கட்டுரைகள்
Published:Updated:

தமிழகத்துல விவசாயி... டெல்லியில தீவிரவாதி! - விசாரணையில் வெற்றிமாறன்

வெற்றிமாறன்
பிரீமியம் ஸ்டோரி
News
வெற்றிமாறன்

பெரும்பான்மை மக்களுக்கு நன்மை பயப்பதுதான் வளர்ச்சின்னு நான் நினைக்கிறேன். நம் வளங்களை அழிச்சிட்டுத் தொழிற்சாலைகள் அமைக்கிறது சரியான அணுகுமுறையா தெரியலை. நான் ராணிப்பேட்டையில் வளர்ந்தவன்.

‘இயக்குநர்’ வெற்றிமாறன் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில்... வேடந்தாங்கல் விவசாயி. 9 ஏக்கர் நிலப்பரப்பில், வேடந்தாங்கல் அருகே கட்டியாம்பந்தல் எனும் கிராமத்தில் இருக்கிறது வெற்றிமாறனின் பசுமைப் பண்ணை. பாரம்பரிய நெல்லான தூயமல்லியை ஒற்றை நாற்று நடவு முறையில் நட்டுக்கொண்டிருந்தவருடன் உரையாடினேன்.

‘`வேடந்தாங்கல்மேல சின்ன வயசுல இருந்தே ரொம்ப இன்ட்ரஸ்ட். பறவைகளுக்காக தீபாவளி கொண்டாட மாட்டாங்கன்னு அங்க நிறையவே கட்டுப்பாடுகள். பறவைகள் சரணாலயம் இருக்கிறதால டெவலப்மென்ட்ன்ற பேர்ல பொல்யூட் பண்ணமாட்டாங்க, பெரிய பெரிய பில்டிங்களோ கம்பெனிகளோ வராது, நில ஆக்கிரமிப்புகள் இருக்காது, இங்க நிலத்தை சுத்தமா வெச்சிக்கலாம்னு யோசிச்சுதான் வேடந்தாங்கல்ல இடம் வாங்கினேன். கடந்த மூணு வருஷமா இங்க இயற்கை விவசாயம் பண்ணுறோம். அனந்து, பியூஷ் மனுஷ், கிஷோர், பசுபதி, பசுபதியின் மனைவி சூர்யான்னு நிறைய பேர் எனக்கு இதுல உதவி செய்றாங்க. குறிப்பா பசுபதியின் மனைவி சூர்யாகிட்டதான் விவசாயத்தில் என்ன சந்தேகம்னாலும் கேட்கிறேன்.

வீடு கட்டிட்டு இங்கேயே வந்துடணும்னுதான் திட்டம். ஆனா, கொரோனாவால வேலைகள் தடைப்பட்டிருச்சு. இங்க இருந்து 70 கிமீட்டர்தான் சென்னை. ஊருக்குள்ள வரணும்னா ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி கிளம்பினா போதும்!’’

‘`வேடந்தாங்கலில் இடம் வாங்குறதுக்கு முக்கியமான காரணமா ஆக்கிரமிப்புகள், தொழிற்சாலைகள் அருகில் வராதுன்னு நிறைய விஷயங்கள் சொன்னீங்க. இந்த EIA 2020 (Enviroment Impact Assesment) சட்ட வரைவை எப்படிப் பார்க்கிறீங்க?’’

‘`பொதுவா இப்படி ஒரு அசஸ்மென்ட் பண்ணும்போது ஒரு முன்வரைவு வந்தா மக்கள்கிட்ட கருத்து கேட்பாங்க. ஆனா, இந்த EIA 2020-ல மக்கள் கருத்து சொல்றதுக்கான இடமே கிடையாதுன்னு சொல்றாங்க. அது பெரிய ஆபத்து. நான் இங்க வந்து ஒரு கம்பெனி ஆரம்பிக்கிறேன்னா அதோட பாதகங்களை நான் எப்படிப் பேசுவேன், என்னால பிரச்னை வரப்போதுன்னா நான் எப்படி அதை நியாயமா மதிப்பிடுவேன். அந்தக் கம்பெனியால பாதிக்கப்படப்போற மக்கள்தானே பேசுவாங்க. ஆனா, அவங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுறது தப்பா இருக்கு. அப்புறம் ஏன் இந்த வரைவை தமிழ், மலையாளம், பெங்காலின்னு எல்லா மொழிகளிலும் எல்லோருக்கும் புரியும்படி கொடுக்க மாட்றாங்கன்னும் தெரியல.’’

