Published:Updated:

`` மாஸ்டருக்கு மாஸ் சேர்த்துட்டாங்க... டிராவிட் பெளலிங்லயே புரிஞ்சிருச்சு!" - திண்டுக்கல் லியோனி

திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தன் நகைச்சுவை பேச்சினால் பட்டிமன்றத்தை கலகலக்க வைக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி, `கங்கா கெளரி' படத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு, படங்களில் தலைகாட்டாதவர் இப்போது சினிமாவில் பயங்கர பிஸி! தவிர, அரசியலிலும் உத்வேகமாக இயங்கி வருகிறார். அவர் நடிக்கும் இரண்டு படங்கள், தற்போதைய அரசியல் நிகழ்வுகள் எனப் பல சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

`கங்கா கெளரி' பட வாய்ப்பு எப்படி வந்தது? அந்தப் படத்துல நடிச்ச அனுபவம்?

``நெய்வேலியில ஒரு பட்டிமன்றத்துக்காகப் போயிருந்தேன். அப்போ `சினிமா புரொடக்‌ஷன் மேனேஜர் ஒருத்தர் இயக்குநரோட உங்களைப்பார்க்க வந்திருக்கார்'னு சொன்னாங்க. அந்தப் பட்டிமன்றத்தை முடிச்சிட்டு அவங்களைச் சந்திச்சேன். அப்போ இயக்குநர் மாதேஸ்வரன், `கங்கா கெளரினு ஒரு படம். அதுல அருண் விஜய்க்கும் வடிவேலுவுக்கும் அப்பாவா நடிக்கணும். உங்க பட்டிமன்றங்கள் பார்த்திருக்கேன். நீங்கதான் இந்த கேரக்டருக்கு சரியா இருப்பீங்கன்னு தோணுச்சு. அதனால இந்த கேரக்டருக்கான வசனம் எல்லாமே நீங்க பேசுற ஸ்டைல்லதான் எழுதியிருக்கேன்'னு என்னைத் தேடி வந்து ரொம்ப ஆசைப்பட்டு கேட்டார். அப்படிதான் அந்தப் படத்துல நடிச்சேன். ரொம்ப வித்தியாசமான அனுபவமா இருந்தது. அது ஃபிலிம் ரோல் சமயம். அதிக டேக் வாங்கினா, `என்ன இப்படி ரீலை சாப்பிடுறாப்ள'னு சொல்லுவாங்கனு ரொம்ப கஷ்டப்பட்டு ஒன்மோர் வராம பார்த்து நடிச்சேன். அதுக்கு அருண் விஜய்யும், வடிவேலுவும் அவ்ளோ சப்போர்டா இருந்தாங்க."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`` `கங்கா கெளரி'க்குப் பிறகு இத்தனை வருடங்களா நடிக்காமல் இருந்ததற்கு என்ன காரணம்?"

