Published:Updated:

"சார்ந்திருக்காதவர், ஆனா கடைசி நாள்கள்ல தேங்க்ஸ் சொல்லிட்டே இருந்தார்'' - இயக்குநர் மகேந்திரன் மகனின் பகிர்வு

அவருடைய கடைசி நாள்களில் எல்லாம், அவருடைய மரணத்துக்கு அப்புறம் என்னென்ன செய்யணும் அப்படிங்கிறதை ஒரு ஸ்கிரீன் பிளே மாதிரி யோசிச்சு சொல்லிட்டே இருந்தாரு.

இயக்குநர் மகேந்திரன்
இயக்குநர் மகேந்திரன்

நேற்றைய தினம் (25-7-19) இயக்குநர் மகேந்திரனுக்கு பிறந்தநாள். அவருடைய மறைவுக்குப் பிறகு வருகிற முதல் பிறந்தநாள். இயக்குநர் ஜான் மகேந்திரன், 'அப்பா பிறந்தநாள். வாழ்த்துகள் நேரில் முகம்பார்த்துச் சொல்ல இன்று எனக்கு கொடுப்பினை இல்லை' என்று ட்வீட் செய்திருந்தார். 'தர்பாரில்' பிசியாக இருந்தவரை தொடர்ந்து போன், மெசேஜ் என்று பிடித்தோம்.

''நான் கிளம்பினதுக்கப்புறம் வீட்டைக் கிளீன் பண்ணும்போது, புக்ஸ் ஏதாவது மிஸ்ஸாயிடலாம். என் ரூமை பூட்டி வைச்சுடு.''
இயக்குநர் மகேந்திரன்

''அப்பா எனக்கு எந்த இடத்துலேயும் சிபாரிசு செஞ்சதே இல்லை. அவரோட கடைசி நாள்கள் வரைக்குமே, சினிமாவுல இருக்கிற பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாரும் அப்பாவை மீட் பண்ணணும்னா என்னைத்தான் அப்ரோச் பண்ணுவாங்க. காலையில வந்தாங்கன்னா, ஈவினிங் வரைக்கும் அப்பாவோட இருப்பாங்க. ஆனா, எந்த இடத்துலேயும் யார்கிட்டேயும் எனக்காக அப்பா வாய்ப்பு கேட்டதேயில்லை. நானாக முயற்சி எடுத்துத்தான் வரணும்னு நினைச்சாரு. அப்பா எனக்கு சொல்லாம சொல்லிக் கொடுத்த விஷயமாகத்தான் அதை நான் பார்க்கிறேன்'' - இயக்குநர் ஜான் மகேந்திரன், தன் அப்பா இயக்குநர் மகேந்திரனின் பர்சனல் பக்கங்களை நம்மிடம் பகிர ஆரம்பித்தபோது, பெருமிதத்துடன் புரட்டிய முதல் பக்கம் இதுதான்.

''படிக்கிறது, எழுதுறது, படம் பார்க்கிறது. அவரோட அறைக்குள்ள போனாலும் வாம்மா, வாப்பான்னு கூப்பிட்டுட்டு படம் பார்க்கிறதை தொடர்றது... இதுதான் அப்பா. இதைத்தாண்டி அவரோட அன்பை எங்ககிட்டே வார்த்தைகளா அப்பா காட்டிக்கிட்டேதே இல்லை. ஆனா, அவரோட கடைசிக் காலங்கள்ல அப்படியே மாறியிருந்தார். என் மனைவி அப்பாவோட சிஸ்டரோட சொந்த மகள்தான். அவகிட்டே பழைய கதைகள், சொந்த ஊர்க் கதைகள் எல்லாம் பேச ஆரம்பிச்சார்.

ஜான் மகேந்திரன் தன் குடும்பத்துடன்
ஜான் மகேந்திரன் தன் குடும்பத்துடன்

என் பையன்கிட்டே அவனுடைய பிளஸ் பத்தியெல்லாம் எழுதி கையெழுத்துப் போட்டுக்கொடுத்திருக்கார். நான் அதை ஃபிரேம் பண்ணி பொக்கிஷம் மாதிரி வைச்சுட்டிருக்கேன்.