‘`வளர்ச்சிக்காகச் சில தியாகங்கள் பண்ணித்தானே ஆகணும். எல்லாத்துக்கும் போராட்டம், ஆர்ப்பாட்டம்னு தடுத்துட்டே இருந்தா வளர்ச்சி எப்படியிருக்கும்னு ஒரு கருத்து முன்வைக்கப்படுதே?’’

‘`பெரும்பான்மை மக்களுக்கு நன்மை பயப்பதுதான் வளர்ச்சின்னு நான் நினைக்கிறேன். நம் வளங்களை அழிச்சிட்டுத் தொழிற்சாலைகள் அமைக்கிறது சரியான அணுகுமுறையா தெரியலை. நான் ராணிப்பேட்டையில் வளர்ந்தவன். அங்கே ஏகப்பட்ட தொழில்நிறுவனங்கள் இருக்கு. ஒரு பெரிய நிறுவனத்தோட செராமிக் பேக்டரியில் வாரத்துக்கு ஒருநாள் கேஸ் ஓப்பன் பண்ணிவிடுவாங்க. ஒரு மணி நேரம் அப்படியே தொண்டையை அறுக்கும். அந்த அளவுக்கு பொல்யூஷன். அந்தக் கம்பெனில வேலை செஞ்ச என் நண்பர் டேனி 36 வயசுலயே இறந்துட்டார். அங்க வேலை செஞ்சதாலதான் லங் பெயிலியர். டேனிபோல பல பேர் பல தொழில் நிறுவனங்களால பாதிக்கப்பட்டு இறந்துட்டிருக்காங்க. இது எப்படி வளர்ச்சியாக இருக்கும். இது எப்படி நீண்ட காலத் தீர்வுகளைத் தரமுடியும்?’’

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

‘`ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே அரசு என ஒற்றைத்தன்மையை நோக்கி இந்திய அரசியல் நகர்வதாக நீங்க பார்க்கிறீங்களா?’’

‘‘ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்கின்ற, ஒரு மொழி பேசுகின்ற, ஒரு பண்பாடு, ஒரு கலாசாரம் கொண்ட மக்கள் கூட்டத்தைத்தான் ஒரு நாடுன்னு வரையறுக்குறாங்க. இந்த வரையறையின்படி பார்த்தால் நாம் பல நாடுகள் சேர்ந்த ஒரு ஒன்றியம். ஒரு வசதிக்காக ஒன்றாகச் சேர்ந்து இந்தியாவா இருக்கோம். இந்தியர்கள் என்பதில் பெருமையோடு இருக்கோம். அதுல எந்த சந்தேகமும், மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த நாட்டை இந்த வேறுபாடுகளோடுதான் அரவணைச்சுப்போகணும். அப்பதான் இந்த நாடு அழகோடு, வீரியத்தோடு, வலிமையோடு இருக்கமுடியும்.

