சினிமா
Published:Updated:

வாழ்க்கையைச் சொல்லும் வரி!

காயத்ரி ரெட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
காயத்ரி ரெட்டி

‘அலைகள் ஓய்வதில்லை' படத்தில் இடம்பெறாமல்போன ‘புத்தம் புதுக்காலை' பாடல். அந்தப் படத்தோட ஆடியோ கேசட்ல அந்தப் பாடல் இருக்கும்.

‘உங்களால் மறக்கமுடியாத பாடல்வரி என்ன?’ என்று இவர்களிடம் கேட்டோம்...
வாழ்க்கையைச் சொல்லும் வரி!

காயத்ரி ரெட்டி (நடிகை)

“பழைய பாடல்களில் சில மெலடி சாங்ஸ் பிடிக்கும். ஆனா அதெல்லாம் எங்காவது பாடினா மட்டுமே கேட்பேன். திரும்பத் திரும்ப விரும்பிக் கேக்கற அள‌வுக்கு இப்ப ஒரு பாட்டு ரொம்பவே ஈர்க்குது. `நீயே ஒளி' பாட்டுதான் அது. மனசு கொஞ்சம் வீக்கா இருக்கிற மாதிரி தெரிஞ்சா இந்தப் பாட்டைக் கேட்டா கவலை பறந்துடுது. ‘சர்வைவர்’ நிகழ்ச்சிக்காக ஜான்சிபார் தீவுக்குக் கிளம்பினப்பக்கூட மனசுல சின்ன பயம் இருந்தது, இந்தப் பாட்டைத்தான் கேட்டேன். ஷோவுல அங்க இருந்தப்பவும் நிறைய முறை கேட்டேன். இதுவரை நூறு தடவை யாச்சும் கேட்டிருப்பேன்.”

வாழ்க்கையைச் சொல்லும் வரி!

விஷால் சந்திரசேகர் (இசையமைப்பாளர்)

“நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. ‘மே மாதம்' என்ற திரைப்படம். ‘மின்னலே நீ வந்ததேனடி' எனத் தொடங்கும் பாடல். எஸ்.பி.பி பாடி யிருப்பார். முழுக்க முழுக்க மனதை உலுக்கிப் புரட்டி எடுக்கும் பாடல். அழுது தவித்த என் நண்பன் ஒருவனுக்காக இந்தப் பாடலை நானே பாடியிருக்கிறேன்.அவனை துக்கத்திலிருந்து மேலே கொண்டு வந்திருக்கிறேன். இந்தப் பாடலுக்கு அப்படி ஒரு சக்தியுண்டு. அதை உணர்ந்து எஸ்.பி.பி பாடியிருப்பார்.”

வாழ்க்கையைச் சொல்லும் வரி!

சுகா (எழுத்தாளர்)

“பனிவிழுந்துகொண்டிருக்கும் வேளையில் கைகோத்தபடி இரு சின்னஞ்சிறு சகோதரர்கள் ஆடியபடி வருகிறார்கள். வாழ்வின் எந்தச் சுமையும் சுமக்காத, எந்தக் கவலையும் அறியாத பிஞ்சுக்குழந்தைகளை ரசித்துப் பார்த்துப் பாடுகிறாள் ஓர் இளம் விதவைத் தாய். அவள் மனதில் உள்ள பாரம் அனைத்தையும் அந்தக் குழந்தைகள் துடைத்தெறியப்போகிறார்கள் என்ற நம்பிக்கையுடன் பாசத்தைக் குழைத்துப் பாடுகிறாள். பாடலின் காட்சித் துணுக்குகளில் தன் பிள்ளைகளை வெந்நீர் போட்டுக் குளிப்பாட்டுகிறாள். மடியில் அமர வைத்து வகிடெடுத்துத் தலை சீவி, கை பிடித்துப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறாள். மாலையில் குழந்தைகள் முன்னே நடக்க, இடுப்பிலும் தலையிலும் குடம் சுமந்து நீர்த்திவலைகள் சிந்த, சிரித்த முகத்துடன் வீடு திரும்புகிறாள். வாய் நிறையச் சோறூட்டி உறங்கச் செய்கிறாள். பாடலின் இடையிசையில் தேயிலை பறிக்கும் பெண்கள் தலையில் தேயிலை மூட்டை சுமந்து ஓட்டமும் நடையுமாகச் செல்கிறார்கள். சலவைத் தொழிலாளிகள் உற்சாகமாக தாளத்துடன் இணைந்து துணி துவைக்கிறார்கள்.