அப்பா எங்களைவிட்டு கிளம்பறதுக்கு ஒரு மாசம் முன்னாடி இருந்து என் சிஸ்டர்கிட்டே, 'இன்னும் ஒரு வாரம்தாம்மா'ன்னு சொல்லிக்கிட்டே இருந்தார்.

அப்பாவுக்கு புத்தர் சிலை ரொம்பப் பிடிக்கும். மறையறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி, அம்மாகிட்டே, 'கடைசியா என்னைப் பார்க்கிறதுக்கு எல்லோரும் வருவாங்க. அவங்களோட கை, கால்பட்டு புத்தர் சிலைகள் விழுந்துடலாம்; உடைஞ்சுடலாம். அதனால, எல்லா புத்தரையும் மேலே ஷெல்ஃபுல வைச்சுடு. இல்லனா, மேலே மாடில கொண்டுபோய் வைச்சுடு'ன்னார்.

'ஜான், நான் என்ன லாரியில அடிப்பட்டா சாகப்போறேன். ஜஸ்ட் மரணம்தானேடா. வரட்டும் விடு'ன்னார்.
இயக்குநர் ஜான் மகேந்திரன்

அப்பாவோட ரூமே மினி லைப்ரரி மாதிரி இருக்கும். 'நான் கிளம்பினதுக்கப்புறம் வீட்டைக் கிளீன் பண்ணும்போது, புக்ஸ் ஏதாவது மிஸ்ஸாயிடலாம். என் ரூமை பூட்டி வைச்சுடு. காரைக்கூட கொண்டு வெளியே நிறுத்திடு. அப்பதான் நிறையப்பேர் உள்ளே வரமுடியும். டிராஃபிக் ஜாம் ஆகாம பார்த்துக்கோ ஜான்' அப்படின்னார். அவருடைய கடைசி நாள்களில் எல்லாம், அவருடைய மரணத்துக்கு அப்புறம் என்னென்ன செய்யணும் அப்படிங்கிறதை ஒரு ஸ்கிரீன் பிளே மாதிரி யோசிச்சு சொல்லிட்டே இருந்தாரு.

Vikatan

கிட்னியில ரொம்பப் பிரச்னை. இனி காப்பத்துறது கஷ்டம்னு கன்ஃபார்ம் ஆனவுடனே, 'எதாவது செய்யணும்; அப்பாவை விட்டுரக்கூடாது'ன்னு நாங்க எல்லோரும் போராட்டம் நடத்திக்கிட்டு இருந்தோம். நாலு மணி நேரத்துக்கு ஒரு முறை டயாலிசிஸ் பண்ணிக்கிட்டிருக்கிறப்போ, வலிதாங்க முடியாம அப்பா கண் கலங்குறார். மொத்தக் குடும்பமும் தவிச்சுக்கிட்டு இருந்தப்போ, தன்னோட வலியெல்லாம் தாங்கிட்டு அப்பா என்ன சொன்னார் தெரியுமா ? 'ஜான், நான் என்ன லாரியில அடிப்பட்டா சாகப்போறேன். ஜஸ்ட் மரணம்தானேடா. வரட்டும், விடு'ன்னார்.

அப்பாவோட கடைசி நாள்கள்ல நான் ஆச்சர்யப்பட்ட விஷயம், அப்பவும் அவர் நெட் பிளிக்ஸில் நிறையப் படங்கள் பார்த்துக்கிட்டிருந்தார்.

அப்பா ஆர்ட் மூவிஸ், இன்டர்நேஷனல் மூவிஸ் மட்டும்தான் பார்ப்பாருன்னு நிறைய பேர் நினைச்சுக்கிட்டிருக்காங்க. ஆனா, அவர் காமெடி, சென்டிமென்ட், ஆக்‌ஷன் படங்கள்னு எல்லா வெரைட்டி சினிமாவும் பார்ப்பார்.

