Published:Updated:

`உன்னை நீயே பாராட்டிக்கிற மாதிரி, எதைச் செய்தாலும் சரி!' அனுபவம் பகிரும் கே.வி.ஆனந்த் #Motivation

Director K.V Anand
Director K.V Anand

``அப்பா, இப்போ உயிரோட இல்ல. ஆனா, `உனக்குப் பிடிச்சுப்போய் நீ எதைச் செய்தாலும், அது வலியாவோ சுமையாவோ இருக்காது'னு அவர் சொன்ன வாக்கியம், மனசுல அதன் வலிமை மங்காம மிதந்துட்டே இருக்கு..."

கேமராமேனாக திரைவாழ்க்கையைத் தொடங்கி இயக்குநராகத் தடம் பதித்தவர்களில் முக்கியமானவர் கே.வி.ஆனந்த். `கனா கண்டேன்', `கோ', `அயன்', `அநேகன்', `மாற்றான்', `கவண்' என வித்தியாசமான ஆறு படங்களை இயக்கியவர். இப்போது இயக்கிக்கொண்டிருக்கும் `காப்பான்' அவருக்கு ஏழாவது படம். தன் வாழ்க்கையை மாற்றிய வாக்கியம் பற்றிச் சொல்கிறார் மாஸ் டைரக்டர்!

``அப்பா ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுல பிராஞ்ச் மேனேஜரா இருந்தார். அவருக்கு மூணு வருஷத்துக்கு ஒருமுறை மும்பை, ஹைதராபாத்னு ஏதாவது ஊருக்கு மாற்றலாகும். அதனால, நான் எங்க சித்தப்பா வீட்டுல தங்கிப் படிச்சிக்கிட்டிருந்தேன்.

நான் எஸ்.எஸ்.எல்.சி படிச்சிக்கிட்டிருந்தப்போ, ஒருமுறை ஊருக்கு வந்த அப்பா, எனக்கு ஒரு `யாஷிகா ரைன் ஃபைண்டர்' வாங்கிக் கொடுத்தார். அப்போவே அதோட விலை 1,500 ரூபாய். எனக்குக் கேமராவுல படம் எடுக்கிறது ரொம்பப் பிடிக்கும். அதைப் புரிஞ்சிக்கிட்டு, நான் கேட்காமலே அவரா வாங்கிக் கொடுத்தார்.

Camera
Camera

கேமரா கிடைச்சதும், நான் இயற்கைக் காட்சிகள், பறவைகள், கூரை பெசன்ட்நகர் பீச்னு படங்களா எடுத்துத் தள்ளினேன். அந்தப் படங்களை பிரின்ட் போட்டு எடுத்துக்கிட்டுப் போய் அப்பாகிட்ட காண்பிப்பேன்.

ஃபோட்டோஸை எல்லாம் பார்த்துட்டு, `ம்... ஆஹா, நல்லா இருக்கு', `பிரமாதம், சூப்பரா இருக்கு'னு சொல்லுவார் அப்பா. எப்போ நான் படங்களைக் கொண்டு போய் காண்பிச்சாலும், இதையேதான் சொல்லுவார். ஒரு கட்டத்துல எனக்கு, இவர் நிஜமா சொல்றாரா, இல்ல பையனை ஊக்கப்படுத்தணும்ங்கிறதுக்காக சொல்றாரானு சந்தேகம் ஆகிடுச்சு. இந்தப் பதிலுக்குப் பின்னால ஏதோ ஒண்ணு இருக்குனு நினைச்சேன்.

``அப்பா, இதை நிஜமா சொல்றீங்களா? இல்ல, பையன் கேட்கிறானேங்கிறதுக்காகச் சொல்றீங்களா?" - ஒருநாள் அப்பாகிட்டயே கேட்டுட்டேன். அவரும் புரிஞ்சிக்கிட்டார்.