சமீபத்துல நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமானநிலையத்தில் அவங்களுக்கு நடந்த அவமதிப்பு பற்றிச் சொல்லியிருந்தாங்க. எனக்கும் அதேபோல ஒரு சம்பவம் நடந்திருக்கு. 2011-ஆகஸ்ட்ல ‘ஆடுகளம்’ படத்தை கனடா, மான்ட்ரியால் பிலிம் பெஸ்டிவலில் ஸ்கிரீன் பண்ணிட்டு இந்தியாவுக்குத் திரும்ப வர்றோம். டெல்லி ஏர்போர்ட் இமிகிரேஷன்ல இருந்தவர் என்கிட்ட இந்தில பேசினார். ‘ஸாரி... எனக்கு இந்தி தெரியாது’ன்னு ஆங்கிலத்தில் சொன்னேன். ‘கியா... கியா... யு டோன்ட் நோ மதர் டங் ஆஃப் திஸ் கன்ட்ரி?’ன்னு கேட்டார். நான் ‘என் அம்மா பேசுற மொழி தமிழ். அதுதான் என்னோட தாய்மொழி. மத்தவங்களோட பேச எனக்கு ஆங்கிலம் தெரியும்’னு சொன்னேன். ரொம்பக் கோபமாகி, ‘நீங்களாம் இப்படித்தான்... யு தமிழன்ஸ், காஷ்மீரீஸ் ஆர் ஓன்லி பிரேக்கிங் திஸ் கன்ட்ரி... நீங்களாம் தீவிரவாதிங்க’ன்னு என்னவெல்லாமோ பேசி என்னைத் தனியா நிக்கவெச்சிட்டார். ‘நாங்க கல்ச்சுரல் எக்ஸ்சேஞ்சுக்காக கனடா போயிட்டு வர்றேன்... இந்த வருஷம் இவர் நேஷனல் அவார்டு வாங்கியிருக்கார்’னெல்லாம் என்னுடன் வந்த தயாரிப்பாளர் கதிரேசனும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் சொல்லியும் அவர் கேட்கவேயில்லை. 45 நிமிஷம் என்னைத் தனியா நிக்கவெச்சிட்டு அப்புறம் வேறு ஒரு அதிகாரி வந்துதான் என்னை அனுப்பினாங்க. என் தாய்மொழியை நான் பேசுறது எப்படி நாட்டோட ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும்? என் தாய்மொழியில் நான் படிப்பது எப்படி நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும்.

The more i can retain my Identity, the more i can survive. நாம வாழணும்னா நம்மோட பண்பாட்டை நாம காப்பாத்தணும். அதுக்காக மற்ற பண்பாட்டுக்கோ, மொழிக்கோ எதிராகச் செயல்படுவது நம்முடைய வேலையோ, நோக்கமோ கிடையாது!’’

‘`சினிமா அரசியலுக்கு வருவோம். இப்போது வரக்கூடிய இளம் இயக்குநர்களுக்கு அரசியல் தெளிவும், அரசியல் பார்வையும் வேண்டும்னு நினைக்கிறீங்களா?’’

‘`சினிமாவே அரசியல்தான். நீங்க அரசியல் இல்லாம சினிமா பண்ணிடமுடியாது. தமிழில் பா.இரஞ்சித்தின் வருகைக்கு அப்புறம், அதை அரசியலா பார்க்குற போக்கு அதிகமாகியிருக்கு. அவர் பேசக்கூடிய அரசியலை கவுன்ட்டர் பண்ணக்கூடிய ‘திரெளபதி’ போன்ற படங்களும் வருது. இன்னைக்கு ஒரு பிலிம் மேக்கருக்கு பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ் அத்தியாவசியமா இருக்கு. ஒரு சினிமா வந்தால் அதைச் சுற்றிப் பல விவாதங்கள் நடக்குது. விவாதங்கள் நடப்பது ஆரோக்கியமான தொடக்கம்தானே.’’

‘`உங்கள் குருநாதர் பாலுமகேந்திரா முன்னர் விகடனுக்குக் கொடுத்திருந்த பேட்டியில் ‘வாடிவாசல்’ நாவலைப் படமாக்கணும்னு பேசியிருக்கார். குருவின் கனவை நீங்க நிறைவேற்றப்போறீங்க. படத்துல என்ன ஸ்பெஷல்?’’

‘` ‘என்னோட லென்ஸிங்ல மாடு அப்படியே பெருமூச்சு விட்டு, புழுதி கிளப்பிட்டு ஓடி வரும்போது எப்படியிருக்கும்’னு சார் அடிக்கடி எங்ககிட்ட கேட்பார்். எனக்கு மக்களைப் புரிஞ்சிக்கிறதுதான் முக்கியமாப்படுது. அங்கே மாட்டைக்் கொண்டுவந்து விடுறவனோட மனசையும், அதைப் பிடிக்க நினைக்கிறவனோட மனசையும்தான் நாம முக்கியமா தெரிஞ்சிக்கணும். அதுமட்டுமல்லாம இதுக்குப்பின்னாடி சாதி, விலங்குகளுக்கு எதிரான கொடுமைன்னு சில விஷயங்களும் இருக்கு. அதையெல்லாம் புரிஞ்சிக்கிட்டுதான் இந்தப்படம் பண்ணணும்னு நினைக்கிறேன்.’’