சில நேரங்கள்ல லேட் நைட்டில் ஏதாவது படம் பார்த்திருப்பார். அந்த நேரத்துல, 'ஜான், இந்தப் படத்தோட டைரக்டர்கிட்டே நான் பேசணும். நம்பர் வாங்கிக்குடேன்'பார்.

Vikatan

ஒரு நாள், 'ரோமியோ ஜூலியட் படம் ரொம்ப நல்லாருக்கு ஜான். ஏன் படத்தைப்பத்தி யாருமே பேசலை. அந்த டைரக்டர்கிட்டே நான் பேசணும்' அப்படின்னார். எனக்கு தூக்கி வாரிப்போட்டுடுச்சு. அந்தப் படத்தோட டைரக்டர்கிட்டே எப்படி பேசறதுன்னு நினைச்சுக்கிட்டு, 'எந்த ரோமியோ ஜூலியட்பா' அப்படின்னேன். 'ஜெயம் ரவி, ஹன்சிகா நடிச்ச படம்டா. அதுல, ஹீரோயின் ஹீரோவை விட்டுட்டுப் போறா. அப்ப அந்த ஹீரோ கேரக்டர், 'உன்னை மாதிரியே ஒரு பொண்ணை எனக்கு அறிமுகப்படுத்திட்டுப் போ' அப்படிங்கிறான். அந்த கான்செப்ட் ரொம்ப நல்லாயிருந்ததுடா. ஹன்சிகாவோட நடிப்பு ரொம்ப பிரமாதம்' என்றார்.

ரோமியோ ஜூலியட்
ரோமியோ ஜூலியட்
''மகேந்திரன், 'உதிரிப்பூக்கள்' படம் எடுத்து இந்திய அளவில் பேசப்பட்ட நேரம் அது. அப்போது எம்.ஜி.ஆர் டெல்லியில் இருந்தார். அதே நேரத்தில், மகேந்திரனும் டெல்லியில் தங்கியிருப்பதைத் தெரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், தன்னுடைய அடையாளங்களான தொப்பி, கண்ணாடி இரண்டும் இல்லாமல் மகேந்திரன் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றுவிட்டார். `உனக்குள் இருந்த நெருப்பை நான் 1958-லேயே கண்டுபிடித்துவிட்டேன்' என்று பட்டு சால்வை போர்த்தி பாராட்டுகிறார். அந்தப் பட்டு சால்வை மகேந்திரனிடம் இருக்கிறது. எம்.ஜி.ஆர் மகேந்திரனுக்குக் கொடுத்த அந்தப் பச்சை மை கடிதத்தை மகேந்திரன் பல காலம் பத்திரமாக வைத்திருந்தார். அதை நான் அவரிடமிருந்து கேட்டு வாங்கி, ஃபிரேம் போட்டு வைத்திருக்கிறேன். இயக்குநர் மகேந்திரன் அந்தக் கடிதத்தை எம்.ஜி.ஆர் நினைவாக வைத்திருந்தார். நான், இனிமேல் அந்தக் கடிதத்தை மகேந்திரன் நினைவாக வைத்திருக்கப்போகிறேன்''
நடிகர் ராஜேஷ்

அப்பா, யாரையும் சார்ந்திருக்க விரும்பாதவர். ஆனா, அவருடைய கடைசிக் காலங்கள்ல மத்தவங்களைச் சார்ந்திருக்க நேரும்போதெல்லாம், சம்பந்தப்பட்டவங்களுக்கு நன்றி சொல்லிட்டே இருந்தார். மாத்திரை எடுத்துக்கொடுத்தா, பெட்ஷீட் போர்த்திவிட்டா, எழுப்பி உட்காரவைச்சான்னு சின்னச்சின்ன உதவிக்கெல்லாம் தேங்க்ஸ்மா, தேங்க்ஸ்மான்னு என் அம்மாகிட்டே, என் வொய்ஃப்கிட்டே, என் சிஸ்டர்கிட்டே சொல்லிட்டே இருந்தார். லவ் யூ அப்பா !'' - அப்பா மீதான அபரிமிதமான பாசம் வெளிப்படுகிறது இயக்குநர் ஜான் மகேந்திரன் குரலில்.

Vikatan