திண்டுக்கல் லியோனி
திண்டுக்கல் லியோனி

`` 'கங்கா கெளரி' படத்துக்குப் பிறகு, `காதலர் தினம்' படத்துல இயக்குநர் கதிர் நடிக்கக் கூப்பிட்டார்னு அந்தப் படத்துல நடிச்சேன். அந்தப் படத்துல கல்லூரி காதல் சுகமா, சுமையாங்கிற தலைப்புல பட்டிமன்றம் நடக்கும். `சுகம்'னு குணால் பேசுவார்; `சுமை'னு சின்னி ஜெயந்த் பேசுவார். பெங்களூர்ல ஒன்பது நாள் ஷூட்டிங் நடந்தது. இதுல குணால் பேசுறதைப் பார்த்து ஹீரோயின் சோனாலி பிந்த்ரேவுக்கு லவ் வர்ற மாதிரி சீன். அந்தப் பட்டிமன்றத்தோட நடுவரா நான்தான் நடிச்சிருந்தேன், டப்பிங்கும் பேசியிருந்தேன். படம் ரிலீஸானதுக்கு அப்புறம் பார்த்தா நான் நடிச்சது எதுவுமே இல்ல. இயக்குநர்கிட்ட கேட்டப்போ, `இல்ல சார். இந்தப் படத்துல கவுண்டமணி சார், மணிவண்ணன் சார், சின்னி ஜெயந்த்னு நிறைய நகைச்சுவை நடிகர்கள் இருந்தாங்க. அதுல உங்களுடைய சீன் ரொம்ப ப்ரைம் சீனா இருந்துச்சு. `நாங்களே கம்மியான சீன்ல நடிச்சிருக்கோம். புதுசா வந்தவருக்கு இவ்ளோ பெரிய கேரக்டர்'னு அவங்க ஃபீல் பண்ணாங்க. அதனால அந்த சீனைத் தூக்கிட்டோம்'னு சொன்னார். என்னடா இவ்ளோ கஷ்டப்பட்டு பெங்களூர் கூட்டிட்டுப் போய் நம்மளை நடிக்கவெச்சு அதைப் படத்துல இருந்து தூக்கிட்டாங்களே... இனி சினிமா நமக்கு செட்டாகாதுனு அதுக்குப் பிறகு எந்தப் படத்துலேயும் நடிக்காம இருந்தேன். `சிவாஜி' படத்துலகூட ஸ்ரேயா அப்பாவா நடிக்க 45 நாள் கூப்பிட்டாங்க. இதே மாதிரி ஆகிடுமோனு நான் போகலை. தவிர, அந்த நேரத்துல பட்டிமன்றங்கள்ல ரொம்ப பிஸியா இருந்தேன். அப்புறம்தான் பட்டிமன்றம் ராஜா நடிச்சிருப்பார். ஏவிஎம் தயாரிப்பு, ஷங்கர் சார் இயக்கம், ரஜினி சார்கூட நடிக்கிற வாய்ப்பு இதை எல்லாம் மிஸ் பண்ணிட்டேன். அதுல நடிச்சிருக்கலாமோனு இப்போ தோணுது."

`` `பன்னிக்குட்டி' படத்துல நடிக்க என்ன காரணம்?"

``அனுசரண் இயக்கின `கிருமி'ங்கிற படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். படம் பார்த்துட்டு அவர்கிட்ட பேசியிருக்கேன். ஒருமுறை என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்தவர், `சார் உங்களை வெச்சு ஒரு படம் எடுக்கணும்'னு சொன்னார். வேணாம்னு நடந்த விஷயம் எல்லாம் சொன்னேன். `ஒரு கேரக்டர் இருக்கு. அதை நீங்க பண்ணாதான் சரியா இருக்கும்'னு சொல்லிட்டு படத்துக்குப் பெயர் `குட்டியானை'னு வெச்சிருக்கதா சொன்னார். ஆனா, அது `பன்னிக்குட்டி'யா மாறிடுச்சு. சினிமாவுல என்னய்யா பெயர் வைக்குறாங்கன்னு பட்டிமன்றத்துல கலாய்ச்சிருக்கேன். ஆனா, நான் நடிச்ச படத்துக்குப் பெயர் `பன்னிக்குட்டி'. `எல்லாப் படப் பெயரையும் கலாய்ச்ச லியோனியின் அடுத்த படம் `பன்னிக்குட்டி'னு மீம்ஸ் போட்டு கலாய்ப்பாங்களே'னு இயக்குநர்கிட்ட சொன்னேன். `அப்படி நடந்தா நம்ம படத்துக்கு பப்ளிசிட்டிதானே சார்'னு சொன்னார். இதுல குறி சொல்ற ஜோசியக்காரரா நடிச்சிருக்கேன். அந்த கேரக்டரை அனுசரண் ரொம்ப அழகா நேர்த்தியா வடிவமைச்சிருந்தார். எல்லாப் பிரச்னைகளும் அதுக்கான தீர்வோடுதான் ஆரம்பிக்கும். ஆனா, அதுக்குள்ள நம்ம ஜோசியம், பரிகாரம்னு போய் விழுந்திடுறோம், பரிகாரத்துனாலதான் தீர்வு கிடைச்சதுனு நம்புறோம். ஆனா, நம்பிக்கையா இருந்தா அந்தப் பிரச்னை தானாவே சரியாகிடும்னு கடைசியா நல்ல மெசேஜ் இருக்கும். அதனாலதான் இதுல நடிக்க ஓகே சொன்னேன்."