Director K.V Anand
Director K.V Anand

`` `அப்பா கேமரா வாங்கிக்கொடுத்தார், அதுல நாலு படங்களை எடுத்துட்டுப் போய் அவர்கிட்ட காட்டினா சந்தோஷப்படுவார்' அப்படீனு இந்தப் படங்களை எல்லாம் நீ என்கிட்ட காட்டுறியா? இல்ல, இந்தப் படங்களை எல்லாம் எடுக்கும்போது அது உனக்கு ரொம்பப் பிடிச்சுப்போய், ரசிச்சு, ரிசல்ட்டுல சந்தோஷப்பட்டு எடுத்தியா?"

``பிடிச்சுப்போய்தான் எடுத்தேன்!''

``இப்போ நீ லெவன்த் படிக்கிறே. உனக்கு கேமராவுல ஆர்வம் இருக்குனு வாங்கிக்கொடுத்தேன். என்னுடைய பாராட்டு முக்கியமில்ல. உன்னை நீயே பாராட்டிக்கிற மாதிரி, எதைச் செய்தாலும் செய். உனக்குப் பிடிச்சுப்போய் நீ எதைச் செய்தாலும் அது உனக்கு வலியாவோ சுமையாவோ இருக்காது. உனக்கு எது சந்தோஷமா இருக்கோ அதுதான் உன் தொழில். அப்போதான் வேலைபார்க்கிறோம்கிற கஷ்டம் இருக்காது!" - அழுத்தமா சொன்னார் அப்பா.

அப்பா யதார்த்தமா சொன்னாரோ இல்ல அசரீரி மாதிரி சொன்னாரோ... இன்னைக்கு கேமராதான் என் வாழ்க்கைனு ஆகிடுச்சு. அதுக்குப் பிறகு காலேஜ்ல பி.எஸ்சி படிச்சப்போ, காஸ்ட்லியான யாஷிகா எஃப். எக்ஸ் கேமரா வாங்கிக் கொடுத்தார். மும்பையிலிருந்து வந்தார்னா, பர்மா பஜாருக்குக் கூட்டிக்கிட்டுப் போவார். நான் ஒரு லென்ஸ் கேட்டேன்னா, அவர் நாலஞ்சு லென்ஸ் வாங்கிக் கொடுப்பார்.

Director K.V Anand
Director K.V Anand

கல்லூரிக் காலத்தில், 'ஆனந்த விகடன்' மாணவப் பத்திரிகையாளர் திட்டத்துக்கு அப்ளை பண்ணியிருந்தேன். முதல் சுற்றுல தேர்வாயிட்டேன். அதற்கு அடுத்த சுற்றுல தேர்வாக முடியாமப் போயிடுச்சு. அப்புறம் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் டிப்ளோமா படிச்சிட்டு, பத்திரிகைகளுக்குப் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பிச்சேன்.

Vikatan

நான் எடுத்த புகைப்படங்களைப் பார்த்துட்டு 'கல்கி'யில இருந்த சாருகேசி, ராஜேந்திரன் சார்கிட்ட என்னைக் கூட்டிக்கிட்டுப் போனார். நிறைய வாய்ப்புகள் கொடுத்தாங்க. அட்டைப் படமே கிட்டத்தட்ட நூற்றுக்கு மேல எடுத்திருப்பேன். தவிர, ஆயிரம் படங்கள் பிரசுரமாகியிருக்கும். அப்படி அப்படியே வந்து 13 படங்களுக்குக் கேமராமேனாகவும் வொர்க் பண்ணிட்டேன். இப்போ வெளிவர இருக்கிற 'காப்பான்' திரைப்படம், இயக்குநரா எனக்கு ஏழாவது படம்.

Kaappaan crew
Kaappaan crew

அப்பா, இப்போ உயிரோட இல்ல. ஆனா, 'உனக்குப் பிடிச்சுப்போய் நீ எதைச் செய்தாலும், அது வலியாவோ சுமையாவோ இருக்காது'னு அவர் சொன்ன வாக்கியம், மனசுல அதன் வலிமை மங்காம மிதந்துட்டே இருக்கு!" - நெகிழ்ச்சியோடு சொல்கிறார் கே.வி.ஆனந்த்.

அடுத்த கட்டுரைக்கு