?

பாவனா (ஆங்கர்)

“எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை அதிகம். இதுவரை பிறர்மூலம் ஜோதிடம் பார்த்த நான் இப்ப ஜோதிடத்தை ஓரளவு படிக்கவும் ஆரம்பித்திருக்கேன்.”

என்னைத் தெரியுமா..?

நிழல்கள் ரவி (நடிகர்)

‘`பலருக்கும் தெரியாத தகவல்னா நான் நல்லா சமைப்பேன் என்பதுதான். சின்ன வயசில எங்க அம்மா எனக்குக் கத்துக்கொடுத்தது. அவுட்டோர் படப்பிடிப்பு போனா, சாப்பாடு சரியில்லைன்னா, உடனே நானே சமைச்சிடுவேன். வீட்டில் மனைவிக்கும் சமையலில் உதவுவேன்!”

என்னைத் தெரியுமா..?

ஹரிப்ரியா (டி.வி நடிகை)

“எனக்கு நாய்னாலே பயம். ஷூட்டிங் ஸ்பாட்ல நாய் இருந்தால் அந்த இடத்துலேயே இருக்க மாட்டேன். தெருவில் ஏதாவது நாயைப் பார்த்துட்டேனா அந்தத் தெருவுக்குள்ளேயே போக மாட்டேன்.”

என்னைத் தெரியுமா..?

சீனுராமசாமி (இயக்குநர்)

‘`நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி தொழில்முறை புகைப்படக்கலைஞராக இருந்திருக்கேன். முதன்முதல்லா ஜெனித்னு ஒரு கேமராவை வாங்கினேன். அதுக்கடுத்து ஏழாயிர ரூபாய்க்கு பென்டக்ஸ் கே.1000 கேமராவை செகண்ட் ஹாண்டா வாங்கினேன். அதுலதான் கல்யாணங்களுக்கு எடுத்துட்டு இருந்தேன். நண்பர் செழியன் மூலம் அறிமுகமான ராமு சார்தான் எனக்குப் புகைப்படக் கலையின் ரகசியங்களை எல்லாம் கத்துக் கொடுத்தார். அப்ப மதுரை ஜெயந்திபுரத்தில் ராமு இருந்தார். தினமும் காலையில அவர் வீட்டுக்குப் போயி கத்துக்கிட்டேன். சாதாரண ஆரம்பநிலை புகைப்படக் கலைஞனாக இருந்த என்னை, தொழில்முறை போட்டோகிராபராக மாத்தினது ராமுதான். இந்தப் புகைப்பட ஆர்வத்தினால்தான் சினிமாமீதான காதலும், பாலுமகேந்திரா சார்கிட்ட சேரணும் என்கிற எண்ணமும் வலுவாச்சு. சில வருஷங்களுக்கு முன்னாடி துபாய் போயிருந்தபோது ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கினேன். என் குழந்தைகள் அதுலதான் படங்கள் எடுக்குறாங்க. பிலிம் கேமரா எனும்போது அது கழுவி பிரின்ட் போட்டுப் பார்க்கற வரை, எப்படி வந்திருக்குன்னு பார்க்கற ஒரு ஆர்வம் எழும். டிஜிட்டல்ல அது மிஸ்ஸிங். என்னதான் டிஜிட்டல் என்றாலும் ஃப்ரேம் வைக்கறது ஒரு கலைதான்.’’

என்னைத் தெரியுமா..?

போகன் சங்கர் (கவிஞர்)

“நான் என் வாழ்க்கையின் முற்பகுதியில் ஆவிகளுடன் பேசிக்கொண்டு திரிகிற நபராக இருந்தேன் என்பது என்னைப்பற்றி அதிகம் தெரியாத விஷயம். மறைமலை அடிகள், எம். ஜி.ஆர், இந்திரா காந்தி, மர்லின் மன்றோ என்று பல பேருடைய ஆவிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். சுடுகாடுகளுக்கே போய்ப் பேசியதும் உண்டு. விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் நடத்திய ஆவிகள் உலகம் பத்திரிகையில் எழுதியிருக்கிறேன். மந்திரவாதிகள், சாமியார்கள், சாமியாரிணிகள், மண்டை ஓடுகள் என்று இருளான சுவாரஸ்யமான உலகம் அது. என்றாவது அந்த உலகம் பற்றி எழுதுவேன்.”

என்னைத் தெரியுமா..?

இயக்குநர் ‘மூடர்கூடம்’ நவீன்

“நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது பக்கத்தில் இருக்கிற முடி திருத்தும் நிலையத்திற்குச் செல்வேன். ஒரு சமயம் ஒருவர் தன் மகனை அழைத்து வந்து என் மகனுக்கு இந்த டைப்பில் முடிவெட்டவேண்டும் எனச் சொல்லிக்கொண்டிருந்தார். என் நண்பருக்கு அவர் சொல்ல வந்தது புரியவில்லை. எனக்குப் புரிந்தது. நான் வெட்டிவிடவா என்றேன். என் நண்பர் வெட்டிவிடு என்றார். நான் அந்தச் சிறுவனுக்கு வெட்டிவிட்டது எல்லோருக்கும் பிடித்தது. முடிதிருத்தும் நண்பர் ‘நீங்கள் ப்யூட்டி பார்லரில் வேலை செய்திருக்கிறீர்களா’ என்றார். இல்லையென்றேன். அவர் அதிர்ச்சியாகிவிட்டார். பிறகு பசங்க படத்தில் உதவியாளராக வேலை செய்தபோது அன்பு, ஜீவாவுக்கு நான் முடிவெட்டினேன். என் மாமாகூட தன் கல்யாணத்திற்கு இரண்டு நாளைக்கு முன்பே என்னை வரச்சொல்லி முடிவெட்டிக்கொண்டார். நான் மிகச்சிறப்பாக, தேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியாகப் பணிபுரிவேன் என்பது யாருக்கும் தெரியாது.”

என்னைத் தெரியுமா..?

சில்வா (ஸ்டன்ட் இயக்குநர்)

‘`சின்ன வயசில இருந்து விவசாயம் பண்ணப் பிடிக்கும். ஆனா, அப்போ சூழல் அமையல. இப்போ மூலிகை மீதான காதல் அதிகரிச்சிருக்கு. மூலிகைகள் குறித்த அரிதான ஒரு சுவடி என்கிட்ட இருக்கு. அதைப் படிக்கப் படிக்க, மூலிகைமீதான ஈர்ப்பு அதிகரிக்குது.’’