``இந்தப் படத்துல நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?"

திண்டுக்கல் லியோனி
திண்டுக்கல் லியோனி

``நிலக்கோட்டை பக்கத்துல ஒரு மலையில இருக்கிற குகையிலதான் ஷூட்டிங் நடந்தது. மலை மேல இரண்டரை கிலோமீட்டர் கூட்டிட்டுப் போனாங்க. ஸ்பாட்டுக்குப் போறதுக்குள்ள கிறுகிறுனு வந்திடுச்சு. அப்புறம் தண்ணி, கூல் ட்ரிங்க்ஸ்னு கொடுத்துக் கூட்டிப்போனாங்க. 5 நாள் ஏறி இறங்குனதுல 6-வது நாள் பழகிடுச்சு. யோகிபாபு, கருணாகரன், ராமர், தங்கதுரைனு படத்துல நடிச்சவங்க எல்லோரும் செம ஹ்யூமர் சென்ஸ் உள்ள நபர்கள். யோகிபாபுகூட நடிக்கணும்னு ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனா, அவருக்கும் எனக்கும் காம்பினேஷன் இல்லாமல் போயிடுச்சு. சினிமாவுக்குப் பொருத்தமான எந்தவொரு குணாதியமும் இல்லாத முகம் அவருடையது. அதை வெச்சுக்கிட்டு இன்னிக்கு சினிமாத்துறையில இந்தளவுக்கு ஜெயிச்சிருக்கார்னா அதுக்குத் தனி ஆற்றல் வேணும். அதை நான் நேசிக்கிறேன். இன்னும் அவரை நேர்ல சந்திச்சதில்லை. சீக்கிரம் சந்திக்கணும். `ஜிகர்தண்டா' படத்துல கருணாகரனுடைய நடிப்புக்கு நான் ரசிகன். ஒருமுறை அவர்கிட்ட போன்ல பேசும்போது கலைஞருடைய உதவியாளர் சண்முகநாதனின் அக்கா மகன்னு சொன்னார். அதனால இன்னும் நெருக்கமாகிட்டோம்."

``ராமர், தங்கதுரைனு எல்லோரும் உங்க வேவ் லெங்த்லேயே இருந்திருப்பாங்களே!"

``ஆமா. நாங்க எல்லோரும் ஹ்யூமர் டிபார்ட்மென்டுங்கிறதுனால எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி நல்லாவே வொர்க்அவுட் ஆகியிருக்கு. ராமர் பர்ஃபாமென்ஸை நான் ரொம்ப ரசிப்பேன். நேர்ல அவர்கூட நடிக்கிறது செம ரகளையா இருந்தது. ராமர் அவர் ஸ்டைல்ல நிறைய பாட்டுப் பாடிட்டிருப்பார். நாங்க சிரிச்சுக்கிட்டே இருக்கிறதை கன்ட்ரோல் பண்ணமுடியாம ப்ரேக் விட்ருவார். தங்கதுரை என்கிட்ட, `சார் உங்க பட்டிமன்றத்துல வந்த பழைய ஜோக்கை எல்லாம் எடுத்து ஒரு நோட்ல எழுதிவெச்சு நிகழ்ச்சியில சொன்னேன். அப்படி நீங்க ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி சொன்ன நல்ல ஜோக்கதான் சார் சொன்னேன். ரெண்டாவது ஜோக்லயே பழைய ஜோக்னு கண்டுபிடிச்சுட்டாங்க. அதுக்கு அப்புறம், நானா புது ஜோக் எழுதி சொன்னாக்கூட அதைப் பழைய ஜோக்னு சொல்லி பழைய ஜோக் தங்கதுரைனு பெயரே வெச்சுப்புட்டாங்க சார்'னு சொல்லி சிரிச்சார்."

`ஆலம்பனா' படத்துல உங்களுக்கு என்ன கேரக்டர்?