இந்தப் பாடலைப் படமாக்கிய இடங்களை என்னைக் கூட்டிச் சென்று காண்பித்திருக்கிறார், ‘வாத்தியார்’ பாலு மகேந்திரா. இந்தப் பாடலை அமைத்த விதத்தைப் பற்றிய தன் நினைவுகளை அசைபோட்டு ‘இன்னொரு வாத்தியார்’ இளையராஜா சொல்லிக் கேட்டிருக்கிறேன். ‘ஆளான சிங்கம் ரெண்டும் கைவீசி நடந்தால் காலடியில் பூமி எல்லாம் அடங்கும்’ என்கிற வரியை மெல்ல முணுமுணுத்தபடி பாடிய காலம் சென்ற என் தாயாரை ‘பிள்ளைநிலா இரண்டும் வெள்ளை நிலா’ என்கிற இந்தப் பாடல் எப்போதும் என் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.”

வாழ்க்கையைச் சொல்லும் வரி!

ஜஸ்டின் பிரபாகரன் (இசையமைப்பாளர்)

“நான் மியூசிக் கம்போஸராகணும்னு முயற்சி செய்த நேரத்துல எனக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்த பாடல், ‘தளபதி'யில் வரும் ‘சுந்தரி கண்ணால் வரும் சேதி.' அந்தப் பாடலே ஒரு கதை சொல்றதுபோலப் போகும்.”

வாழ்க்கையைச் சொல்லும் வரி!

விக்ரமன் (இயக்குநர்)

‘அலைகள் ஓய்வதில்லை' படத்தில் இடம்பெறாமல்போன ‘புத்தம் புதுக்காலை' பாடல். அந்தப் படத்தோட ஆடியோ கேசட்ல அந்தப் பாடல் இருக்கும். அப்ப நான் காலேஜ் படிச்சிட்டிருந்தேன். எக்ஸாம் டைம்ல ராத்திரி ரெண்டு மணி வரை படிச்சிட்டு, மறுபடியும் காலையில ஐந்து மணிக்கு எழுந்திடுவேன். எங்க வீட்டுப் பக்கத்துல உள்ள டீக்கடையில காலையில அஞ்சு மணிக்கெல்லாம் அந்தப் பாடல் ஒலிக்கும். என் சோர்வை விரட்டி, புதுத்தெம்பைக் கொடுக்கற பாடலா அது இருந்திருக்கு. பின்னாளில் படப்பிடிப்புக்குக் கிளம்பும்போதும் அந்தப் பாடல் கேசட் என் கார்ல இருக்கும். லேட்நைட் ஷூட் முடிச்சுட்டு வந்து மறுநாள் காலையில அஞ்சு மணிக்கு ஷாட் எடுக்கணும்னா, அதிகாலையிலேயே இந்தப் பாடலைக் கேட்பேன். உற்சாகம் பிறக்கும். புது எனர்ஜி ஒட்டிக்கும். அந்த சந்தோஷம் நாள் முழுக்க இருக்கும். கோபமே வராம, ரிலாக்ஸ் மைண்ட்ல இருப்பேன். இப்பவும் அந்தப் பாடலைக் கேட்பேன். அது ‘மேகா'ன்னு ஒரு படத்துல இடம்பெற்றது. அந்த வெர்ஷனையும் கேக்குறேன்.”

வாழ்க்கையைச் சொல்லும் வரி!

இர்ஃபான் (யூடியூபர்)

“யுவன் இசையில், நா.முத்துக்குமார் வரியில் ‘ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப்போகாது... மறு நாளும் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராது... எத்தனை கோடி கண்ணீர் மண்மீது விழுந்திருக்கும்... அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூப் பூக்கும்..!' என்கிற பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். சந்தோஷமான நேரத்திலும் சரி, துக்கமான நேரத்திலும் சரி எப்பவுமே அந்தப் பாட்டை நான் கேட்பேன். எல்லாத்துக்கும் பொருந்தும் மாதிரியான வரிகள் அந்தப் பாட்டில் இருக்கும். அந்தப் பாட்டு என் பர்சனல் ஃபேவரைட்!”