தமிழகத்துல விவசாயி... டெல்லியில தீவிரவாதி! - விசாரணையில் வெற்றிமாறன்

‘` ‘வாடிவாசல்’ படத்துக்குள் சூர்யா எப்படி வந்தார்?’’

‘` ‘ஆடுகளம்’ டைம்ல இருந்தே அப்பப்போ அவர்கிட்ட பேசிட்டேதான் வந்தேன். ஒன்லைன் சொல்லுவேன். ஆனா, அப்ப அவருக்கு டேட்ஸ் இல்லாம இருக்கும். இல்லைன்னா அவருக்கு அந்தக் கதை கனெக்ட் பண்ண முடியாம இருக்கும். இப்படிப் போயிட்டே இருக்கும்போது தயாரிப்பாளர் தாணு சார்தான், சூர்யாவை மீட் பண்ணிப் பேசலாம்னு சொன்னார். ‘வாடிவாசல்’ கதையைச் சொன்னேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. முழுக்க முழுக்க அது அந்த நாவலோட பலம். ‘வாடிவாசல்’ எனக்கு ரொம்பப் பெரிய சவால்தான். `விசாரணை’ மாதிரி ஈஸி கிடையாது. ‘வெக்கை’யைப் படிச்சவங்க ‘அசுரன்’ படம் பார்த்துட்டு ரொம்ப அதிருப்தி ஆனாங்க. இதுல அதைக் கொஞ்சம் குறைக்கணும்னு பார்க்குறேன். ஆனால், நாவல் படிச்சவங்களை முழுமையா திருப்திபடுத்த முடியாதுன்றதுலயும் தெளிவா இருக்கேன்.’’

‘`இப்பெல்லாம் நடிகர் வடிவேலுவோட காமெடியைத்தான் அதிகமா பார்க்குறதா சில பேட்டிகளில் சொல்லியிருந்தீங்க. வடிவேலுவோட படம் பண்ணுற ஐடியா இருக்கா?’’

‘`சிவாஜிக்கு அப்புறம் வடிவேல் எனக்கு ஒரு ஒரிஜினல் ஆக்டரா தெரியறார். 2012-லயே அவரை வெச்சு படம் பண்ண முயற்சி பண்ணேன். மலையாள எழுத்தாளர் பால் சக்காரியாவோட ‘தீவண்டிக்கொள்ளா’ன்னு (ரயில்கொள்ளை) ஒரு சிறுகதை. இயக்குநர் ராம்தான் ‘இதைப்படிங்க வெற்றி’ன்னு என்கிட்ட 2004-ல கொடுத்தார். ரொம்ப நல்லாருந்தது, பிடிச்சிருந்தது. ‘ஆடுகளம்’ முடிச்சபிறகு வடிவேலுகிட்டபோய் இந்த மாதிரி ஒரு ஐடியா இருக்குன்னு சொன்னேன். அப்ப அவர் ‘நான் ஒரு அவார்டு படம் நடிச்சா மக்கள் என்ன பீல் பண்ணுவாங்க?’ன்னு கேட்டார். நான் `அவார்டு படம்லாம் இல்லைங்க... இது வெகுஜன சினிமாதான் நடிங்க’ன்னு சொன்னேன். அந்த நேரத்துல அது வொர்க் அவுட் ஆகல.’’

‘`சென்னையின் பூர்வகுடிகள் சென்னையில் இருந்து வெளியேற்றப்படுவதைப் பத்தி ‘வடசென்னை’லயே பேசியிருப்பீங்க. ‘வடசென்னை-2’டோட கதை அதன் தொடர்ச்சியா இருக்குமா?’’