திண்டுக்கல் லியோனி
திண்டுக்கல் லியோனி

``இந்தப் படத்துடைய இயக்குநர் பாரி கே.விஜய் `முண்டாசுப்பட்டி' படத்துல அசோஸியேட் டைரக்டர். ஒருநாள் என் வீட்டுக்கு வந்து, `உங்களுடைய பட்டிமன்றங்களுக்கு நான் பெரிய ரசிகன். இதுல ஒரு தாத்தா கேரக்டர் இருக்கு. அதுக்காக நிறைய நடிகர்களைப் பொருத்திப் பார்த்தேன். எனக்கு செட்டாகலை. அந்தச் சமயத்துல உங்க பட்டிமன்றம் டிவியில ஓடிக்கிட்டு இருந்தது. அப்போ நீங்க தாத்தா பேரன் உறவைப் பத்திப் பேசிகிட்டிருந்தீங்க. உடனே முடிவு பண்ணி உங்களைப் பார்க்க வந்திருக்கேன்'னு சொன்னார். இதுல நான் வைபவ்வுக்கு தாத்தா, பாண்டியராஜன் சாருக்கு அப்பாவா நடிக்கிறேன். என் மனைவியா `நக்கலைட்ஸ்' தனம் நடிச்சிருக்காங்க. ஸ்பாட்ல நானும் பாண்டியராஜன் சாரும் பழைய கதைகள் எல்லாம் பேசிகிட்டே இருப்போம். இதுல இயக்குநர் எனக்கு வசனத்தை மட்டும் சொல்லிட்டு `இதை உங்க பட்டிமன்றம் ஸ்டைலுக்கு நீங்க எப்படி வேணாலும் சொல்லுங்க'னு எனக்கு அவ்ளோ சுதந்திரம் கொடுத்தார். முனீஷ்காந்த் பூதமா நடிச்சிருக்கார். `முண்டாசுப்பட்டி' படத்துல முனீஷ்காந்த் நடிப்புக்கு நான் தீவிர ரசிகன். அவர் மாதிரி அவர்கிட்ட மிமிக்ரி பண்ண காட்டினதும் அவருக்கு அவ்ளோ சந்தோஷம். ஒரு ஸ்டன்ட் சீனுக்காக பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் வந்திருந்தார். அவர் அம்மா வியட்னாம் நாட்டைச் சேர்ந்தவங்க. இங்க வந்துதான் தமிழே கத்துக்கிட்டாங்க. அவங்களுக்கு உங்க பட்டிமன்றம்னா ரொம்பப் பிடிக்கும்னு சொன்னார். சந்தோஷமா இருந்தது. ஒரு பாட்டுக்கு டான்ஸ் வேற ஆடியிருக்கேன். மொத்தத்துல `ஆலம்பனா' எல்லோரும் ரசிக்கும் படமா இருக்கும்."

``வடிவேலுவோட நடிக்க பேச்சுவார்த்தை நடக்குதுனு சொல்லியிருந்தீங்களே!"

``வடிவேலு என்கிட்ட ஒருநாள் கேட்டிருந்தார். அவருக்கு இருந்த பிரச்னைகள் எல்லாம் முடிஞ்சு இப்போ கொஞ்சம் ஃப்ரீயாகிட்டார்னு கேள்விப்பட்டேன். அதனால அடுத்து அந்தப் படமாதான் இருக்கும்னு நினைக்கிறேன்."

``இனி உங்களை சினிமாவுல அதிகம் பார்க்கலாமா?"

``நிச்சயம் பார்க்கலாம். என் வாழ்க்கையில அவ்ளோ பட்டிமன்றங்கள்ல பேசிட்டேன். அதெல்லாம் ஆடியோ, வீடியோனு வெளியாகி இப்போ யூ-டியூபிலும் இருக்கு. இனிமேல் மேடை பட்டிமன்றங்களைக் குறைச்சுக்கிட்டு சினிமா மூலமா மக்களை சந்தோஷப்படுத்தணும்னு ஆசை வந்திருக்கு. இது லியோனி 2.0"

``விஜய் வீட்ல ஐடி ரெய்டு நடந்ததுக்கு அரசியல் காரணம் இருக்குனு சொல்றாங்களே?"

திண்டுக்கல் லியோனி
திண்டுக்கல் லியோனி

``நிச்சயமா அதுல அரசியல் பின்னணி இருக்கு. `பிகில்' ஆடியோ லான்ச்ல, `இந்த நாட்டுல ஒரு மாற்றம் நிகழணும். இப்போ இருக்கிறது நல்லாயில்லை'னு விஜய் பேசுனதை மனசுல வெச்சுக்கிட்டு அவரைப் பழி வாங்கதான் இப்படிப் பண்றாங்க. தவிர, அவர் படத்துக்குப் பிரச்னை வர்றது அவருக்குப் பெரிய ப்ளஸ் பாயின்ட்தான். பிரச்னை பண்ணிதான் `மெர்சல்', `சர்கார்', `பிகில்'னு அவருடையப் படங்களை எல்லாம் ஓட வெச்சாங்க. இப்போ `மாஸ்டர்' படத்தை ஓட வைக்க இந்த ரெய்டு நடத்தி மாஸ் பண்ணியிருக்காங்க. அதனால விஜய்க்கு இது ப்ளஸ்தான்"

``சேலத்துல 13 ஏக்கர்ல கிரிக்கெட் மைதானம் திறப்பு, டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்புனு எடப்பாடி பழனிசாமியுடைய செயல்பாடுகளை எப்படி பார்க்குறீங்க?"

``நாட்டுல எவ்வளவோ பிரச்னைகள் இருக்கு. இந்த நேரத்துல கிரிக்கெட் மைதானம் தமிழ்நாட்டுக்கு தேவையே இல்லை. சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை எப்படி தேவை இல்லையோ, அதே மாதிரிதான் இந்த கிரிக்கெட் மைதானமும். அதுக்கு ராகுல் டிராவிட்டை கூட்டுட்டு வந்து திறந்து வெச்சிருக்காங்க. பேட்ஸ்மேனாக இருந்த ராகுல் டிராவிட்டை பெளலிங் போட வெச்சு எடப்பாடி பேட்டிங் பிடிக்கிறார். இதுலயே இந்த ஆட்சி தலைகீழா நடக்குதுனு தெரிஞ்சுக்கலாம். அவரை பேட்டிங் பண்ண வெச்சு, இவர் பந்து வீசியிருந்தா சரியா இருந்திருக்கும். இந்த அடிப்படை அறிவுகூட இல்லாம இருக்காங்க. டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா காலம் கடந்து அறிவிச்சிருக்காங்க. அறிவிச்சது வரவேற்கத்தக்கது. ஆனா, அந்த மாவட்டங்கள்ல நடக்கிற மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிடச்சொல்லணும். இவர் ஒன் சைடு லவ் மாதிரி இவர் மட்டுமே பிரதமருக்குக் கடிதம் எழுதுறார். ஆனா, அங்க இருந்து ஒரு பதிலும் வரமாட்டிங்குது. இத்தனை முறை கடிதம் எழுதுனதுக்கு அவர்கிட்ட இருந்து பதில் வந்தாதானே கடிதம் அவருக்குப் போனதுக்கு அத்தாட்சி. இது கடிதம் எழுதி தீர்க்கிற பிரச்னை இல்லை. தமிழக எம்.பிக்கள் எல்லோரும் சேர்ந்து அந்தத் திட்டங்களை எல்லாம் முதல்ல அங்கருந்து எடுங்க. அப்புறம் இதைப் பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமா நாங்க ஏத்துக்குறோம்னு சொல்லணும். இது எப்படி இருக்குனா, ஒரு புண்ல இருக்கிற வைரஸை வெளியே எடுக்காம, அதுக்கு ஒத்திரம் கொடுக்கிறது மாதிரி இருக்கு. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் மாதிரியான வைரஸை வெளியே எடுக்காம கொடுக்கிற இந்த அறிவிப்புனால, டெல்டா விவசாயிகளுக்கு அஞ்சு காசுக்கு பிரயோஜனம் கிடையாது."