‘`டிஸ்ப்ளேஸ்மென்ட்தான் கதையா இருக்கும்னு நானும் நினைக்கிறேன்’’ (சிரிக்கிறார்).

‘`இருட்டிலிருந்து தொடங்குவதுதான் வெற்றிமாறன் ஸ்டைல்... அடுத்த படமும் இருட்டிலிருந்துதான் தொடங்குமா?’’

‘`இப்ப எழுதியிருக்கிற கதையில காலைல புறா பறக்குதுன்னு ஆரம்பிச்சிருக்கேன். அப்படித்தான் படத்தையும் ஆரம்பிப்பேன்னு நினைக்கிறேன்.’’

தமிழகத்துல விவசாயி... டெல்லியில தீவிரவாதி! - விசாரணையில் வெற்றிமாறன்

‘`என்ன படம், யார் நடிகர்கள்?’’

‘`ரொம்பச் சின்னப்படம். இரண்டு நண்பர்கள் பற்றிய கதை. முதல்ல எழுதி முடிப்போம். அப்புறம் நடிகர்கள் பத்திப் பேசுவோம்.’’

‘`சமீபத்தில் என்னென்ன படங்கள் பார்த்தீங்க?’’

‘` ‘கூழாங்கல்’னு ஒரு படம். வினோத்ராஜ்னு ஒருத்தர் பண்ணியிருக்கார். தென்மாவட்டத்துல இருக்கிற அப்பா - பையனோட ரிலேஷன்ஷிப் பத்தின கதை. மல்ட்டிலேயர்டா நல்லாருந்தது. அப்புறம் ‘நசீர்’னு ஒரு படம். கோயம்புத்தூர்ல இருக்கிற ஒரு முஸ்லீமோட ஒருநாள் வாழ்க்கை. பெருமைக்குரிய விருதான ரோட்டர்டாம் விருதை வென்றிருக்கிற படம் இது. அருண் கார்த்திக் இயக்கியிருக்கிறார். இது ரெண்டும் பெஸ்டிவல்ஸுக்காக எடுக்கப்பட்ட படங்கள். மெயின்ஸ்டீரீம்காக எடுக்கப்பட்ட ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படம் பார்த்தேன். பிடிச்சிருந்துச்சு.’’

வெற்றிமாறன் அலுவலக மாடியில் 250 புறாக்களையும், வீட்டு மாடியில் கிட்டத்தட்ட 300 புறாக்களையும் வளர்த்துவருகிறார். சமீபத்தில் நடந்த சர்வதேச ரேஸில் இவரது புறா மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது.

தமிழகத்துல விவசாயி... டெல்லியில தீவிரவாதி! - விசாரணையில் வெற்றிமாறன்

‘`சென்னைல என்னை மாதிரி பிஜியன் பேன்ஸியர்ஸ் கிட்டத்தட்ட 11,000 பேர் இருக்காங்க. இப்ப நான் ஜெயிச்சது ‘ஒன் லாப்ட் ரேஸ்’. மில்லியன் டாலர் ரேஸ்னும் சொல்லுவாங்க. இது விக்டோரியா பால்ஸுங்கிற இடத்துல, ஜிம்பாப்வேல நடந்த ரேஸ். இங்கிலாந்தில் இருக்கும் `ஜெஃப் - கேத்தரின் கூப்பர்’ங்கிற தம்பதியுடன் நானும் பார்ட்னர்ஷிப் பண்ணி இந்த ரேஸ்ல கலந்துகிட்டேன். 550 கி.மீ தூரம் கொண்ட ரேஸ் இது. 850 புறாக்கள் கலந்துக்கிச்சு. அதுல நம்ம புறா மூணாவதா வந்துச்சு. இந்தியக் கொடியோடுதான் புறா பறந்துச்சு. இதன் பேன்ஸியரா முதல் டைம் இதுல ஜெயிச்சதுல ரொம்ப சந்தோஷம். ‘ஆடுகளம்’ படத்துக்கு நான் தேசிய விருது வாங்கியபோது வந்த அளவுக்கு பாராட்டுகள் இதுக்கும் வந்ததுல ரொம்ப சந்தோஷம்!’