``ரஜினி ஏன் என்ன பேசினாலும் சர்ச்சை ஆகுது?"

திண்டுக்கல் லியோனி
திண்டுக்கல் லியோனி

``ரஜினி சார் நல்ல மனிதர், நல்ல நடிகர். அமைதியான வாழ்க்கையை விரும்புற அந்த மனிதர்கிட்ட தேவையில்லாமல் அரசியல் பிரச்னைகளைப் பத்திக் கேட்கிறது எனக்குப் பிடிக்கலை. பல வருஷமா அவரை அரசியலுக்கு இழுத்து இழுத்து பார்க்குறாங்க. அவர் வர்ற மாதிரி வந்துட்டு, வீட்டுக்குப் போய் யோசிச்சு பார்த்துட்டு வேணாம்னு நினைக்கிறார். அதுதான் உண்மை. உணர்வு பூர்வமா பல பேர் நெருக்கடி கொடுக்கும்போது ஒரு மனிதனுக்கு ஆசை வரும். அந்த ஆசைதான் ஒருமுறை 234 தொகுதிகள்லேயும் போட்டியிடப் போறேன். நம்மதான் வெற்றிபெற போறோம்னு அறிவிச்சதுக்குக் காரணம். அப்புறம் கட்சி ஆரம்பிக்கப்போறேன்னு தொண்டர்கள் எல்லோரையும் கூப்பிட்டு, `நீங்க எல்லோரும் உங்க வேலையைப் பாருங்க, நான் என் வேலையைப் பார்க்கிறேன்'னு சொன்னார். அதுதான் அவர் மனநிலை. அவர்கிட்ட போய் குடியுரிமைச் சட்டத்தைப் பத்தி என்ன நினைக்கிறீங்க, ஸ்டெர்லைட் ஆலை, ஹைட்ரோ கார்பன் திட்டம், இந்தி எதிர்ப்பு பத்தி உங்க கருத்து என்னனு கேட்கக் கேட்க ஏதோ ஒரு டார்ச்சர்ல ஏதோ ஒரு பதிலைச் சொல்லிடுறார். அது சர்ச்சையாகி விவாதப் பொருளாகுது. நான் இந்தத் தேதியில அரசியல் கட்சி தொடங்கப்போறேன், இதுதான் என் கொடி, இதுதான் சின்னம், இதுதான் என் கொள்கை, யார்கூடவும் கூட்டணி இல்லைனு தெளிவா எங்கேயும் அவர் சொன்னதில்லை. இதிலிருந்தே அவருக்கு அரசியல்ல ஈடுபாடு இல்லைனு தெரிஞ்சுக்கலாம். அவரை ஒரு குரூப் இழுத்துட்டு வர முயற்சி பண்ணிக்கிட்டே இருக்காங்க. அதுக்கு அவர் துணையா இருக்கமாட்டார்ங்கிறது என் கருத்து."

``2021 தேர்தலுக்கு தி.மு.க தயாராகிடுச்சா?"

``ஆமா. 2021 தேர்தல்ல தி.மு.கதான் ஜெயிக்கும். அதுக்கான டிரெய்லர்தான் நடந்து முடிஞ்ச உள்ளாட்சி தேர்தல். தவிர, அ.தி.மு.க கூட்டணியில பிளவு விழுந்துக்கிட்டு இருக்கு. பா.ம.க ரஜினியுடன் சேரப்போவதா சொல்றாங்க. நாங்க கொட்டக் கொட்ட குனிஞ்சுகிட்டே இருக்கமாட்டோம்னு பிரேமலதா சொல்றாங்க, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளாட்சி தேர்தல்ல சரியா சப்போர்ட் பண்ணலைனு அ.தி.மு.க அமைச்சர்கள் பேசுறாங்க. அதனால அவங்க கூட்டணிக்குள்ள சலசலப்பு உருவாகிடுச்சு. 2021 தேர்தல்ல இந்தக் கூட்டணி தொடருமாங்கிறதே சந்தேகம்தான். இப்படி இருக்கும் பட்சத்தில தி.மு.கவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கு."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு